Announcement

Collapse
No announcement yet.

கஷ்டங்களும் அனுக்ரஹமே!....

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கஷ்டங்களும் அனுக்ரஹமே!....

    கஷ்டங்களும் அனுக்ரஹமே!....


    திருநெல்வேலிக்கு பக்கத்தில் ஒரு ஊரில் இருந்த, ஶிவன் என்னும் 80 வயஸு பக்தர், ஸ்ரீமடத்துக்கு அடிக்கடி வந்து, பெரியவாளை தர்ஶனம் செய்வார். வீர ஶைவ வகுப்பை சேர்ந்தவர்.வெறும் வாய் வார்த்தைக்கு மட்டும் வீர ஶைவர் இல்லை! பெயருக்கேற்றபடி, எப்போதும் நெற்றியிலும், உடல் பூராவும் பட்டை பட்டையாக விபூதியோடு ஶிவப்பழமாக இருப்பார்!

    ஆசாரமும், அனுஷ்டானமும் அப்பழுக்கு சொல்ல முடியாதபடி இருக்கும். பெரியவாளிடம் உண்மையிலேயே மிகுந்த பக்தி என்பதால், பெரியவா சொன்னவைகளை வாழ்க்கையில் கடைப்பிடித்து வந்தார்.வெளியே எங்குமே ஒரு வாய் ஜலம் கூட குடிக்க மாட்டார். பூண்டு, வெங்காயம் மற்றும் இதர முட்டைக்கோஸ், முருங்கைக்காய் கூட சேர்த்துக் கொள்ளமாட்டார்.நல்ல வஸதி உள்ளவர் என்றாலும், எளிமையானவர்.

    பெரியவாதான் தெய்வம்; பெரியவா சொல்வதுதான் வேதம்!
    எப்போது காஞ்சிபுரம் வந்தாலும், கையில் ஒரு மஞ்சள் கலர் துணிப்பையில் துண்டு, வேஷ்டி, விபூதி, கொஞ்சம் பணம், இவ்வளவுதான் அவருடைய 'லக்கேஜ்' !
    பல ஸமயங்களில், பத்து நாட்கள் கூட தங்கியிருந்து, தினமும் ரெண்டு வேளையும் பெரியவாளை தர்ஶனம் செய்வார்.
    இதில் வேடிக்கை என்னவென்றால், இவரிடம் பெரியவாளும் எதுவுமே பேச மாட்டார்; இவரும் பெரியவாளிடம் ஒரு வார்த்தை பேச மாட்டார்.பெரியவாளின் ஸன்னதியில் அமர்ந்து கொண்டு, கண்களில் ஶாந்தமும், அமைதியும் தவழ, பெரியவாளையே பார்த்துக் கொண்டிருப்பார்.
    "பெரியவங்க... எங்கிட்ட எதுக்கு பேசணும்? என்ன பேசணும்? அவரோட மனஸுல, நா..... நெறஞ்சு இருக்கேன், என்னோட மனஸுல, அவரு நெறஞ்சு இருக்காரு! அது போதுங்க!.."குழந்தை போல், சிரிப்போடு சொல்லுவார்.

    என்ன ஒரு பக்தி! நம்பிக்கை!

    இப்படியொரு ஸ்திதி வந்துவிட்டால், உத்தமமான குருவின் ஸந்நிதியில் இருந்தாலும்கூட, மனஸில் தோன்றும், போட்டி, பொறாமை, கோபம், குற்றம் கண்டுபிடித்தல், வம்பு, அஹங்காரம் எல்லாமே... நஸித்துப் போகுமே!ஒருநாள் பெரியவாளை ஆசை தீர தர்ஶனம் பண்ணிவிட்டு, ஊருக்குக் கிளம்பும் முன், உத்தரவு வாங்கிக் கொள்ள சென்றார். எப்போதுமே பெரியவா அவருக்கு ப்ரஸாதம் மட்டும் குடுத்துவிட்டு, கரத்தை உயர்த்தி ஆஶீர்வதிப்பார்.

    ஆனால், அன்று ஶிவன் ப்ரஸாதம் வாங்கிக் கொள்ளச் சென்றதும், மஹா அதிஸயமாக அவரிடம் பேசினார்.......
    "என்ன? கெளம்பியாச்சா ஊருக்கு? வெளில... எதுவும் ஸாப்டாட்டாலும், ஸோடாவாவுது வாங்கி, ஒரு வா [வாய்] குடிக்கலாமோல்லியோ?...."

    "பெரியவா சொன்னா..... அப்டியே செய்யறேன்"
    "ஸெரி... போறச்சே, ஸோடா குடிச்சுக்கோ!..."

    பெரியவா ஒரு அழுத்தம் குடுத்து சொன்னதும், நமஸ்காரம் பண்ணிவிட்டு கிளம்பினார்.

    திருநெல்வேலி செல்ல, செங்கல்பட்டு போய் பஸ் ஏறி, உள்ளே அமர்ந்தார் ஶிவன். பஸ்ஸில் அதிக கூட்டமில்லாவிட்டாலும், ரவுடி கும்பல் மாதிரி காலிப்பஸங்கள் சில பேர், உள்ளே அமர்ந்திருந்தனர். ஶிவன், முன் பக்கம் காலியாக இருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டார்.அந்த ரவுடி கும்பல் பண்ணிய அமர்க்களமும், விஸில்களும், போவோர் வருவோரை வயஸு பார்க்காமல் கேலி செய்வதும், தாங்க முடியவில்லை! ஆனால், இந்த மாதிரி குண்டர்களை யார் கண்டிப்பது?

    பஸ் மதுரை வழியாகப் போனபோது, மதுரைக்கு முன், ஒரு சின்ன க்ராமத்தில், ஒரு பெட்டிக்கடை அருகில் பஸ்ஸை நிறுத்தினார் ட்ரைவர்.அந்தக் கடையில் நிறைய ஸோடா பாட்டில்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்ததை எதேஶ்சையாக பார்த்தார்.... ஶிவன்.

    "ஸோடாவாவுது வாங்கி ஒரு வா...குடிக்கலாமோல்லியோ? போறச்சே...ஸோடா குடிச்சுக்கோ!"பெரியவாளின் தெய்வீகக் குரல் உள்ளிருந்து கேட்டது போல் இருந்தது!

    ஶிவனுக்கும் தாகமாக இருந்ததால், உடனே பையை ஸீட்டில் வைத்துவிட்டு, கீழே இறங்கி, அந்தப் பெட்டிக்கடையில் ஒரு ஸோடா வாங்கிக் குடித்தார். மறுபடி பஸ்ஸுக்குள் ஏறி தன்னுடைய ஸீட்டில் அமரப் போனால்......

    அவருடைய மஞ்சள் பையைக் காணோம்! அதில் பெருஸாக பணம் எதுவும் இல்லாவிட்டாலும், எங்கே போயிருக்கும்? என்று தேடினார்.
    "யோவ்! பெருஸு!.....ஒன்னோட மஞ்சப்பையா? தேடாதே!.... அதா.... அங்க பாரு! பின்னால ஸீட்டுல கெடக்குது. போ! போ! அங்க போய் பேசாம ஒக்காரு...!"
    ஒரு ரவுடி, தன் பக்கத்தில் நாலு குண்டன்கள் இருந்த "தைர்யத்தில்", அந்த 80 வயஸு நிறைந்த உத்தமமான பக்தரை மர்யாதை இல்லாமல் விரட்டினான்.
    "துஷ்டனைக் கண்டால், தூர விலகுவதே ஸாது லக்ஷணம்" என்பதாலும், "ஊர் போய்ச் சேர்ந்தால் போறும்! இந்த வெட்டிப் பஸங்களோட, அனாவஶ்ய வாக்குவாதம், வம்பை வளர்த்துப்பானேன்" என்பதாலும், தான் பாட்டுக்கு பின் ஸீட்டில் கிடந்த பையை எடுத்துக் கொண்டு பின்னாலேயே உட்கார்ந்து கொண்டார்.

    உடனே அந்த ரவுடிகளில் ரெண்டு பேர் எழுந்து, முதலில் ஶிவன் அமர்ந்திருந்த ஸீட்டிலும், அதற்கு பின் ஸீட்டிலும், மற்ற நண்பர்களுடன் போய் உட்கார்ந்து கொண்டனர்.

    ஒரே கேலி! கும்மாளம்!ராத்ரி இருட்டிவிட்டதால், ஶிவன் கொஞ்சம் கண் அஸந்தார்.திடீரென்று ஏதோ பெரிய ஶப்தம்!

    ஶிவனுக்கு, நிதானத்துக்கு வர, சில நிமிஷங்கள் எடுத்தன!இருட்டில் அஸுர வேகத்தில் வந்த ஒரு லாரி, இந்த பஸ்ஸில் மோதி..... பயங்கர விபத்து!
    கொஞ்ச நேரத்துக்கு முன்னால், தன்னுடைய தாத்தாவைப் போன்ற, ஶிவனைப் பார்த்து எகத்தாளமாக,
    "யோவ்! பெருஸு!..... ஒன்னோட மஞ்சப்பையா? தேடாதே.... அதா....அங்க பாரு! பின்னால ஸீட்டுல கெடக்குது. போ! போ! அங்க போய் பேசாம ஒக்காரு...!"
    அடாவடியாக அவருடைய ஸீட்டைப் ஆக்ரமித்துக் கொண்டு, அவரை ஏதோ ஜெயித்து விட்டதாக 'வீரம்' பாராட்டிய, அந்த ரவுடி கும்பலில் ரெண்டு பேர்.... "on the spot" யமலோகத்துக்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள்! பக்கத்தில் இருந்த மற்ற ரவுடி நண்பர்களின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது!

    தங்களை அழைத்துச் செல்ல, ஸீட் ரிஸர்வ் பண்ணி வைத்துக் கொண்டு, அந்தக் 'காலன்', எதிர் ரோடில், லாரியில் வந்து கொண்டிருப்பதை அறியாமல், மஹா பக்தரான ஶிவனை, கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தவர்களின் உடல்கள் நசுங்கிக் கிடந்தன!ஶிவனோ, உடலில் ஒரு சின்னக் கீறல் கூட இல்லாமல் காப்பாற்றப் பட்டார்..... காஞ்சி நாதனால்!

    தன் பக்தன் மேல் ஒரு துரும்பாவது பட அனுமதிப்பாரா?

    என்றுமேயில்லாமல் "ஸோடா குடிச்சுக்கலாமோல்லியோ?....." என்று பெரியவா, அழுத்தம் குடுத்துச் சொன்னது;
    மதுரை பெரிய ஊர் என்றாலும், அங்கே நிறுத்தாமல், ஏதோ க்ராமத்தில், அதுவும், ஸரியாக பெட்டிக்கடை அருகில் ட்ரைவர் பஸ்ஸை நிறுத்தியது;
    அந்தப் பெட்டிக் கடையில் அடுக்கியிருந்த ஸோடா பாட்டில்கள், ஶிவனின் கண்களில் எதேஶ்சையாகப்பட்டு, பெரியவா சொன்னதை அப்படியே ஶிரமேற்கொண்டு, அவர் ஸோடா குடிக்க பஸ்ஸை விட்டு இறங்கியது;

    ரவுடி கும்பல் அவருடைய இடத்துக்கு அடாவடி பண்ணிக் கொண்டு வந்து அமர்ந்து, ஒரேயடியாகப் போய்ச் சேர்ந்தது........
    ஆண்டவா! ஆடலரசே! அற்புதமான, அதி பயங்கரமான, ஆட்டம் ஆடிவிட்டாயே!
    "இந்த ப்ரபஞ்சத்ல, எல்லாமே ஒண்ணுக்கொண்ணு ஸம்பந்தத்தோடதான் பிணைஞ்சு இருக்கு"

    இது பெரியவா திருவாக்கு! ஸத்யமான வாக்கு!
    அரை க்ஷணத்தில் நடந்து விட்ட இந்த கோர விபத்திலிருந்து... 'பெரியவாளுடைய அனுக்ரஹம்' என்ற கவசத்தால் பத்ரமாக போர்த்தப்பட்ட ஶிவன், பெரியவாளுடைய அளவிலாக் கருணையை நினைத்து நினைத்து வாய்விட்டு அழுதுவிட்டார்.அவருடைய ஸாது லக்ஷணத்துக்கு இன்னொரு உதாரணமாக, "பாவம்! சின்னப் பஸங்க! வயஸு கோளாறு! எனக்கு வரவேண்டிய பயங்கர முடிவை, அவங்களோட தலேல போட்டுட்டு இப்பிடி, அல்பாயுஸ்ல போய்ச் சேந்துட்டாங்களே!... பெரியவா அவங்களுக்கும் நல்ல கதியை குடுக்கணும்"

    அழுது கொண்டே, ப்ரார்த்தித்தார்.
    1983-ல் பெரியவா, காஞ்சிபுரம் திரும்பி வந்ததும், பட்டாபி என்ற பாரிஷதர் பெரியவாளிடம், ஶிவனுடைய அனுபவத்தை மெய்சிலிர்க்க விவரித்தார்.
    "பெரியவா... ஸோடா குடிக்கச் சொன்னதுனாலதான் நா... பஸ்ஸை விட்டு கீழ எறங்கினேன்... அந்தப் பஸங்க.. என்னை ஏதோ வம்புக்கு இழுக்கறதா நெனச்சு, என்னை எடம் மாத்தி, எனக்கு வர வேண்டிய மரணத்தை வாங்கிண்டு போய்ட்டாங்க!.." அப்டீன்னு சொல்லி சொல்லி, ரொம்ப மாஞ்சு போய்ட்டார் பெரியவா......""ஶிவன் இப்போ ஸௌக்யமா இருக்காறோன்னோ?.... நாந்தான் அவரை காப்பாத்தினேன்னு சொன்னாராக்கும்! அஸடு! நா..... எங்கடா காப்பாத்தினேன்? அந்த பரமேஶ்வரன்தான்.... அவரக் காப்பாத்தினான்.....!"

    இந்த 'நமுட்டு சிரிப்பு பரமேஶ்வரனை' கண்ட, அந்த பாரிஷதர், மெய்சிலிர்த்து நின்றார்.
    உண்மையில், பெரியவாளிடம் அசைக்க முடியாத பக்தி வந்துவிட்டால், நமக்கு வரும் கஷ்டங்கள் கூட நிஶ்சயம் அனுக்ரஹம்தான்!
    காரணம்.... பெரியவா சொன்னதை அப்படியே கேட்டு, ஸோடா குடிக்க இறங்கினார் ஶிவன்."பெரியவா.... அப்டித்தான்... ஏதாவுது சொல்லுவார்.... அதுக்காக, என்னோட ஆசாரத்தை விட்டுட்டு, வெளில... ஸோடா-கீடா குடிக்க முடியுமா? பெரியவா.... அதெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டார்" என்று பேசாமலிருந்திருந்தால்.....??

    அதே போல், அந்த ரவுடி பஸங்கள், இவரை மர்யாதை இல்லாமல் பேசி, இவருடைய பையைத் தூக்கி பின் ஸீட்டில் எரிந்ததும், 'எல்லாம் பெரியவாளின் இஷ்டம்' என்பதை மறந்து, 'என்னமா... என்னை மர்யாதை இல்லாம பேசப்போச்சு? என் ஸீட்டை ஆக்ரமிச்சிண்டு, என்னையே வெரட்டறியா?..' என்று ego பூதாகாரமாக முளைத்து.... இவர் சண்டை போட்டிருந்தால்..... ஒருவேளை, அது பெரிய சண்டையாகி, அந்த ரவுடிகள் பஸ்ஸிலிருந்து இறக்கிவிடப்பட்டிருக்கலாம்!

    அந்த நேரத்துக்கு ஶிவனின் ego, ஜெயித்திருக்கும்! ஆனால்..... அவருடைய முடிவு எப்படி இருந்திருக்கும்!

    இந்த ஸம்பவம்..."என்னை ஶரணடைந்து, உன்னுடையது அத்தனையையும் எனக்கே அளித்து விடு! உன்னை, நானே ஸுமந்து கொண்டு போகிறேன்" என்று பெரியவா நமக்கு சொல்லாமல், நடத்தியே காட்டிய அனுக்ரஹம்!

    ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம் !
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X