சீதையை மீட்கச் இலங்கை சென்ற ராமர் தங்கி வழிபட்ட தலம் திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதர் கோயில். இங்கே ராமபிரானை சயன கோலத்தில் காணலாம். குழந்தை இல்லாத தம்பதியருக்கு இங்கு பாயாச பிரசாதம் தரப்படுகிறது.
தல வரலாறு: புல்லவர், கண்ணுவர், காலவ மகரிஷிகள் மகாவிஷ்ணுவின் தரிசனம் வேண்டி யாகம் நடத்தினர். மகிழ்ந்த சுவாமி தாயார்களுடன் காட்சி தந்தார். அவர்களது வேண்டுகோளின்படி காட்சி தந்த இடத்திலேயே எழுந்தருளினார். அந்தத்தலமே திருப்புல்லாணி. உலகத்திற்கெல்லாம் தலைவர் என்பதால் மகரிஷிகள் இவருக்கு ஆதிஜெகந்நாதர் என்று திருநாமம் சூட்டினர். பிற்காலத்தில் தாயார் பத்மாசினிக்கு சந்நிதி எழுப்பப்பட்டது.
சயன ராமர்: சீதையை மீட்க இலங்கை சென்ற ராமர், கடலில் பாலம் அமைப்பதற்காக சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டு மூன்று நாட்கள் காத்திருந்தார். அப்போது, தர்ப்பைப்புல்லின் மீது சயனம் கொண்டார். புல்லை தலையணையாக வைத்ததால், புல்லணை என்ற சொல் ஏற்பட்டு "புல்லாணி'யாக திரிந்துவிட்டது.
இங்கு ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. அருகில் ஆஞ்சநேயரும், மூலஸ்தான சுவரில் சூரியன், சந்திரன், தேவர்களும் இருக்கின்றனர்.
பாயாச நைவேத்யம்: குழந்தை பாக்கியத்திற்காக தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினார்.
யாககுண்டத்தில் இருந்து வெளிப்பட்ட பாயாசத்தை மனைவியருக்கு கொடுத்தார். அதை பருகிய தசரத பத்தினியருக்கு ராமன் உள்ளிட்ட நான்கு குழந்தைகள் பிறந்தனர். இதன் அடிப்படையில், ராமர் வழிபட்ட இத்தலத்தில் சுவாமிகளுக்கு காலை 10.30 மணி பூஜையின்போது, பாயாச பிரசாதம் தரப்படுகிறது. குழந்தை வேண்டுபவர்களும், அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுபவர்களும் இங்குள்ள சந்தான கிருஷ்ணர் சன்னதியில் யாகம் நடத்தி, பாயாசம் படைத்து குழந்தை பிறக்க வேண்டுகிறார்கள்.
சேதுக்கரை: திருப்புல்லாணியில் இருந்து 4 கி.மீ., தூரத்தில் சேதுக்கரை உள்ளது. ராமர் இங்கிருந்துதான் இலங்கை செல்ல பாலம் அமைத்தார். சேது என்றால் அணை. அணை (சேது) கட்டிய இடத்திலுள்ள கரை என்பதால் தலம் சேதுக்கரை என பெயர் பெற்றது. இங்கு ஆஞ்சநேயருக்கு கோயில் இருக்கிறது. இவர், இலங்கையை பார்த்தபடி காட்சி தருகிறார். இங்குள்ள கடல், "ரத்னாகர தீர்த்தம்' என்றழைக்கப்படுகிறது. அமாவாசையன்று இங்கு பிதுர் தர்ப்பணம் செய்கிறார்கள்.
பஞ்ச தரிசனம்: பூரியில் பாதியளவே (சிலையின் அளவு) காட்சி தரும் ஜெகந்நாதர், இங்கு முழுமையாக காட்சியளிக்கிறார். இதனால் இத்தலம் "தட்சிண ஜெகந்நாதம்' என்றும் அழைக்கப்படுகிறது. ஆதிஜெகந்நாதர் (அமர்ந்த கோலம்), சயனராமர் (கிடந்த கோலம்), பட்டாபிராமர் (நின்ற கோலம்), அரசமர பெருமாள், பட்டாபிராமர் என இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங்களையும், மூன்று கோலங்களையும் தரிசிக்கலாம்.
தாயார்களுடன் நரசிம்மர்: ஜெகந்நாதர் சன்னதி கோஷ்டத்தில் லட்சுமி நரசிம்மர் இருக்கிறார். பக்தர்கள் இவருக்கு சந்தன காப்பிட்டு வழிபடுகிறார்கள். பொதுவாக மகாலட்சுமியை மடியில் இருத்தி காட்சி தரும் நரசிம்மர், இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். புராதனமான கோயில்களில் மட்டுமே காணக்கூடிய அமைப்பு இது.
சிறப்பம்சம்: மனைவியுடன் சமுத்திரராஜன் இங்கு இருக்கிறார். திருமங்கையாழ்வார் இத்தலத்து பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். ஆண்டாள், திருமழிசையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் இங்குள்ள சேது பாலம் பற்றி பாடியுள்ளனர். ஆதிஜெகந்நாதருக்கு பங்குனியிலும், ராமருக்கு சித்திரையிலும் பிரம்மோற்ஸவம் நடக்கிறது.
இருப்பிடம்: ராமநாதபுரத்தில் இருந்து 9 கி.மீ., தூரத்தில் இத்தலம் உள்ளது. பஸ் வசதி உண்டு.
திறக்கும் நேரம்: காலை 7- 12.30 , மாலை 3.30- இரவு 8.30 மணி.
போன்: 04567- 254 527.
தினமலர் ஆனமீகம்