Announcement

Collapse
No announcement yet.

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • #16
    Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

    நன்மை பயக்கும் எனில்...13

    யாதவப் பிரகாசரின் தாய் என்னவோ பேசுவதற்காக வந்தாள். ஆனால், என்னென்னவோ பழைய ஞாபகங்களைக் கிளறிவிட்டுப் போய்விட்டாள். ராமானுஜர் வெகுநேரம் அமைதியாகக் கண்மூடி அமர்ந்திருந்தார்.

    'வாழ்வில் சில சம்பவங்கள் ஏன் நடக்கின்றன என்பதற்கு நமக்குக் காரணங்கள் புரிவதில்லை. நடக்கிற காரியத்தின் சரியான பக்கத்தில் நிற்கிறோமா, எதிர்ப்புறம் இருக்கிறோமா என்று அந்தக் கணத்தில் முடிவு செய்யவும் முடிவதில்லை. மனித வாழ்க்கை என்பதே சம்பவங்களின் சாட்சிக்கூண்டில் ஏறி நிற்பதுதானே? ராமானுஜருக்கே அந்த வினா இருந்தது. ஒரு பத்து நிமிஷப் பேச்சில் பேய் பிடித்த பெண்ணைச்சரி செய்துவிட முடிகிறது.

    பூணுால் அறுத்து, சிகை கழித்து சன்னியாசியான பரம அத்வைத சிரேஷ்டரின் தாயாருக்கு,'பரம்பொருளை நெருங்கச் சரியான பாதை உமது மகன் காட்டுவதல்ல' என்று எடுத்துச் சொன்னால் புரிந்து விடுகிறது. கோடீஸ்வரரான கூரத்தாழ்வான் தமது சொத்து சுகங்கள் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டுத் தன்னிடம் சீடராக வந்து பணிந்து நிற்கிறார். காஞ்சி மாநகரமே கைகட்டி நிற்கிறது.

    ஆனால், பதினாறு வயதில் மணந்துகொண்டு, பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக உடன் வாழ்ந்த தஞ்சம்மாவை ஏன் தன்னால் சரி செய்ய இயலவில்லை?எத்தனையோபேர் என் பேச்சைக் கேட்கிறார்கள். பரம்பொருளான நாரணனின் பாதம் பற்ற முன்வருகிறார்கள். பிறப்பால் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று சொன்னால் சரி என்கிறார்கள். ஆண்டவன் சன்னிதானத்தில் அந்தணனா, பஞ்சமனா என்ற கேள்விக்கே இடமில்லை என்றால் ஒப்புக்கொள்கிறார்கள்.

    சரணாகதியை விஞ்சிய உபாயமில்லை என்று சொல்லும் போதெல்லாம், தலைக்குமேலே கரம் கூப்பிக் கண்மூடி நீர் சொரிகிறார்கள். தஞ்சம்மாவை ஏன் அது தொடவில்லை? கடைசிவரை தனது குலப் பெருமை ஒன்றைத் தவிர இன்னொன்றை அவள் ஏன் ஏற்க மறுத்துவிட்டாள்? ஒரு முழுநீள வாழ்வில் ஒரு கட்டத்தில் கூடவா தனது அஞ்ஞானத்தை அறிய முடியாமல் போய்விடும்? அவருக்கு வேதனை சுட்டது. வைணவ சாம்ராஜ்ஜியம் ஒன்றை நாளை நான் கட்டியெழுப்பலாம்.

    அது முடியாத காரியமல்ல. ஆனால் எனது எளிய முயற்சிகள் யாவும் தஞ்சம்மாவிடம் தோற்றுத்தான் போயிருக்கின்றன. இதனை எப்படி விழுங்கி ஜீரணிப்பது?ராமானுஜருக்கு நினைத்துப் பார்க்கவும் சங்கடமாக இருந்தது. தஞ்சம்மாவை விட்டு விலகுவது, பற்றுகள் அறுத்துத் துறவறம் ஏற்பது என்று முடிவு செய்தபோதுகூட, அவர் அவளை நினைத்துக் கொஞ்சம் அஞ்சவே செய்தார்.

    எதுவும் அவளுக்குப் புரியாது என்பதல்ல. எதையும் புரிந்துகொள்ளக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பவள். காலம் முழுதும் கட்டுண்டு அவதிப்பட்டு மடிவதற்கா இப்பிறப்பு? அமைதியாக யோசித்தார். ஓர் உபாயம் தோன்றியது. தவறுதானா? சட்டென்று தர்ம சாஸ்திரங்களின் பக்கம் மனம் ஓடத் தொடங்கியது.

    பொய்மையும் வாய்மை இடத்து. ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் எழுதியவன் என்னமோ ஒரு அவஸ்தைப்பட்ட பிறகுதான் இதைச் சொல்லியிருக்க வேண்டும். ஆயிரம் பேர் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பாராமல் எழுதி வைக்க வாய்ப்பில்லை. மனத்தை திடப்படுத்திக்கொண்டு அம்முடிவை எடுத்தார். வைணவர் ஒருவரை அழைத்தார். குலத்தால் தாழ்ந்தவர் என்று சொல்லப்பட்டாலும் குணத்தால் உயர்ந்த மனிதர் அவர்.

    ஒரு சமயம் அவருக்குச் சாப்பாடு போட மறுத்து தஞ்சம்மா விரட்டியடித்த சம்பவம் ராமானுஜருக்கு நினைவில் வந்து போனது.'ஐயா, இன்று நீங்கள் என் வீட்டுக்கு உணவருந்தச் செல்ல வேண்டும்!'ராமானுஜர் கேட்டபோது அவர் பயந்தார். 'ஐயோ திரும்பவுமா? வேண்டாமே?''இல்லை. இம்முறை என் மனைவி உங்களை நடத்துகிற விதமே வேறாக இருக்கும்.

    அதற்கு நான் பொறுப்பு.''புரியவில்லையே.'ராமானுஜர் விறுவிறுவென்று ஒரு கடிதம் எழுதினார். அது தஞ்சம்மாவுக்கு அவளது அப்பா எழுதுவது போன்ற கடிதம்.அருமை மகளே, உன் தம்பிக்குத் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. மாப்பிள்ளையை அழைத்துக்கொண்டு நீ உடனே ஊருக்கு வந்து சேர். இக்கடிதம் கொண்டு வரும் பாகவதோத்தமர் எனக்கு வேண்டப்பட்டவர்தான். களைப்போடு வருவார். அவரை உபசரித்து அனுப்பிவிட்டு ஊருக்குக் கிளம்பு.'இதைக் கொண்டுபோய் தஞ்சம்மாவிடம் கொடுங்கள்.' என்று ஒரு தட்டு நிறைய பழங்கள், வெற்றிலை பாக்கு, புடைவை, வேட்டியுடன் கொடுத்து அனுப்பி வைத்தார் ராமானுஜர்.

    அந்த மனிதர் ராமானுஜரின் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினார். 'அம்மா நான் உங்கள் அப்பாவின் ஊரில் இருந்து வருகிறேன்.'தஞ்சம்மாவுக்குக் குழப்பமாக இருந்தது. ஏற்கெனவே விரட்டியடித்த மனிதர். இப்போது பழம் பூ மரியாதைகளோடு வந்து நிற்கிறாரே?

    'உங்கள் தகப்பனார் இக்கடிதத்தை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்.'அவள் படித்துப் பார்த்தாள். தம்பிக்குத் திருமணம். உடனே கிளுகிளுப்பாகிவிட்டது.

    'ஐயா நிற்கிறீர்களே, உட்காருங்கள்.''அவகாசமில்லை தாயே. நான் கிளம்ப வேண்டும்.''முடியவே முடியாது. அன்று உங்களுக்கு நான் செய்தது பெரும் அபசாரம். அதற்குப் பரிகாரமாக இன்று என் கையால் நீங்கள் சாப்பிட்டுத்தான் போக வேண்டும்' என்று சொல்லி கணப் பொழுதில் இலை போட்டாள்.

    பரபரவென்று பரிமாற ஆரம்பித்தாள். அவர் சாப்பிட்டு விடைபெற்றுப் போய்விட்டார்.அன்று மாலை ராமானுஜர் வீடு திரும்பியபோது தஞ்சம்மா ஓடோடி வந்து வரவேற்றாள். 'அப்பா கடிதம் அனுப்பியிருக்கிறார். தம்பிக்குத் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது.''நல்ல விஷயம் தஞ்சம்மா. நீ இன்றே புறப்பட்டுவிடு.''நீங்கள்?''சில வேலைகள் இருக்கின்றன. முடித்துவிட்டு வருகிறேன்.'அவள் ஊருக்குப் போன மறுகணமே ராமானுஜர் பேரருளாளன் சன்னிதியை நோக்கி ஓடத் தொடங்கினார்.

    'வந்துவிட்டேன் பெருமானே! இதைத் தவிர வேறு உபாயமில்லை என்று தெளிந்தேதான் அவளை ஊருக்கு அனுப்பிவிட்டு உன் தாள்தேடி வந்தேன். இந்தக் கணமே எனக்குத் துறவு தாருங்கள். இனி தாங்கமாட்டேன்.'அதற்குமேல் அவரைக் கதறவைத்துப் பார்க்கப் பேரருளாளனுக்கும் விருப்பமில்லை. அதனால்தான் அவன் திருக்கச்சி நம்பிக்கு உத்தரவு கொடுத்தான்.

    அதனால்தான் அன்று அது நிகழ்ந்தது. ஊரே வியந்தது. உறவு துறந்து, பற்று துறந்து, பந்தம் அறுத்து, காஷாயம் தரித்த ராமானுஜரைக் கைகூப்பி வணங்கி நின்றது.'தஞ்சம்மாவைப் போன்ற ஒரு பேரழகி இத்தேசத்திலேயே கிடையாது. அவளையே துறக்கிறா ரென்றால் இவரது வைராக்கியம் எப்பேர்ப்பட்டது!' என்று வியக்காத வாயில்லை. ராமானுஜர் பெருமூச்சு விட்டார்.

    அன்று மறந்த தஞ்சம்மாவை அதற்குப் பிறகு யாதவரின் தாயார் வந்து போனபோதுதான் அவர் நினைக்க நேர்ந்தது.

    தொடரும்...
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #17
      Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

      கல்லைக் கரைத்தவள்............14

      யாதவப் பிரகாசரின் தாயார், வீடு சென்றடைய வெகு நேரம் ஆகிவிட்டது. பாடசாலைத் திண்ணையை ஒட்டிய சுவர் மீதிருந்த மாடத்தில், சிறு அகல் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. யாரோ படுத்திருப்பது தெரிந்தது.

      'யாரப்பா அங்கே?'குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தது தனது மகனேதான் எனத் தெரிந்ததும், அவளுக்குச் சற்று பயமாகிவிட்டது. யாதவன் திண்ணைக்கு வந்து படுக்கிற வழக்கமில்லையே? அதுவும் விளக்கு வைத்து ஒரு நாழிகை கூட ஆகியிருக்காத சமயம். பெரும்பாலும் அந்நேரத்தில் யாதவர் முற்றத்து நிலவு வெளிச்சத்தில் அமர்ந்திருப்பார். சகாயத்துக்கு ஒரு விளக்கு வைத்துக்கொண்டு ஏதாவது சுவடி புரட்டிக் கொண்டிருப்பார்.

      படிக்கத் தோன்றாத தினங்களில் சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிடுவதும் உண்டு. 'மகனே, என்ன ஆயிற்று உனக்கு? எதற்காக வாசலுக்கு வந்து படுத்திருக்கிறாய்?' 'உள்ளே வரக் காலனும் தயங்குகிறானோ என்று தோன்றியது தாயே. அவனுக்கு வசதியாகத்தான் நானே வெளியே வந்து படுத்தேன்.' அவள் பெற்றவள். சன்னியாசி என்றாலும் மகன் அல்லவா? விரக்தியின் விதவிதமான வெளிப்பாடுகளை அந்நாள்களில் அவள் யாதவப் பிரகாசரிடம் தினமும் கண்டுகொண்டிருந்தாள்.

      என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை. யோசிக்கத் தெரியாதவன் என்றால் எப்படியும் வளைத்துவிட முடியும். பண்டிதன் என்றாலும் பாசத்தால் வென்றுவிடலாம். ஆனால், துறந்தவனுக்கான சாவித்துவாரம் எது? சட்டென்று அவள் மனக் கண்ணில் ராமானுஜர் ஒரு கணம் வந்து போனார். 'அம்மா நீங்கள் சாப்பிட்டீர்களா?''இல்லையப்பா. நீயும் பசியோடுதான் இருப்பாய். பிரசாதங்கள் இருக்கின்றன. அதைச் சாப்பிடலாமல்லவா?'

      தயங்கித்தான் கேட்டாள். துணி சுற்றி எடுத்து வந்த பிரசாதத் தொன்னைகளை முன்னால் எடுத்து வைத்தாள். யாதவர் அவற்றைத் தொடவில்லை. 'எனக்குப் பசியில்லை' என்று சொன்னார். 'காஞ்சிக்குப் போயிருந்தீர்களோ?' அரைக் கணம் யோசித்த அந்தப் பெண்மணி, இன்று இதற்கு ஒரு முடிவு கட்டிவிடுவது என்று தீர்மானித்துக்கொண்டு, 'ஆம் மகனே. காஞ்சிக்குத்தான் போயிருந்தேன். ராமானுஜரை தரிசித்துவிட்டு வருகிறேன்' என்று சொன்னாள்.

      'ராமானுஜரையா?!' அந்தத் தாய் அப்போது தன் மகனுக்கு ஞானாசிரியனாகிப் போனாள். அத்வைத சித்தாந்தத்தில் ஊறி முறுக்கேறிய கட்டை அது. அகம் பிரம்மம் என்பதை, அகம் அழித்துச் சரணாகதி அடைந்தால் மட்டுமே பிரம்மம் என்று புரியவைக்கத் தொடங்கினாள். 'மகனே, சாத்திரங்களில் மேலானது, தாழ்வானது என்று ஏதுமில்லை.

      ஆனால் நீ நிம்மதியாக இருக்கிறாயா என்று யோசித்துப் பார். உன் மனத்தில் அமைதி என்று ஒன்று தென்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன என்று எண்ணிப் பார். துறந்தவனுக்குத் துயரமில்லை என்பது உண்மையானால் உன்னை வாட்டும் கொடுந்துயரங்களின் ஊற்றுக்கண் எது என்று சிந்தித்துப்பார்.' அம்மா என்று உள்ளுக்குள் உடைந்தார் யாதவப் பிரகாசர். 'மூவுலகையும் ஆளும் நாராயணனின் திருவடிக் கமலங்களின் பிரகாசத்தை, நான் ராமானுஜரின் முகத்தில் கண்டேன் மகனே. தெளிவு என்றால் அது. தீர்மானம் என்றால் அது. எத்தனை அமைதி, எவ்வளவு விவேகம்!

      நுாறு நுாறு பேராக, ஆயிரம் ஆயிரம் பேராக மக்கள் அவரை அண்டிச் சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள். சாஸ்திரங்களில் நீ ஆண்டுக்கணக்கில் பூச்சி பிடித்து மூளை மரத்துப் போய்விட்டாய். பக்தி எளிமையானது. சாலையில் செல்லும் சிறு குழந்தை தன் தாயின் விரல் பிடித்து நடப்பது போல, அவன் தாளைப் பற்றிக்கொள்ள வழி காட்டுகிறார் ராமானுஜர்.

      சரணாகதிக்குக் கால தேச நியமனங்கள் கிடையாது. நீ தகுதியுள்ளவன், நீ தகுதியற்றவன் என்ற பேதம் கிடையாது. இதற்குத்தான் இறைவனை நாடலாம், இன்னின்ன காரணங்களுக்குக் கூடாது என்ற சட்டதிட்டம் கிடையாது...' 'ராமானுஜர் அப்படிச் சொன்னாரா?' 'ஆம் மகனே. உயிர் போகும் நேரத்தில் தன்னைக் கூவியழைத்த கஜேந்திர யானைக்கு அவர் எதைக் கொடுத்தாரோ, அதையேதான் மானம் போகும் நேரத்தில் அழைத்த பாஞ்சாலிக்கும் கொடுத்தார். அது நிபந்தனையற்ற அன்பு. கட்டற்ற பெருங்கருணை.'

      'ஆனால் அம்மா, சாஸ்திரங்கள் போட்டுத்தருகிற பாதையில் போவது தானே எனது தருமம்? நான் நம்பிய சித்தாந்தத்துக்காக என் குலம் துறந்தவன் நான். எனக்குக் குடுமி கிடையாது. பூணுால் கிடையாது. ஏகதண்ட சன்னியாசியாக எத்தனைக் காலமாக இருந்துவிட்டேன்!' 'புரிகிறது மகனே. இது எதுவுமே அவசியமில்லை என்கிறார் ராமானுஜர்.

      உன்னால் தலைக்கு மேலே கைகளைத் துாக்க முடிந்தால் போதும். துாக்கிய கரங்களைக் குவித்தால் போதும். 'உற்றோ மேயாவோம், உமக்கேநாம் ஆட்செய்வோம்' என்று அவன் பாதங் களைப் பற்றிக்கொண்டால் போதும். மற்ற அனைத்தும் அநாவசியம் மகனே.' யாதவர் குமுறிக் குமுறி அழுது கொண்டிருந்தார்.

      நினைவு தெரிந்த நாள்முதல் அவர் பின்பற்றிய சித்தாந்தத்தை ஒன்றுமில்லை என்று அவரைப் பெற்ற தாயே விவரித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். சரிதான். என் சித்தாந்தம் எனக்கு என்ன சேர்த்தது? அகம்பாவத்தையும், பொறாமைத் தீயையும், பொங்கிய துவேஷத்தையும் சுமந்து கொண்டுதானே காலம் முழுதும் திரிந்திருக்கிறேன்? கண்ணெதிரே ராமானுஜர் கடைத்தேற ஒரு வழி காட்டுகிறார்.

      ஜாதி பேதமற்ற ஒரு மாபெரும் சமூகம். திருமால் அடியார் என்னும் ஒற்றை அடைமொழி. 'அதுதான் மகனே விஷயம். மனத்தைப் பொதி சுமக்கும் கழுதை யாக்கிக் கொண்டு விட்டாய் நீ. அவர் இறக்கி வைத்துவிட்டு சிறகு விரித்துப் பறக்கச் சொல்லுகிறார். என்ன கஷ்டம் உனக்கு?' அன்றிரவு முழுதும் அந்தத் தாய் தன் மகனுடன் பேசிக்கொண்டே இருந்தார். அவரது விருப்பமெல்லாம் மிக எளிதானது. அந்திமக் காலத்தில் இருக்கிற தனது மகன், கண்மூடும்போதாவது கவலை களற்று நிம்மதியாக இருக்க வேண்டும். 'நாராயணன் உனக்கு அந்த நிம்மதியைக் கொடுப்பான்.

      ராமானுஜர் உன்னை அந்த நாரணனுக்குப் பக்கத்தில் அழைத்துச் சென்று நிறுத்தக்கூடியவர். இது உன்னைப் பெற்றவள் கருத்து. இதற்குமேல் உன் விருப்பம். நேரமாகிவிட்டது. கொஞ்சமாவது துாங்கு.' என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டாள். மறுநாள் யாதவப் பிரகாசர் விடியும் நேரம் கிளம்பி விட்டார்.

      'போகிறபோது எங்கே என்று கேட்கக்கூடாது. நீயே சொல்லிவிட்டுப் போ' என்றாள் அவரது தாயார்.'எனக்கு இன்னும் பல சந்தேகங்கள் இருக்கின்றன அம்மா. நான் ராமானுஜரைப் பார்த்து விளக்கம் கேட்கப் போகிறேன்.' அவளுக்குப் புரிந்துவிட்டது. புன்னகை செய்தாள். ஆசீர்வதித்து அனுப்பி வைத்தாள்.

      தொடரும்...
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment


      • #18
        Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

        கோவிந்த ஜீயர்! 15

        வழி முழுக்க யாதவப் பிரகாசருக்கு ஒரே சிந்தனைதான். அவர் சடங்குகளை விட்டொழித்தவர். பூரண அத்வைத சித்தாந்தி. தனக்குள் இறைவனைக் காண விரும்பி, தன்னையே இறைவனாகக் கருதிக்கொண்ட அகங்காரத்தின் பிடியில் தன்னைக் கொடுத்தவர். ஆனால், சந்தேகமின்றி சன்னியாசி. அந்தணர்களின் அடையாளங்களாகப் பார்க்கப்பட்ட குடுமியோ, பூணுாலோ அவருக்குக் கிடையாது. ஜாதி துறக்க முடிந்தவருக்கு மீதி துறக்க முடியாது போனதுதான் பிரச்னை.

        ஆனால், வயோதிகம் அவருக்கு சற்று நிதானத்தை அளித்திருந்தது. அதுநாள் வரை செய்த காரியங்கள் பற்றிய மீள் பரிசீலனையில், தன்னைத் தானே அவர் வெறுக்கத் தொடங்கியிருந்தார். அவரது ஆணவம், கல்வியால் வந்தது. தானறிந்த வேதமும், தனையறிந்த உலகமும் என்றும் தன்னை உச்சத்தில் உட்கார வைத்திருக்கும் என்று கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருந்தார்.

        ஆனால், வேதத்தின் உச்சத்தில் உள்ளவன் வேறொருவன் அல்லவா? என்றும் உள்ளவனும், எங்கும் உள்ளவனுமான பரம்பொருளை உணர்த்துகிற கருவியல்லவா அது? சாமரத்தை வீச வேண்டிய திருப்பணியில் உள்ளவன், தனக்கே வீசிக்கொள்ள நினைப்பது விபரீதம். ஊர் சிரிக்கும். அதுதான் நடந்தது. உலகு எள்ளி நகையாடும். அதுவும் நிகழ்ந்தது. நேரில் கும்பிட்டு நகரும் ஜனங்கள், முதுகுக்குப் பின்னால் அவரது ஆணவத்தைக் குறிப்பிட்டு இழித்துப் பேசியதை அவர் அறிய நேர்ந்தபோதுதான் அவருக்குத் தனது தவறு புரிந்தது.

        மறுபுறம், தன்னிடம் பயில வந்த ராமானுஜன் தனியொரு பாதை அமைத்து மேலே மேலே போய்க் கொண்டிருந்ததையும் அவர் விழிப்புடன் கவனித்துக் கொண்டிருந்தார். ஆணவமற்ற ஆத்மா. அத்தனை பேரையும் அரவணைக்கிற ஆத்மா. ஒரு காழ்ப்புண்டா? சிறு துவேஷமுண்டா? பழி வாங்கும் சிந்தையுண்டா!

        'அம்மா, நான் அவனைக் கொல்ல நினைத்ததை அவன் அறிவான். ஆனாலும், ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று என்னிடம் அவன் இருந்த இறுதி நாள் வரை கேட்கவில்லை.'இரவெல்லாம் சொல்லிச் சொல்லி அழுதார். 'மகனே, தன்னை மையப்படுத்தி உலகைப் பார்க்கிறவர்களுக்கும், பரம்பொருளான நாரணனை மையமாக்கி அவன் பாதாரவிந்தங்களில் தன்னைச் சேர்க்கத் துடிக்கிறவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

        அவர் இல்லாது போனால் உனக்கு நல்லது என்று நீ நினைத்தாய். அவர் இருந்தால் ஊருக்கு நல்லது என்று இறைவன் நினைத்தான். யார் நினைப்பு வெல்லும்?' அன்றிரவு முழுதும் யாதவர் துாங்கவில்லை. தாம் செய்த பாவங்களுக்கெல்லாம் ஒரே பிராயச்சித்தம் இம்மாபெரும் பூமியை முழுதாக ஒருமுறை பிரதட்சணம் செய்வதுதான் என்று அவருக்குத் தோன்றியது.

        விடிவதற்குச் சற்று முன்னால் அவர் கண்ணயர்ந்தபோது ஒரு கனவு வந்தது. கனவில் கேட்ட குரல் திடுக்கிட்டு எழ வைத்தது. 'யாதவப் பிரகாசா! நீ பூமியை வலம் வருவதும், எனது பக்தனான ராமானுஜனை வலம் வந்து பணிவதும் ஒன்றேதான்.' அதன்பிறகுதான் அவர் கிளம்பினார்.

        ஆனால், அப்போதும் மனத்தில் சிறு குழப்பம். ஒருவேளை பிரமையாக இருக்குமோ? ராமானுஜர் இதனை ஏற்பாரா? தன்னை அங்கீகரிப்பாரா? தனது பாவங்களை மன்னிப்பாரா? காஞ்சிக்குப் போய்ச் சேர்ந்ததும் அவர் நேரே திருக்கச்சி நம்பியைச் சந்தித்துத் தனது சந்தேகத்தைக் கேட்டார். நேரடியாகக் கூடச் சொல்லவில்லை.

        அதிலும் பூடகம். 'என் மனத்தில் ஒரு சந்தேகம் இருக்கிறது. அது சரியா என்று பெருமாளிடம் கேட்டுச் சொல்வீர்களா?' என்ன சந்தேகம் என்று திருக்கச்சி நம்பி கேட்கவில்லை. அத்வைத சிங்கம் இன்று அடிபணிந்து வந்து நிற்கிறது. ஒரு சரித்திரத்தின் தொடக்கப்புள்ளியாக விளங்கப் போகிற சம்பவ நாள் நெருங்கி வருகிறது. நாம் எதற்கு கேள்வி கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்?'ஆகட்டும் சுவாமி. நீங்கள் நாளை வாருங்கள்.' என்றார் திருக்கச்சி நம்பி.

        யாதவர் காஞ்சியிலேயே காத்திருந்தார். மறுநாள் பொழுது விடிந்ததும் அடித்துப் பிடித்துக் கொண்டு திருக்கச்சி நம்பியை ஓடோடிச் சென்று சந்தித்தார். 'அருளாளனைக் கேட்டீர்களா? உமக்கு என்ன பதில் கிடைத்தது?''அவன்தான் ஏற்கெனவே உமது கனவில் வந்து விடை சொல்லி விட்டானாமே? அதையே செய்யச் சொல்லி உத்தரவாகியிருக்கிறது.' ஒரு கணம்தான். கதறி விட்டார் யாதவப் பிரகாசர்.

        எப்பேர்ப்பட்ட மனிதர் இவர்! சக மனிதனிடம் பேசுவதுபோல இறைவனுடன் பேசுகிற வல்லமையெல்லாம் எத்தனை பேருக்கு சாத்தியம்? அப்படியே கைகூப்பி நின்றார். மேற்கொண்டு எதுவுமே கேளாமல், ராமானுஜரின் மடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அன்று அது நடந்தது. 'ராமானுஜரே! நான் யாதவப் பிரகாசன் வந்திருக்கிறேன்.' மேனி நடுங்க தனது முன்னாள் சீடரின் எதிரே, கூனிக் குறுகிப் போய் வந்து நின்றார் யாதவர்.

        'சுவாமி வர வேண்டும். நலமாயிருக்கிறீர்களா?' சொற்களைத் தேடித் தவித்துக் கொண்டிருந்த யாதவப் பிரகாசர், ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டு தனது அகங்காரத்தை உருவி எடுத்து ராமானுஜரின் முன்னால் வைத்து வணங்கினார். 'நான் கதி பெற வழிகாட்டுங்கள். என் சந்தேகங்களைத் தீர்த்து வையுங்கள். சத்யம், ஞானம், அனந்தம் பிரம்மத்திலேயே நாம் மீண்டும் ஆரம்பித்தாக வேண்டும்.'ராமானுஜர் புன்னகை செய்தார்.

        தன்னருகே இருந்த கூரத்தாழ்வானைப் பார்த்தார். 'இவர் உமக்கு அனைத்தையும் விளக்குவார்' என்று சொன்னார். ஆழ்வான் ஓர் அறிவுக்கடல். பெரும் பண்டிதர். தனது ஞானம் முழுதும் தன் குரு ராமானுஜரின் ஆசியெனப் பணிந்து வாழ்பவர். அன்று கூரத்தாழ்வான் யாதவரின் அனைத்து சந்தேகங்களுக்கும் ராமானுஜரின் சார்பில் பதில் சொன்னார். தத்துவச் சந்தேகங்கள். சிந்தாந்தச் சிடுக்குகளின் மீதான சந்தேகங்கள். வேதாந்த உட்பொருள் சார்ந்த விளக்கங்கள். சத்தியமும், ஞானமும் மட்டுமல்ல. சகலமும் பரம்பொருளின் குணங்கள்தாம்.

        உலகம் ஒரு மாயை அல்ல. ஏன் அப்படி எண்ணிக்கொள்ள வேண்டும்? கயிறு ஏன் பாம்பாகத் தெரிய வேண்டும்? கயிறைக் காணும்போதே பாம்பின் தலைமீது நின்று நடமாடியவனின் பேரெழிலும், பெருங்கருணையுமல்லவா நம்மை ஆட்கொள்ள வேண்டும்? மையலேற்றி மயக்க அவன் முகம் மட்டுமே மாயமந்திரம்! கூரத்தாழ்வான் வைணவத்தின் சகல தரிசனங்களையும் யாதவர் முன் விளக்கி முடித்தபோது, யாதவர் கைகூப்பி எழுந்து நின்றார்.

        'ராமானுஜரே! நீர் யார் என்பதை உமது சீடரின் விளக்கங்கள் எனக்குப் புரியவைத்துவிட்டன. இனி நான் யாராக இருக்கவேண்டுமென்று நீங்களே தீர்மானம் செய்யுங்கள்' என்று சொல்லி ராமானுஜரை வலம் வந்து தாள் பணிந்தார். ராமானுஜர் அவருக்குப் பஞ்ச சம்ஸ்காரங்களைச் செய்து வைத்தார். கோவிந்த ஜீயர் என்ற பெயர் வழங்கி, தன்னோடு சேர்த்துக் கொண்டார்.

        தொடரும்...
        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment


        • #19
          Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

          ஒரே ஒரு பிரார்த்தனை ! 16

          அப்போதுதான் பாடி முடித்திருந்தார். அரங்கனைச் சேவித்துவிட்டு ஆளவந்தாரின் சீடர்கள் அனைவரும் கருடாழ்வார் சன்னிதிப் பக்கம் வந்துகொண்டிருந்தபோது இரண்டு பேர் ஓடி வந்தார்கள்.

          'பெரிய நம்பிகளே! காஞ்சியில் ஓர் அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. இது இந்நுாற்றாண்டின் அதிசயம். பேரருளாளனின் பெருங்கருணை இதனைச் சாத்தியமாக்கியிருக்கிறது!'மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, பரவசத்தில் தோய்த்த வார்த்தைகளைக் கோக்கத் தெரியாமல் அவர்கள் அள்ளிக் கொட்டினார்கள்.பெரிய நம்பிக்குக் காஞ்சி என்றதுமே ராமானுஜரின் நினைவு வந்தது. தமது இறுதி நாள் நெருங்கிய நேரத்தில், 'அவரை அழைத்து வா' என்று ஆசார்யர் ஆளவந்தார் தன்னைக் காஞ்சிக்கு அனுப்பிவைத்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

          பிறகு ஆளவந்தார் மறைந்த பின்னர் மீண்டும் காஞ்சிக்குச் சென்றது. வழியில் அவரை மதுராந்தகத்தில் சந்தித்தது. ஏரி காத்த ராமர் கோயிலில் அவருக்குப் பஞ்ச சம்ஸ்காரங்களைச் செய்து வைத்தது. ராமானுஜர் வீட்டுக்கே போய்த் தங்கி, பிரபந்தம் சொல்லிக் கொடுத்தது. தஞ்சம்மாவின் தண்ணீர்த் தகராறு. சொல்லிக்கொள்ளாமல் கிளம்பி வந்தது.

          'நம்பிகளே, எந்த உலகில் இருக்கிறீர்? நாங்கள் சொல்வது கேட்கிறதா?'வந்தவர்கள் கேட்டார்கள். உண்மையில் பெரிய நம்பிக்கு அவர்கள் விவரித்துச் சொன்ன சம்பவத்தில் ஒருவரி கூட மனத்தில் ஏறவில்லை. அவரது எண்ணமெல்லாம் பழைய சம்பவங்களையே சுற்றி வந்தது. 'என்ன சொன்னீர்கள்?' என்று திரும்பக் கேட்டார்.

          திருவரங்கப் பெருமாள் அரையர் மீண்டும் எடுத்துச் சொன்னார். 'யாதவப் பிரகாசர் ராமானுஜரின் சிஷ்யராகி, ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு விட்டாராம். ராமானுஜர் அவருக்கு கோவிந்த ஜீயர் என்று பெயரிட்டு புத்தகம் எழுதப் பணித்திருக்கிறா ராம்.' நம்பி புன்னகை செய்தார்.

          'இது நடக்காதிருந்தால்தான் நான் வியந்திருப்பேன்!''எப்படி? எப்படிச் சொல்கிறீர்கள்? யாதவரின் மனமாற்றம் எதிர்பார்க்கக்கூடியது இல்லையே?' 'ஆனால் ராமானுஜரின் பராக்கி ரமம் நாம் அறிந்தது அல்லவா? நாமெல்லாம் நமது ஆசாரியரின் கூடவே இருந்தவர்கள். ஆனால், வாழ்வில் ஒருமுறைகூட நேரில் சந்தித்துப் பேசியிராத ராமானுஜரை அல்லவா அவர் தமக்குப் பிறகு வைணவ உலகின் ஆசார்ய பீடாதிபதியாக எண்ணினார்? ஆளவந்தார் நெஞ்சையே ஆளப் பிறந்தவர் அல்லவா அவர்?

          யாதவரின் அகந்தை சரியான இடத்தில் நொறுங்கியிருக்கிறது. தமது சீடருக்கே சீடரான குரு இவ்வுலகில் வேறு யாரும் இருக்கமாட்டார்கள். யாதவர் பெயர் இனி ராமானுஜர் பெயருள்ள வரை நிலைத்திருக்கும்.'அவர்கள் அத்தனை பேரும் பரவச நிலையில் இருந்தார்கள். காஞ்சிக்குச் சென்று வந்தவர்கள் கதை கதையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

          ராமானுஜர் துறவு ஏற்றது குறித்து. முதலியாண்டானும், கூரத்தாழ்வானும் முதல் சீடர்களாகச் சேர்ந்தது குறித்து. அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் திரள் திரளாகப் பெருகி வந்து அவரை தரிசித்து, வைணவத்தை வாழ்க்கை முறையாக ஏற்பது குறித்து. 'ஐயா, காஞ்சி மக்கள் அவரைப் பற்றித் திரும்பத் திரும்பச் சொல்வதெல்லாம் ஒன்றுதான்.

          இப்படியொரு அகந்தையே இல்லாத மனிதன் இப்பூமியில் வாழமுடியுமா என்று அவர்கள் வியக்கிறார்கள். அத்வைதிகளுடன் வாதம் செய்து வெல்லும்போதுகூட கூப்பிய கரங்களை இறக்குவதில்லையாம்.' 'அரையரே, நமது ஆசாரியர் ராமானுஜரைச் சந்திப்பதற்காகக் காஞ்சி சென்ற தருணம் உமக்கு நினைவிருக்கிறதா?' என்றார் பெரிய நம்பி. யாரால் மறக்க முடியும்? சரித்திரம் மறக்காத ஒரு பக்கச் சந்திப்பு அது!

          யாதவரின் கொலை முயற்சியில் இருந்து தப்பித்து ராமானுஜர் காஞ்சி வந்து சேர்ந்திருந்த சமயம் அது. அவரைக் காத்ததும் மீட்டதும் பேரருளாளனே என்கிற தகவல், பனிக் காற்றைப் போல் இண்டு இடுக்கு விடாமல் தேசமெங்கும் பரவிக் கொண்டிருந்தது. ஊர் திரும்பிய யாதவர் மீண்டும் அவரைப் பாடசாலைக்கு வரச் சொன்னார். அதனால் பாதகமில்லை என்று திருக்கச்சி நம்பியும் சொன்னதால், ராமானுஜர் வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்திருந்தார்.

          அந்தச் சமயத்தில்தான், திருவரங்கத்தில் இருந்த ஆளவந்தாரை இந்தத் தகவல் சென்று தொட்டது. அருளாளன் அன்புக்குப் பாத்திரமான ஒரு பிள்ளை யாதவரிடம் வாசித்துக் கொண்டிருக்கிறானா? வியப்பாக இருக்கிறதே. நான் அவனைப் பார்க்கவேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டார்.

          ஆளவந்தார் திடகாத்திரமாக இருந்த காலம் அது. எனவே நினைத்த மாத்திரத்தில் கிளம்பியும் விட்டார். காஞ்சியில் ஆலவட்ட கைங்கர்யம் செய்து கொண்டிருந்த திருக்கச்சி நம்பியும் அவரது மாணவர்தாம். ஸ்ரீசைல பூர்ணரைத் திருப்பதிக்கு அனுப்பியது போலத்தான் நம்பியை அவர் காஞ்சியில் விட்டிருந்தார்.

          எனவே ஆசார்யர் வருகிறார் என்றதும் நம்பி பரபரப்பாகிவிட்டார். கோயில் மரியாதைகளுடன் ஊர் எல்லைக்கே சென்று அவரை வரவேற்று அழைத்து வந்தார். சன்னிதியில் சேவை ஆனதும், ஆளவந்தார் திருக்கச்சி நம்பியுடன் பொதுவாகச் சில விஷயங்கள் பேசி யபடி வெளியே வந்தார். அப்போது அது நடந்தது. யாதவப் பிரகாசர் கோயில் மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். பின்னால் அவரது மாணவர்கள். 'நம்பி, அவர்தானே யாதவப் பிரகாசர்?'

          'ஆம். அவரேதான்.''அவரது குழுவில் அதோ ஒரு பிள்ளை நெடுநெடுவென வளர்த்தியாக, சூரியனைக் கரைத்துச் செய்தாற்போன்ற பொலிவுடன் வருகிறானே, அவன் யார்?' 'குருவே, அவர் பெயர் ராமானுஜன். யாதவரிடம் வாசிக்கும் அவர்தான் அருளாளனுக்குத் தீர்த்த கைங்கர்யமும் செய்து கொண்டிருக்கிறார்.'ஆளவந்தார் புன்னகை செய்தார்.

          திருக்கச்சி நம்பி ராமானுஜரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அவரிடம் எடுத்துச் சொன்னார். 'சுவாமி சத்யம், ஞானம் அனைத்தும் பிரம்மத்தின் குணங்கள் என்று இவர் சொல்லப் போக, யாதவருக்கு இவரைப் பிடிக்காது போய்விட்டது.

          அன்று ஆரம்பித்து அவர்களிடையே அடுக்கடுக்காக எத்தனையோ பிரச்னைகள். காசிக்கு அழைத்துச் சென்று கொன்றுவிடவே பார்த்திருக்கிறார் யாதவர். ஆனால் பேரருளாளன் காப்பு உள்ளது இவருக்கு.'அந்தக் கணத்தில் ஆளவந்தார் முடிவு செய்தார். வைணவ குருபீடம் தனக்குப் பிறகு இவரைச் சேர வேண்டியது.நம்பி ராமானுஜரை அழைத்து வந்து அறிமுகப்படுத்தத் தயாராகத்தான் இருந்தார்.

          ஆனால் அது அவசியமில்லை என்று ஆளவந்தார் நினைத்தார். விறுவிறுவென்று மீண்டும் சன்னிதிக்குள் சென்றார். ஒரே ஒரு பிரார்த்தனை.'இவர் இருக்கவேண்டிய இடம் யாதவரின் குருகுலமல்ல. வைணவ உலகம் இவருக்காகக் காத்திருக்கிறது. மற்றபடி உன் சித்தம்.'கண்மூடி ஒரு நிமிடம் நின்றவர், உடனே கிளம்பிப் போயே விட்டார்.

          தொடரும்...

          வாழ வைப்பார்! 17


          ஆளவந்தார் காஞ்சி சென்று திரும்பிய சில காலம் கழித்து இரண்டு சம்பவங்கள் நடந்தன. முதலாவது, ராமானுஜர் நிரந்தரமாக யாதவப் பிரகாசரை விட்டு வெளியேறியது. மன்னர் மகளின் மனநோய் நீங்கியதை அடுத்து நிகழ்ந்தது அது. இரண்டாவது சம்பவம், ஆளவந்தாருக்கு உடல் நலன் குன்றிப் போனது.

          அவருக்குப் புற்றுநோய் இருந்தது. எத்தனைக் காலமாக என்று யாருக்கும் தெரியாது. நோயின் தீவிரம் அதிகரித்தபோது அவர் செயல்பாடற்றுப் போனார். கொல்லும் வலியைக் காட்டிக்கொள்கிற மனிதரில்லை அவர். ஆனால் உடன் இருப்பவர்களுக்கு ஆசாரியரின் அவஸ்தை தெரியாதா?

          'ஆசாரியரே! உமது சீடனுக்கு ஒரு வேண்டுகோள் இருக்கிறது. அளவிட முடியாத ஞானத்தையும், நல்லறிவையும் எனக்கு அள்ளித்தந்த தாங்கள் இதனையும் ஏற்றுக் கொடுத்தருள வேண்டும்!' கேட்டவர் மாறனேர் நம்பி. மாறன் என்பது நம்மாழ்வாரின் பெயர். நம்மாழ்வாருக்கு நிகராக வைணவ உலகம் கருதி மதித்த மகான் அவர். குரு பக்தியில் ஈடு இணையற்ற பெரியவர். அவர் கேட்கிறார்.

          அதுவும் முதல் முறையாக 'தன் விருப்பம்' என்ற ஒன்று.
          'என்ன வேண்டும் நம்பி?'
          'நீங்கள் கொடுப்பதாக முதலில் வாக்களியுங்கள். அதன்பின் சொல்கிறேன்.'
          'சரி, அப்படியே ஆகட்டும். சொல், என்ன வேண்டும்?'

          'வைணவம் தழைக்க நீங்கள் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டியது அவசியம். இந்த நோய் உங்களை விழுங்கிவிட்டால் நாங்கள் அனாதைகளாகிப் போவோம். எனவே உங்களுக்கு வந்திருக்கிற ராஜபிளவையை ஆசாரியப் பிரசாதமாக நீங்கள் எனக்குத் தந்தருள வேண்டும். நான் இருப்பது என்
          குடும்பத்துக்கு மட்டுமே நல்லது.

          நீங்கள் இருந்தால் நாட்டுக்கு நல்லது.'சிலிர்த்துவிட்டது ஆளவந்தாருக்கு. ஒரு கணம் கண்மூடி யோசித்தார். என்னவென்று கேட்காமல், தருவதாக வாக்களித்துவிட்ட சொல்லும் முக்கியம். நல்ல மனம் கொண்ட சீடனின் நல்வாழ்வும் முக்கியம். எனவே, தனது புண்ணியங்களைப் புண்ணுக்குள் செலுத்தி, அதன் ஒரு பகுதியை மாறனேர் நம்பிக்கு மாற்றினார்.

          'நம்பி! நீங்கள் கேட்டுவிட்டதால் இதனைச் செய்திருக்கிறேன். ஆனால் எனது இறுதி நெருங்கிவிட்டது என்பதை நான் அறிவேன். உமது புகழை உலகறியச் செய்ய இச்சம்பவம் ஒரு சாட்சியாகட்டும்.'
          ஆளவந்தார் இறுதியாகப் படுத்தார். அவரது வலியும் வேதனையும் சற்றுக் குறைந்திருந்தது. ஆனால் அவரது சீடர்களுக்கு வருத்தம் மிகுந்திருந்தது.

          'ஆசாரியரே! இப்படி எங்களைத் தனியே விட்டுச் செல்கிறேன் என்கிறீர்களே? இனி எங்களை யார் காப்பார்?' என்று பெரிய நம்பி அவரது கால்களைப் பற்றிக்கொண்டு கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தார்.

          'காஞ்சியில் நான் அவரைக் கண்டேன். பார்த்த கணத்திலேயே அவர் ஆதிசேஷனின் அம்சம் என்று என் மனத்தில் பட்டது. ஞானத்தின் செஞ்சுடர் தகதகக்கும் அத்தெய்வீக முகம் இப்போதும் என் கண்ணில் நிற்கிறது நம்பி. ராமானுஜர் இப்போது யாதவப் பிரகாசரை விட்டு விலகி, பேரருளாளனுக்குத் தீர்த்த கைங்கர்யம் செய்து கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். வைணவ உலகம் அவரால் தழைக்கும். அடியேன் ஆளவந்தார். அவர் வாழ வைப்பார்!'

          குருவின் மனம் சீடர்களுக்குப் புரிந்துபோனது. தாமதம் பயனில்லை. இன்றே கிளம்புங்கள் என்று அனைவரும் துரிதப்படுத்தி, பெரிய நம்பியைக் காஞ்சிக்கு அனுப்பி வைத்தார்கள்.ஒளியின் வேகத்தில் கால்கள் இயங்க முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்! ஆனால் அவர் காஞ்சியைச் சென்றடைய ஒரு வார காலமாயிற்று. திருக்கச்சி நம்பியைச் சந்தித்து ஆசாரியரின் விருப்பத்தைச் சொன்னார்.

          'வைணவ தரிசன பீடம் ராமானுஜருக்காகக் காத்திருக்கிறது நம்பிகளே. நமது ஆசாரியரின் எண்ணம் அதுதான். அவர் வருவாரா? மரணப் படுக்கையில் இருக்கும் ஆளவந்தார் தமது இறுதிக் கணத்துக்கு முன்னால் இளையாழ்வாரைச் சந்தித்துவிட வேண்டும். எப்படியாவது ஏற்பாடு செய்யுங்கள்.'

          ராமானுஜரின் தாயார் காந்திமதி அப்போது காலமாகியிருந்தார். அந்தத் துயரின் சுவடுகள் மறைந்திராத நேரம். அருளாளன் திருப்பணியில் மட்டுமே அவர் ஆறுதல் தேடிக்கொண்டிருந்தார்.
          'இது அவர் வரும் நேரம்தான். நீங்கள் முதலில் பெருமாளைச் சேவித்துவிட்டு வாருங்கள். நாம் பேசுவோம்' என்றார் திருக்கச்சி நம்பி.

          பெரிய நம்பி சன்னிதிக்குச் சென்றார். வையம் காக்கும் வரதராஜப் பெருமாள். கற்பூர வெளிச்சத்தில் கடலெனப் பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருந்த அவனது பேரருள் தன்னை நெருங்கி வருடுவதாக அவருக்குத் தோன்றியது. 'பெருமானே! என் வருகையின் நோக்கம் உனக்குத் தெரியும். வேண்டியது உனது அனுமதி ஒன்றே.'கண்மூடி அவர் சில சுலோகங்களை வாய்விட்டுச் சொல்லத் தொடங்கினார். ஆளவந்தார் இயற்றிய சுலோகங்கள்.

          மிகச் சரியாக அந்நேரம் ராமானுஜர் சன்னிதிக்குள் நுழைந்தார். தான் அதுவரை கேட்டிராத அந்த சுலோகங்களின் கம்பீரத்திலும், ஆற்றல் மிக்க ஆராதனைகளிலும் மனம் பறிகொடுத்தவராக, 'ஐயா! இந்த சுலோகங்களை இயற்றியவர் யார்?' என்று கேட்டார். கண் திறந்து அவரைப் பார்த்தார் பெரிய நம்பி.
          'இவர்தான் ராமானுஜர்.' என்று திருக்கச்சி நம்பி அறிமுகம் செய்தார்.

          பரபரப்பாகிவிட்டது அவருக்கு. எங்கே தொடங்குவது, என்னவென்று சொல்லுவது, எப்படி அழைப்பது என்று கணப் பொழுதில் மனத்தில் எழுந்த நூறு வினாக்களில், எதை முதலில் விடுவிப்பது என்று புரியாமல் குழம்பி நின்ற கணத்தில் திருக்கச்சி நம்பியே எடுத்துக் கொடுத்தார்.
          'அவர் இந்த சுலோகங்களைப் பற்றிக் கேட்டார்.'

          'ஆம். இவை ஆளவந்தார் அருளிய சுலோகங்கள்.' பரவசமானார் ராமானுஜர். 'ஆ! ஆளவந்தாரா? வைணவம் தழைக்கப் பரமன் இவ்வையத்துக்கு அளித்த பெருங்கொடை அல்லவா அவர்! வாழ்வில் ஒருமுறையாவது அவரைத் தரிசித்துவிட மாட்டோமா என்று எத்தனைக் காலமாக நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன் தெரியுமா?'

          'திருவரங்கத்தில் இருக்கிறார். உடல்நலம் குன்றிய நிலையில், பேசவும் சக்தியற்றவராக...' அவர் முடிக்கவில்லை. 'கிளம்புங்கள். நான் உம்மோடு இப்போதே திருவரங்கம் வருகிறேன். எனக்கு அவரைப் பார்த்தே தீரவேண்டும். உடனே. மிக உடனே.'அது நடந்தது, பேரருளாளன் சித்தம். ராமானுஜர் வீட்டுக்குப் போகவில்லை. மனைவியிடம் சொல்லிக்கொள்ளவில்லை. சன்னிதியில் நின்றிருந்த பெரிய நம்பியை இழுத்துக்கொண்டு அப்படியே வீதிக்குப் பாய்ந்துவிட்டார்.

          ஓட்டமும் நடையுமாகக் காஞ்சியில் இருந்து திருவரங்கம் சென்று சேரும் வரை இருவரும் ஆளவந்தாரைத் தவிர வேறு எதையுமே நினைக்கவில்லை.ஆனால் விதி வேறாக இருந்தது. அவர்கள் திருவரங்கம் சென்று சேர்ந்தபோது ஆளவந்தார் காலமாகியிருந்தார்.

          தொடரும்...
          Last edited by krishnaamma; 17-04-17, 12:07.
          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment


          • #20
            Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

            மூன்று விரல் ! 18

            காவிரியைக் கடந்து, திருவரங்கத்தின் எல்லையைத் தொட்டபோதே ஏதோ சரியில்லை என்று தோன்றியது. கூட்டம் கூட்டமாகப் போய்க்கொண்டிருந்த மக்களின் பதற்றமும், தவிப்பும் பெரிய நம்பிக்குக் குழப்பம் தந்தது. யாரையாவது நிறுத்தி விசாரிக்கலாம். ஏதாவது தகவல் வரும். ஆனால் அதற்கெல்லாம் நமக்கு அவகாசமிருக்கிறதா, தவிரவும் அது அவசியமானதாக இருக்கும் என்பது என்ன நிச்சயம்?

            'ஆனால் இம்மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல், ஒரே துக்கத்தின் ஓரங்களைப் பிய்த்துத் தம் முகங்களில் ஒட்டவைத்துக் கொண்டு போகிறாற் போலத் தெரிகிறது சுவாமி!' என்றார் ராமானுஜர்.
            ஒரே துக்கம்! உணர்வளவில் ஒன்றுதான். ஆனால் அவரவர் துக்கத்தின் கனம் நிச்சயமாக வேறு வேறாக அல்லவா இருக்கும்? 'எதற்கும் விசாரித்து விடுவோமே?'

            சரி என்று பெரிய நம்பி ஒருவரை அழைத்தார். 'எல்லோரும் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்?'
            'ஐயா உங்களுக்கு விவரம் தெரியாதா? ஆளவந்தார் சுவாமிகள் பரமபதம் அடைந்துவிட்டார்கள். திருக்கரம்பன் படித்துறையில் இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன.'

            ராமானுஜருக்கு நெஞ்சடைத்துப் போனது. பெரிய நம்பி ஐயோ என்று அலறியே விட்டார். நின்று பேசவோ, அழுது தீர்க்கவோ அவகாசமற்ற தருணம். எய்த அம்பைப் போல் அவர்கள் படித்துறையைப் பாய்ந்து அடைந்தபோது, ஆளவந்தாரின் திருமேனி அங்கு கிடத்தப்பட்டிருந்தது. சுற்றிலும் சீடர்கள். சூழ்ந்த பெரும் துயரம். நாலாபுறங்களில் இருந்தும் அவரது பக்தர்களும், அன்பர்களும் அந்த இடத்தை நோக்கி வந்தபடியே இருந்தார்கள்.

            'நாம் மோசம் போய்விட்டோம் நம்பிகளே! ஆசாரியர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்!' என்று கதறினார் திருக்கோட்டியூர் நம்பி.

            'அவரது நோயை நான் விரும்பிப் பெற்றதன் காரணமே அவரது மரணத்தை நான் களவாட நினைத்ததுதான். ஆனால் விதி இத்தனைக் குரூரம் காட்டும் என்று எண்ணவில்லை நம்பிகளே!' மாறனேர் நம்பி சொல்லிச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தார்.

            அரையர் ஒருபுறம் அழுது கொண்டிருந்தார். திருமாலையாண்டான் மறுபுறம் அழவும் தெம்பற்றுச் சரிந்து விழுந்திருந்தார். ஒவ்வொருவர் மனத்திலும் ஊடுருவியிருந்த அந்த மகான், அத்தனை பேரின் துக்கத்துக்கும் சாட்சியே போல சும்மா கிடந்தார்.

            பெரிய நம்பி நம்ப முடியாமல் தமது ஆசாரியரின் திருமேனியைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.
            'ஐயா, கண்ணைத் திறந்து பாருங்கள். நீங்கள் விரும்பிய மகாபுருஷனைக் காஞ்சியில் இருந்து அழைத்து வந்திருக்கிறேன். நீங்கள் பார்க்க விரும்பியதாகச் சொல்லித்தான் அழைத்து வந்திருக்கிறேன். இப்போது இவருக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்?'

            அங்கிருந்த அத்தனை பேரும் அப்போதுதான் ராமானுஜரை கவனித்துப் பார்த்தார்கள். இவரா?
            இவரேதானா? இவரைத்தான் நமது ஆசாரியர் தமது வாரிசாக மனத்துக்குள் சுவீகரித்து வைத்திருந்தாரா? ஆளவந்தார் மனத்தையே ஆண்டு வந்தாரென்றால் இவர் எப்பேர்ப்பட்ட யோகியாக இருப்பார்!

            ராமானுஜர் யாரையும் பார்க்கவில்லை. எதையும் கவனிக்கவில்லை. யார் பேச்சும் அவர் சிந்தைக்குள் நுழையவில்லை. கிடத்தி வைக்கப்பட்டிருந்த ஆளவந்தாரின் திருமேனியையே சலனமின்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்.'குருவே சரணம். உம்மை நான் நேரில் தரிசித்ததில்லை.

            ஆனால் மனத்தில் எண்ணாதிருந்ததும் இல்லை. மிகச் சிறு வயதில் வீட்டுத் திண்ணையில் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிற போது, சில சமயம் என் அப்பா உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். எப்போதாவது எங்கள் வீட்டுக்கு வருகை தரும் என் மாமா பெரிய திருமலை நம்பி, மூச்சுக்கு மூச்சு உமது திருநாமத்தைத்தான் உச்சரித்துக்கொண்டே இருப்பார்.

            திருக்கச்சி நம்பியுடன் பழக்கமான பிற்பாடு நாளைக்கொரு முறையாவது உம்மைப் பற்றி அவர் பேசாதிருந்ததில்லை. ஞானத்தின் பூரண வடிவான தங்களை என்றேனும் ஒருநாள் தரிசிப்பேன், உங்கள் தாள் பணிவேன் என்று தினமும் எண்ணிக்கொள்வேன். வைணவம் என்னும் பெரும் சித்தாந்தம் இப்பூவுலகில் தழைப்பதற்கு எம்பெருமான் உம்மைத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்தான்.

            இன்று நீங்கள் விடைபெற்று விட்டீர்கள். வீட்டில் தகப்பன் மறைந்தாலே குடும்பம் திண்டாடித் தெருவுக்கு வந்துவிடும். நீங்கள் ஒரு சமூகத்தின் தகப்பன் அல்லவா? இனி எங்களை யார் கரை சேர்ப்பார்?'
            பெருகிய கண்ணீரைத் துடைக்கத் தோன்றவில்லை. அப்படியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.

            சட்டென்று ஏதோ இடறியது. ராமானுஜர் முகத்தில் கணப் பொழுது ஒரு குழப்பம் தோன்றியது.
            'இது விசித்திரமாக இருக்கிறதே? ஆசாரியரின் வலக்கரத்தைப் பாருங்கள். மூன்று விரல்கள் மடங்கியிருக்கின்றன. முன்பே இவை இப்படித்தான் இருந்தனவா?'

            அப்போதுதான் மற்றவர்கள் அதைக் கவனித்தார்கள். அவரது வலது கரத்தின் கட்டை விரல், ஆள் காட்டி விரல் தவிர, பிற மூன்று விரல்களும் மடங்கியிருந்தன.

            'இல்லையே, நான் பார்க்கவில்லையே'
            'நானும் கவனிக்கவில்லையே!'
            யாரும் பார்த்திருக்கவில்லை. ராமானுஜர்தான் முதலில் கண்டது.

            'ஆசாரியர் திருநாடு அலங்கரித்த நேரம் இம்மாதிரி மூன்று விரல்கள் மடங்கியிருக்கின்றன என்றால், அவை எதையோ உணர்த்தும் குறியீடாக எனக்குத் தோன்றுகிறது. அவரை அறிந்த உங்களில் ஒருவர்தாம் அவர் எதை இப்படி உணர்த்துகிறார் என்று சொல்ல வேண்டும்.'

            பெரிய நம்பி திடுக்கிட்டுப் பார்த்தார். 'ஆம் ராமானுஜரே! நீங்கள் சொல்லும்போதுதான் நினைவுக்கு வருகிறது. ஆசாரியருக்கு மூன்று பெரும் விருப்பங்கள் இருந்தன. பிரம்ம சூத்திரத்துக்கு போதாயன மகரிஷி எழுதிய உரையை அடியொற்றி, விசிஷ்டாத்வைத சித்தாந்தப் பிரகாரம் ஓர் உரை எழுதவேண்டும் என்பது அதில் முதலாவது.'

            'சரி.'

            'திருவாய்மொழிக்கு மிகத் துல்லியமான ஓர் உரை எழுத வேண்டும். வேதம் தமிழ் செய்த மாறனான நம்மாழ்வாரின் பெயர் விளங்கும்படியாக, தகுதியுள்ள ஒரு நபருக்கு அவரது திருநாமத்தைச் சூட்ட வேண்டும் என்பது இரண்டாவது அவா.'
            'அடுத்தது?'

            'விஷ்ணு புராணம் படைத்த பராசர பட்டர், மகாபாரதம் தந்த அவரது புதல்வர் வியாசர் இருவரது பெயர்களையும், காலமுள்ள வரையும் ஏந்திப் பெருமைப்படுத்தும் விதத்தில் வாழப் போகிறவர்களைக் கண்டடைந்து சூட்ட வேண்டும் என்பது மூன்றாவது விருப்பம்.'

            ராமானுஜர் ஒரு கணம் கண்மூடி ஆளவந்தாரை தியானித்தார். பிறகு சொன்னார், 'ஆசாரியரின் ஆசியும் எம்பெருமான் திருவருளும் கூடுமானால் என் வாழ் நாளுக்குள் இம்மூன்று ஆசைகளையும் நான் நிறைவேற்றுவேன்.'

            துந்துபி முழங்கியது போல் ஒலித்த அந்தக் குரலின் உறுதியும், ஈர்ப்பும் அங்கு கூடியிருந்தவர்களைச் சிலிர்ப்புற வைத்தது. இவர்தான், இவரேதான், சந்தேக மில்லை என்று ஒருமித்து முடிவு செய்தார்கள்.
            அக்கணம் அது நிகழ்ந்தது. மூடியிருந்த ஆளவந்தாரின் மூன்று விரல்களும் விரிந்தன.

            தொடரும்...

            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

            http://eegarai.org/apps/Kitchen4All.apk

            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

            Dont work hard, work smart

            Comment


            • #21
              Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

              அழைத்து வாரும் அரையரே! 19

              ஒன்றுமே நடவாதது போல நகர்ந்து போய்க் கொண்டிருந்தது காவிரி. ஊர் தோன்றிய காலம் தொடங்கி அனைத்துக்கும் சாட்சியாக அரங்கனுக்கு ஜோடி போட்டுக்கொண்டு கவனித்துக் கொண்டிருக்கிற நதி. மகிழ்ச்சியும் துயரமும் நதிக்குக் கிடையாது. ஆனால், எத்தனையோ மகிழ்ச்சித் தருணங்களுக்கும் துயரப் பொழுதுகளுக்கும் தனது இருப்பைச் சகாயமாக்கியிருக்கிறது.

              இதே காவிரிக் கரையில் எத்தனை நாள், எத்தனை பொழுதுகள் ஆளவந்தாரோடு சத்விஷயம் பேசியபடி நடந்து சென்றிருக்கிறோம்! நம்பமுடியாத அபூர்வப் பிறப்பு அவர். நம்மாழ்வாரிடமிருந்து நேரடியாகத் தமிழ் மறைகளைப் பெற்ற நாதமுனியின் பேரன் வேறு எவ்விதமாகவும் இருந்துவிட முடியாதுதான். தமது ஞானத்தையும் சரி; தான் கற்ற பிரபந்தங்களின் உள்ளுறை பொருள்களையும் சரி.

              ஒரு நதியைப் போலவே வாரி வழங்கியவர் அவர். திருவரங்கக் கோயில் நிர்வாகம் ஒருபுறம். வைணவ தரிசன விஸ்தரிப்பு ஒருபுறம். ஆ, அதுதான் பெரிய சவால். எந்தச் சோழன் மறைந்தாலும், எந்தப் புதிய சோழன் வந்தாலும் தேசத்தில் சைவத்துக்குத்தான் மரியாதை. காணுமிடம் எங்கும் சிவத்தலங்கள். கால் படும் இடங்களில் எல்லாம் திருப்பணிகள்.

              வைணவ தரிசனத்தை மூடி மறைத்துத்தான் பரப்ப வேண்டியிருந்தது.மன்னர்களும் மனிதர்களே அல்லவா? மனிதர்களால் எதைத் தடுத்துவிட முடிகிறது? ஒரு பூ மலரும் கணத்தில் யாரும் அதை நேரில் கண்டதில்லை. எல்லாப் பூக்களும் மலர்ந்தபடியேதான் இருக்கின்றன.

              யுகம் யுகமாக. இன்றுவரை ஒரு சாட்சி ஏது? ஆனால், ஆளவந்தார் எதைக் குறித்தும் கவலைப்பட்டதில்லை என்பதைப் பெரிய நம்பி நினைத்துப் பார்த்தார். 'ஆசாரியரே, உமக்குப் பின் எங்களுக்குக் கதிமோட்சம் தரப் போவது யார்?' என்று அவரது இறுதி நாள்களில் சீடர்கள் கதறியபோது கூட அவர் அமைதியாகத்தான் இருந்தார்.

              ராமானுஜரை அழைத்து வரச்சொன்னதைக் கூட, எந்த நுாற்றாண்டிலோ எழுதி மறைக்கப்பட்ட ஒரு புராதனமான ஓலைச் சுவடியைத் தேடி எடுத்து துாசு தட்டும் விதமாகத்தான் வெளிப்படுத்தினார். என் விருப்பம் இது. எம்பெருமான் விருப்பம் என்னவோ அதுதான் நடக்கப் போகிறது என்கிற பாவனை. ஒருவேளை நோயின் கடுமை அளித்த உளச்சோர்வாகவும் இருக்கலாம்.

              பலவிதமாக யோசித்தபடியே பெரிய நம்பி நதிக்கரையோரம் நடந்து கொண்டிருந்தார். சற்றுப் பின்னால் அவரது நண்பர்கள் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரே ஒரு யோசனைதான். பெரிய நம்பி எதற்கு இத்தனை யோசிக்கிறார்?

              ஆளவந்தாரின் விருப்பம் ராமானுஜர்தான் என்பது தெரிந்துவிட்டது. அவரது மடங்கிய விரல்கள் நிமிர்ந்த கணத்தில் அதைத் தவிர வேறு யோசனைக்கே இடமில்லை என்பது நிரூபணமாகிவிட்டது. அப்புறம் என்ன? ஒரு கணம் நின்று திரும்பிய பெரிய நம்பி அவர்களை உற்றுப் பார்த்தார். ஒரு கேள்வி கேட்டார். 'அரங்கன் சித்தம் அதுதான் என்றால் ராமானுஜர் ஏன் உடனே காஞ்சிக்குத் திரும்பிச் சென்றிருக்க வேண்டும்?

              ''அதுதானே? காரியங்கள் முடிகிற வரைக்கும் இருந்த மனிதர், பெருமாளைச் சென்று சேவிக்கக்கூட இல்லாமல் அப்படியே போய்விட்டாரே?' என்றார் மாறனேர் நம்பி. 'திருவரங்கத்துக்கு வந்துவிட்டு, கோயிலுக்குப் போகாமல் திரும்பிய ஒரே மனிதர் அவராகத்தான் இருப்பார்!' என்றார் திருக்கோட்டியூர் நம்பி. 'இல்லை நம்பிகளே! ராமானுஜரைத் தவறாக எண்ணாதீர்கள். அவருக்கு அரங்கன்மீது கோபம்.

              தமது மானசீக ஆசாரியரான ஆளவந்தாரை, தான் வந்து சேவிக்கும் சில நிமிட நேரம்கூட விட்டு வைக்காமல் எடுத்துக்கொண்டு விட்டானே என்கிற ஏமாற்றம்.' என்றார் பெரிய நம்பி. 'பெரிய நம்பி சொல்வதுதான் சரி. இதுவே எங்கள் காஞ்சிப் பேரருளாளன் என்றால் பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றிவிட்டுத்தான் நியாய தருமத்தையே யோசிப்பான் என்று முணுமுணுத்துக் கொண்டேதான் அவர் கிளம்பிச் சென்றார். நான் கவனித்தேன்!' என்றார் திருமாலையாண்டான்.

              'நமக்கு நமது ஆசாரியரின் விருப்பம் நிறைவேறியாக வேண்டும். ஸ்ரீவைஷ்ணவ தரிசனம், ஒரு சரியான நிர்வாகியில்லாமல் அப்படியே இருந்துவிட முடியாது. ஏதாவது செய்தாக வேண்டும். யாராவது செய்துதான் தீரவேண்டும்' என்றார் அரங்கப் பெருமாள் அரையர். அரை வினாடி கண்மூடி யோசித்த பெரிய நம்பி ஒரு முடிவுடன் சொன்னார், 'நல்லது அரையரே. பொறுப்பை உம்மிடமே விடுகிறோம்.

              செய்து முடித்து, அழைத்து வாருங்கள்' என்றார்.திடுக்கிட்ட அரையர், 'நானா? என்னால் எப்படி முடியும்?'அவர்கள் மொத்தமாகக் கோயிலுக்குப் போனார்கள். கைகூப்பிக்கேட்டார்கள். 'எம்பெருமானே, திருக்கச்சி நம்பியைப் போல உன்னுடன் நேரடியாக உரையாடும் வக்கெல்லாம் எங்களுக்கு இல்லை. ஆனால் எங்கள் பக்தி உனக்குத் தெரியும். எங்கள் நோக்கம் நீ அறியாததல்ல. ஆளவந்தாரின் பீடத்தை அடுத்து அலங்கரிக்க ராமானுஜரை நாங்கள் இங்கே தருவிக்க விரும்புகிறோம்.

              இது நடக்குமா? யாரால் சாத்தியமாகப் போகிறது?'அவர்களது தயக்கத்திலும், தடுமாற்றத்திலும் ஒரு நியாயம் இருந்தது. ஏனென்றால், ராமானுஜர் காஞ்சிப் பேரருளாளனுடன் தனது மானசீகத்தில் இரண்டறக் கலந்திருந்தார். கோயிலென்றால் வரதர் கோயில். தெய்வமென்றால் பேரருளாளன். விந்திய மலைக்காட்டில் வேடுவனாக வரதன் வந்த கணத்தில் உருவான சொந்தம் அது.

              பேரருளாளனின் திருவடியை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு விட்டோம் என்கிற உணர்வுதான் அவரது உணவாகவும் உயிர் மூச்சாகவும் இருந்தது.பெரிய நம்பிக்கு இது தெரியும். அவரது சகாக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் ராமானுஜர் திருவரங்கம் வந்தே தீரவேண்டும்.

              காஞ்சியில் இருந்து அவரைக் கிளப்புவது எப்படி? அரங்கன் சன்னிதியில் இந்தக் கோரிக்கையுடன் அவர்கள் கைகூப்பி நின்றபோது, சட்டென்று ஓர் எண்ணம் ஒரே சமயத்தில் அனைவர் மனத்திலும் உதித்தது. அது அரங்கன் திருவுள்ளம்.காஞ்சிப் பேரருளாளனுக்கு சங்கீதம் என்றால் இஷ்டம். நாட்டியம் என்றால் அதைவிட இஷ்டம். கலாரசிகனான அவன் உத்தரவு தராமல் ராமானுஜர் காஞ்சியை விட்டுக் கிளம்ப மாட்டார்.

              எனவே இசையிலும் நடனத்திலும் நிகரற்றவரான அரையர், காஞ்சிக்குச் சென்று வரதராஜனை மகிழ்வித்து, காரியத்தை சாதித்துவிட வேண்டியது. இப்படி ஒரு யோசனை மனத்தில் பட்ட மறுகணமே அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அரையருக்கு வியப்பில் கிறுகிறுத்துவிட்டது. 'நான் அப்போதே சொன்னேனே?' என்றார் பெரிய நம்பி.'தாமதிக்க வேண்டாம் அரையரே. இன்றே கிளம்பிவிடுங்கள். திரும்பி வரும்போது ராமானுஜரோடுதான் நீங்கள் வரவேண்டும்!''அரங்கன் சித்தம்!' என்று சொல்லிவிட்டு அரையர் புறப்பட்டார்.

              தொடரும்...
              Last edited by krishnaamma; 17-04-17, 12:08.
              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

              http://eegarai.org/apps/Kitchen4All.apk

              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

              Dont work hard, work smart

              Comment


              • #22
                Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

                என்ன வேண்டும் உமக்கு? 20

                'என்ன சொல்கிறீர்? ஆளவந்தார் இறந்துவிட்டாரா! எம்பெருமானே!' என்று நெஞ்சில் கைவைத்து அப்படியே சரிந்துவிட்டார் திருக்கச்சி நம்பி. 'நம்பமுடியவில்லை சுவாமி. அவர் பாதம் பணிந்து, உபதேசமாக ஓரிரு ரத்தினங்களையேனும் பெற்றுவரலாம் என்று எண்ணித்தான் திருவரங்கத்துக்கே போனேன். ஆனால், போன இடத்தில் எனக்கு வாய்த்தது இதுதான்.'

                ராமானுஜர் கண்களைத் துடைத்துக் கொண்டார். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அடுத்த அடி எடுத்து வைப்பதற்கு முன்னால், இப்படியொரு அடி விழுந்து விடுகிறது. மிகச் சிறு வயதில் தந்தையை இழந்தது முதல் அடி. சுதாரித்துக்கொண்டு கல்வியைத் தொடர்ந்தபோது, தமது குணத்துக்குச் சற்றும் பொருந்தாத ஒரு பெண்ணை மணந்து வாழ நேர்ந்தது அடுத்த அடி. அம்மா எப்படியாவது அவளைத் திருத்தி சரிசெய்து விடுவாள் என்று ராமானுஜர் நினைத்திருந்தார்.

                ஆனால், அவளும் போய்விட்டாள். அது மூன்றாவது. பயிலச் சென்ற இடத்தில் ஆசாரியருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நான்காவது. எப்படியாவது திருக்கச்சி நம்பியிடம் சீடனாகச் சேர்ந்துவிடலாம் என்று எண்ணியிருந்தபோது, அந்த வாய்ப்பு தனக்கில்லை என்று தெரிந்தது ஐந்தாவது. இதோ, ஆளவந்தாரை தரிசிக்கப் போய் அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள நேர்ந்தது ஆறாவது.

                'மனத்தைத் தளரவிடாதீர் ராமானுஜரே! இருந்த காலம் வரை அவரிடமிருந்து என்ன பெற்றோம், எத்தனை பெற்றோம் என்று எண்ணிப் பார்த்து நிம்மதியடைவோம்.''எனக்கு அதுவும் வாய்க்கவில்லையே. என்றேனும் ஒருநாள் அவரை தரிசித்துத் தாள் பணியும் கணத்தில், அப்படியே அவரது ஞானத்தின் ஜீவரசத்தை உறிஞ்சி எடுத்துக்கொண்டுவிட மாட்டோமா என்று ஒரு காலத்தில் பைத்தியம் போல் எண்ணிக் கொண்டிருப்பேன்.

                வேத உபநிடத வகுப்புகளில் ஒவ்வொரு வரிக்கும் யாதவர் சொல்லும் பொருளை எதிரே வைத்து, ஆசாரியர் ஆளவந்தார் இதற்கு எவ்வாறு பொருள் சொல்வார் என்று நினைத்துப் பார்த்துக்கொண்டே இருப்பேன். அவரது எண்ணத்தின் வரி வடிவங்கள் ஒரு தரிசனம் போல் என் மனத்தில் அப்படியே ஏறிவிடுவதாக உணர்வேன்.'திருக்கச்சி நம்பி புன்னகை செய்தார்.

                'புரிகிறது ராமானுஜரே! அவர் விடைபெற்றுத்தான் போயிருக்கிறார். விட்டுவிட்டுப் போகவில்லை. அதுவும் உம்மை.''என்னையா! நிச்சயமாக இல்லை நம்பிகளே. நான் அற்பனிலும் அற்பன். பாவிகளில் பெரும் பாவி. இல்லாவிட்டால் ஆசாரியரின் தரிசனம்கூடவா எனக்கு கிடைத்திருக்காது?

                'ராமானுஜர் வெகுநாள் சமாதானமாகவே இல்லை. திருவரங்கத்தில் ஆளவந்தாரின் நேரடிச் சீடர்கள் எதிரே காட்ட முடியாத தமது உணர்ச்சிகளையெல்லாம், காஞ்சியில் நம்பிகளிடம் கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருந்தார்.'நீர் கோயிலுக்கு வாரும். பேரருளாளன் சன்னிதியில் பிரபந்தம் சொல்லிக் கொண்டிரும்.

                ஆசுவாசம் உமக்கு அதில்தான் கிடைக்கும்.' என்று திருக்கச்சி நம்பி அவரைத் தேற்றி கோயிலுக்கு அழைத்துச் சென்றார்.அப்போதுதான் திருவரங்கப் பெருமான் அரையர் அங்கு வந்து சேர்ந்தார்.திருக்கச்சி நம்பிக்கு அப்போதே புரிந்துவிட்டது. ஆனால் காட்டிக் கொள்ளவில்லை. அரையரை வரவேற்று மரியாதை செய்து சன்னிதிக்கு அழைத்துச் சென்றபோது அவர் கேட்டார்.

                'நம்பிகளே, நான் வரதன் திருமுன் நாலு பாசுரம் பாட விரும்புகிறேன். உத்தரவு கிடைக்குமா?'காஞ்சி கோயிலுக்கும் அரையர் உண்டு. இசையாலும் நாட்டியத்தாலும் இறைவனை மகிழ்விக்கும் திருப்பணியாளர். அவர் சொன்னார், 'அரங்கன் அனுபவித்தது எங்கள் வரதனுக்கும் இன்று கிட்டுமென்றால் யார் தடுப்பார்கள்? தாராளமாக ஆரம்பியுங்கள்!

                'கச்சிக்கு வாய்த்தான் மண்டபத்தில் பேரருளாளன் வீற்றிருந்தான். சுற்றிலும் கோயில் முக்கியஸ்தர்கள். ஆலவட்டம் வீசுகிற திருக்கச்சி நம்பி. அவருக்குச் சற்றுத் தள்ளி தமது சீடர்களுடன் அமர்ந்திருந்த ராமானுஜர். இங்கே காஞ்சி நகர் அரையர். எதிரே திருவரங்க அரையர்.'பாடுங்கள் அரையரே!'அவர் ஆரம்பித்தார். அது உயிரை உருக்கும் குரல். பூச்சற்ற பக்தியின் பூரண வெளிப்பாடு.

                உருகி உருகிப் பாடிக் களித்த பன்னிரண்டு பேரின் உள்ளத்தை உருவி எடுத்து முன்னால் வைத்து வணங்குகிற பெருவித்தை. பாசுரங்களின் உருக்கத்தில், அரையர் தன்னை மறந்து ஆடவும் ஆரம்பித்தார். பத்து நிமிடம். அரை மணி. ஒரு மணி நேரம். அவர் எப்போது தொடங்கி எப்போது நிறுத்தினார் என்று யாருக்குமே தெரியவில்லை.ராமானுஜர் பிரமை பிடித்தாற்போலப் பார்த்துக் கொண்டிருந்தார். என்ன குரல்! என்ன தெய்வீகம்!

                எப்பேர்ப்பட்ட கலை ஆளுமை இவர்! இப்படியொரு சங்கீதத்திலா அரங்கன் தினசரி குளித்துக் குளிர்ந்து கொண்டிருக்கிறான்! அவனுக்கு எப்பேர்ப்பட்ட கொடுப்பினை!மண்டபத்தில் கூடியிருந்த அத்தனை பேரும் அரையரைப் போற்றிப் பேச வாய் திறந்த தருணத்தில், அது நிகழ்ந்தது. வரதனே வாய் திறந்தான்!அது அசரீரியா, அந்தராத்மாவுக்குள் ஒலித்த பேரருளாளனின் ரகசியக் குரலா, யாருக்கும் புரியவில்லை.

                ஆனால் பேசியது அவன்தான். அதில் சந்தேகமில்லை.'அரையரே, நெக்குருகச் செய்துவிட்டீர்! என்ன வேண்டும் உமக்கு? தயங்காமல் கேளும்.'கோயில் பிரசாதங்களும், பரிவட்ட மரியாதையும், மற்றதும் முன்னால் வந்து நின்றன. அரையர் கைகூப்பி மறுத்தார். 'அருளாளா! எனக்குப் பரிவட்ட மரியாதை யெல்லாம் வேண்டாம். பதிலாக இந்த ராமானுஜரை என்னோடு அனுப்பி வைத்துவிடு.

                ஸ்ரீவைஷ்ணவ தரிசனம் தழைக்க, இவர் இங்கிருப்பதைவிட அரங்க நகரில் வந்து ஆசாரிய பீடத்தை அலங்கரிப்பதே உகந்தது.'ராமானுஜர் திடுக்கிட்டுப் போனார். 'நானா! நானெப்படி வருவேன்? என்னால் வரதனைவிட்டு நகர முடியாது.'அரையர் அவருக்கு பதில் சொல்லவில்லை. அருளாளனைப் பார்த்தேதான் பேசினார்.

                'என்ன வேண்டுமென்று நீ கேட்டாய். நான் வேண்டியதைச் சொல்லிவிட்டேன். மற்றபடி உன் இஷ்டம்.''தர்மசங்கடப் படுத்துகிறாய் அப்பனே. ராமானுஜர் நமக்கு உகந்தவர். அவரை எப்படி நான் அரங்கனுக்கு விட்டுக் கொடுப்பேன்?''அது உன் இஷ்டம். கேட்டதைக் கொடுக்கும் தெய்வமென்று பேரெடுத்தவன் நீ. பேர் நிலைக்க நினைத்தால் அதற்குரியதைச் செய்.'ராமானுஜருக்குப் புரிந்துவிட்டது.

                மதுராந்தகம் ஏரிக்கரையில் பெரிய நம்பியை முன்னொரு சமயம் சந்தித்தபோதே தோன்றியதுதான். எம்பெருமான் சித்தம் நடைமுறைக்கு வர இத்தனைக் காலம் பிடித்திருக்கிறது. நல்லது. இதுவும் அவன் விருப்பம்.'முதலியாண்டான்! நீ திருமடத்துக்கு உடனே சென்று நமது திருவாராதனப் பெருமாளை எடுத்து வந்துவிடு. திருவரங்கத்துக்கு நாம் போனாலும் அருளாளனுக்குச் செய்யும் ஆராதனை நிற்காது.'அன்றே ராமானுஜர் அரங்கமாநகருக்குப் புறப்பட்டார்.

                தொடரும்...
                Last edited by krishnaamma; 17-04-17, 12:08.
                என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                http://eegarai.org/apps/Kitchen4All.apk

                http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                Dont work hard, work smart

                Comment


                • #23
                  Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

                  ஒரு பெரும் விசை 21 !

                  வடகாவிரிக் கரையில் ஊர் திரண்டு நின்றிருந்தது. அத்தனை பேருக்கும் நெஞ்சு கொள்ளாத மகிழ்ச்சி. ஒருபுறம் திருமால் அடியார்கள் பிரபந்தம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மறுபுறம் மங்கல வாத்திய ஒலி விண்ணை நிறைத்துக் கொண்டிருந்தது. கோயிலில் இருந்து அழகிய மணவாளனே புறப்பட்டு விட்டான் என்று சேதி வந்தபோது கூட்டத்தின் பரவசம் உச்சத்துக்குப் போனது. ராமானுஜரை வரவேற்கப் பெருமானே வருகிறான் என்றால் இது எப்பேர்ப்பட்ட தருணம்!

                  எல்லாம் நல்லபடி நடக்க வேண்டும். இங்குதானே வருகிறார்? இங்கு இருக்கத்தானே வருகிறார்? ஆளவந்தாரின் பீடத்தை அலங்கரிக்கத்தானே வருகிறார்? எப்படியோ அரையர் சாதித்துவிட்டார். தம் பாட்டுத் திறத்தால் காஞ்சி வரதராஜனைக் கட்டிப்போட்டு விட்டார். ஒப்புக்கொண்டு ராமானுஜரும் புறப்பட்டு விட்டார் என்று சேதி வந்தபோதே திக்குமுக்காடிப் போனார்கள் திருவரங்கவாசிகள்.பரமபதம் அடைந்துவிட்ட ஆளவந்தாரின் மூடிய விரல்களை நிமிர்த்திக் காட்டிய மகான்.

                  பேசியது ஒருவரிதான். ஆனால் எத்தனை தெளிவு, எவ்வளவு அழுத்தம், தன்னம்பிக்கை! தவிரவும் இளைஞர். வைணவ தரிசனம் இவரால்தான் தழைக்க வேண்டுமென்று எம்பெருமான் எண்ணிவிட்டால் யார் மாற்ற முடியும்?
                  வானில் கருடன் வட்டமிட்டான்.

                  காற்று குளிர்ந்து வீசி அரவணைத்தது. ரங்கா ரங்கா என்று கூட்டம் உற்சாகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்க, தாள வாத்தியங்கள் உச்சத்தில் ஒலித்துக் கொண்டிருக்க, கோயிலில் ஒலித்த மணிச்சத்தம் அனைத்தையும் மீறி வடகாவிரிக் கரையை வந்து தொட்டபோது ராமானுஜர் திருவரங்கம் வந்து சேர்ந்தார்.

                  'எம்பெருமானே! எனக்காக நீங்களா முன்னால் வந்து காத்திருக்க வேண்டும்? இது என்ன அபசாரம்?' என்று பதறி ஓடி வந்து, எழுந்தருளியிருந்த உற்சவ மூர்த்தியின் திருமுன் விழுந்து வணங்கினார் ராமானுஜர்.'தவறில்லை ராமானுஜரே! வைணவத்தில் பாகவதனே பெரியவன். பகவான் அவனுக்கு அடுத்தபடிதான்.

                  நீங்கள் அறியாததா? ஸ்ரீவைஷ்ணவ தருமத்தைப் புவியெங்கும் அறிவித்துக் கொண்டிருப்பவர் தாங்கள். உங்களைப் பேரருளாளன் விட்டுக் கொடுத்ததே எங்களுக்குப் பெரிய விஷயம். வாருங்கள்!' என்று வரவேற்றார் பெரிய நம்பி. கூட்டம் ஊர்வலமாகக் கிளம்பிக் கோயிலுக்குச் சென்றது. வழியெங்கும் வீட்டு வாசல்களில் மலர்ந்திருந்த பெரிய பெரிய கோலங்களிலும், நிலைப்படிகளை அலங்கரித் திருந்த மாவிலைத் தோரணங்களிலும் மக்களின் மகிழ்ச்சியைப் புரிந்து கொண்டார் ராமானுஜர்.

                  நான் என்ன செய்துவிட்டேன்! ஆளவந்தாரின் ஞானத்தின் முன் கால் துாசு பெறுவேனா! திருக்கச்சி நம்பியின் பிரேம பக்திக்கு முன் நிற்க முடியுமா என்னால்? இதோ, இந்தப் பெரிய நம்பியின் சிரத்தை எத்தனை பிறப்பெடுத்தாலும் எனக்கு வருமா? எடுத்த காரியத்தை முடிக்கிற வல்லமை கொண்ட அரையரின் திறன் எப்பேர்ப்பட்டது! என்னை வரவேற்கவா இத்தனைக் கோலாகலம்?

                  கூச்சத்தில் சுருங்கியவரைக் கண்டு புன்னகை செய்த பெரிய நம்பி, 'சுவாமி! இந்தப் பணிவுதான் உமது உயரம்' என்றார்.கோயில் சன்னிதியில் நெடுநேரம் ராமானுஜர் கண்மூடி நின்றிருந்தார். செய்ய வேண்டிய கடமைகள் ஏராளம். நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் அதைக் காட்டிலும் அதிகம். அனைத்தையும்விடக் கற்கவேண்டியவை கடலளவு உள்ளன. பெருமானே! நான் பயின்று தெளிய இந்த ஒரு ஜென்மம் எப்படிப் போதும் எனக்கு?

                  சம்பிரதாயங்கள் முடித்து திருமடத்துக்கு வந்து அமர்ந்தபோது முதலியாண்டானும் கூரத்தாழ்வானும் 'முதல் பணி என்ன?' என்று கேட்டார்கள். 'கோவிந்தன்!' என்றார் ராமானுஜர். திருமலையில் கைங்கர்யம் செய்துகொண்டிருந்த பெரிய திருமலை நம்பிக்கு உடனே ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தனுப்பினார். 'நீங்கள் பெயர் வைத்த பிள்ளை கோவிந்தன். காளஹஸ்தியில் சிவ ஸ்மரணையில் தன்னை மறந்து இருக்கிறான்.

                  கீதை சொல்லுவதை அவனுக்கு நினைவுபடுத்துங்கள். அவரவர் ஸ்வதர்மம் என்று ஒன்று இருக்கிறது. வைணவ குலத்தில் பிறந்து பெருமானுக்குச் சேவை செய்ய வேண்டியவன் இப்படிப் பொறுப்பு மறந்து வாழலாமா என்று கேளுங்கள்.' பெரிய திருமலை நம்பி, கோவிந்தனுக்கும் தாய்மாமன்தான். ஆனால் பெயர் வைத்த பிறகு அவர்கள் சந்தித்ததே இல்லை. நம்பி மலையை விட்டு இறங்கி ஊருக்கு வருவதற்கு, அப்புறம் சந்தர்ப்பமே கூடவில்லை.

                  அவர் வந்தபோது கோவிந்தன் அங்கு இல்லாமல் போயிருந்தான்.எனவே அவருக்குச் சிறு குறுகுறுப்பு இருந்தது. என்னை அவன் எப்படி எதிர்கொள்ளப் போகிறான்?

                  காளஹஸ்திக்கு நம்பிகள் வந்து சேர்ந்தார். கோவிந்தன் தினமும் குளித்து முழுகி சிவபூஜைக்குப் பூப்பறித்துச் செல்லும் குளக்கரைக்கு வந்து உட்கார்ந்தார். கோவிந்தன் பூப்பறிக்க வந்தபோது மெல்ல பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார். 'அப்பனே, உனக்கு உன் சகோதரன் இளையாழ்வானை ஞாபகமிருக்கிறதா? குருவே ஆனாலும் மாயாவாதம் பேசுகிற இடத்தில் மறுத்துப் பேசி அவன் வெல்லும் போதெல்லாம் கரகோஷம் செய்து நீ சந்தோஷப்பட்டது நினைவிருக்கிறதா?

                  இருவருமாகக் காஞ்சிப் பேரருளாளன் சன்னிதியில் பழி கிடந்த தினங்கள் மறக்காதிருக்கிறதா?' 'ஐயா, நீங்கள் யார்?'அன்று தொடங்கி பத்து நாள்களுக்குப் பெரிய திருமலை நம்பி இடைவிடாமல் கோவிந்தனுடன் பேசிக்கொண்டே இருந்தார். 'நான் யார் என்று சொன்னால் நீ யார் என்பது உனக்குப் புரியுமா கோவிந்தா? எம்பெருமானின் பாதாரவிந்தங்களில் பழிகிடக்க வேண்டிய உன் கடமை புரியுமா? இந்தப் பூக்களைக் கொண்டுபோய் நீ சேர்க்க வேண்டிய இடம் விஷ்ணுவின் பாதங்கள் அல்லவா?

                  எத்தனை சிறப்பானதானாலும் உனது தருமத்தை ஒதுக்கி வைத்துவிட்டு இன்னொன்றைக் கைக்கொள்வது கற்றவனுக்கு அழகா? நீ படித்தவன் அல்லவா? ஞானஸ்தன் அல்லவா?''ஆனால் ஐயா, கங்கைக் கரையில் பாணலிங்க வடிவில் என்னிடம் வந்து சேர்ந்தவர் சாட்சாத் ஈஸ்வர மூர்த்தியே அல்லவா?' 'ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன். உனக்குக் கிடைத்தது சாளக்கிராம
                  மாக இருந்திருந்தால்தான் நீ பிறந்த குலத்தின் பெருமை காத்திருப்பாயா?

                  ஒன்றுமே கிடைக்காதிருந்திருந்தால்? நாத்திகனாகியிருப்பாயோ?'பெரிய திருமலை நம்பி, ஆளவந்தாரின் சீடர். அவரது ஞானத்தின் சாறை அப்படியே ஏந்திக் குடித்த மகாபண்டிதர். சித்தாந்தங்களுக்கு அப்பால், தத்துவங்களுக்கு அப்பால், தருக்கங்களுக்கு அப்பால் அனைத்துக்கும் பொருளாக நிறைந்திருக்கிற பரமாத்மாவின் சொரூபம் அறிந்தவர்.

                  கோவிந்தன் மனத்தை மாற்ற அவருக்கு ஒரு கணம் போதும். இருப்பினும் அவன் நம்பிக்கொண்டிருந்த அத்வைத சித்தாந்தத்தைவிட சரணாகதி என்னும் ஒற்றைத் தாரக மந்திரத்தின் அருமையை அவனுக்கு உணர்த்தவே அவர் அந்த அவகாசத்தை எடுத்துக்கொண்டார்.பத்தாம் நாள் முடிவில் கோவிந்தன் மனம் மாறினார். 'என் அண்ணா இப்போது எங்கே இருக்கிறார்?' என்று கேட்டார்.'திருவரங்கத்துக்குச் செல் மகனே. ஒரு பெரும் விசை அங்கு உன்னைச் செலுத்தக் காத்திருக்கிறது!'

                  தொடரும்...


                  என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                  http://eegarai.org/apps/Kitchen4All.apk

                  http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                  Dont work hard, work smart

                  Comment


                  • #24
                    Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

                    கொடுத்து வைத்தவன் ! 22

                    கோவிந்தன் இப்போது இங்கு வர அவசியமில்லை. அவன் பெரிய திருமலை நம்பியிடமே சிறிது காலம் இருக்கட்டும் என்று ராமானுஜர் சொன்னார்.

                    சுற்றியிருந்த சீடர்களுக்கு இது வியப்பாக இருந்தது. 'ஆசாரியரே, உமது தம்பி மனம் மாறி வைணவ தரிசனத்துக்கு மீண்டும் வந்து சேர்ந்த மகிழ்ச்சியில் நீங்கள் உடனே அவரைக் காண விரும்புவீர்கள் என்று நினைத்துத்தான் நம்பிகள் அவரைத் திருவரங்கத்துக்குக் கிளம்பச்சொல்லியிருக்கிறாராம்.'
                    'மாற்றம் நிகழவேண்டும் என்பது மட்டுமே என் விருப்பம்.

                    கோவிந்தனால் ஆக வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. ஆனால் அவன் பக்குவம் அடையவேண்டியது அனைத்திலும் முக்கியம். அவன் திருவரங்கம் வருவதைவிட நம்பியிடமே இருந்து பயில்வதுதான் சிறப்பு' என்றார் ராமானுஜர்.
                    விஷயம் பெரிய திருமலை நம்பிக்கு எட்டியது. ஒரு நல்ல நாள் பார்த்தார். கோவிந்தனைத் தன்னோடு திருமலைக்கு அழைத்துச் சென்று பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்தார். அன்றே அவனுக்கு ராமாயண வகுப்பைத் தொடங்கி விட்டார்.

                    ராமாயணத்தின் கதைக்கு அப்பால் உள்ள ஆழ்ந்த உட்பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லி விளக்குவதில் நம்பிகள் கைதேர்ந்தவர். அது ஆளவந்தார் அவருக்கு அளித்த வரம்.'கோவிந்தா, ராமன் பிறப்பின் சாரம் உனக்குச் சரியாகப் புரிந்துவிட்டால் நீ நான்கு வேதங்களையும் கணப்பொழுதில் புரிந்து கொண்டுவிட முடியும். தத்துவங்களின் உச்சம் என்பது ராமாவ
                    தாரம். புரிகிறதா?'செய்தி மீண்டும் திருவரங்கத்தை எட்டியது.

                    முதலியாண்டான் ராமானுஜரை அணுகி, கோவிந்தனுக்கு ராமாயணப் பாடம் ஆரம்பிக்கப்பட்ட விவரத்தைச் சொல்ல, 'அப்படியா? மிக்க மகிழ்ச்சி. 'உடனே கூரேசனை ஊருக்கு அனுப்பி, அவனது பத்தினியோடு இங்கே திரும்பி வரச் சொல்!' என்றார் ராமானுஜர். முதலியாண்டானுக்குப் புரியவில்லை. தன்னைத் தேடிக் கிளம்பிய தம்பியைத் திருவரங்கத்துக்கு இப்போது வரவேண்டாம் என்று சொல்லித் தடுத்தவர், கூடவே இருக்கும் கூரத்தாழ்வானை எதற்கு இப்போது ஊருக்குத் துரத்துகிறார்?கூரத்தாழ்வானே சற்றுத் தயங்கத்தான் செய்தான்.

                    'அத்தனை அவசரமில்லை ஆசாரியரே. நான் உங்களுடன் இருக்கவே விரும்புகிறேன்.''தவறு கூரேசா! நீ திருமணமானவன். உன் மனைவியை அங்கு தனியே விட்டுவிட்டு இங்கு நீ எந்த தருமத்தையும் காக்க இயலாது. மட்டுமல்ல. உனது தவம் எத்தனை சிறப்பானதென்றாலும், அது பூரணமடைவது உன் மனைவியால்தான்.'வேறு வழியின்றி கூரத்தாழ்வான் காஞ்சிக்குப் புறப்பட்டான். பழைய கூரேசன் என்றால் பல்லக்கில்தான் போவான்.

                    பல்லக்குத் துாக்கிகள் தவிர, சேவகத்துக்கென ஒரு படையே பின்னால் வரும். இப்போது அதெல்லாம் இல்லை. அனைத்தும் உதிர்ந்த நினைவுகள். அந்தக் கூரேசன் வேறு. அவனது ஆகிருதி வேறு. ஊரில் அவனுக்கு இருந்த பேரும் மரியாதைகளும் வேறு.முதலியாண்டான் அடிக்கடிக் கேட்பான். 'எப்படி விட முடிந்தது? எப்படி உதற முடிந்தது?

                    ஒன்றுமில்லாதவர்கள் உஞ்சவிருத்திக்குப் போவது பெரிய விஷயமல்ல. நீங்கள் ராஜ வாழ்க்கை வாழ்ந்த மனிதர். ஒரு கணத்தில் உதறித் தள்ள எப்படி சாத்தியமானது கூரேசரே?'கூரேசன் புன்னகை செய்வான். ஒரு சம்பவம் நடந்தது. அதை எப்படி அனைவரிடமும் சொல்லிக்கொண்டிருக்க முடியும்?

                    கேட்பவருக்கு ஆஹாவென வாய் பிளக்கத் தோன்றினாலும் அவனைப் பொறுத்தவரை அது அவமானகரமான விஷயம். முதலியாண்டான் துருவித் துருவிக் கேட்டபோது வேறு வழியின்றி சொன்னான்.கூரேசன் பிறவிப் பணக்காரன். கூரத்தில் இருந்து காஞ்சியைத் தாண்டி நெடுந்தொலைவுக்கு அவனது புகழ் பரவியிருந்த நேரம் அது.

                    'பணத்தோடு சேர்த்துக் குணம் படைத்த பெரிய மனிதர். எப்படி அள்ளி அள்ளிக் கொடுக்கிறார் இந்த மகாத்மா! யாருக்கு இந்த மனம் வரும்!' என்று வியக்காத வாயில்லை. தனது மாளிகைக்கு அருகே ஓர் அன்ன சத்திரத்தை நிறுவி, நாளும் பொழுதும் பசித்து வருவோருக்குப் பந்தி பரிமாறி மகிழும் சுபாவம் அவனுக்கு. பரம பக்திமான். தனது சொத்து முழுதும் தான தருமங்களுக்குத்தான் என்பதில் நெல்லளவு மாற்றுச் சிந்தனையும் அவனுக்கு இருந்ததில்லை.சொல்லி வைத்த மாதிரி அவனுக்கு வாய்த்த மனைவியும் அதே குணம் கொண்டவளாக இருந்தாள்.

                    ஆண்டாள். ஆ, எப்பேர்ப்பட்ட பேரழகி! ஆனால், விதி அவளுக்கு ஜாதகக் கட்டங்களில் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.'ஐயா உமது மகளை யார் திருமணம் செய்து கொண்டாலும் அவருக்கு உடனடி மரணம் நிச்சயம்' என்று சோதிடர்கள் சொல்லிவிட்டுப் போயிருந்தார்கள். கூரேசனுக்கு அது வியப்பாக இருந்தது. வாழ்வையும் மரணத்தையும் தீர்மானிப்பது பரமாத்மா அல்லவா? சோதிடர்களுக்கு அச்சக்தி உண்டென்றால் பரந்தாமன் எதற்கு?

                    'சரி, உங்கள் மகளை நான் மணந்து கொள்கிறேன்' என்று ஆண்டாளின் தந்தையிடம் போய்ச் சொன்னான். 'நீங்கள் பெருங்கோடீஸ் வரர். ஊரறிந்த உபகாரி. அப்பழுக்கற்ற பக்திமான். ஆனால் ஐயா, என் மகளை நீங்கள் மணந்தால் உங்கள் வாழ்க்கை முடிந்து விடுமே?''அதையும் பார்க்கிறேன்' என்று சொல்லித்தான் அவன் ஆண்டாளைக் கைப்பிடித்திருந்தான். 'ஆண்டாள்! மனித வாழ்க்கை மிகவும் சிறியது. தவிரவும் அற்பமானது.

                    கண்மூடித் திறக்கும் நேரத்தில் பிறவி முடிந்துவிடும். வாழும் கணங்கள் ஒவ்வொன்றிலும் நாம் அடுத்தவருக்குப் பயன்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது என் ஆசை.' என்றான் கூரேசன். 'பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் நாலு இலையை எடுத்துப் போடலாமே? வெளியே பசியோடு பலபேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்' என்றாள் ஆண்டாள்.

                    அப்படி ஒரு மனைவி இன்னொருத்தருக்கு வாய்க்க மாட்டாள். இருவருக்கும் பேரருளாளனை விஞ்சிய தெய்வம் இல்லை. ராமானுஜரை விஞ்சிய ஆசாரியர் இல்லை.

                    'நாம் அவரை அண்டித் தாள்பணிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது ஆண்டாள். நம் ஊருக்கு இத்தனை பக்கத்தில் ஞானச்சுடரொளி தகித்துக் கொண்டிருக்கிறபோது நாம் அர்த்தமே இல்லாமல் இங்கு தினங்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.' 'ஏன் வீணடிக்க வேண்டும்? கிளம்பிவிட வேண்டியதுதானே?' 'கிளம்பலாம்தான். ஆனால் இருக்கிற சொத்துபத்தையெல்லாம் அத்தனை சீக்கிரம் தானம் செய்து விட முடியாது போலிருக்கிறதே.'

                    'பொறுப்பை என்னிடம் விடுங்கள்' என்றாள் ஆண்டாள். அன்று முதல் கூரேசனின் இல்லம் ஒரு தானத் திருமாளிகையானது. போகிற

                    வருகிறவர்களையெல்லாம் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுத்தார்கள். இரு கரம் ஏந்தி அளிக்கையில் சிந்தும் சத்தம் இருபது காத துாரம் வரை கேட்டது. பொன்னும் மணியும் ரத்தினங்களும் வைர வைடூரி யங்களும், கல்லும் மண்ணுமெனத் தோன்றியது அவர்களுக்கு! ஊரே மூச்சடைத்து நின்றது. என்ன ஆகிவிட்டது கூரேசனுக்கு? நுாற்றாண்டு கால சொத்து சுகங்களை எதற்காக இப்படிக் கண்மூடித்தனமாக அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்?

                    பதில் சொல்லிக் கொண்டிருக்கக்கூட அவகாசமில்லாமல் இருவரும் காரியத்தில் கண்ணாக இருந்தார்கள்.அப்போது அது நடந்தது.

                    தொடரும்...
                    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                    http://eegarai.org/apps/Kitchen4All.apk

                    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                    Dont work hard, work smart

                    Comment


                    • #25
                      Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

                      பொன் வேண்டேன்! பொருள் வேண்டேன்! 23

                      வரதராஜர் கோயிலில் அப்போது உற்சவம் நடந்து கொண்டிருந்தது. திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கும் அத்தி வரதர் நாற்பதாண்டுகளுக்கு ஒருமுறை வெளிப்பட்டுக் காட்சியளிக்கும் பரவசத் திருவிழா. அக்கம்பக்கத்து தேசங்களில் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாகக் காஞ்சியை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். கோயிலில் நிற்க இடம் கிடையாது. எங்கும் பக்தர்கள். எல்லா பக்கங்களிலும் பிரபந்த பாராயணம். வாண வேடிக்கைகளும் மங்கல வாத்திய முழக்கங்களுமாக நான்கு வாரங்களுக்கு நீண்டு கொண்டிருந்த உற்சவம்.

                      உற்சவ களேபரங்களில் பெருமாளுக்கான நித்தியப்படி நியமங்கள் தினமுமே சற்றுத் தாமதமாகிக் கொண்டிருந்தன. பக்தர்களின் சந்தோஷத்துக்கு முன் னால் தனது நேர ஒழுங்கை அவன் அத்தனை பெரிதாகக் கருதாதவன் தான். ஆனாலும் அன்று அது நடக்கவேண்டும் என்று இருந்திருக்கிறது. இரவு பெருமாளுக்குத் திருவாராதனம் முடியத் தாமதமாகிப் போனது.

                      வீதி உலா போயிருந்த உற்சவர் இன்னும் சன்னிதிக்குத் திரும்பியபாடில்லை. ஆனால் கதவு அடைக்கப்படும் சத்தம் கேட்டு, வரதனுக்குக் குழப்பமாகிவிட்டது. 'இதென்ன நம்பிகளே, விசித்திரமாக இருக்கிறதே. இன்னும் நமக்குத் திருவாராதனமே ஆகவில்லை. அதற்குள் ஏன் கோயில் நடை சாத்தப்படுகிறது?' என்று திருக்கச்சி நம்பியிடம் கேட்டான் பெருமான்.

                      'பெருமானே, அது கோயில் நடை சாத்தும் சத்தமல்ல. கூரத்தில் கூரேசனின் அன்ன சத்திரக் கதவு அடைக்கப்படுகிற சத்தம். இப்போது இன்னொரு சத்தம் வரும் கேளுங்கள்' என்றார் திருக்கச்சி நம்பி. வரதன் கவனித்துக் கொண்டிருந்தான். சொல்லி வைத்த மாதிரி கலகலவென்று பொன்னும் மணியும் சிதறும் பெரும் சத்தம்.

                      'ஆ, இது என்ன?' 'இன்று தான தருமங்களை முடித்தபிறகு மிச்சம் இருப்பதை அளந்து கொட்டிக் கொண்டிருக்கி றார் கூரேசர். நாளைப் பொழுது விடிந்ததும் மீண்டும் தருமங்களைத் தொடங்க இப்போதே ஆயத்தம் செய்துவிட்டுத்தான் அவர் படுக்கப்போவது வழக்கம்.' ஒரு கணம் திகைத்து விட்டான் எம்பெருமான். 'அத்தனை செல்வமா கூரேசனிடம்!'மறுநாள் திருக்கச்சி நம்பி கூரே சனைச் சந்தித்து இந்த விவரத்தைச் சொன்னார்.

                      'அப்பனே, அருளாளப் பெருமானையே உனது ஐஸ்வர்யம் மயக்கிவிட்டதப்பா!'தனக்குள் சிறுத்துப் போனார் கூரேசன்.'எம்பெருமானே! இந்தப் பொன்னின் ஒலி உன்னையே மயக்குகிறதென்றால், இத்தனைக் காலம் இதனை வைத்திருந்த பெரும் பாவத்தையல்லவா நான் செய்திருக்கிறேன்! உன் பேரருளையும் பெருங்கருணையையும் தவிர வேறு எதற்கும் கட்டிப்போடும் சக்தி இருந்துவிடக் கூடாது. முடிந்தது இன்றோடு!

                      'ஆண்டாளைக் கூப்பிட்டான் கூரேசன். 'இதோ பார் ஆண்டாள்! நீ என்ன செய்வாய் என்று எனக்குத் தெரியாது. இன்றோடு நமது சொத்து சுகம் அத்தனையும் வெளியே போயாக வேண்டும். நாளைக் காலை நாம் காஞ்சிக்குக் கிளம்புகிறோம். அங்கு ராமானுஜரைச் சந்தித்து, அவரோடு ஐக்கியமாகிவிட வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பொன் மூட்டைகளின் சுமையில் நாம் மூச்சடைத்து இறந்து விடுவோம்.

                      ''ஆகட்டும் சுவாமி' என்றாள் ஆண்டாள். மறுநாள் முழுதும் அவர்கள் அன்ன சத்திரத்தின் வாசலிலேயே நின்றுகொண்டார்கள். வாயிற்கதவின் இருபுறமும் மூட்டை மூட்டையாகப் பொற்காசுகள், அணிகலன்கள், சேர்த்து வைத்த பெரும் சொத்துகள். சாப்பிடப் போகிற அனைவரையும் வேண்டிய அளவுக்கு எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள்.

                      ஒரே ஒரு நிபந்தனை. சாப்பிட்டு முடித்து வெளியே வரும்போது, முதலில் எடுத்த அதே அளவுக்கு மீண்டும் எடுத்தாக வேண்டும்.கூரேசனின் மனம் அப்படிப்பட்டது. அவனுக்கு வாய்த்தவள் அவனைவிட சுத்த ஆத்மா. முதலியாண்டான் இதையெல்லாம் நினைத்துப் பார்த்தபடியே கூரத்தாழ்வானுடன் திருவரங்க எல்லை வரை நடந்து போனான்.'தாசரதி! நீ மடத்துக்குத் திரும்பிவிடு. ஆசாரியர் அங்கே தனியாக இருப்பார்.

                      நான் வரும்வரை அவரை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது உன் பொறுப்பு' என்றார் கூரேசர்.முதலியாண்டானுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ஆசாரியர் தனியாக இருப்பதா? திருவரங்கத்துக்கு வந்து சேர்ந்த நாள் முதல் ஒரு கணம் கூட அப்படி ஒரு சந்தர்ப்பம் அவருக்கு வாய்த்ததே இல்லை. எப்போதும் அவரைச் சுற்றி நுாறு பேர் இருந்துகொண்டே இருந்தார்கள்.

                      அவர்கள் புறப்பட்டால் அடுத்த வரிசையில் இன்னும் நுாறு பேர். 'எனக்கு வாசிக்கவே நேரமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறதப்பா!' என்று எத்தனை முறை கவலைப்பட்டிருக்கிறார்.'கூரேசரே, நீங்கள் தமது பத்தினியை அழைத்துக்கொண்டு சீக்கிரம் திரும்பும் வழியைப் பாருங்கள். நீங்கள் வந்து சேரும்வரை நமது ஆசாரியருக்கு இருப்புக் கொள்ளாது.'முதலியாண்டான் மடத்துக்குத் திரும்பிவிட, கூரேசர் காஞ்சியை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

                      இரு வாரங்களில் அவர் கூரத்தை அடைந்து வீடு சேர்ந்தார்.'வாருங்கள். ஆசாரியர் நலமாக உள்ளாரா?''போகிற வழியில் பேசிக் கொள்வோமே! நீ உடனே கிளம்பிவிடு ஆண்டாள்!'வேறு ஒரு வார்த்தை கிடையாது. வாசற்படியிலேயே நின்றபடிக்குத்தான் கூரேசர் சொன்னார்.'ஒரு நிமிடம்' என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று பத்து வினாடிகளில் திரும்பிய ஆண்டாள், 'கிளம்பலாம்' என்று சொல்லிவிட்டாள்.

                      கதவைப் பூட்டவில்லை. யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. எத்தனை நாள் பயணம், எங்கே போகிறோம், எப்போது திரும்புவோம் அல்லது திரும்புவோமா -என எதுவுமே கேட்கவில்லை. கிளம்பு என்றால் கிளம்புவது மட்டுமே கடன்.அன்றிரவு அவர்கள் மதுராந்தகத்தைக் கடந்து ஒரு காட்டு வழியே போக வேண்டியிருந்தது.

                      'இந்தக் காட்டைக் கடக்காமல் போக முடியாதா?' என்று கவலையுடன் கேட்டாள் ஆண்டாள்.'ஏன் கேட்கிறாய்? காட்டைக் கண்டால் பயமா?'அவள் மெல்லத் தலையசைத்தாள். 'காட்டில் கள்வர் நடமாட்டம் இருக்குமல்லவா?''பைத்தியமே. மடியில் கனமிருந்தால்தான் வழியில் பயம். நம்மிடம் என்ன இருக்கிறது?

                      'ஆண்டாள் தயங்கியபடி தன் இடுப்பில் முடிந்து வைத்திருந்த ஒரு சிறு பொன் வட்டிலை எடுத்துக் காட்டினாள். 'பயணம் எத்தனை நாளாகுமோ தெரியவில்லை. நீங்கள் சாப்பிடுவதற்கு ஒரு பாத்திரம் கூட எடுத்துக் கொள்ளாவிட்டால் எப்படி? அதுதான்..'கூரேசர் புன்னகை செய்தார். அன்போடு அந்த வட்டிலை வாங்கித் துாரப் போட்டார்.'ஆண்டாள், இந்தப் பொன் செய்யும் மாயத்தைக் கண்டாயா?

                      அகந்தையைக் கொடுக்கிற பொருள் அச்சத்தையும் தருகிறது. நமக்கெதற்கு அது? ஆசாரியரின் திருவடியை எப்போதும் மனத்துக்குள் ஏந்தியிருப்போம். நிரந்தரமான நிதி என்பது அதுதான். வா, போகலாம்!' என்று அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார். அடுத்த பதினைந்து தினங்களில் அவர்கள் திருவரங்கத்துக்குச் சென்று சேர்ந்தார்கள்.'அப்பாடா! வந்துவிட்டீர்களா! இனி நான் நிம்மதியாகப் படிக்கப் போவேன்!' என்றார் ராமானுஜர்.

                      தொடரும்...


                      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                      http://eegarai.org/apps/Kitchen4All.apk

                      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                      Dont work hard, work smart

                      Comment


                      • #26
                        Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

                        இது மட்டுமே அவசியம்! 24

                        திருவரங்கம் பெரிய கோயிலின் நிர்வாக விவகாரங்களைப் பெரிய நம்பிதான் அப்போது கவனித்துக் கொண்டிருந்தார். ஆளவந்தாரின் பீடத்துக்குப் பொறுப்பேற்று ராமானுஜர் வந்து சேர்ந்த உடன், இந்தப் பணிகளும் அவருடையதாயின. பகல் பொழுதுகள் முழுதும் திருக்கோயில் ஊழியத்திலேயே அவருக்குக் கழிந்து கொண்டிருந்தது. மடத்துக்கு வந்து உட்கார்ந்தால் காலட்சேபம் கேட்க பக்தர்கள் வந்துவிடுவார்கள். இரவு உணவுக்குப் பிறகு படுக்கப் போகிற நேரத்தில்தான் சீடர்களுடன் கொஞ்சமாவது உரையாட அவகாசம் கிடைக்கும்.

                        ராமானுஜருக்கு இது தான் பிரச்னையாக இருந் தது. தன்னளவில் அவர் ஓர் ஆத்மஞானி. வைணவம் என்னும் சித்தாந்தம் இயல்பிலேயே அவரது சிந்தனைப் போக்கை வடிவமைத்திருந்தது. தாம் சிந்திக்கும் வகைமைக்கு வைணவம் என்று பேர் என்பதை மட்டும்தான் அவர் போகப் போக அறிந்து கொண்டார். நம்மாழ்வார் தொடங்கி, ஆளவந்தார் வரை சொல்லி வைத்த அனைத்துமே இதன் விரிவும் ஆழமும் தேடிச் செல்கிற வழிகள்தாம் என்பதை அவர் உணர்ந்தார்.

                        எனவே சரணாகதியை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியலின் அடி முதல் நுனிவரை பாடம் கேட்டு, அலசி ஆராய்ந்து பயிலும் பெருவிருப்பம் அவருக்குள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.'சுவாமி, நான் பயிலவேண்டும். ஆளவந்தாரின் திருவடி சம்பந்தம் எனக்கு வாய்க்கவில்லை. அதற்குப் பதிலாக உங்களைச் சரண் புகுந்தேன்.

                        பாசுரங்களும் மற்றவையும் பயின்று கொண்டுதான் இருக்கிறேன் என்றாலும் போதாமை உறுத்துகிறது. அர்த்த விசேஷங்களில் மனம் லயித்துக் கிடக்கிறது. அனைத்தையும் அனைவர் மூலமும் அறிந்துவிட மாட்டோமா என்று ஏங்கிக் கிடக்கிறேன். நீங்கள்தான் ஆரம்பித்து வைக்க வேண்டும்!' என்று பெரிய நம்பியின் தாள் பணிந்து கேட்டார் ராமானுஜர்.நம்பிக்குப் புரிந்தது. ஆளவந்தாரிடம் ஒரு வழக்கம் இருந்தது. தமது அனைத்துச் சீடர்களையும் அவர் சமமாகவே நடத்தினார்,

                        அனைத்தையும் சொல்லிக் கொடுத்தார் என்றாலும் ஒவ்வொருவரிடமும் ஒரு குறிப்பிட்ட மந்திரம் அல்லது சுலோகம் அல்லது தத்துவத்தின் சிறப்புப் பொருளைத் தமது பிரத்தியேகப் பரிசாக வழங்கியிருந்தார். அது இன்னொருவருக்குத் தெரியாது. சம்பந்தப்பட்டவரைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது. அதைத்தான் ராமானுஜர் கேட்டார். எனக்கு அனைத்தும் வேண்டும். அனைவரிடம் இருந்தும் வேண்டும்.'புரிகிறது ராமானுஜரே.

                        நானறிந்த த்வய மந்திரத்தைத் தங்களுக்கு போதிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.' என்று சொல்லிவிட்டு ஒரு நல்ல நாள் பார்த்து வகுப்பை ஆரம்பித்தார்.'த்வயம் என்பது வேதங்களின் சாரம். காற்றைப் போல், ஒளியைப் போல் இவ்வுலகெங்கும் நீக்கமற நிறைந்து நீந்திக் கொண்டிருக்கும் அத்தனை மந்திரங்களிலும் ஆகச் சிறந்ததும் உயர்ந்ததும் இதுவே.

                        ''அற்புதம் சுவாமி! த்வய மந்திரத்தின் அவசியத்தை முதலில் சொல்லுங்கள்.' பெரிய நம்பி ஒரு கணம் கண்மூடி யோசித்தார். 'அவசியம்தானே? சொல்கிறேன். பந்தங்களில் இருந்து விடுதலை பெறவும் மிக நேரடியாக மோட்சத்தை அடையவும் இது அவசியம். இது மட்டுமே அவசியம்.'

                        தொடர்ந்து பல நாள்களுக்குப் பெரிய நம்பி ராமானுஜருக்கு த்வய மந்திர வகுப்பெடுத்தார். ஒன்றைத் தொட்டு ஒன்று என்று அர்த்த விசித்திரங்கள் எத்தனை எத்தனையோ எல்லைகளைக் கடந்து வேதத்தின் மையத்தைச் சென்று தொட்டுக் காட்டியது.

                        ராமானுஜர் ஆனந்தப் பரவசத்தின் உச்சத்தில் இருந்தார். எப்பேர்ப்பட்ட பெருங்கருணை இந்த மனிதருக்கு! அற்பனான என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, சீடனாக ஏற்று எத்தனை உயர்வான விஷயங்களை போதிக்கிறார்!கண்ணீர் மல்க அப்படியே பெரிய நம்பியின் கால்களில் விழுந்து வணங்கினார்.'ஆசாரியரே! எத்தனை பூடகமான பேருண்மைகளை எனக்கு நீங்கள் எளிதாக விளக்கியிருக்கிறீர்கள் என்று விவரிக்கவே முடியாது. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் தங்களுக்குக் கடன்பட்டிருப்பேன்.'

                        பெரிய நம்பி புன்னகை செய்தார். 'ராமானுஜரே! நான் சொன்னதைக் காட்டிலும் அர்த்த விசேஷம் திருக்கோட்டியூர் நம்பியிடம் உண்டு. ஆளவந்தாரின் சீடர்களிலேயே மாபெரும் ரகசியப் பேழை என்றால் அவர்தாம். திருமந்திரமாகட்டும், த்வயமாகட்டும், சரம சுலோகமாகட்டும். அவர் அறிந்த அர்த்த ரகசியங்கள் அபாரமானவை. நாங்கள் ஒன்றாகப் பயின்றவர்கள்தாம்.

                        ஆனால் அவர் நன்றாகப் பயின்றவர்களில் ஒரு நாயகன் என்று சொன்னால் உங்களுக்கு விளங்குமா?'ராமானுஜருக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது. ஒரு மேதை. மாபெரும் ஞானி. அரங்கனின் அரவணைப்பில் வசிக்கிற பெருமான். ஆளவந்தாரின் நேரடிச் சீடர். தம்மைக் காட்டிலும் இன்னொருவர் உயர்ந்தவர் என்று கைகாட்டுகிறார் என்றால், இவரது பணிவின் ஆழ அகலங்களுக்கு முன் இப்பூவுலகு எம்மாத்திரம்?'இல்லை ராமானுஜரே! என்னைவிட அவர் உயர்ந்தவர்.

                        திருக்கோட்டியூர் நம்பி நம்பமுடியாத அளவுக்கு ஞானஸ்தர். ஆசாரியர் ஆளவந்தாருக்குப் பாதமும் கரமுமாக இருந்தவர். என்னைக் கேட்டால் நீங்கள் அவரை நேரில் சந்தித்துப் பாடம் கேட்பது மிகவும் அவசியம் என்பேன்.' என்றார் பெரிய நம்பி.'நீங்கள் அவரைப் பற்றிச் சொல்லும்போதே எனக்கு அவரைக் காண மனம் துடிக்கிறது சுவாமி. எங்கிருக்கிறார் அவர்? சொல்லுங்கள், இப்போதே புறப்படுகிறேன்.''சிவகங்கைக்குப் பக்கத்தில் உள்ள திருக்கோட்டியூரில்தான் வசிக்கிறார்.

                        ஆசாரியர் இருந்தவரை திருவரங்கத்திலேயே தங்கியிருந்தவர், அவரது மறைவுக்குப் பிறகு சொந்த ஊருக்குப் போய்விட்டார்.''ஓ. ஒன்றும் பிரச்னையில்லை சுவாமி. நான் திருக்கோட்டியூருக்குச் சென்றே அவரை தரிசிக்கிறேன்.''நல்லது. மீண்டும் சொல்கிறேன், அவர் அத்தனை சாதாரணமான மனிதரல்ல. பாண்டிய நாட்டில் பெரியாழ்வார் வசித்து வந்த காலத்தில், அவருக்கு நெருக்கமான சீடராக இருந்த செல்வநம்பியின் வம்சத்தில் பிறந்தவர் இவர்.

                        குருகேசன் என்பது இயற்பெயர். தெரியுமா உமக்கு? உங்களுடைய திருக்கச்சி நம்பிகூட இவரிடம் சிலகாலம் குருகுலவாசம் செய்திருக்கிறார்!''அப்படியா? நம்பிகள் சொன்னதில்லை. எப்படியானாலும் சரி, நான் திருக்கோட்டியூர் நம்பியைச் சென்று சேர்ந்து அவரிடம் ரகஸ்யார்த்தங்களைக் கற்றே தீருவேன்.'பெரிய நம்பி ஆசீர்வதித்துவிட்டுக் கிளம்பிச் சென்றார்.

                        அன்று இரவெல்லாம் ராமானுஜர் முதலியாண்டானிடம் திருக்கோட்டியூர் நம்பியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.'ஆசாரியர் ஆளவந்தார் திருநாட்டுக்கு எழுந்தருளிய சமயம் திருக்கோட்டியூர் நம்பியை இங்கு சந்தித்தேன். ஆனால் அப்போது அவரைச் சரியாக அறிந்து கொள்ளவோ, பேசவோ முடியா மல் போய்விட்டது.

                        ''அதனாலென்ன சுவாமி! நாளை கிளம்பி விடுவோமல்லவா?''அவசியம். அதைவிட வேறென்ன வேலை நமக்கு?'திருவரங்கத்தில் இருந்து திருக்கோட்டியூர் சுமார் நுாறு காத துாரம் (337 கிலோ மீட்டர்). 'பல்லக்கெல்லாம் வேண்டாம்; ஆசாரியரை சேவிக்கப் போவதால் நடந்தே போய்விடுவோம்' என்றார் ராமானுஜர்.

                        ஆனால், அவர் பதினெட்டு முறை நடக்க வேண்டியிருந்தது!

                        தொடரும்...
                        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                        http://eegarai.org/apps/Kitchen4All.apk

                        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                        Dont work hard, work smart

                        Comment


                        • #27
                          Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

                          திருக்குருகைப் பிரான் ! 25

                          அன்று விடிகாலை திருவரங்கத்தில் இருந்து புறப்பட்ட ராமானுஜரின் பரிவாரம் ஒரு முழுப்பகல், முழு இரவு பயணம் செய்து மறுநாள் விடியும் நேரம் திருக்கோட்டியூரைச் சென்றடைந்தது. இடையே ஓரிடத்திலும் ராமானுஜர் தங்கவில்லை. உணவைத் தவிர்த்தார். ஆசாரியரைச் சந்திக்கப் போகிற பரவசமே அவருக்கு உற்சாகமளித்தது.

                          'மகாபுருஷர்கள் வாழ்கிற காலத்தில் வாழ நாம் அருளப்பட்டிருக்கிறோம். இந்த வாய்ப்பை நல்ல விதமாகப் பயன்படுத்தாமல் விட்டால் அது பெரும் பிழையாகிவிடும். மக்கள் நம்மை நம்பி வந்து காலட்சேபம் கேட்கிறார்கள். தருமம் அறிய விழைகிறார்கள்.

                          கருணாமூர்த்தியான எம்பெருமானின் பாதாரவிந்தங்களைத் தரிசிக்க வழி காட்டுவோம் என்று மனப்பூர்வமாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைக்கு நாம் பாத்திரமாவது அனைத்திலும் தலையாயது' என்றார் ராமானுஜர்.

                          'சரியாகச் சொன்னீர் ஆசாரியரே! எனக்குக் கிட்டிய வாய்ப்பை நான் தவறவிடவில்லை. எப்படியோ உம்மைச் சேர்ந்து விட்டேன்!' என்றான் கூரேசன்.

                          'அபசாரம். நமது ஞானமென்பது புல்நுனி நீர்த்துளியின் கோடியில் ஒரு பங்கு. ஒரு பெரிய நம்பியின் உயரத்தை நம்மால் அண்ணாந்து பார்க்க முடியுமா! அவரே வியக்கும் திருக்கோட்டியூர் நம்பியின் ஆளுமை எப்பேர்ப்பட்டதாக இருக்கும்! இவர்களுக்கெல்லாம் பரம ஆசாரியராக விளங்கிய ஆளவந்தாரின் அறிவு விஸ்தீரணம் எண்ணிப் பார்க்கவும் இயலாத ஒன்றாக அல்லவா இருக்கும்!'

                          'இருக்கலாம். ஆனால் ஆளவந்தாரே தமக்குப் பிறகு உம்மையல்லவா தம் இடத்துக்கு மனத்துக்குள் வரித்திருக்கிறார்?' என்றான் முதலியாண்டான்.

                          'பதவி சுகமானதல்ல முதலியாண்டான்! அதுதான் பயத்தைத் தருவது. பொறுப்பை உணர்த்துவது. வாழ்நாளுக்குள் நம்மைத் தகுதியாக்கிக் கொள்ள வேண்டியதன் இன்றியமையாமையை எப்போதும் எடுத்துச் சொல்லிக்கொண்டே இருப்பது. தயவுசெய்து என்னைப் பெரிதாக எண்ணாதீர்கள். ஆசாரியரைத் தவிர வேறு சிந்தனையே வேண்டாம்!'

                          ஆனால் அவர்களால் தமது ஆசாரியரைத் தவிர வேறு யாரையும் எண்ணிப் பார்க்க முடியவில்லை.
                          வழி முழுதும் ராமானுஜர் திருக்குருகைப் பிரான் என்னும் திருக்கோட்டியூர் நம்பியைப் பற்றியும் திருக்கோட்டியூரைப் பற்றியுமே பேசிக்கொண்டு வந்தார்.

                          'முதலியாண்டான்! திருக்கோட்டியூருக்குப் பெயர்க்காரணம் தெரியுமோ உனக்கு?'
                          'இல்லை சுவாமி. கோஷ்டி என்றால்...'

                          'இது சுத்தமான தமிழ்ப் பெயர் கொண்ட திவ்யதேசம். திருக்கு என்றால் பாவம். திருக்கை ஓட்டுகிற ஊர் இது. பாவம் தொலைக்கும் புண்ணிய பூமி. பேயாழ்வார் இந்த ஊருக்கு வந்திருக்கிறார். சௌமிய நாராயணப் பெருமாளை அவர் பாடியிருக்கிறார். பூதத்தாரும் வந்திருக்கிறார். பெரியாழ்வார் பாடியிருக்கிறார். மங்கை மன்னன், திருமழிசைப்பிரான் என ஐந்து ஆழ்வார்களால் பாடப்பெற்ற தலம் அது.'

                          பெரிய நம்பி மூலம் தானறிந்த அனைத்து விவரங்களையும் தமது சீடர்களுக்குச் சொல்லிக்கொண்டே வந்தார். ஊர் எல்லையை அடைந்ததும் பரபரப்பானார். பேச்சு நின்றுவிட்டது. கண்மூடிக் கரம் குவித்தார். மானசீகத்தில் அரங்கனை வேண்டிக்கொண்டு, குளத்தில் குளித்தெழுந்து கோயிலுக்குச் சென்று சேவித்துவிட்டு வந்தார்.

                          'சரி. நீங்கள் அனைவரும் இங்கே இருங்கள். நான் சென்று ஆசாரியரை தரிசித்துவிட்டு வருகிறேன். அவர் அனுமதியோடு உங்களையும் அழைத்துச் செல்கிறேன்' என்று சொல்லிவிட்டு நம்பிகளின் இல்லம் இருக்கும் இடத்தை விசாரித்துத் தெரிந்து கொண்டு, அத்திக்கு நோக்கி விழுந்து வணங்கினார். அப்படியே தண்டனிட்டுக்கொண்டே போகத் தொடங்கினார்.

                          ராமானுஜரின் உடன் வந்திருந்த குழுவினருக்கு ஒரே வியப்பாகிப் போனது. எம்மாதிரியான ஆசார்ய பக்தி இது! இந்தப் பணிவல்லவா இவரது உயரத்தை வகுத்தளித்திருக்கிறது! ஆளவந்தார் மிகச் சரியாகத்தான் கணித்திருக்கிறார் என்று தமக்குள் பேசிக்கொண்டார்கள்.

                          தண்டனிட்டபடியே குருகைப்பிரான் இல்லத்தை அடைந்த ராமானுஜர், ஆசாரியரின் அனுக்கிரகத்துக்காகக் காத்திருந்தார். உள்ளிருந்து வந்து விசாரித்துச் சென்ற நம்பியின் சீடர்கள் அவரிடம் சென்று ராமானுஜர் வந்திருக்கும் விவரத்தைச் சொன்னதும், 'வரச் சொல்' என்றார். ராமானுஜர் வீட்டுக்குள் சென்றார்.
                          ஆசாரியரைக் கண்டதும் சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்து, பணிவும் பவ்யமுமாகப் பேசத் தொடங்கினார்.

                          'அடியேன் ராமானுஜன். திருவரங்கத்தில் பெரிய நம்பி வழிகாட்டி, தங்களைத் தேடி வந்திருக்கிறேன். பரம ஆசாரியரான ஆளவந்தாரின் பிரிய சீடரான தாங்கள், எனக்கு ரகஸ்யார்த்தங்களை போதித்து அருள வேண்டும்!'

                          திருக்கோட்டியூர் நம்பி, ராமானுஜரை உற்றுப் பார்த்தார்.
                          'காஞ்சியில் திருக்கச்சி நம்பி நலமாக இருக்கிறாரா?'

                          'பேரருளாளன் நிழலில் வசிப்பவர் அவர். அவரால்தான் காஞ்சிக்குப் பெருமை. அடியேன் திருவரங்கம் வந்து சேர்ந்த பிறகு அவரை தரிசிக்க இன்னும் வாய்க்கவில்லை.'
                          'ஓஹோ. அரங்கத்தில் பெரிய நம்பி நலமா? அரையர் சுகமாக உள்ளாரா?'

                          'பகவத் கிருபையால் அனைவரும் நலமாக உள்ளார்கள். அடியேன் பெரிய நம்பியிடம்தான் தற்சமயம் பாடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். த்வய மந்திரத்தின் உட்பொருளை போதித்துக் கொண்டிருந்தபோதுதான் சுவாமிகள் தங்களைப் பற்றி எடுத்துச் சொன்னார். எனக்கு கஸ்யார்த்தங்களைத் தாங்கள்...'

                          'போய்விட்டுப் பிறகொரு சமயம் வாருங்கள்!' என்று சொல்லிவிட்டு திருக்குருகைப் பிரான் எழுந்து விட்டார். ராமானுஜர் திடுக்கிட்டுப் போனார். 'சுவாமி, அடியேன்..'

                          'பிறகு வாருங்கள் என்றேன்' என்று சொல்லிவிட்டு உள்ளே போனவர் என்ன நினைத்தாரோ, மீண்டும் ஒருதரம் சட்டென்று வெளியே வந்தார்.

                          'ஓய் ராமானுஜரே! மோட்சத்தில் ஆசையுடைய ஜீவன் வாழ்க்கையில் ஆசை துறக்க வேணும். புரிகிறதா?' என்று கேட்டுவிட்டு சட்டென்று உள்ளே போய்விட்டார்.

                          ராமானுஜர் மிகவும் குழப்பமானார். ஆசாரியர் இப்படித் தன்னை முற்றிலும் ஒதுக்கக் காரணம் என்னவாக இருக்கும்? புரியவில்லை. சரி, பிறகொரு சமயம் வரச் சொல்லியிருக்கிறாரல்லவா? அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டார்.

                          ஆனால், மறுமுறை அவர் திருக்கோட்டியூருக்கு வந்தபோதும் நம்பி மசியவில்லை. இப்போதும் அதே பதில். போய்விட்டுப் பிறகு வாரும்.

                          இம்முறை விடைதரும்போது முந்தைய வருகையின்போது கடைசியாகச் சொன்ன வரியின் தொடர்ச்சியே போல் மற்றொரு வரியைச் சொன்னார்.

                          'ஆசையைத் துறந்தால்தான் அகங்காரம் ஒழியும். மமகாரம் நீங்கும்.'

                          ராமானுஜர் மூன்றாவது முறை சென்றபோது,

                          'அகங்கார மமகாரங்கள் ஒழியாவிட்டால் உடலாசை ஒழியாது!' என்றார்.

                          திருவரங்கத்துக்கும், திருக்கோட்டியூருக்குமாக ராமானுஜர் பதினெட்டு முறை நடக்க வேண்டியிருந்தது. அவர் சளைக்கவேயில்லை. எப்படியாவது நம்பியின் அருட்பார்வை தன்மீது பட்டுவிடாதா, தன்னை ஏற்றுக்கொண்டு அருள்பாலிக்க மாட்டாரா என்ற எண்ணம் தவிர வேறில்லை அவருக்கு. ஆனால் ஒவ்வொரு முறை சென்றபோதும் ஒருவரி போதனை கிடைத்ததே தவிர, அவர் தேடி வந்த ரகஸ்யார்த்தப் பேழையை நம்பி திறந்தபாடில்லை.ராமானுஜர் துவண்டு போனார்.

                          தொடரும்...
                          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                          http://eegarai.org/apps/Kitchen4All.apk

                          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                          Dont work hard, work smart

                          Comment


                          • #28
                            Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

                            தனியே வா! 26

                            'சுவாமி, இது எங்களுக்குப் புரியவேயில்லை. இதுவரை நீங்கள் பதினேழு முறை திருக்கோட்டியூருக்குச் சென்று திரும்பி விட்டீர்கள். உங்களிடம் என்ன குறை கண்டார் என்று நம்பிகள் இப்படி முகத்திலடித்தாற் போலத் திருப்பி அனுப்புகிறார்?'

                            ராமானுஜரின் சீடர் களுக்கு ஆறவேயில்லை. வித்யாகர்வம் இருக்க வேண்டியதுதான். ஆனால் இப்படியா? அதையும் இப்படியொரு மகாபுருஷனிடமா காட்டுவார்கள்? ஒருமுறை இருமுறை என்றால் பரவாயில்லை. பதினேழு முறை! 'தயவுசெய்து போதும். இனி நீங்கள் திருக்கோட்டியூருக்குச் செல்ல வேண்டாம் சுவாமி!' கண்ணீரோடு விண்ணப்பித்துக் கொண்டார்கள்.'இல்லை. அவரிடம் ரகஸ்யார்த்தம் கேட்க எனக்குத் தகுதி வரவில்லை என்று நினைக்கிறேன்.

                            பிழை அவர் மீதில்லை' என்று சொல்லிவிட்டு ராமானுஜர் நகர்ந்து விட்டார். ஆனால் அவருக்கும் அந்த உறுத்தல் இருந்தது. அப்படி என்ன பிழை செய்துவிட்டேன்? ஒவ்வொரு முறை செல்லும் போதும் இன்னொரு சமயம் வரச் சொல்லி விடுகிறார். வந்ததற்கும் சந்தித்ததற்கும் அடையாளமாக ஒருவரி போதனை.

                            அதைத் தவிர வேறில்லை.நான்காவது முறை ராமானுஜர் விடாமல் திருக்கோட்டியூருக்குப் போனபோது 'அகங்கார மமகாரங்களை ஒழிக்க வலுவில்லாவிட்டால் ஆத்மஞானம் இல்லை' என்றார் நம்பி. ஆத்மஞானம் இல்லாது போனால் போகங்களின் மீதான இச்சை போகாது. இச்சை இருந்தால் இறை அன்பு இல்லை. பரம்பொருள் மீது அன்பு குவியாவிட்டால் பற்று நீங்காது.

                            பற்று நீங்காவிட்டால் பரமனுக்கு அர்ப்பணமாக மாட்டோம். அப்படி அர்ப்பணமானால்தான் காமம் விலகும். காமம் விலகினால் வைணவ மனநிலை கைகூடும். அது கூடினால் சத்சங்கம் சேரும். சத்சங்கமே பாகவத சம்பந்தத்துக்குப் படி. பாகவத சம்பந்தமே பகவத் சம்பந்தத்தின் வாயில். அது கிடைத்துவிட்டால் மற்ற சிறு பலன்கள் ஒரு பொருட்டாகாது. சிறு பலன்களில் வெறுப்பு வந்தால், பெரும் பலனாகப் பரமனின் அடிமை ஆவான்.

                            அவனையே சரணமடைவான். அப்படிச் சரணாகதியடைந்த ஒருவனே திருமந்திரத்தையும் அதன் பொருளையும் ஏற்கத் தகுதி பெறுவான். அத்தகுதி யாருக்கு வாய்க்கிறதோ, அவருக்கே ரகஸ்யார்த்தம் வாய்க்கும்.இதை முதல்நாளே மொத்தமாகச் சொல்லியிருந்தால் குருகைப் பிரானின் நோக்கம் அன்றே ராமானுஜருக்கு விளங்கியிருக்கும். அவர் ஒவ்வொரு முறை சென்றபோதும் ஒவ்வொரு வரியாகச் சொல்லி அனுப்பியதுதான் விசித்திரம்.

                            மொத்தமாகச் சேர்த்து யோசித்துப் பார்த்தார் ராமானுஜர். அடடா! சரணாகதியைத்தானே ஆசாரியர் வலியுறுத்துகிறார்! சன்னிதியில் நெடுநேரம் கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தார். 'அரங்கப் பெருமானே! சரணாகதியைத் தவிர வேறெதையும் நான் அறியேனே? உற்றோமேயாவோம் உமக்கேநாம் ஆட்செய்வோம் என்றல்லவா ஒப்புக் கொடுத்திருக்கிறேன்?ஆசாரியருக்கு இதை யார் எடுத்துச் சொல்வார்கள்?

                            அவரது கருணைக் கண் எப்போது என் மீது திறக்கும்?'அன்றைக்குத் திருவரங்கம் கோயிலுக்குத் திருக்கோட்டியூரில் இருந்து நம்பியின் சீடர் ஒருவர் வந்திருந்தார். 'சுவாமிகளே, நீங்கள் ஒவ்வொருமுறையும் நம்பிக்கையுடன் திருக்கோட்டியூருக்கு வருகிறீர்கள். ஆசாரியர் ஒவ்வொருமுறையும் தங்களைத் திருப்பி அனுப்புகிறார். தாங்களும் சளைக்காமல் மீண்டும் வருகிறீர்கள். எங்களுக்கெல்லாம் இது எவ்வளவு சங்கடமாக உள்ளது தெரியுமா?' என்று கேட்டார் அவர்.

                            'எம்பெருமான் இன்னும் ஆசாரி யருக்கு அனுமதி தரவில்லை போலிருக்கிறது. அவர்மீது பிழை இல்லை ஐயா!'உண்மையில் முதல்முறை ராமானுஜர் திருக்கோட்டியூருக்குச் சென்று திரும்பிய உடனேயே குருகைப் பிரானுக்கு அரங்கனின் அனுமதி கிடைத்துவிட்டது.'நம்பி! ராமானுஜர் தகுதி வாய்ந்த பாத்திரம். நீர் அவருக்கு ரகஸ்யார்த்தங்களை தாராளமாகச் சொல்லிக் கொடுக்கலாம்!' என்று அவரது உட்செவியில் கேட்ட குரல் அரங்கனுடையதேதான்.

                            ஆனாலும் அவர் தயங்கினார். ஏனெனில் காலமாவதற்குச் சில தினங்களுக்கு முன்னர் ஆளவந்தார் அவரைத் தனியே அழைத்து ஒரு விஷயம் சொல்லியிருந்தார். 'ரகஸ்யார்த்தங்கள் சக்தி மிக்கவை. யாரையும் பரிசோதித்துப் பாராமல் போதித்துவிடாதே! தகுதியற்ற ஒருவருக்கு அவை தப்பித் தவறிக்கூடப் போய்ச் சேர்ந்துவிடக் கூடாது!'ராமானுஜர் முதல் முறை திருக்கோட்டியூருக்கு வந்து சென்ற பிறகு குருகைப் பிரான் ஒரு சமயம் திருவரங்கத்துக்குப் போனார்.

                            சன்னிதியில் வைத்துப் பெருமானிடம் இதனை விண்ணப்பித்துக் கொண்டு, 'எம்பெருமானே! ராமானுஜர் தகுதி வாய்ந்த பாத்திரம் என்று நீ சொல்கிறாய். ஆனால் பரிசோதித்துப் பாராமல் பாடம் சொல்ல வேண்டாம் என்று என் ஆசாரியர் சொல்லியிருக்கிறார். ஆசாரியர் சொன்னதைத்தான் நான் கேட்க முடியும். நீ கொஞ்சம் பொறுத்துக்கொள்' என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்.

                            திருக்கோட்டியூர் நம்பியின் ஆசாரிய பக்தி அப்படிப்பட்டது. அரங்கனே உத்தரவு கொடுத்தாலும், ஆசாரியரின் உத்தரவுக்கு அப்புறம்தான் அது. அவருக்கு ஒன்றே ஒன்றுதான் தெரிய வேண்டியிருந்தது. ராமானுஜரின் தீவிரம். ஒப்புக்காக ஒருதரம் வந்து கேட்டுவிட்டுப் போகிற நபராக இருந்துவிட்டால்? ஆனால் அவர் அப்படி இல்லை.

                            பதினாறு முறை ஏமாந்து, பதினேழாவது முறையும் ராமானுஜர் திருக்கோட்டியூருக்குச் சென்றபோது நம்பிக்கு அது விளங்கிவிட்டது. அன்று சரணாகதி நிலையை அடை வதற்கான கடைசிக்கு முந்தைய படியைத் தமது ஒருவரிப் பாடமாக அவர் சொல்லி அனுப்பியபோதே, அடுத்த வருகையில் காரியம் கைகூடிவிடும் என்று தமது மானசீகத்தில் ஆசீர்வதித்துத்தான் அனுப்பியிருந்தார்.

                            ராமானுஜருக்கு அது எப்படித் தெரியும்! திருவரங்கம் சென்று திரும்பிய நம்பியின் சீடர், நடந்ததைத் தமது ஆசாரியரிடம் எடுத்துச் சொன்னார். 'சுவாமி, ராமானுஜர் மிகவும் மனம் நொந்திருக்கிறார். தாங்கள் இனியும் அவரைச் சோதிக்க வேண்டாமே?'நம்பி கண்மூடி வெகுநேரம் அமைதியாக இருந்தார். பிறகு கண்களைத் திறந்து புன்னகை செய்தார்.'சரி, வரச் சொல்லுங்கள். ஆனால் பரிவாரங்களுடன் அல்ல.

                            தண்டும் பவித்திரமுமாகத் தனியாகத்தான் வரவேண்டும்!' தண்டும் பவித்திரமும் மட்டுமே துறவியின் சின்னங்கள். உறங்கும்போதும் உடனிருப்பவை. மற்ற எதனோடும் அவருக்கு உறவு கிடையாது. தவிரவும் ரகஸ்யார்த்தம் என்பது அனைவருக்கும் வினியோகிக்கிற பிரசாதமல்ல. தகுதி முக்கியம். தெய்வானுக்கிரகம் முக்கியம். அது நியமிக்கப்படுவது. பெரும் தவத்துக்குப் பிறகு மட்டுமே சித்திக்கும் வரம்.செய்தி கிடைத்ததும் ராமானுஜர் பரவசக் கூத்தாடினார்.

                            'என்ன தவம் செய்தேன்! என்ன தவம் செய்தேன்! ஆசாரியர் ஒப்புக்கொண்டு விட்டாரா? உண்மையாகவா? இப்பிறவியில் இதனைக் காட்டிலும் பெரும்பேறு வேறு சாத்தியமில்லை. நான் புறப்பட்டுவிட்டேன் என்று சொல்லுங்கள்!'தகவல் கொண்டு வந்தவரிடம் சொல்லி அனுப்பிவிட்டு ராமானுஜர் பெரிய நம்பியிடம் ஓடினார்.

                            விஷயத்தைச் சொல்லி மகிழ்ந்து அவர் பாதம் பணிந்தார்.
                            'போய் வாருங்கள் ராமானுஜரே! ஆனால் உம்மைத் தனியே வரச் சொல்லியிருக்கிறார்! கவனம்.'தலையசைத்து வணங்கி விடைபெற்ற ராமானுஜர் மடத்துக்கு வந்ததும் முதலியாண்டானையும் கூரத்தாழ்வானையும் அழைத்தார்.'புறப்படுங்கள். நாம் இப்போதே திருக்கோட்டியூர் செல்கிறோம்!' என்றார்.

                            தொடரும்...


                            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                            http://eegarai.org/apps/Kitchen4All.apk

                            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                            Dont work hard, work smart

                            Comment


                            • #29
                              Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

                              ஓம் நமோ நாராயணாய! 27

                              கொதித்துப் போய்விட்டார் குருகைப் பிரான். 'ஓய் ராமானுஜரே! நாம் என்ன சொல்லி அனுப்பி வைத்தோம், நீர் எப்படி வந்து நிற்கிறீர்? இதுதான் நீங்கள் ஆசாரியர் சொல் கேட்கிற லட்சணமா? உம்மைப் பெரிய ஞானஸ்தன் என்று ஊரே கொண்டாடுகிறது. போதாக்குறைக்கு உமக்குத் திருமந்திர உபதேசம் செய்யும்படி அரங்கனே வேறு சிபாரிசு செய்கிறான். குருவின் ஒரு சொல்லைக் காக்க உம்மால் முடியாதபோது அத்தனை பெரிய ஞானப்புதையலை எப்படி எடுத்து ஏந்துவீர்?'

                              கோபத்தில் அவரது முகம் சிவந்து ஜொலித்தது. ராமானுஜர் அமைதியாக அவர் தாள் பணிந்து நிதானமாக பதில் சொன்னார். 'ஆசாரியரே! உங்கள் வார்த்தையை நான் மீறு வேனா? ஒருக்காலும் மாட்டேன். என்ன பிழை கண்டீர் என்று சொன்னால் உடனே திருத்திக் கொள்வேன்.''உம்மைத் தனியாக அல்லவா நான் வரச் சொல்லியனுப்பினேன்?

                              எதற்காக இந்த இரண்டு பேரை உடன் அழைத்து வந்திருக்கிறீர்?'முதலியாண்டானுக்கும் கூரத்தாழ்வானுக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது. இது என்ன கஷ்டம்! பதினெட்டு முறை நடையாய் நடந்து ஆசாரிய அனுக்கிரகம் கிட்டுகிற நேரத்தில் தம்மால் அதற்குத் தடையா? பேசாமல் வெளியே போய்விடலாமா? அவர்கள் ராமானுஜரைப் பார்த்த கணத்தில் அவர் அவர்களை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு குருகைப் பிரானை நோக்கினார்.

                              'சுவாமி, நீங்கள் என்னைத் தனியாகத்தான் வரச் சொல்லியிருந்தீர்கள். ஆனால், தண்டும் பவித்திரமுமாகத் தனியே வரவும் என்றல்லவா உமது சீடர் என்னிடம் சொன்னார்?''ஆம், சொன்னேன். அதிலென்ன?''இந்த முதலியாண்டான் எனது தண்டு. கூரேசனே பவித்திரம்!' என்று இருவரையும் முன்னால் அழைத்து அவரது தாள் பணியச் செய்தார்.

                              திகைத்து விட்டார் குருகைப் பிரான்.'என்னது? இவர் தண்டு, அவர் பவித்திரமா?''ஆம் சுவாமி. அனைத்தையும் துறந்து நான் சன்னியாசம் பெற்ற போதுகூட தாசரதியைத் தவிர உள்ள மற்றனைத்தையும்தான் துறந்தேன்.

                              இது என் மனத்துக்கும் எம்பெருமான் திருவுள்ளத்துக்கும் தெரியும். இன்று தங்கள் முன் அந்த ரகசியத்தை வெளிப்படுத்துகிறேன். முதலியாண்டானும், கூரத்தாழ்வானும் வைணவம் தழைக்கத் தம்மை அர்ப்பணித்தவர்கள். திருத்தொண்டு தவிர இன்னொரு சிந்தையில்லாதவர்கள். எனது திரிதண்டமும் பவித்திரமும் இவர்களே ஆவர். எனவே, தாங்கள் எனக்கு போதிக்கும் ரகஸ்யார்த்தங்களை இவர்களுக்கும் சேர்த்து அருள வேண்டும்!

                              'குருகைப் பிரானுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ராமானுஜர் தமது இரு சீடர்களைப் பற்றி ஆதியோடு அந்தமாக அவருக்கு எடுத்துச் சொன்னார். முதலியாண்டானின் ஆசாரிய பக்தி. தவத்தில் அவனுக்கிருந்த தீவிரம். பற்றற்ற பான்மை. கோடானுகோடி ஜன சமூகத்தையும் தன் சொந்தமாக எண்ணுகிற பெருந்துறவு மனம். பிறகு கூரேசனின் தியாகம். எப்பேர்ப்பட்ட செல்வந்தன் அவன்! அனைத்தையும் கணப்பொழுதில் விசிறியடித்துவிட்டுத் திருமால் சேவைக்கு ஓடி வந்தவன்.

                              'ஆசாரியரே! தகுதியற்ற இருவரைத் தங்கள் முன் நான் கொண்டு வந்து நிறுத்துவேனா? எத்தனைப் பிரயத்தனப்பட்டு எனக்கு இந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது? இதை இழக்க விரும்புவேனா? தங்கள் மூலம் இவர்கள் திருமந்திரப் பொருள் அறிந்தால் அது தொண்டர் குலம் பெறும் பேறாகும். தங்களைத் தவிர வேறு யாரால் இதனை வாழ்விக்க இயலும்?' நெடுநேரம் அவர் யோசித்தார். பிறகு என்ன நினைத்தாரோ? 'சரி, போகிறது. தண்டும் பவித்திரமுமாக வரச் சொன்னது நான்தான்.

                              நீர் இவர்களே உமது தண்டும் பவித்திரமும் என்று சொல்லிவிட்டீர். இனி பேச்சில்லை. ஆனால் ஒன்று. உம்மைத் தாண்டி இந்த ரகஸ்யார்த்தங்கள் வேறு யாருக்கும் போய்ச் சேரக்கூடாது.''ஆகட்டும் சுவாமி.''உயிர் பிரியும் காலம் நெருங்கும்போது தக்க பாத்திரம் ஒன்றைக் கண்டடைந்தால் அங்கு சொல்லி வைக்கலாம். அதற்குமுன் திருமந்திரப் பொருளை வெளியிட்டால் உமக்கு நல்ல கதி கிட்டாது.'

                              'தங்கள் சித்தம்.''இப்படி வந்து அமரும்.'ராமானுஜர் பணிவும் பக்தியுமாகத் திருக்குருகைப் பிரான் எதிரே சென்று சேவித்து அமர்ந்தார். நம்பிகள் தொடங்கினார்.ஓம் நமோ நாராயணாய. திருமந்திரம் என்பது அதுதான். அனைத்து ரகசியங்களுக்கும் மூலாதாரம் அதுதான். நான்கு வேதங்களும் அவற்றின் அங்கங்களான உபநிடதங்களும் அவற்றின் சுருக்க விளக்கங்களான பிரம்ம சூத்திரமும் கீதையும் இன்ன பிற தத்துவ ஞானத் தேடல்களின் விளைவுகள் யாவும் சென்று சேரும் இடம் அதுவே.

                              தன்னை அறிந்தவனால் மட்டுமே இறைவனை அறிய இயலும். பூரணமாக இறைவனை அறிந்தவனுக்கே தாம் பெறவேண்டிய பேறு எது என்பது புரியும். தெரிந்துவிட்டால் கிடைத்துவிடுமா? எத்தனைத் தடைகள், எவ்வளவு இடர்பாடுகள்! அந்த இடர்களை அறிந்து களையும்போதுதான் பால்வழிப் பாதையின் கதவு திறக்கும். பரமன் அருள் சித்திக்கும். அவனைச் சென்று சேரும் வழி புலப்படும்.

                              அந்த வழியைத் திறக்கும் சாவித்துவாரமே திருமந்திரம். ஓம் நமோ நாராயணாய.குருகைப் பிரான் ரகஸ்யார்த்தங்களை விளக்கத் தொடங்கியதுதான் ராமானுஜருக்குத் தெரியும். மறுகணமே அவர்தம் ஆசாரியரின் அந்தராத்மாவுக்குள் ஊடுருவிப் போனார். வெளியே நிகழும் எதுவும் தெரியாத மோன நிலை. குருவும் அவர் தரும் சொல்லும். சொல்லும் அது தரும் பொருளும். பொருளும் அது விரியும் வெளியும். வெளியும் அதன் உள்ளுறைக் கருவும்.

                              ஆசாரியரின் வாய் திறந்து உதிர்ந்து கொண்டிருந்த பெரும்பொருளைக் கரம் கூப்பிக் கண்மூடிய நிலையில் நெஞ்சில் ஏந்திக் கொண்டிருந்தவரின் கண்ணில் இருந்து கரகரவென நீர் வழிந்து கொண்டிருந்தது.காலம் உறைந்து மீண்டதொரு கணத்தில் அர்த்த விசேஷங்களைச் சொல்லி முடித்து, குருகைப் பிரான்
                              நிறுத்தினார்.ராமானுஜர் சாஷ்டாங்கமாக அவரை விழுந்து வணங்கி, 'என்ன தவம் செய்தேன் சுவாமி! இப்பிறவி அர்த்தம் கண்டது

                              .''ஆனால் சொன்னது நினைவிருக்கட்டும் ராமானுஜரே! நீர் சரியான பாத்திரம் என்று நம்பித்தான் உம்மிடம் இதனைச் சொல்லி வைத்தேன். தப்பித்தவறிக் கூட பாத்திரம் பொத்தலாகி விடலாகாது.'தலைவணங்கி விடைபெற்று வெளியே வந்தார் ராமானுஜர்.

                              முதலியாண்டான் ஏதோ சொல்ல வாயெடுக்க, சட்டென அவனைத் தடுத்து, 'கோயிலுக்குப் போக வேண்டும் தாசரதி! அதன்பிறகுதான் பேச்செல்லாம்.'ரகஸ்யார்த்தம் கேட்டு வந்தவர்கள் அவர்கள். ஆனால் ராமானுஜர் சொன்னதற்குள் ஒரு ரகஸ்யார்த்தம் இருக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.

                              தொடரும்...


                              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                              http://eegarai.org/apps/Kitchen4All.apk

                              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                              Dont work hard, work smart

                              Comment


                              • #30
                                Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

                                கோபுர வாசல் ! 28

                                ராமானுஜர் செய்ய உத்தேசித்திருந்தது, அவரது சீடர்களுக்குத் தெரியாது. அவர் சொல்லவில்லை. அவர்கள் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில் வாசலுக்கு வந்தபோது, சேவித்துவிட்டு ஊர் திரும்பிவிடப் போகிறோம் என்றுதான் நினைத்தார்கள்.

                                'சுவாமி, சன்னிதிக்குச் செல்லலாமே?' என்றான் முதலியாண்டான். ராமானுஜர் யோசனையுடன் கோயிலுக்கு வெளியிலேயே நின்றிருந்தார். அது அங்கே உற்சவ நேரம். ஊர் மக்கள் நிறையப் பேர் கோயிலுக்கு வந்திருந்தார்கள். 'கூட்டமாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா?' என்றான் கூரத்தாழ்வான்.ராமானுஜர் புன்னகை செய்தார்.

                                ஒன்றும் பேசாமல் விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தார். சீடர்களால் அவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. என்ன ஆயிற்று இன்று இவருக்கு? எதற்காக இத்தனை வேகம்? வந்த காரியம் நல்லபடியாக முடிந்துவிட்டது. நிதானமாகக் கோயிலுக்குப் போய் சேவித்துவிட்டுப் போனால்தான் என்ன?ராமானுஜர் கோயிலை நோக்கித்தான் சென்று கொண்டிருந்தார்.

                                ஆனால் அந்த வேகம் அசாத்தியமானது.உள்ளே நுழைந்தவர் சன்னிதிக்குச் செல்லவில்லை. நேரே கோபுரத்தின் மேல் மாடத்தை அடையும் படிகள் இருக்கிற பக்கத்தை விசாரித்துக்கொண்டு அங்கே சென்றார்.

                                யாரையும் பார்க்கவில்லை. எது குறித்தும் கவலை கொள்ளவும் இல்லை. என்ன ஏது என்று யாரும் விசாரிப்பதற்கு முன்னர் கோபுரத்தின் மீது ஏறிவிட்டார். ஒன்றும் புரியாமல் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த கூரத்தாழ்வானிடம் ஊர்க்காரர் ஒருவர் கேட்டார்,

                                'அவர் ராமானுஜர் அல்லவா? கோயிலுக்கு வந்தவருக்கு கோபுரத்தின் மீது என்ன வேலை?''தெரியவில்லை சுவாமி. எங்களுக்கும் அதே யோசனைதான்.

                                ''அதுசரி, குருகைப் பிரான் இம்முறை அவருக்கு உபதேசம் செய்து விட்டாராமே? அந்தப் பக்கம் இருந்துதான் வருகிறேன். நம்பிகள் மாளிகை வாசலில் அவரது சீடர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

                                ''ஆம் சுவாமி. இன்றைய தினம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது. யாருக்கும் கிட்டாத மிகப்பெரும் ரகஸ்யார்த்தங்கள் இன்று எங்கள் ஆசாரியருக்குக் கிடைத்தன. எதை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகுமோ, அதை அறிய நேர்ந்தது. எது கிடைத்துவிட்டால் வேறு எதுவுமே அவசியமில்லையோ, அது கிடைத்து விட்டது. எந்த மந்திரம் நிகரற்றதோ, எந்த மந்திரம் இப்பிறப்புக்கும் மறுபிறப்பற்ற பேரானந்த நிலைக்கும் ஆதாரமோ, அந்த மந்திரம் வசப்பட்டு விட்டது.' புல்லரித்து விவரித்துக் கொண்டிருந்தான் முதலியாண்டான்.

                                'இதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும் ஐயா. ராமானுஜர் ஆசீர்வதிக்கப்பட்டவர். இதே ஊரில் இத்தனை நுாறு பேர் வசிக்கிறோமே, எங்களையெல்லாம் குருகைப் பிரான் இதுகாறும் ஏறெடுத்தும் பார்த்ததில்லை என்பதை அறிவீரா?''அதுமட்டுமா... அவரிடம் சீடனாகச் சென்று சேரக்கூட எங்களுக்கு வழியில்லை சுவாமி.

                                அவர் எந்த அடிப்படையில் தமது மாணாக்கர்களைத் தேர்ந்தெடுக்கிறார் என்பதே எங்களுக்குப் புரியவில்லை.' 'அப்படிச் சேருகிற சிலரைக் கூட சில காலம் வைத்திருந்துவிட்டு அனுப்பி விடுகிறார். தொடர்ந்து வாசிக்கிறவர்கள் வெகு சொற்பம்.''வேதபாடம் பயிலவே இத்தனை கெடுபிடிகள். அதற்கெல்லாம் மூலாதாரமான சத்விஷயத்தை போதிப்பதென்றால் எத்தனையெத்தனை தகுதிகள் எதிர்பார்ப்பார்!'ஒருவர்தான் ஆரம்பித்தது.

                                வரிசையாக ஏழெட்டு உள்ளூர்க்காரர்கள் அங்கே சேர்ந்து விட்டார்கள். குருகைப் பிரானின் குணாதிசயங்களைப் பற்றியும், ராமானுஜருக்கு அவர் ரகஸ்யார்த்தம் போதித்தது பற்றியும் ஆச்சரியப்பட்டுப் பேசத் தொடங்கினார்கள்.'ஓய் ராமானுஜரே! கோபுரத்தின்மீது ஏறி நின்று என்ன செய்து கொண்டிருக்கிறீர்? கீழே வாருமய்யா. ரகஸ்யார்த்தம் அறிந்த உம்மைச் சேவித்தாவது புண்ணியம் தேடிக் கொள்கிறோம்!'

                                கீழிருந்து ஒருவர் குரல் கொடுத்தார்.'அப்படியா விரும்புகிறீர்கள்? ஏன், நீங்களே அதன் உட்பொருளை அறியலாமே? பிறவிப் பெருங்கடலை நீந்த உமக்கொரு உபாயம் உள்ளதென்றால் வேண்டாமென்று சொல்லி விடுவீர்களோ?'திடுக்கிட்டுப் போனது கூட்டம். என்ன சொல்கிறார் இவர்? புரியவில்லையே.ராமானுஜர் பேசத் தொடங்கினார்.

                                'திருக்கோட்டியூர் மக்களே! திருமந்திரத்தின் உட்பொருளை அறிவதற்கு நான் பதினெட்டு முறை இந்த ஊருக்கு நடையாய் நடந்தேன். இந்தக் காலக்கட்டத்தில் தவமும் விரதங்களும் என்னை மெலிவுற வைத்தன. உடலும் உள்ளமும் வருந்தி படாதபாடுபட்டு ஒரு வழியாக ஆசாரியரின் கருணைக் கண் திறக்கப் பெற்றேன். ஆனால் இத்தனை மெனக்கெடல் அத்தனை பேருக்கும் சாத்தியமா?''

                                'நிச்சயமாக இல்லை சுவாமி!'

                                "ஆனால் காற்று பொதுவானது. வெளிச்சம் பொதுவானது. நீர் பொதுவானது. இப்புவி அனைவருக்கும் பொதுவானது. அவ்வண்ணமே அண்டப் பெருவெளியை ஆளும் பரம்பொருளின் அருளும் அனைவருக்கும் பொதுவானது. அவனை அறிய, அவனது சொரூபத்தை அறிய, அவனது சுபாவத்தை அறிய, இறுதியில் அவனையே சென்றடைய உங்களுக்கெல்லாம் ஆசை இல்லாதிருக்குமா?''

                                'அதெப்படி சுவாமி! தெரிந்த அளவுக்கு பக்தி செய்கிறோம்;முடிந்த அளவுக்கு சிறப்பாக வாழ முயற்சி செய்கிறோம். ஆனால் முழுமை என்ற ஒன்று எங்கே நமக்கெல்லாம் வாய்க்கிறது?'

                                ''சரியாகச் சொன்னீர்கள். முழுமை என்பது பரம்பொருளே. எதை அறிந்தால் வேறெதுவும் முக்கியமில்லையோ, அதை அறிய விருப்பம் இருக்கிறதா உங்களுக்கு?"

                                'கோபுரத்தின் உச்சியில் ஒரு மனிதர். கீழே பத்திருபது பேர் கொண்ட கூட்டம். என்ன உரையாடல் நடக்கிறது அங்கே?ஆர்வத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மேலும் மக்கள் அங்கே வந்து சேரத் தொடங்கினார்கள்.

                                சில நிமிடங்களில் நுாற்றுக்கணக்கானவர்கள் அங்கே வந்து குழுமி விட ஆளாளுக்குக் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். 'ராமானுஜர் எதற்கு கோபுரத்தின் உச்சிக்குச் சென்று நிற்கிறார்? என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள் அவரிடம்?'

                                "ராமானுஜர் சொன்னார். 'இக்கணத்துக்காகவே நான் இங்கே காத்திருக்கிறேன் அன்பர்களே! திருமந்திரத்தின் உட்பொருள் எனக்குத் திருக்கோட்டியூர் நம்பி மூலம் இன்று அறியக் கிடைத்தது.
                                இம்மந்திரத்தை அதன் உண்மை சொரூபத்துடன் அறிபவனுக்கு மோட்சம் எளிது. எண்ணற்ற முனிவர்களும் யோகிகளும் யுகக்கணக்கில் தவமிருப்பது இதற்காகத்தான். என் பேறு, இன்று நான் இதனைப் பெற்றேன். உங்களுக்கு விருப்பம் உண்டானால் நான் பெற்றதை உங்களுக்கும் அறிவிப்பேன்!"


                                'ஆ, ஆ என்று ஆரவாரம் எழுந்தது. அனைவரும் வியப்பிலும் பரவசத்திலும் மெய்சிலிர்த்துப் போய், 'கூறுங்கள் ராமானுஜரே! எங்களையும் கடைத்தேற்றுங்கள்!' என்று கூக்குரலிட்டார்கள்.

                                முதலியாண்டானும் கூரத்தாழ்வானும் திகைத்து விட்டார்கள்.'இது ரகசியமானது. பகிரங்கப்படுத்தினால் உனக்கு நரகம் நிச்சயம்' என்று நம்பிகள் சொல்லியனுப்பியதுதான் அவர்களுக்கு நினைவுக்கு வந்தது.ராமானுஜர் அவர்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்தார். மனவோட்டம் புரியாதவரா அவர்? ஆனால் ஆறுதல் ஏதும் சொல்லவில்லை. புன்னகைதான் செய்தார்.தன்னை திடப்படுத்திக்கொண்டு ஆரம்பித்தார்.

                                தொடரும்...


                                என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                                http://eegarai.org/apps/Kitchen4All.apk

                                http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                                Dont work hard, work smart

                                Comment

                                Working...
                                X