பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000 மாவது ஆண்டு கொண்டாடப்படுவதால் தினமலரில் 108 நாட்களுக்கு ஒரு தொடர் வருகிறது. அதை இங்கு பகிர விரும்புகிறேன். படித்து மகிழுங்கள் !
Announcement
Collapse
No announcement yet.
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
Collapse
X
-
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smartTags: None
-
Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
நாளை அவன் வருவான்! (1)
விடியும் நேரம்; அவர் சாரங்கபாணி கோயிலை நோக்கி விரைந்து கொண்டிருந்தார். குடந்தைத் திருநகரில் கோயில் கொண்ட பெருமாள்; மல்லாண்ட திண்தோள் மணிவண்ணன், மல்லாக்கப் படுத்த கோலத்தில் காட்சியளிக்கிற தலம் அது. எத்தனை தொன்மையானது! எத்தனை ஆழ்வாரால் பாடப்பெற்ற தலம்!
காட்டுமன்னார்கோயிலில் இருந்து குடந்தைக்கு வருகிற வழியிலெல்லாம், அவருக்கு வேறு நினைவே இல்லை. 'சார்ங்கமெனும் வில்லாண்ட பெருமானை தரிசிக்கப் போகிறோம்' என்கிற நினைவே, அவருக்கு சகலத்தையும் மறக்கச் செய்துவிட்டது.
அவரால் பசி, தூக்கம் போன்ற உணர்வுகளை மட்டுமல்ல; ஐம்புலன்களை மட்டுமல்ல; அதற்கும் மேலே, சிந்தனைக் குதிரையையும் அடக்கி ஓரிடத்தில் நிறுத்தி வைக்க முடியும். தேவைப்பட்டால், அதை இல்லாமலேயே அடித்து வீழ்த்தவும் முடியும். அவர் ஒரு யோகி. மிகப் பெரிய யோகி. எட்டு அங்கங்கள் கொண்ட யோகக்கலையை முற்றிலும் பயின்றவர். அனைத்தினும் மேலாக, பக்தி யோகத்தில் தன்னைக் கரைத்தவர்!
பட்டு விரித்துக் காட்டும் சேலை வியாபாரியின் லாகவத்தில், இயற்கை விரித்திருந்த அகண்ட பெரும் காவிரிக் கரையோரம் அவர் நடந்து கொண்டிருந்தபோது, குடந்தையின் அழகு அவர் கண்ணில் படவில்லை.
சலசலத்து ஓடும் நதியின் கரையெங்கும் விரிந்த வயல்வெளிகளும், அவற்றுக்கு அரண் போலச் சூழ்ந்து நின்ற தென்னையும், வாழையும், யாரையும் ஒரு கணம் நின்று நோக்கச் செய்யும். ஆனால், அவர் நிற்கவில்லை. 'பெருமானே! பெருமானே!' என்று பரிதவித்து விரைந்து கொண்டிருந்தார்.
கோயிலை நெருங்கியபோது, அவரது நடை மேலும் வேகம் கொண்டது. பாய்ந்து சென்று பெருமானைத் தூக்கி விழுங்கி விடும் வேகம். அது, கண்ணின் பசி. எண்ணமெங்கும் வியாபித்திருப்பவனை ஏந்தியெடுத்து நெஞ்சுக்குள் சீராட்டும் பேரழகுப் பசி.
அவருக்கு, வாயாரக் கொஞ்ச வேண்டும்; நெக்குருகிப் பாட வேண்டும்; பக்திப் பரவசத்தில், தன்னைக் கற்பூரமாக்கிக் கரைத்துக் காணாமல் செய்துவிட வேண்டும். ஆனால், மொழி தோற்கடித்து விடுகிறது. 'பெருமானே! பெருமானே!' என்று கதறுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடிவதில்லை.
'ஆழ்வார்கள் பாடியிருக்கிறார்களாமே? அது மொத்தம் நாலாயிரமாமே? ஒவ்வொரு வரியிலும் உயிரைச் சேமித்து வைத்திருக்கிறார்களாமே? எல்லாம் சொல்லக் கேள்வி. 'ஒன்றும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. என்ன பிறப்போ, என்ன வாழ்க்கையோ!' எண்ணியபடி அவர் சன்னிதிக்குள் நுழைந்த போது, 'பொளேர்..' என, பிடறியில் யாரோ அடித்தாற் போல அப்படியே திகைத்து நின்று விட்டார். உள்ளே, யாரோ பாடிக் கொண்டிருந்தார்கள்.
'ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய
உருக்குகின்ற நெடுமாலே...'
ஆரா அமுதம்! ஐயோ, இந்த பெறற்கரிய பெருங்கருணையாளனை வேறெப்படி வருணிப்பது? இதைவிடப் பொருத்தமான ஒரு முதல்சொல் இருந்துவிட முடியுமா!
அப்படியே கண்மூடி நின்றார். அவர்கள் பாடிக்கொண்டே இருந்தார்கள். பத்துப் பாசுரங்கள் பாடி முடித்து, தீர்த்தப் பிரசாதம் வாங்கிக்கொண்டு வெளியே
வந்தவர்களை அவர் நெருங்கினார்.
'ஐயா இது என்ன? குருகூர்ச் சடகோபன் சொன்ன ஓராயிரத்தில் பத்து என்று முடித்தீர்களே; மிச்சம் தொள்ளாயிரத்தித் தொண்ணூறு பாசுரங்களும் உங்களுக்குத் தெரியுமா?'
'இது நம்மாழ்வாரின் திருவாய் மொழி. மொத்தம் ஆயிரத்துக்கும் சற்று மேலே என்கிறார்கள். எங்களுக்கு இந்தப் பத்துதான் தெரியும்.'
'என்றால், அனைத்தும் யாருக்குத் தெரியும்?'
'தெரியவில்லை ஐயா!'அவர் கண்களிலிருந்து கரகரவென நீர் வழிந்தது. அர்த்த ரூபமான ஆயிரம் பாடல்களில் வெறும் பத்து! அதுகூடத் தனக்கு இத்தனைக் காலம் தெரிந்திருக்கவில்லை. என்ன பிறப்பு இது!
அவர்களுக்கு, அந்த யோகியின் மனம் புரிந்து போனது. பக்தியின் மிகக் கனிந்த பேரானந்த நிலையில் இருப்பவர். பாசுரத்தின் அழகில் எப்படித் தன்னைக் கரைத்துக் கொண்டு விட்டார்!
'ஐயா, கவலைப்படாதீர்கள். நாதமுனி என்றொரு மகான் இந்த மண்ணில் பிறப்பார் என்றும், அவர் மூலம் ஆழ்வார்களின் அத்தனை பாசுரப் பாற்கடல்களும் இப்பூவுலகில் மீண்டும் பாயும் என்றும் எங்கள் முன்னோர்கள் எங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். அக்காலம் வரும்வரை நாம் பொறுத்து இருப்போம்! அது கிடைக்கும் போது அள்ளிப் பருகுவோம்' அவர் திகைத்து விட்டார்.
நாதமுனி! நானா.... நானே தானா?! என்னைத்தான் சொல்கிறார்களா! எனக்கா அந்தக் கொடுப்பினை! இவர்கள் சொல்வது நிஜமா?
அவரால் நம்ப முடியவில்லை. அடுத்தக் கணம், அவர் காவிரிக் கரையை விடுத்து, தாமிரவருணி பாயும் கரையை நோக்கிப் பாய்ந்து விட்டார். நம்மாழ்வார் அவதரித்த குருகூர்.
'ஐயனே, ஒரு பாசுரம் என்னை இங்கு இழுத்து வந்தது. காலத்தின் காற்றுப் பைகளில் பொதிந்திருக்கும் உமது பாசுரங்கள் முழுவதையும் புகட்டி அருள மாட்டீரா?' நம்மாழ்வார், பிறந்தது முதலே பேசாத ஞானி. பிற்பாடு அவரைத் தேடி மதுரகவி ஆழ்வார் குருகூருக்கு வந்தபோது, எண்ணி நாலு வார்த்தை பேசியவர். ஆனால், நான்கு வேதங்களின் பொருளையும், தமது நான்கு நூல்களின் சாரமாக்கித் தந்தவர்.
ஆண்டாண்டு காலமாக மோனத்தவமிருந்து, ஆனிப் பொன்னே போல் வந்து நின்ற நாதமுனியிடம், மானசீகத்தில் அவர் திருவாய் மலர்ந்தார்.
'எழுதிக்கொள் நாதமுனி! நான் புனைந்தவை மட்டுமல்லாது, பன்னிரு ஆழ்வார்களின் அத்தனைப் பாசுரங்களும் உன் மூலம் உலகை அடைய வேண்டும் என்பதே உன் பிறப்பின் சாரம்.' நெக்குருகிப் போன நாதமுனி, பரபரவென அவர் சொல்லச் சொல்ல எழுதத் தொடங்கினார். திருவாய் மொழியில் தொடங்கியது அது.
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த
நமனுக்கிங் கியாதொன்று மில்லை
கலியும் கெடும்கண்டு கொள்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்திசை பாடி யாடி யுழிதரக் கண்டோம்.
சொல்லிக்கொண்டே வந்தபோது, நாதமுனியின் கையில் ஒரு சிலை வந்து அமர்ந்தது!
'என்ன பார்க்கிறாய்? இது உன் காலத்துக்கு முன் பிறந்த ஒருவரின் சிலையல்ல; உன் காலத்தைச் சேர்ந்தவரின் சிலையுமல்ல; உனக்கு இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு வரவிருக்கிற ஒருவரின் சிலை. உன்மூலம் உயிர் பெறவிருக்கும் இப்பாசுரங்களை, உலகெல்லாம் ஒலிக்கச் செய்யப் போகிறவரின் சிலை.'
ராமானுஜரின் பெயர் அங்கு பேசப்படவில்லை. ஆனால், கலியின் வலிவைத் தகர்க்கப் போகிற பெரும் சக்தியாக பின்னாளில் அவர் உதிக்கவிருப்பதற்குக் கட்டியம் கூறிய சம்பவம் அது!
(தொடரும்...)என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
-
Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
துறக்கப் பிறந்தேன்! ( 2 )
'சரி, துறந்து விடலாம்' என்று ராமானுஜர் முடிவு செய்தார். ஊரே அதிர்ந்து நிற்கப் போகிறது. உறவு ஜனம் மொத்தமும் பழிக்கப் போகிறது. தஞ்சம்மா பிழிந்து பிழிந்து அழுவாள். அவளது பெற்றோர் வாய்விட்டுக் கதறுவார்கள். வயிறெரிந்து சபிப்பார்கள். அக்னி சாட்சியாக மணந்த ஒரு பெண்ணை, மனப்பூர்வமாக விட்டு விலகிச் செல்வது எப்பேர்ப்பட்ட பாவம் என்று சாஸ்திர உதாரணங்களுடன் கூடிக் கூடிப் பேசிக்கொள்வார்கள். எல்லாம் நடக்கும். எதையும் தவிர்க்க முடியாது.
'ஆனால் நான் இதனைச் செய்தே தீர வேண்டும் தாசரதி! இது, நான் எனக்கே இட்டுக் கொண்டிருக்கும் கட்டளை. அர்த்தமற்ற இல்லற வாழ்வில், எனது தினங்களை வீணடித்துக் கொண்டிருப்பது பெரும் பிழை. தஞ்சம்மாவுக்கு வாழ்க்கை புரியவில்லை.
மனிதர்களைப் புரியவில்லை. மனிதர் வாழ்வை மலரச் செய்வதற்காகவே பிறந்திருக்கும் மகான்களை, இனம் காணத் தெரியவில்லை. அவள் ஜாதி பார்க்கிறாள். 'குலத்தில் உயர்ந்தவனா; குடியில் உயர்ந்தவனா' என்று யோசிக்கிறாள். என்னால் தாங்க முடியவில்லை.'அவர் குமுறிக் கொண்டிருந்தார். தாசரதிக்குப் புரிந்தது. கூரத்தாழ்வானுக்குப் புரிந்தது. ஏனெனில், அவர்கள் வைணவம் புரிந்தவர்கள்.
ராமானுஜரின் நிழலைப் போல் உடன் செல்பவர்கள். வருணங்களை அவர் பொருட்படுத்துவதில்லை. வாழ்க்கைத் தரம் பார்ப்பதில்லை. 'நீ ஒரு பாகவதனா? உன்னைச் சேவித்து, உனக்குத் தொண்டாற்றுவதே என் முதற்பணி' என்று முடிவு செய்து வாழ்ந்து கொண்டிருப்பவர்!தஞ்சம்மாவின் பிரச்னை வேறு. பக்தராக இருந்தாலும், அவர் பிராமணரா என்று பார்க்கிறவள் அவள். பிழை அவள் மீதல்ல; வளர்ப்பு அப்படி; சூழல் அப்படி; காலம் அப்படி; குல வழக்கம் அப்படி!
அன்றைக்கு அது நடந்தது.'ஐயா, இன்று என் வீட்டுக்கு நீங்கள் சாப்பிட வர வேண்டும்.'காஞ்சிப் பேரருளாளப் பெருமாள் சன்னிதியில், விசிறி வீசும் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த திருக்கச்சி நம்பியிடம் ராமானுஜர் கேட்டார். அவர் மனதில், சில திட்டங்கள் இருந்தன. பிறப்பால் வைசியரான திருக்கச்சி நம்பி, தமது பக்தியால், பரமனுக்கு மிக நெருக்கத்தில் இருந்தவர். காஞ்சி அருளாளனுடன், தனியே மானசீகத்தில் உரையாடக் கூடியவர்.
அவர் பேசுவது பெரிதல்ல; அவன் பதில் சொல்லுவான்; அதுதான் பெரிது! இது ஊருக்கே தெரிந்த விஷயம். எத்தனையோ பேர் அவரிடம் வந்து, 'பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்கள்' என்று தமது சொந்தப் பிரச்னைகளை சொல்லி, தீர்வு கேட்டுப் போவார்கள். திருக்கச்சி நம்பியை குருவாகப் பெற்று, அவரிடம், 'பஞ்ச சம்ஸ்காரம்' செய்து கொள்ள வேண்டும் என்று ராமானுஜர் விரும்பினார். 'பஞ்ச சம்ஸ்காரம்' என்றால், ஐந்து அங்கங்கள் கொண்ட ஒரு சடங்கு.
அதனைச் செய்து கொண்டால்தான் வைணவ நெறிக்கு உட்பட்டு வாழத் தொடங்குவதாக அர்த்தம்.வலது தோளில் சக்கரமும், இடது தோளில் சங்கும் தரிப்பது முதலாவது. நெற்றி, வயிறு, மார்பு, கழுத்து, இரு தோள்கள், பின் கழுத்து, பின் இடுப்புப் பகுதிகளில், பெருமாளின் திருநாமங்களைச் சொல்லி, திருமண் தரிப்பது அடுத்தது. மூன்றாவது, பிறந்தபோது வைத்த பெயரை விடுத்து, தாஸ்ய நாமம் பெறுவது.
அடுத்தது மந்திரோபதேசம். இறுதியாக, திரு ஆராதனம் என்று சொல்லப்படுகிற யாக சம்ஸ்காரம்.எளிய சடங்குகள்தாம். ஆனால், குருமுகமாக இவற்றை ஏற்றுக் கடைபிடிப்பதே மரபு.'என்னை ஆட்கொள்வீர்களா? எனக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைப்பீர்களா?' என்று அவரிடம் கேட்க வேண்டும். அதற்காகத்தான் ராமானுஜர் திருக்கச்சி நம்பியை வீட்டுக்கு அழைத்தார்.
'அதற்கென்ன, வருகிறேன்' என்றார் திருக்கச்சி நம்பி.ராமானுஜர் பரபரப்பானார். 'ஆசார்யர் வருகிறார். அமுது தயாராகட்டும்' என்று மனைவியிடம் சொல்லிவிட்டு, இலை பறித்து வர தோட்டத்துக்குப் போனார். அவர் போய்த் திரும்பும் நேரத்துக்குள், நம்பி அவரது வீட்டுக்கு வந்துவிட்டது தான் விதி!
'வாருங்கள்' என்றாள் தஞ்சம்மா.'ராமானுஜன் என்னை அழைத்திருந்தார்.''தெரியும், உட்காருங்கள்.''அவர் வீட்டில் இல்லையா?''இப்போது வந்துவிடுவார். காத்திருக்கலாமா அல்லது...''எனக்குக் கோயிலில் வேலை இருக்கிறது. அதிகம் தாமதிக்க முடியாது.'எனவே அவர் சாப்பிட அமர்ந்தார். எனவே தஞ்சம்மா பரிமாறினாள். சில நிமிடங்களில், உண்டு முடித்துவிட்டு அவர் கிளம்பி விட்டார்.'நல்லது. அவர் வந்தால் சொல்லி விடுங்கள்.' - போய் விட்டார்.தஞ்சம்மா,
அவர் அமர்ந்து உண்ட இடத்தில் சாணமிட்டு எச்சில் பிரட்டினாள். அவருக்காகச் சமைத்த பாத்திரங்களை கிணற்றடிக்கு எடுத்துச் சென்று, கழுவிக் கவிழ்த்து வைத்தாள். தலைக்குக் குளித்து வீட்டுக்குள் வந்து மீண்டும் தமக்காக சமைக்கத் தொடங்கினாள்.அதிர்ந்து போனார் ராமானுஜர். எப்பேர்ப்பட்ட பாவம் இது!
அவர் மகானல்லவா! குருவல்லவா! அவர் அமர்ந்த இடத்தைத் துடைத்து, அவருக்காகச் சமைத்ததில் மீதம் வைக்காமல் கழுவிக் கவிழ்த்து, தலைக்குக் குளித்து...'வேறென்ன செய்வார்கள்? அவர் வைசியரல்லவா?' என்றாள் தஞ்சம்மா.நொறுங்கிப் போனார்.'தவறு தஞ்சம்மா! குலத்தில் என்ன இருக்கிறது? பிறப்பால் ஒருவருக்கு எந்த ஏற்றமும் கிடையாது. எப்படி வாழ்கிறார்கள் என்று பார்.
வாழ்க்கையை எத்தனை அர்த்தமுள்ளதாக்குகிறார்கள் என்று பார். அவர் பேரருளாளனுக்கு நெருங்கியவர். நாம் அவருக்கு நெருக்கமாகவாவது இருக்க வேண்டாமா?'அவள் மரபுக்கு நெருக்கமாக இருக்க மட்டுமே விரும்பினாள். சொல்லிக் கொடுத்த ஆசார ஒழுக்கங்களுக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க எண்ணினாள்.
மீண்டும் ஒரு சம்பவம். இம்முறை, ஓர் ஏழைத் தொழிலாளி.'பசிக்கிறது என்கிறான். வீட்டில் என்ன இருக்கிறது?' என்று உள்ளே வந்து கேட்டார் ராமானுஜர்.'உங்களுக்கு இதே வேலையாகப் போய்விட்டது. இங்கே கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை. இனி சமைத்தால்தான் உண்டு.''பழைய சாதம் இருக்கிறதா பார்.
அதுகூடப் போதும். பாவம், பசியில் கண்ணடைத்து நிற்கிறான்.''பழைய சாதமா? அதுவும் இல்லை' என்று சொல்லிவிட்டு தஞ்சம்மா போய்விட்டாள்.ராமானுஜருக்கு சந்தேகம். எதற்கும் தேடிப் பார்ப்போம் என்று சமையல் கட்டுக்குச் சென்று இருந்தவற்றைத் திறந்து பார்த்தார்.
நிறையவே இருந்தது.ஆக, பொய் சொல்லி இருக்கிறாள்! கடவுளே, பசிக்கு மருந்திடுவது அனைத்திலும் உயர்ந்த தருமம் அல்லவா! இதைக்கூடவா இவள் செய்ய மாட்டாள்?அப்போதே அவர் மனம் வெறுத்துப் போனார். உச்சமாக இன்னொரு சம்பவம் அடுத்தபடி நடந்தேறியது. அன்று முடிவு செய்ததுதான்.சரி, துறந்து விடலாம்.
தொடரும்...என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
நீரால் ஆனது!-3
ராமானுஜருக்கு, திருக்கச்சி நம்பியிடம் சீடனாகச் சேர வேண்டும் என்பது விருப்பம். கடவுளோடு பேசுகிற நம்பி, கைங்கர்யமே வாழ்க்கையாக இருக்கிற நம்பி, அவர் சாப்பிட வந்த போது தான், தஞ்சம்மா அபசாரம் செய்து விட்டாள்.
ஆனாலும், அவர் பெரியவர். சிறுமைகளால் சலனப்படுகிற மனிதரல்லர். தவிரவும், அவருக்கு ராமானுஜரைப் பற்றித் தெரியும். அவரது பண்பு தெரியும். பக்தி தெரியும். பணிவு தெரியும். தவறாக எடுக்க மாட்டார்.
ராமானுஜர், அவர் தாள்பணிந்து விருப்பத்தை சொன்னார். 'சுவாமி, என்னை தாங்கள் சீடனாக ஏற்க வேண்டும். எனக்கு, ‛பஞ்ச சமஸ்காரம்' செய்து வைக்க வேண்டும்.'
அவர் யோசித்தார். ‛நாளை வாருங்கள். பேரருளாளனிடம் கேட்டுச் சொல்கிறேன்.'
ஆனால், கடவுள் சித்தம் வேறாக இருந்தது. ‛ உம்மை திருவரங்கம் பெரிய நம்பியிடம் போகச் சொல்லி அருளாளன் உத்தரவு கொடுத்திருக்கறான்' என்றார் திருக்கச்சி நம்பி.
‛பெரிய நம்பியா! வைணவ குலத்தின் ஒப்பற்ற பெருந்தலைவரான ஆளவந்தாரின் சீடரா?'
‛ ஆம். அவரேதான்.'
மறுவினாடியே புறப்பட்டு விட்டார் ராமானுஜர். வீட்டுக்கு போகவில்லை. மனைவியிடம் சொல்லவில்லை. மாற்றுத் துணிகூட எடுத்துக் கொள்ளவில்லை. தனது குரு யாரென்று தெரிந்துவிட்டபிறகு, மற்ற அனைத்தும் அர்த்தமற்றதாகி விட்டது!
காஞ்சியில் கிளம்பி, அன்று மாலைக்குள் அவர் மதுராந்தகம் வரைநடந்து விட்டார்.
அது, தேடிப் போன தெய்வம் குறுக்கே வந்த தருணம். எதிரே வருவது யார்? பெரிய நம்பியா? அவரேதானா? கடவுளே!
‛இதை என்னால் நம்ப முடியவில்லை சுவாமி. என்னைத் தேடியா நீங்கள் இங்கு வந்து கொண்டிருக்கிறீர்கள்?'
‛ஆம். எதையும் நாம் தீர்மானிப்பதில்லை. அரங்கன் சித்தம். ஆசார்ய சித்தம்.'
ராமானுஜர் ஒரு கணம் கண்மூடி நின்றார். அவருக்கு அனைத்தும் புரிந்தது. வைணவ உலகின் நிகரற்ற பெரும் ஆசார்யராக விளங்கிய ஆளவந்தார் காலமாகி விட்டார். ‛அடுத்து ஆள வருவார் யார்?' என, வைணவ உலகமே எதிர்பார்த்து நின்ற வேளை. இதோ,‛அரங்க நகருக்கு வா' என்று பெரிய நம்பி வந்துநிற்கிறார்.
‛என்னை உங்கள் சீடனாக ஏற்றுக்கொண்டு, எனக்கு நீங்கள் பஞ்ச சமஸ்கரங்களைச் செய்து வைக்க வேண்டும். இது, பேரருளாளன் சித்தம் என்று திருக்கச்சி நம்பி சொன்னார்.'
‛அதற்கென்னா? இப்போதே காஞ்சிக்குப் போவோம். அருளாளன் சன்னதியில் நடக்கட்டும்.'
‛இல்லை சுவாமி. அந்த தாமதத்தைக் கூட என்னால் பொறுக்க இயலாது. இன்றே, இங்கே, இப்போதே.'
பெரிய நம்பி புன்னகை செய்தார். மதுராந்தகம், ஏரி காத்த ராமர் சன்னதியில் அது நடந்தது.
ராமானுஜரின் மனம், பக்திப் பரவசத்தில் விம்மிக் கொண்டிருந்தது. இந்த தருணத்துக்காக எத்தனை காலம் ஏங்கிக் கொண்டிருந்தேன்! எத்தனைப் பாடுகள்; எவ்வளவு இடர்கள்; எண்ணிப் பார்த்தாலே, கண்கள் நிறைந்து விடும்.
‛சுவாமி, என் இல்லத்தில் தங்கி, நீங்கள் எனக்கு சில காலம் பாடம் சொல்லித்தர வேண்டும்.'
‛அதற்கென்னா? செய்து விடலாமே?' என்றார். ஆசார்யர். தமது பத்தினியுடன் ராமானுஜரின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
வீட்டில் திருவாய் மொழிப் பாடம் ஆரம்பானது. வரி வரியாகச் சொல்லி, பொருள் விளக்கி ஆசார்யர்போதித்து கொண்டிருந்த நாட்கள். இனிதாகவே இறுதிவரை சென்றிருக்க வேண்டும். விதி யாரை விட்டது?
அன்றைக்கு, நஞ்சம்மாவும், குரு பத்தினி விஜயாவும் ஒன்றாக கிணற்றில் நீர் எடுத்து கொண்டிருந்தார்கள். குரு பத்தினியின் குடத்தில் இருந்து, சில சொட்டுநீர்த் துளிகள் நஞ்சம்மாவின் குடத்துக்குள் விழுந்து வைத்ததில் ஆரம்பித்தது பிரச்னை.
‛என்ன! நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்? ஆசாரம் தெரியாதா உங்களுக்கு? என் குடத்தில் உங்கள் குடத்து நீர்த்துளிகள் விழுந்துவிட்டன பாருங்கள்! ஜாதி வித்தியாசம் பாராமல்,யார் யாரையோ வீட்டுக்கு அழைத்து வந்து உட்கார வைத்தால் இப்படித் தான் அபத்தமாகும்'வெடித்துக் குமறி விட்டாள் நஞ்சம்மா.
அழுக்கு முதல் பாவம் வரை, அனைத்தையும் கரைக்கிற நீர்; அது நிறமற்றது; மணமற்றது; அனாதியானது; அள்ளி எடுக்கும் போது மட்டும் எனது, உனது! என்ன விசித்திரம்!
‛ நாம் இதற்கு மேலும் இங்கே இருக்கத் தான் வேண்டுமா?' விஜயா தனது கணவரிடம் கேட்ட போது, பெரிய நம்பி யோசித்தார். சம்பவம் நடந்த போது ராமானுஜர் வீட்டில் இல்லை. நடந்திருப்பது குரு அபசாரம். சர்வ நிச்சயமாக ராமானுஜரால் இதனைத் தாங்கிக் கொள்ள முடியாது.
‛நாம் கிளம்பி சென்றுவிட்டால், நஞ்சம்மா இந்த சம்பவத்தை அவரிடம் சொல்லாமலே இருந்து விடுவாள். அவர்களுக்குள் பிரச்னை வராது' என்றார். அவரது மனைவி.
‛ஆம் , நீ சொல்வது சரி.' கிளம்பிவிட்டார்கள்.
வீட்டுக்கு ராமானுஜர் வந்த போது, குருவும் இல்லை; குரு பத்தினியும் இல்லை.
‛நஞ்சம்மா... நம்பிகள் எங்கே சென்று விட்டார்?'
அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
சொற்கள் கைவிட்ட தருணம். ஒருமாதிரி தன்னை திடப்படுத்திக் கொண்டு, ‛நாம் என்ன ஜாதி; அவர்கள் என்ன ஜாதி? கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா? கிணற்றிலிருந்து நீர் இறைக்கக்கூடத் தெரியவில்லை உங்கள் குரு பத்தினிக்கு.‛ நடந்த சம்பவம், அவளது விவரிப்பில் மீண்டும் நிகழ்ந்தது. நொறுங்கிப் போனார் ராமானுஜர்.
‛உன்னைத் திருத்திவிட முடியும் என்று நினைத்தேன். ஆனால், தேடிவந்த ஞானக்கடலைத் திருப்பி அனுப்பி இருக்கிறாய். இந்த பாவத்தில் என் பங்கைக் களைய, நான் எத்தனை பிறப்பு எடுத்துப் பிராயச் சித்தம் செய்தாலும் போதாது.'
அந்த விரக்தி தான் அவரைத் துறவு நோக்கித் திருப்பியது. அந்தக் கோபம் தான் அவரை வீட்டை விட்டு வெளியே போக வைத்தது. இந்த இயலாமை தந்த அவமான உணர்வுதான், அவரை வீறுகொண்ட இரும்பு மனிதராக்கியது.
விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தார். பேரருளாளப் பெருமாள் சன்னதியில், திருக்கச்சி நம்பி கைங்கர்யத்தில் இருந்தார். இழுத்து நிறுத்தி, தடாலென்று காலில் விழுந்தார்.
‛சுவாமி, எனக்கு சன்னியாச ஆசிரமத்தை வழங்கி அருளுங்கள். ‛அது நடந்தேறி விட்டது.
அத்தி வரதர் உறங்கும் அனந்த புஷ்கரணியில் அவர் குளித்தெழுந்தார். தூய காவியுடை தரித்து முக்கோல் பிடித்தார். ‛ துறந்தேன், துறந்தேன், துறந்தேன்' என்று மூன்று முறை சொல்லி முற்றிலும் வேறொருவராக மாறிப்போனார்.
தொடரும்.............என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
நெஞ்சில் நிறைந்தவன்! - 4
நான் உங்களை இனி மாமா என்று அழைக்க முடியாதல்லவா? பேரருளாளனே உங்களை யதிராஜன் (துறவிகளின் அரசன்) என்று சொல்லி விட்டான்!'
தாசரதி தயங்கி தயங்கித்தான் பேசினான். ராமானுஜர் புன்னகை செய்தார். வாய் திறந்து அவர் சொல்லவில்லை. 'துறந்தேன், துறந்தேன், துறந்தேன்' என்று மும்முறை சொல்லி மூழ்கி எழுந்த போது 'முதலியாண்டானைத் தவிர' என்று அவர்தம் மனதிற்குள் சொல்லிக் கொண்டதை நினைத்துப் பார்த்தார்.
வைணவத்தை வாழ்க்கையாக ஏற்றதில் தாசரதி ராமானுஜருக்கு முன்னோடி, தமக்கையின் மகன். சிறுவயதில் இருந்தே ராமானுஜரின் நிழலாகத் தொடர்ந்து வருகிறவன். அவரது ஞானத்தின் ஜீவப் பிரவாகம் பெருக்கெடுக்கும் போதெல்லாம் முந்தி வந்து முக்குளித்தவன்.
'முதலியாண்டான்! உறவென்பது நமக்கு இனி அவன் ஒருவனோடு மட்டுமே. ஆனால், அவன் உலகம் உண்ட பெருவாயனாக இருக்கும்போது உறவில்லை என்று யாரைச் சொல்ல முடியும்?'
தாசரதியிடம் மேலும் சில் வினாக்கள் இருந்தன. அவற்றுள் முதன்மையானது, துறவு ஏற்ற மறுகணம் ராமானுஜர் யாரை நினைத்தார் என்பது தன்னையா? தன்னைக் காட்டிலும் உயர்ந்த பாகவதோத்தமரான கூரத்தாழ்வானையா? அல்லது இன்னொரு தமக்கையின் மகனான வரத தேசிகனையா?
மூவருமே ராமானுஜர் துறவு கொண்டதும் முதன்முதலில் வந்து சீடர்களானவர்கள். அவரது உயிர்மூச்சு போல் உடனிருப்பவர்கள். இரவும் பகலும் அவர்களுக்கு யதிராஜரைத் தவிர வேறு நினைவே கிடையாது. அவருக்குச் சேவை செய்வதைக் காட்டிலும் வேறு திருப்பணி கிடையாது. ராமானுஜர் துறவுக் கோலம் கொள்வதற்கு முன்பிருந்தே அப்படித்தான்! அது ஞானத்தின் காந்த வடிவம். ஈர்க்கும் வல்லமை இயல்பிலேயே உண்டு.
'தயவு செய்து சொல்லுஙண்கள். ஒருவேளை வேறு யாரையாவது நினைத்தீர்களோ?'
தனது மானசீகத்தில் என்றோ குருவாக வரித்துவிட்ட ஆளவந்தாரையே கூட ராமானுஜர் எண்ணியிருக்கலாம். எப்பேர்ப்பட்ட தருணம்! எத்தனை பேருக்கு இதெல்லாம் வாய்க்கும்!
'சொல்லி விடுங்கள். நீங்கள் யாரை நினைத்தீர்கள்?'
மீண்டும் புன்னகை. அர்த்தம் பொதிந்த பேரமைதி. சொல்லலாமா? முதலியாண்டான் கேட்கிறான். என்னிடம் இருக்கிற பதில் அவனை எவ்விதமாக பாதிக்கும்? அவர் கண்மூடி, தன் நினைவில் மூழ்கத் தொடங்கினார்.
கண்ணுக்குள் மிதந்து வந்தது கோவிந்தனின் உருவம். கோவிந்த பட்டராகக் காளஹஸ்தியில் சிவஸ்மரணையில் கிடக்கிற பூர்வாசிரமத்துத் தம்பி. சித்தி மகன். ஒரு கணம் ராமானுஜருக்கு சிலிர்த்து விட்டது. கோவிந்தன் இல்லாவிட்டால் அவர் கிடையாது. பதினெட்டு வயதிலேயே கங்கையில் போயிருக்கக்கூடும்.
'ராமானுஜா, எழுந்திரு. உடனே என்னோடு வா. இவர்கள் உன்னை கொல்லத் திட்டம் தீட்டி இருக்கிறார்கள்.'
அசரீரி போல் உட்செவியில் மீண்டும் ஒலிக்கிற அதே குரல்.
கோவிந்தனைக் கடைசியாகப் பார்த்தது அன்றைக்குத்தான். குருவும் சீடர்களுமாகப் புனித யாத்திரை போய்க் கொண்டிருந்த தினங்களில் ஒரு நள்ளிரவுப் பொழுது. தன்னை எழுப்பி, தப்பிக்க வைத்து திரும்பிச் சென்ற கோவிந்தன், அதன்பிறகு திரும்பவேயில்லை. ஒரு செய்தி மட்டும் வந்தது.
'ராமானுஜா! உன் சித்தி மகன் கங்கையில் குளிக்கிறபோது அவனுக்கு ஒரு சிவலிங்கம் கிடைத்ததாம். திரும்பி வருகிற வழியில் காளஹஸ்தியில் பெருமானைச் சேவித்து, அங்கேயே கைங்கர்யம் செய்யத் தீர்மானித்து இருந்து விட்டான்!'
இது எப்படி, எப்படி எனறு ராமானுஜருக்கு ஆறவேயில்லை. தன்னினும் உயர்ந்த வைணவசீலராக கோவிந்தன் வரக்கூடுமென்று அவர் நினைத்திருந்தார். சட்டென்று எங்கோ தடம் மாறிவிட்டது.
எத்தனை முறை பேசியிருப்பேன்; எத்தனை விவாதித்திருப்போம். அத்வைதமும் அதன் ஏற்கவியலாத எல்லைப்பாடுகளும்.
யாதவப் பிரகாசரிடம் ராமானுஜர் பாடம் படிக்கச் சென்றபோது கோவிந்தனும் அதே பள்ளியில் வந்து சேர்ந்தவன்தான். காஞ்சியில் யாதவரைக் காட்டிலும் சித்தாந்தங்களில் கரை கண்டவர் யாருமில்லை என்று ஊரே சொல்லிக் கொண்டிருந்தது.
என்னவோ, ராமானுஜருக்கு மட்டும் ஆசாரியருடன் ஆரம்பத்தில் இருந்தே ஒத்துப் போகவில்லை. கோவிந்தனுக்கு அது தெளிவாகப் புரிந்தது. இவன் வேறு. இவன் சிந்தனை வேறு. இவனது வார்ப்பு வேறு. ஒரு சுயம்புவை ஆராய்ந்து அறிவது கடினம்!
அன்றைக்கு சாந்தோக்ய உபநிடதப் படம் நடந்து கொண்டிருந்தது. யாதவப் பிரகாசர் வரி வரியாக சொல்லி பொருள் விளக்கிக் கொண்டிருந்தார். கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ராமானுஜருக்கு, சட்டென்று ஓரிடத்தல் ஆசிரியர் விளக்கிய பொருள் திடுக்கிட வைத்தது.
கப்யாஸம் புண்டரீகம் ஏவ மக்ஷிணி.
'கப்யாஸம் என்றால் குரங்கின் பின்புறம்' என்றார் யாதவப் பிரகாசர். அவர் படித்தது அதுதான். பிழை அவர் மீதல்ல. வழி வழியாகச் சொல்லித் தரப்பட்ட அர்த்தம். 'ஆனால் குருவே, இது அனர்த்தமாக அல்லாவா உள்ளது' 'கப்யாஸம் என்பதை கபி ஆஸம் என்று ஏன் பிரிக்கிறீர்கள்? அதை கம் - பிப்தி - இதி - ஆஸ:' என்று பிரித்துப் பாருங்கள். சுடர்மிகு சூரிய மண்டலத்தில் உறையும் பரம்பொருளின் நயனங்களுக்கு உவமை சொல்லும் விதமாக இது புதுப்பிறப்பு எடுக்கும்! கதிரவனைக் கண்டு தாமரை மலர்வது போல விரிந்தவை பரமனின் கண்கள் என்கிறது இந்தப் பதம்.
யாதவர் திடுக்கிட்டுப் போனார். 'இங்கே நான் குருவா; நீ குருவா?' என்று கேட்டார்.
மீண்டும் வேறொரு நாள், இப்போது தைத்திரிய உபநிடதம்.
'சத்யம் ஞானம் அனந்தம் பிரம்ம' என்றார் யதவர். சத்தியம், ஞானம் உளளிட்ட அனைத்தும் பிரம்மத்தை மட்டுமே பொருளாகக் கொண்டவை என்பது அவரது விளக்கம்.
'இல்லை ஐயா. அவை பிரம்மத்தின் பொருளாக இருக்க இயலாது. அவை பிரம்மத்தின் பல்வேறு குணங்கள்'
'எப்படிச் சொல்கிறாய்?'
'ஒரு பூ வௌ்ளை வெளேரென்று இருக்கலாம். கமகமவென்று மணப்பதாக இருக்கலாம்.பார்த்தாலே பரவசமூட்டும் பேரழகு உடையதாக இரு்கலாம். ஆனால் மணம் மட்டும் பூவல்ல. நிறம் மட்டும் பூவல்ல. அழகு மட்டும் பூவல்ல. பன்மைத் தன்மை பூவின் இயல்பு. ஆனால், பூ ஒன்றுதான். அதே மாதிரிதான் இதுவும். சத்யம், ஞானம் எல்லாம் பிரம்மத்தின் பண்புகள். ஆனால், பிரம்மம் ஒன்றுதான். அதுதான் மூலம். அதுதான் எல்லாம்'
அன்றைக்கே யாதவப் பிரகாசருக்கு ராமானுஜரைப் பிடிக்கமல் போய் விட்டது. ஒன்று இவன் இருக்க வேண்டும்.அல்லது நான் இருக்க வேண்டும்.
'ஐயோ... எங்களுக்கு நீங்கள் வேண்டும் குருவே, நாம் அவனைக் களைந்து விடலாம்' என்றார்கள் மாணவர்கள்.
'அதுதான் சரி' என்று யாதவர் முடிவெடுத்த சமயத்தில் ராமானுஜரின் தந்தை இறந்து போனார்.
தொடரும்.....என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
கரையாத பாவம் - 5
ஜடாயுவுக்கு ராமர் இறுதிச்சடங்கு செய்து மோட்சம் கொடுத்த தலம் அது. திருப்புட்குழி என்று பேர். அங்கு அருளும் விஜயராகவப் பெருமாளின் பேரழகைச் சொல்லி முடியாது. வலது தொடையில் ஜடாயுவையும், இடது தொடையில் மரகதவல்லித் தாயாரையும் ஏந்தியிருக்கும் எம்பெருமான் அவர்! பாடசாலை முடிந்த பிறகு தினமும் கோயிலுக்குப் போய் சேவித்துவிட்டு வரலாம் என்கிற எண்ணமே, ராமானுஜருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது.
ஆனால், திருப்புட்குழி யாதவப் பிரகாசர் விஜயராகவப் பெருமாளை சேவிக்கிற வழக்கம் கொண்டவரல்லர். அவர் அத்வைதி. சிவனை தவிர அவருக்கு வேறு தெய்வமில்லை.ஊர்க்காரர்களுக்கு அவரைத் தெரியும். பெரிய ஞானஸ்தன். வேதம் படித்த விற்பன்னர். பிராந்தியத்தில், அவரளவு வேதத்தில் கரை கண்டவர்கள் யாரும் கிடையாது. பயம் அளிக்கிற மரியாதை என்பது, ஒரு விலகல் தன்மையை உடன் அழைத்து வரும். யாதவர் விலகி இருந்தார். கனிவில் இருந்து. சிநேகங்களில் இருந்து. சக மனித உறவுகளில் இருந்து.நினைவு தெரிந்த தினம் முதல் தனது தந்தை கேசவ சோமயாஜியிடமே பாடம் படித்து வந்தவர் ராமானுஜர்.
அவரை, யாதவப் பிரகாசரிடம் அழைத்துக் கொண்டு போனார் சோமயாஜி.'சுவாமி, வேதங்களில் நான் கற்ற மிகச்சொற்பப் பாடங்களை இவனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அகக்கண் திறந்துவிடும் அளவுக்கல்ல. அதை நீங்கள்தான் செய்ய முடியும்.'இளையாழ்வாரை நிமிர்ந்து பார்த்தார் யாதவப் பிரகாசர். தகிக்கும் வெய்யோனின் கன்னத்தில் துளி கிள்ளி எடுத்து வந்து வைத்தாற் போன்ற அவரது கண்களின் சுடர், அவரது வேறெந்த மாணவர்களிட மும் இல்லாதது.
தவிரவும், அந்தச் சுடரின் மீது கவிந்து நின்ற விலை மதிப்பற்ற சாந்தம், ஞானத்தின் பூரணத்தை அடைந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமான அபூர்வம். இந்தப் பையனுக்கு எப்படி இது? அவருக்குப் புரியவில்லை.உமது மகனுக்கு விவாகம் ஆகிவிட்டதா?''ஆம் சுவாமி. சமீபத்தில்தான்.' 'சொந்த ஊர் காஞ்சிதானா?' 'இல்லை. திருப்பெரும்புதுார். பிள்ளை வரம் கேட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை வேண்டி, யாகம் செய்து பிறந்தவன் இவன்.
பிறப்பின் பொருள் படிப்பில் அல்லவா உள்ளது? அதனால்தான் தங்களைத் தேடி வந்திருக்கிறேன்.' 'நல்லது. விட்டுச் செல்லுங்கள்.' அது தமிழகத்தில் சோழர்களின் கொடி பறந்து கொண்டிருந்த காலம். மாமன்னன் ராஜேந்திர சோழனும், அவனது மகன் இளவரசர் ராஜாதிராஜ சோழனும் மாநிலத்தின் இண்டு இடுக்கு விடாமல் தமது அதிகாரத்தை நிலைநிறுத்தி ஆட்சி புரிந்து கொண்டிருந்த சமயம். தஞ்சைக்கு அருகே கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக இருந்தது.
வடக்கே ஆந்திரம் வரை நீண்டிருந்தது நாட்டின் எல்லை. மைசூர் முதல் ஈழம் வரை வென்றெடுத்த பிராந்தியங்கள் யாவும் குறுநிலங்களாக அறியப்பட்டன. நிலத்துக்கொரு பிரதிநிதி. நீடித்த நல்லாட்சி. ஆனால், சைவம் தவிர இன்னொரு மதத்துக்குப் பெரிய இடம் கிடையாது. கோயிலற்ற ஊரில்லை, சிவனற்ற கோயிலில்லை.
யாதவப் பிரகாசர் போன்ற மகாபண்டிதர்களுக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது. அரசு மானியங்கள் இருந்தன. மாலை மரியாதைகள் இருந்தன. வீதியில் தமது சீடர் குழாத்துடன் நடந்து போனால், மக்கள் தாள் பணிந்து ஒதுங்கி நிற்பார்கள். அது கல்விக்கான மரியாதை.
ஞானத்துக்கான மரியாதை.ஆசூரி கேசவ சோமயாஜிக்கு, தனது மகன் ஒரு சரியான குரு குலத்தில் சேர்ந்துவிட்ட திருப்தி. திருமணத்தை முடித்து விட்டார். காலக்கிரமத்தில் வேதப்பாடங்களையும் நல்லபடியாகக் கற்றுத் தேறி விடுவான். இதற்குமேல் என்ன? தள்ளாத உடலத்தைத் தள்ளிக்கொண்டு போக சிரமமாக இருக்கிறது. நான் விடைபெற்றுக் கொள்கிறேன் என்று ஒருநாள் அமரராகிப் போனார். கடைசிவரை அவருக்குத் தெரியாது.
பாடசாலைக்குப் போக ஆரம்பித்த சிறிது காலத்திலேயே, ராமானுஜருக்கும் யாதவருக்கும் முட்டிக்கொண்ட சங்கதி. வியாதியின் படுக்கையில் கிடந்தவர் காதுகளுக்கு ராமானுஜர் இதை எடுத்துச் செல்லவில்லை. மனத்துக்குள் ஓர் இறுக்கம் இருந்தது. குருவுக்கும் தனக்கும் சரிப்பட்டு வராமல் போய்க்கொண்டிருக்கிற வருத்தம். பாடசாலையில் மற்ற மாணவர்கள் அப்படியில்லை.
சொல்லிக்கொடுப்பதை அப்படியே ஏந்திக்கொண்டு விடுகிறவர்களாக இருந்தார்கள். தனக்கு மட்டும் ஏன் வினாக்கள் எழுகின்றன? தனக்கு மட்டும் ஏன் வேறு பொருள் தோன்றுகிறது? மனத்தில் உதிப்பதைச் சொல்லாமலும் இருக்க முடிவதில்லை. ஆசிரியர் போதிக்கிற எதுவும் எளிய விஷயங்களல்ல. வேதத்தின் ஒவ்வொரு பதமும், ஒரு தீக்கங்கைத் தன்னகத்தே ஏந்தியிருப்பது. உரித்தெடுத்து உள்வாங்குவது எளிதல்ல.அது பிரம்மம் உணரச் செய்கிற பாதை. பிழைபடுவது தவறல்லவா?
தந்தையின் மறைவுக்குப் பிறகு, சிறிதுகாலம் ராமானுஜர் பாடசாலைக்குப் போகாமல் இருந்தார். போய் என்ன செய்வது? தினமும் விவாதம், தினமும் தர்க்கம். ஆசிரியரின் மனக்கசப்புக்கு இலக்காவது. ஆனாலும், பிழைபட்ட பொருள்களை அவர் தீவிரம் குறையாமல் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறாரே என்கிற ஏக்கம். 'ஆனால், அவன் வகுப்புக்கு வராததை நாம் நிம்மதி என்று எடுத்துக்கொண்டு விட முடியாது குருவே. பயல் வெளியே போய் அத்வைத துவேஷம் வளர்ப்பான்.
வேதங்களுக்கு நீங்கள் எடுத்துச் சொல்லும் அரும்பொருளையெல்லாம் நிராகரித்து, தன் இஷ்டத்துக்கு வேறு அர்த்தம் சொல்லுவான். அதையும் தலையாட்டி ஏற்க ஒரு கூட்டம் தயாராக இருக்கும்.' - யாதவரின் சீடர்கள் ஓய்வுப் பொழுதில் ஓதி விட்டார்கள். யாதவருக்கே அந்தக் கவலை இருந்தது. தனது கருத்துகளை மறுத்துச் சொல்லும் ராமானுஜருடன் ஒருநாளும் அவரல் எதிர்வாதம் புரிய முடிந்ததில்லை. 'வாயை மூடு' என்று அடக்கிவிடத்தான் முடிந்தது.
இயலாமைக்குப்பிறந்த வெற்றுக் கோபம்.அந்த அடக்குமுறை பிடிக்காத படியால் மாணவன் விலகிப் போயிருக்கிறான். ஆனால், அப்படியே விட்டுவிடவும் முடியவில்லை! அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது.
அவன் சாதாரணமான மாணவன் அல்ல. பிராந்தியத்தில் தனது புகழை அழித்துத் தனியொரு தேஜஸுடன் தனியொரு ஞான சமஸ்தானம் நிறுவும் வல்லமை கொண்டவன்.
அத்வைத சித்தாந்தத்தின் அடிப்படைகளையே அசைத்து ஆட்டம் காணச் செய்துவிடக் கூடியவன். 'அவன் எதற்கு இருக்கவேண்டும்?' என்றார்கள் அவரது அருமைச் சீடர்கள். யாதவப் பிரகாசர் யோசித்தார்; மிகத் தீவிரமாக. 'சரி, அவனை சமாதானப்படுத்தி திரும்ப அழைத்து வாருங்கள். நாம் அவனையும் அழைத்துக்கொண்டு காசிக்கு யாத்திரை செல்வோம்.
' 'ஐயா காசிக்கு எதற்கு இப்போது?' அவர் சில வினாடிகள் கண்மூடி அமைதியாக இருந்தார். கொலைஉள்ளம் என்றாலும் குரு முகம் அல்லவா? எப்படிப் புரிய வைப்பது? மிகக் கவனமாகச் சொற்களைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டார். 'கங்கை பாவங்களைக் கரைக்கவல்லது. மூழ்கி இறந்தோருக்கு மோட்சம் தரவல்லது.'
தொடரும்...என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
சதி யாத்திரை - 6
'இதோ பார், உனக்குத் தெரியாதது இல்லை. நமது குருவுக்கு வயதாகிவிட்டது. அவரால் மாற்றுக் கருத்துகளோடு மல்லுக்கட்ட முடியாது. அதேசமயம், நீ கோபித்துக்கொண்டு வகுப்புக்கு வராதிருந்தால் நஷ்டம் உனக்குத்தான். இவரளவுக்கு வேதமறிந்தவர்கள் இங்கு வேறு யாருமில்லை என்பதை எண்ணிப் பார்.'
ராமானுஜர் யோசித்தார். அவர்கள் சொல்வது சரிதான். ஆனால், கசப்பின் திரையை இடையே படரவிட்டுக் கொண்டு கல்வியை எப்படித் தொடர முடியும்?'அட என்னப்பா நீ! உன்னைக் கோபித்துக் கொண்டதில் அவருக்கே மிகுந்த வருத்தம். வெளியே காட்டிக் கொள்ள அகங்காரம் தடுக்கிறது. ஆனால் நீ பாடசாலைக்கு வருவதை நிறுத்திய பிறகு மனிதர் தவியாய்த் தவிக்கிறார்.
எப்போது வேண்டுமானாலும் அழுதுவிடுவார் போலிருக்கிறது.''ஐயோ...' என்று பதறி எழுந்தார் ராமானுஜர். தன்னால் ஏற்க இயலாத கருத்துகளைச் சொல்லித் தருகிறவர்தான். என்றாலும், அவர் குரு. அவரது நம்பிக்கைகள் அவருக்கு. அல்லது அவரை நம்புகிறவர்களுக்கு. தன்னால் அவரை முற்றிலும் ஏற்க முடியாது போனாலும், முற்றிலும் நிராகரிக்கவும் முடியாது என்று ராமானுஜர் நினைத்தார்.
குரு என்பவர் தெய்வத்துக்கு மேலே.'அதைத்தான் சொல்கிறோம். அவர் சொல்வதைச் சொல்லட்டும். நீ ஏற்பதை ஏற்றுக்கொள். ஏற்க முடியாதவற்றுக்கு இருக்கவே இருக்கிறது உன் சுயபுத்தி. அது கொடுக்கிற அர்த்தங்கள். கிளம்பு முதலில்.' என்றார்கள்.
ராமானுஜர் மீண்டும் வகுப்புக்குப் போன போது, யாதவப் பிரகாசர் அவரைக் கட்டித்தழுவி வரவேற்றார். 'நீ இல்லாமல் இந்த வகுப்பே நிறைவாக இல்லை' என்று சொன்னார். ராமானுஜரைப் பொறுத்தவரை அது பகையல்ல. அபிப்பிராய பேதம் மட்டுமே. குருவுடன் வாதம் செய்து வீழ்த்துவதில் அவருக்குச் சற்றும் விருப்பம் இருக்கவில்லை. அதை ஒரு துரதிருஷ்டமாகவே கருதினார்.
எனவே மீண்டும் குரு தன்னை அரவணைக்க முன்வந்தபோது அவருக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.மீண்டும் வகுப்புகள் தொடங்கின. சிலநாள்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் அமைதியாகவே போனது. யாதவர் மெதுவாக ஆரம்பித்தார்.
'நாம் காசிக்கு யாத்திரை போனால் என்ன?''ஓ... போகலாமே' என்றார்கள் மாணவர்கள். பாவம் கரைக்கிற காசி. முனிவர்கள் வாழ்கிற காசி. முக்தியளிக்கிற காசி.'ராமானுஜா! நீ அவசியம் வரவேண்டும்.
இந்த யாத்திரை சிறப்படைவதே உன்னிடத்தில்தான் உள்ளது.''தங்கள் சித்தம்' என்றார் ராமானுஜர்.வீட்டுக்குப் போய் அம்மாவிடம் சொன்னார். மனைவி தஞ்சம்மாவிடம் சொன்னார். 'குருகுலத்தில் அனைவரும் காசி யாத்திரை போக முடிவாகியிருக்கிறது.''காசி யாத்திரையா? அது வெகுநாள் பிடிக்குமே?' என்றாள் தஞ்சம்மா. 'ஆம் தஞ்சம்மா.
ஆனால், இது ஓர் அனுபவம். எல்லோருக்கும் எளிதில் கிடைத்துவிடாத அனுபவம். நான் தனியாகப் போகப் போவதில்லை. என் குருநாதரும், உடன் படிக்கும் மாணவர்களும் எப்போதும் பக்கத்தில் இருப்பார்கள். என்னைப் பற்றிக் கவலை வேண்டாம்.'அவள் தன்னைப் பற்றித்தான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள் என்பதை அப்போது ராமானுஜர் எண்ணிப் பார்க்கவில்லை.
அவரது சிந்தனை முற்றிலும் யாத்திரையில் இருந்தது. அது தரப்போகிற பரவசப் பேரனுபவத்தில் இருந்தது. 'கோவிந்தன் வருகிறானோ?' என்றார் தாயார் காந்திமதி. ராமானுஜர் பயின்ற அதே பாடசாலையில்தான் அவரது தமக்கை மகன் கோவிந்தனும் படித்துக் கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் இருந்தால், ராமானுஜனை பத்திரமாகப் பார்த்துக் கொள்வான்.
பொறுப்பறிந்தவன் என்பது தவிர, அண்ணன் மீது அவனுக்கு அளவற்ற பாசமும் உண்டு.'அத்தனை பேரும் கிளம்புகிறோம் அம்மா. இது குருவின் விருப்பம். முடியாது என்று சொல்ல நாங்கள் யார்?'கிளம்பி விட்டார்கள். வேத மந்திரங்களைச் சொல்லிக்கொண்டே நடக்கத் தொடங்கினார்கள். அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் கிளம்பி, உச்சி வேளை வரை நடைப் பயணம்.
அதன்பிறகு உணவும் ஓய்வும். மீண்டும் மாலை கிளம்பி இருட்டும் வரை நடப்பது. எங்காவது சத்திரங்களில் படுத்துத் துாங்கி, மீண்டும் காலை நடை. ஆங்காங்கே, குரு வகுப்பு எடுப்பார். அந்தந்தப் பிராந்தியங்களில் வசிக்கும் மக்களோடு உரையாடு வார்கள். எதிர்ப்படும் கோயில்களில் வழிபாடு. நாள்கள் வாரங்களாகி, மாதங்களைத் தொட்டபோது அவர்கள் விந்திய மலைப் பிராந்தியத்தை அடைந்திருந்தார்கள்.
மத்தியப் பிரதேசத்து நிலப்பகுதி. இந்தியாவை வட, தென் பிராந்தியங்களாகப் பிரிக்கிற மலைத்தொடர். நடந்து போகிறவர்களுக்கு அதுதான் பாதை. விந்திய மலையைத் தொட்டு, அதன் வழியாகவே உத்தர பிரதேசத்தில் கங்கை பாயும் வாரணாசியை அடைகிற வழி.இருட்டிய பொழுதில், அவர்கள் மலைக்காட்டில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து படுக்க ஒதுங்கினார்கள். நடந்த களைப்பில், ராமானுஜர் படுத்தவுடன் உறங்கிவிட்டார்.
ஆனால், கோவிந்தன் உறங்கவில்லை. அவனுக்குச் சில குழப்பங்களும், பல சந்தேகங்களும் இருந்தன. வழி முழுதும் மாணவர்கள் தமக்குள் ரகசியம் பேசியபடியே வந்ததை அவன் கவனித்திருந்தான். அவன் கவனிப்பது தெரிந்தால், சட்டென்று அவர்கள் பேச்சை நிறுத்தி விடுவார்கள். அதேபோல, யாதவருக்கு நெருக்கமான சில மாணவர்கள் அவருடன் தனியே சில சமயம் உரையாடிக் கொண்டிருந்ததை அவன் கவனித்தான்.
வேதபாடம் தொடர்பான உரையாடலாக இருக்குமோ என்று அவன் பக்கத்தில் போனால், அடுத்தக்கணம் அவர்கள் எழுந்து போய்விடுவார்கள்.ஒரு சிலருடன் மட்டும் குரு தனியே பேச வேண்டிய அவசியமென்ன? தான் நெருங்கும் போதெல்லாம் பேச்சு துண்டிக்கப்படுவதன் காரணம் என்ன? அவனது குழப்பத்தின் அடிப்படை அதுதான்.
அதனாலேயே, இரவு நெடுநேரம் துாங்காமல் வெறுமனே கண்மூடிப் படுத்திருப்பதை வழக்கமாக்கிக் கொண்டான். மனிதர்களின் உறக்கத்தை மாய இறப்பாகவே கருதி விடுகிற சக மனிதர்கள். தன்னிலை மறந்து ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள, இரவுப் பொழுதுகளையே அவர்கள் பெரிதும் நம்புகிறார்கள். கோவிந்தன் நினைத்தது பிழையல்ல. அன்று அது நடந்தது. 'நாம் எப்போது கங்கைக் கரையை அடைவோம்?' 'இன்னும் இருபது நாள்கள் ஆக லாம் என்று குருநாதர் சொன்னார்.' 'அதற்குமேல் தாங்காது.
சென்ற டைந்த மறுநாளே ராமானுஜன் கதையை முடித்துவிட வேண்டும்.' கோவிந்தனுக்குத் துாக்கி வாரிப் போட்டு விட்டது. அவர்கள் உறங்கும் வரை காத்திருந்தான். பிறகு பாய்ந்து சென்று ராமானுஜரைத் தட்டி எழுப்பினான். 'அண்ணா, நீங்கள் ஒரு கணம் கூட இனி இங்கே இருக்கக் கூடாது. உங்களைக் கொல்ல சதி நடக்கிறது. ஓடி விடுங்கள்''ஐயோ, நீ?' என்றார்.
ராமானுஜர்.'நீங்கள் காணாமல் போனது பற்றிக் கதைகட்டிவிடவாவது நான் இங்கே இருந்தாக வேண்டும். என்னை நான் பார்த்துக் கொள்வேன். நீங்கள் உடனே கிளம்புங்கள்.''இறைவன் சித்தம்' என்று ராமானுஜருக்குத் தோன்றியது.
தொடரும்...என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
வேடமிட்டவன் - 7
பாதையற்ற கானகத்தில் எந்தப் பக்கம் போவது என்று ராமானுஜருக்குப் புரியவில்லை. பகலென்றால் திசை தெரியும். கவிந்த இரவுக்கு கடவுளைத் தவிர வேறு துணையில்லை. ஆனது ஆகட்டும் என்று அவர் புறப்பட்டார். கால் போன போக்கில் நடந்து கொண்டே இருந்தார்.
கோவிந்தன் சொன்ன தகவலும், அவனுக்கு இருந்த பதற்றமும் வேகமும், திரும்பத் திரும்ப அவரது நினைவில் மோதிக்கொண்டே இருந்தன. கொலைத் திட்டம். இவன் இருக்கவே கூடாது என்று நினைக்குமளவுக்கு அப்படி என்ன செய்தேன்? எத்தனை யோசித்தும் புரியவில்லை. 'மீண்டும் வகுப்புக்கு வா' என்று வீட்டுக்கு வந்து அழைத்தவர்கள்தாம், காசிக்கு அழைத்துச் சென்று கங்கையில் அழுத்திக் கொல்லத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். குருவுக்குத் தெரியாமலா இது நடக்கும்?
'அண்ணா, என்னை மன்னியுங்கள். திட்டத்தை வகுத்துக் கொடுத்ததே குருவாகத்தான் இருக்கும் என்பது என் சந்தேகம்.' வழி நெடுக யாதவர் அந்தச் சிலபேரைத் தனியே அழைத்துப் பேசியது. தற்செயலாகத் தான் குறுக்கிட்ட போதெல்லாம் பேச்சை நிறுத்தியது. பயணம் முழுதும் கூடியவரை தன்னையும் ராமானுஜரையும் அதிகம் பேசிக்கொள்ள முடியாதபடிக்குப் பிரித்து வைத்தது.
யோசிக்க யோசிக்க கோவிந்தனுக்கு இன்னும் பல காரணங்கள் அகப்பட்டன.'இனி என் முகத்திலேயே விழிக்காதே என்று துரத்தியடித்த குரு, நீங்கள் திரும்பி வந்தபோது ஒன்றுமே நடவாததுபோல எப்படிக் கட்டித் தழுவி வரவேற்றார் என்று யோசித்துப் பாருங்கள் அண்ணா. எனக்கு அதுவே திருதராஷ்டிரத் தழுவலாகத்தான் இப்போது படுகிறது.'ராமானுஜருக்குத் துக்கம் ததும்பியது. வேதத்தில் கரை கண்ட ஞானவித்து. வயதான மனிதர். தன் இருப்பு அத்தனை அச்சத்தைத் தந்திருக்குமா அவருக்கு? அழித்துவிடும் அளவுக்கா?
'இது, நீங்கள் யார் என்று உங்களுக்கே தெரியப்படுத்த நிகழ்ந்த சம்பவமாக இருக்கட்டும். நீங்கள் இருந்தாக வேண்டும் அண்ணா. போய் விடுங்கள். ஓடி விடுங்கள்.'திரும்பத் திரும்பச் செவியில் மோதியது கோவிந்தனின் குரல். ராமானுஜர் நடந்து கொண்டே இருந்தார். அன்றிரவு முழுதும் நடந்து, மறுநாளும் நடந்து, வானம் இருட்டும் முன் கண் இருட்டிக் கீழே விழுந்தார்.
எத்தனை நேர உறக்கமோ. யாரோ எழுப்புவது போலிருந்தது. விழித்தபோது, எதிரே ஒரு வேடர் தம்பதி நின்றிருந்தார்கள்.'வெளியூரா?' 'ஆம் ஐயா. இந்தக் காட்டில் எனக்கு வழி தெரியவில்லை. நான் தெற்கே போக வேண்டியவன்.' 'நாங்கள் சத்யவிரத க்ஷேத்திரத்துக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறோம். பேச்சுத் துணைக்கு ஆச்சு. புறப்படுங்கள்' என்றான் வேடன். சத்ய விரத க்ஷேத்திரம். ராமானுஜருக்கு சிலிர்த்து விட்டது. காஞ்சிக்கு அதுதான் பெயர். எங்கிருந்தோ வந்தான். நானொரு வேடன் என்றான். இங்கிவனை நான் பெற எப்போதோ தவம் புரிந்திருக்கத்தான் வேண்டும்.
உற்சாகமாக அவர்களுடன் ராமானுஜர் புறப்பட்டு விட்டார்.மறுநாள் இரவு வரை அவர்கள் பேசிக்கொண்டே நடந்தார்கள். அப்போதும் கானக எல்லை வந்தபாடில்லை. அதே விந்தியம். அதே முரட்டுக் காடு. அதே பாதையற்ற பயணம். போய்ச்சேர எத்தனை மாதங்கள் ஆகப் போகிறதோ தெரியவில்லை. அன்றிரவு அவர்கள் மூவருக்குமே பயங்கரப் பசி. ஆனால் உண்ண ஒன்றுமில்லை. பருக நீருமற்ற வறண்ட பகுதியாக இருந்தது அது. சகித்துக் கொண்டு இரவைக் கழிக்கப் படுத்தார்கள்.
விடிவதற்குச் சற்று நேரம் முன்பாக, அந்த வேடுவனின் மனைவியின் முனகல் கேட்டது. தாகம். தாங்க முடியாத தாகம். தண்ணீர் வேண்டும். 'கொஞ்சம் பொறுத்துக்கொள். பொழுது விடிந்து விடட்டும். இங்கிருந்து சிறிது துாரத்தில் ஒரு கிணறு இருக்கிறது. அதன் நீர் அமிர்தத்தினும் மேலானதென்று கேள்விப்பட்டிருக்கிறேன்' என்று வேடுவன் ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தது ராமானுஜரின் காதில் விழுந்தது. சட்டென்று அவர் உதறிக்கொண்டு எழுந்தார்.
'ஐயா நீங்கள் எனக்கு உதவி செய்தவர்கள். உங்கள் மனைவியின் தாகத்தைத் தணிக்கும் புண்ணியமாவது எனக்குக் கிடைக்கட்டும். இருட்டானாலும் பரவாயில்லை. நீங்கள் திசை சொல்லுங்கள். நான் அந்தக் கிணற்றைத் தேடிச் சென்று நீர் எடுத்து வருகிறேன்' என்றார்.வேடுவன் புன்னகை செய்தான். குத்துமதிப்பாகக் கை காட்டி வழி சொன்னான். ராமானுஜர் நடக்க ஆரம்பித்தார். இந்த அடர் கானகத்தில் யார் கிணறு வெட்டியிருப்பார்கள்? அதுவும் அமிர்தத்தினும் மேலான நீர் உள்ள கிணறாமே?
அரை மணி தேடி அந்தக் கிணற்றைக் கண்டுபிடித்தார். ஆனால், நீர் எடுத்து வர கைவசம் ஒன்றுமில்லை.
ஆனது ஆகட்டும் என்று கிணற்றில் இறங்கி, தன்னிரு கைகளில் நீரை அள்ளி ஏந்திக்கொண்டு அலுங்காமல் மேலேறி வந்தார். வந்த வழியே திரும்பிச் சென்று அந்த வேட்டுவப் பெண்ணின் வாயில் நீரை விட்டார். 'இவ்வளவு தான் முடிந்ததா?' என்றாள் அந்தப் பெண்.
'பிரச்னை இல்லையம்மா! நான் மீண்டும் சென்று நீர் ஏந்தி வருகிறேன்.'இரண்டாவது முறையும் அரை மணி நடந்து நீர் எடுத்து வந்தார் ராமானுஜர். 'ம்ஹும்... தாகம் தணியவில்லை. எனக்கு இன்னும் வேண்டும்.' மூன்றாவது முறை ராமானுஜர் அந்தக் கிணற்றுக்குச் சென்று நீர் எடுத்து வந்து பார்த்தபோது, அந்த வேடர் தம்பதி அங்கே இல்லை.
இருட்டில் நடந்து கொண்டே இருந்த களைப்பு. பசி மயக்கம். அப்படியெங்கே கண் காணாமல் போயிருப்பார்கள் என்கிற குழப்பம் தந்த கிறுகிறுப்பு. ராமானுஜர் அப்படியே கண்சொருகிச் சரிந்தார்.
விழித்தபோது விடிந்திருந்தது. வழிகாட்ட உடன் வந்த வேடுவத் தம்பதி, பாதி வழியில் பரிதவிக்க விட்டுக் காணாமல் போனது பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க நேரமில்லை. ராமானுஜர் மீண்டும் அந்தக் கிணற்றடியை நோக்கி நடந்தார்.இப்போது அங்கே நாலைந்து பெண்கள் இருந்தார்கள்.
தண்ணீர் எடுக்க வந்த உள்ளூர்க்காரர்கள்.'அம்மா, இது எந்த இடம்?''நீங்கள் எங்கே செல்ல வேண்டும்?' 'நான் தெற்கே காஞ்சிக்குப் போக வேண்டும் தாயே. வழி தெரியாத விந்தியமலை காட்டுப்பாதையில் சிக்கிக்கொண்டு விட்டேன்.'அந்தப் பெண்கள் அவரை வினோதமாகப் பார்த்தார்கள்.'சொல்லுங்கள் அம்மா. இது எந்த ஊர்? எந்த இடம்? இங்கிருந்து நான் எப்படிப் போக வேண்டும்?''என்னப்பா நீ அசடாயிருக்கிறாயே. காஞ்சிக்கே வந்து சேர்ந்துவிட்டு, காஞ்சிக்கு வழி கேட்கிறவனுக்கு என்ன பதில் சொல்ல முடியும்?' என்று கேட்டார்கள்.
தொடரும்....
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
கருணைப் பெருவெள்ளம் - 8
அற்புதங்கள் எப்போதேனும் நிகழ்கின்றன. அதற்கான நியாயங்களும் காரணங்களும் இறைவனால் தீர்மானிக்கப்படுகின்றன. ஒளியும் நீரும் படைக்கப்பட்டது ஓர் அற்புதமென்று எண்ண முடியுமானால், ஒளிந்திருந்து ஆடும் ஆட்டங்களின் உள்ருசியை உணர்வது சிரமமாக இராது.
ராமானுஜர் ஒரு கணம் சிந்தித்துப்பார்த்தார். தனக்கு நேர்ந்த அற்புத அனுபவத்துக்கு யாருக்கு நன்றி சொல்வது? ஒரே இரவில் விந்திய மலைச் சாரலில் இருந்து காஞ்சி மாநகரத்துக்கு வந்து சேர்வதென்பது கற்பனையிலும் நடக்காத காரியம். ஆனால் நடந்திருக்கிறது. அந்த வேடுவ தம்பதிக்கு நன்றி சொல்வதா? வேடுவர் வடிவில் காஞ்சிப்பேரருளாளனும் பெருந்தேவித் தாயாருமே தனக்கு வழித்துணையாக வர வழி செய்தது எது? யாதவர் மட்டும் காசி யாத்திரைக்கு அழைத்திராவிட்டால் இப்படியொரு அனுபவம் வாய்த்திருக்குமா? அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டுமா?
களைப்பு கொடுத்த அயற்சியில் அந்த இரவு துாங்கிக்கொண்டுதான் இருந்திருக்கிறேன். எனக்காக விழித்திருந்து காப்பாற்றிய கோவிந்தன் இல்லாது போனால் இது நடந்திருக்குமா? அவனுக்கு இல்லாத களைப்பா? அவனும் கால் கடுக்க நடந்தவன் தான். உண்மையில் நன்றிக்குரியவன் அவன்தானா? தேவரீர் இன்னும் என் வினாவுக்கு விடை சொல்லவில்லை' என்று மெல்ல நினைவூட்டினான் தாசரதி.
நினைவு மீண்ட ராமானுஜர் மீண்டும் புன்னகை செய்தார். துறவுக் கோலம் பூண்டிருந்த தருணம். தாசரதி என்கிற முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும் முதலிரு சீடர்களாக ஏற்று அமர்ந்திருந்த நேரம். 'துறவு கொண்ட கணத்தில் யாரை நினைத்தீர்கள்?' என்று முதலியாண்டான் கேட்கிறான்.
என்ன பதில் சொல்வது? காளஹஸ்தியில் தங்கிவிட்ட கோவிந்தனை மீட்டுக் கொண்டு வந்து பக்கத்தில் இருத்திக்கொண்டாலொழிய எந்த பதிலும் பூரணமடையாது. அது தம்பி உறவு கொடுத்த பாசமல்ல. தடம் மாறிச்சென்றவனை மீட்டாக வேண்டும்என்கிற கடமையுணர்ச்சி கொடுத்த பரிதவிப்பு.உண்மையில் அது கடமைதானா?
விந்தியக் காடுகளில் தடம் மாறிச் சென்ற தன்னை, வேடுவர் தம்பதி காஞ்சிக்குக் கொண்டு வந்து சேர்த்தது அவருக்கு நினைவுக்கு வந்தது. கடமையின் மீது சற்று அன்பை தெளித்தால் அது கருணையாகி விடுகிறது. என்றால், தன்மீது மட்டும் அப்படியொரு கருணைப் பெருமழையைப் பொழிய என்ன காரணம்?அவரால் அப்போதும் நம்ப முடியவில்லை. அந்தக் கிணற்றுக்கு சாலைக் கிணறு என்று பேர்.
காஞ்சியில் இருந்து நாலு கல் தொலைவு (ஏழு கிலோ மீட்டர்). செவிலிமேடு என்று அந்த இடத்தைக் குறிப்பிடுவார்கள்.'அதோ பாருங்கள். வரதர் கோயில் விமானம் தெரிகிறதா?' அந்தப் பெண்கள் சுட்டிக்காட்டிய போதுதான் ராமானுஜருக்கு நடந்தது புரிந்தது.
ஓரிரவில் ஒரு ஒளியாண்டையே கடந்தாற் போன்ற அனுபவம். யாரிடம் சொல்ல முடியும்? யாருக்குப் புரியும்? 'எனக்குப் புரிகிறது மகனே!' என்றார் காந்திமதி. வீட்டுக்கு வந்து நடந்ததை விவரித்த போது, ராமானுஜரின் தாயார் தாங்க முடியாத பரவசப் பெருவெள்ளத்தில் திக்குமுக்காடிப்போனார். தஞ்சம்மாவுக்குக் கணவர் வீடு திரும்பியதே பெரிய விஷயமாக இருந்தது.
அதுவும் ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பித்து வந்து சேர்ந்திருக்கிற மனிதர். 'வேண்டாம். இனி அந்த குருகுலத்துக்கு தயவுசெய்து போகாதீர்கள்! கற்றது போதும். இனி எனக்குக் கணவராக மட்டும் இருங்கள்!'ராமானுஜர் புன்னகை செய்தார். கற்பதற்கு அளவேது? போதுமென்ற நிறுத்தற்குறி ஏது? 'ஆனால் அந்த இடம் வேண்டாம் என்றுதான் எனக்கும் தோன்று கிறது மகனே. நீ உடனே கோயிலுக்குச் சென்று திருக்கச்சி நம்பியைப் பார். அவர் உனக்கு வழி காட்டுவார்' என்றார் காந்திமதி.
ஆ! திருக்கச்சி நம்பி, அருளாளனின் அன்பரல்லவா? அவரோடு உரையாடக்கூடிய வல்லமை கொண்ட மகான் அல்லவா? தாயார் சொல்வது சரி. அவர்தான் இனி தன்னை வழி நடத்த வேண்டும். அன்றே, அப்போதே கிளம்பினார் ராமானுஜர். வரதர் கோயிலில் அதே ஆலவட்ட கைங்கர்யம் செய்து கொண்டிருந்த திருக்கச்சி நம்பியை நெருங்கி சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்தார்.
'ஐயா, என்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள். எனக்கு வழி காட்டுங்கள். வேறு போக்கிடம் ஏதும் எனக்கு இனி இல்லை.' 'எழுந்திருங்கள் இளையாழ்வாரே! நீங்கள் யாதவருடன் காசிக்குச் சென்றிருப்பதாக அல்லவா சொன்னார்கள்?' ஒரு கணம் யோசித்த ராமானுஜர் திடமாக நடந்ததை மாற்றிச் சொன்னார்.
'ஆம் ஐயா. ஆனால் வழி தவறிவிட்டேன். எனவே பாதியில் திரும்பும்படியாகி விட்டது.' கொலை நோக்கம் கொண்டவரென்றாலும் குருவாகி விட்டவர். அவர் பெற்றிருக்கிற பெயருக்குக்களங்கம் சேர்ப்பானேன்? பொய்மையும் வாய்மை இடத்து. திருக்கச்சி நம்பி நீண்ட நேரம் யோசித்தார். 'தேவரீர் எனக்குக் கருணை காட்ட மாட்டீர்களா? பேரருளாளனின் நிழலில் வாழ்பவர் நீங்கள். உமது நிழலில் நான் இளைப்பாறக் கூடாதா? எனக்கு அதற்கு இடமில்லையா? அத்தனைக் கீழ்மகனா நான்?'பதில் இல்லை.
'சரி போகட்டும். அருளாளனுக்குச் செய்யும் கைங்கர்யமாகவேனும் எனக்கு எதையாவது ஒதுக்கிக் கொடுங்களேன்!''கேட்டுச் சொல்கிறேன், நாளை வாரும்' என்று சொல்லிவிட்டார் திருக்கச்சி நம்பி. அன்றிரவு நடை சாத்தும் நேரத்துக்கு முன்பாக, ஆலவட்ட கைங்கர்யத்தை முடித்துவிட்டு அவர் அருளாளனிடம் பேச்சுக் கொடுத்தார். 'ராமானுஜர் இன்று என்னைச் சந்தித்தார். என்னை குருபீடம் ஏற்கச் சொல்கிறார். உமக்குக் கைங்கர்யம் செய்யவும் பிரியப்படுகிறார்.
நான் என்ன பதில் சொல்வது?' பேசும் தெய்வம் வாய் திறந்தது. 'அவரைச் சிலகாலம் சாலைக் கிணற்றில் இருந்து திருமஞ்சனத்துக்கும் (அபிஷேகம்), திருவாராதனத்துக்கும் (சமையல்) தினசரி நீர் எடுத்து வரச் சொல்லும். தாயாருக்கு உகந்த தீர்த்தம் அது. அவருக்கேற்ற ஆசாரியர் விரைவில் வந்து சேர்வார்.' மறுநாள் காலை விடியும் நேரமே திருக்கச்சி நம்பியின் இருப்பிடத்துக்குச் சென்று விட்டார் ராமானுஜர்.'அடியேன், பேரருளாளனின் உத்தரவென்ன என்று தெரிந்து செல்ல வந்தேன்.'
'தாயாருக்கு உகந்த சாலைக் கிணற்றிலிருந்து உம்மை தினசரி திருவாராதனத்துக்கும், திருமஞ்சனத்துக்கும் ஒரு குடம் நீர் எடுத்து வரச் சொல்லி உத்தரவாகியிருக்கிறது.'சாலைக் கிணறு. தாயாருக்கு உகந்த தீர்த்தம். அந்தக் கணத்தில்தான் ராமானு ஜருக்கு அது விளங்கியது. வந்த வேடுவர் தம்பதி வேறு யாருமில்லை. பேரருளாளனும், பெருந்தேவித் தாயாருமேதான். எம்பெருமானே! இந்த அற்பன்மீதா இத்தனைக் கருணை! தன்னை மறந்து அவர் கைகூப்பி நின்றார். அவரது கண்களில் இருந்து கரகரவென நீர் சுரந்தபடியே இருந்தது.
தொடரும்..
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
உள்ளங்கைக் கொணர்ந்த நாயனார் - 9
கங்கைக் கரைக்கு யாத்திரை செல்லலாம் வா என்று யாதவப் பிரகாசர் கூப்பிட்டிருந்தார். ஆனால், ராமானுஜருக்கு வாய்த்தது கிணற்றங்கரை யாத்திரை. அது குருவின் அழைப்பு. இது பேரருளாளனின் உத்தரவு. அது வாழ்விலே ஒருமுறை. இது வாழும் கணமெல்லாம். எத்தனை பேருக்குக் கிடைக்கும்? அவன் பேரருளாளன்தான். ஆனால், தனக்கு வாய்த்த அருள் பெரிதினும் பெரிதல்லவா? இன்னொருவர் எண்ணிப் பார்க்க இயலாததல்லவா?
திருக்கச்சி நம்பியை மானசீகமாக வணங்கிவிட்டு, மறுநாள் காலை முதலே ராமானுஜர் தமது கைங்கர்யத்தை ஆரம்பித்து விட்டார். விடிகிற நேரம் குளித்து, திருமண் தரித்து சாலைக் கிணற்றுக்குச் சென்றுவிட வேண்டியது ஒரு குடம் நீர். அதில்தான் திருமஞ்சனம் நடக்கும். தாயாருக்கு உகந்த நீர். இரண்டு முறை தன் கைகளால் அள்ளி ஏந்தி வந்ததை வாங்கிப் பருகிய பெருந்தேவித் தாயார். மூன்றாம் முறை நீர் எடுத்துச் சென்றபோது தான் இருவருமே மறைந்து நின்று மாயம் காட்டினார்கள்.நல்லது. நீரின்றி எதுவுமில்லை. எல்லாம் தொடங்குவது நீரில்தான். நிறைவடைவதும் அதிலேயேதான்.
ராமானுஜரின் மிக நீண்ட யாத்திரை அங்கே தொடங்கியது.மறுபுறம் விந்திய மலைக்காட்டில் யாதவர் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தார். 'எங்கே ராமானுஜன்? எங்கே போனான்? எப்படித் தவறவிட்டோம்?''பதறாதீர்கள் குருவே. நாம் கங்கைக்கு அழைத்துச் சென்று செய்ய நினைத்ததை இங்கே காட்டு மிருகம் ஏதாவது செய்திருக்கும்.' என்றார்கள் சீடர்கள்.யாதவப் பிரகாசர் கோவிந்தனைத் தனியே அழைத்தார்.
'கோவிந்தா, நீ சொல். எங்கே உன் அண்ணன்? உன்னிடம் சொல்லாமல் அவன் எங்கும் போயிருக்க முடியாது.''என் கவலையும் அதுதான் ஐயா. விடிந்தது முதல், இக்காடு முழுவதும் அவரைத் தேடித் திரிந்துவிட்டு வருகிறேன். எங்குமே அவர் கண்ணில் படவில்லை. எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. என் பெரியம் மாவுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்?'கண்ணீரும் கவலையுமாக கோவிந்தன் பேசியது யாதவருக்கு மேலும் கவலையளித்தது.
கோவிந்தன் அதை முன்னதாகத் தீர்மானித்திருந்தான். ஆத்ம சுத்தியுடன் நடந்ததை மறைத்துவிடுவது. தன் மூலம்தான் அண்ணன் தப்பித்தார் என்பது தெரிந்தால் தன்னை பலி கொடுத்து விடுவார்கள். உதட்டில் வேதமும் உள்ளத்தில் குரோதமுமாக என்ன பிழைப்பு இது! 'சரி, நாம் போகலாம்' என்றார் யாதவப் பிரகாசர். வழி முழுதும் கோவிந்தனுக்கு அவர் ஆறுதல் சொல்லிக்கொண்டே வந்தார். உள் மனத்தில் ஓர் உறுத்தல் இருந்தது.
ராமானுஜரைக் கொல்ல நினைத்துத்தான் அவர் அந்த யாத்திரைத் திட்டத்தையே வகுத்தார். ஆனால், பாதி வழியிலேயே தான் நினைத்தது நடந்துவிட்டது. கொன்ற பாவம் தன்னைச் சேராதுதான். ஆனால் மனச்சாட்சி எப்படிக் கொல்லாதிருக்கும்? வெளியிலும் காட்டிக்கொள்ள முடியாது.
கோவிந்தன் இருக்கிறபோது மற்ற மாணவர்களிடம் மனம் விட்டுப் பேசவும் முடியாது. வெப்பம் கவிந்த யோசனைகளுக்குத் தன்னைத் தின்னக்கொடுத்தவராக வாரணாசியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.இரு வாரப் பயணத்துக்குப் பிறகு அவர்கள் காசியை அடைந்தார்கள்.
'என் அன்புக்குரிய மாணவர்களே, நமது ராமானுஜன் இன்று நம்மோடு இல்லை. அவனுக்கும் நல்ல கதி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு கங்கையில் நீராடுங்கள்.'அவர்கள் வேத மந்திரங்களை முழங்கிக்கொண்டு கங்கையில் இறங்கினார்கள். கோவிந்தனும் இறங்கினான். அவர்கள் மும்முறை மூழ்கி எழுந்தார்கள். கோவிந்தனும் மூழ்கி எழுந்தான்.
அவர்கள் கரை ஏறியபோது கோவிந்தன் மட்டும் ஏறவில்லை.அங்கே சாலைக் கிணற்றில் இருந்து மூன்றாவது முறையாக வேடுவப் பெண்ணுக்கு நீர் ஏந்திக்கொண்டு ராமானுஜர் வந்தபோது பேரருளாளனின் லீலாவினோதம் அரங்கேறிய மாதிரி, இங்கே கங்கையில் மூன்றாவது முறை மூழ்கி எழுந்த கோவிந்தனின் கரங்களில் ஒரு சிவலிங்கம் வந்து சேர்ந்திருந்தது!'ஆஹா! ஆஹா!' என்று பரவசப்பட்டுப் போனார் யாதவப் பிரகாசர்.
'இது எல்லோருக்கும் வாய்க்காது கோவிந்தா. லட்சம் பேர் தினமும் கங்கையில் குளித்தெழுகிறார்கள். அவர்களில் எத்தனை பேரின் கரங்களில் சிவபெருமான் வந்து சேர்ந்திருக்கிறார்? ஒருவருக்கும் இல்லை; நான் உள்பட! உன்னை அவன் தேர்ந்தெடுத்திருக்கிறான். உன் பிறப்பு அர்த்தமுள்ளது. இனி நீ 'உள்ளங்கைக் கொணர்ந்த நாயனார்' என்று அழைக்கப்படுவாய்!'அவரது பரவசம் ஒரு வகையில் உண்மையானதுதான்.
மறுபுறம் ராமானுஜரின் தம்பியை ஒரு பூரணமான, நிரந்தரமான சிவபக்தனாக்கி விடக் கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிடக்கூடாது என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. பரபரவென்று கணக்குப் போட்டார். ஊருக்குப் போனதும் அத்தனை பேரும் ராமானுஜனைப் பற்றித்தான் விசாரிக்கப் போகிறார்கள்.
விந்திய மலைக்காட்டில் அவன் மிருகத்தின் பசிக்கு இரையான கதையைச் சொல்ல வேண்டும். ஐயோ என்று ஊரும் உறவும் கதறுகிற நேரம், கோவிந்தனுக்கு சிவபெருமான் அளித்த மாபெரும் அங்கீகாரத்தை எடுத்துச் சொல்லி சமாதானப்படுத்த வேண்டும். சர்வேஸ்வரனேதான் வழி காட்டியிருக்கிறான். இத்தனைக் காலம் வேதம் சொன்னதன் பலன் என்று எண்ணிக் கொண்டார்.கோவிந்தனும் மிகுந்த பரவச நிலையில்தான் இருந்தான். விவரிக்க முடியாத பேரானந்த நிலை.
அன்றிரவு அவனுக்குக் கனவில் ஒருகுரல் கேட்டது. 'கோவிந்தா, காளஹஸ்திக்கு வா.' அதே குரல்,காளஹஸ்தியில் இருந்த கோயில் குருக்களுக்கும் உத்தரவாக ஒலித்தது. 'என் பக்தன் என்னை ஏந்தி வருகிறான். அவனை இந்த ஊர் ஏந்திக் கொள்ளட்டும்.'யாதவரின் குழு காஞ்சிக்குத் திரும்பியபோது கோவிந்தன் மட்டும் காளஹஸ்தியிலேயே தங்கிவிட்டான். தன் உள்ளங்கையில் கொண்டுவந்த லிங்கத்தை அங்கே பிரதிஷ்டை செய்து அங்கேயே அமர்ந்துவிட்டான். இனி இதுவே என் இடம்.
இனி சிவனே என் சுவாசம்.நடந்ததையெல்லாம் ராமானுஜர் எண்ணிப் பார்த்தார்.'நான் எப்படி கோவிந்தனை மறப்பேன்? எப்படி அவனை இனியும் இங்கே வரவழைக்காமல் இருப்பேன்? நான் பரப்ப விரும்பும் வைணவ சித்தாந்தத்தின் வேர்தாங்கிகளுள் ஒருவனாக அவன் இருந்தாக வேண்டும். பேரருளாளனின் பிள்ளை வேறொரு கைங்கர்யம் செய்து கொண்டிருக்கலாகாது.' முதலியாண்டானுக்குப் புரிந்தது.
கூரத்தாழ்வானுக்குப் புரிந்தது. நடாதுாராழ்வான் என்று ராமானுஜரால் அழைக்கப்பட்ட வரத தேசிகனுக்குப் புரிந்தது. மூன்று சீடர்களுக்கும் குருவின் மனம் புரிந்த மறுகணம்முதலியாண்டான் சட்டென்று கேட்டான். 'எப்படி வரவழைப்பீர்?'ராமானுஜர் உடனே பதில் சொல்லவில்லை. கண்மூடி அமைதியாக இருந்தார். பெயர் வைத்தவரைத் தவிர உயர் வழியைச் சுட்டிக்காட்ட யாரால் முடியும் என்று அவருக்குத் தோன்றியது.
தொடரும்...
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
பெயரிட்ட பெரியவர் - 10
அவருக்கு இந்த உலகம் என்பது திருப்பதி மலையடிவாரத்தில் தொடங்கி, ஏழாவது மலை உச்சியில் உள்ள வேங்கடேசப் பெருமாளின் சன்னிதியில் முடிகிற பரப்பளவு கொண்டது. அவரது உலகத்தில் ஒருவர் மட்டுமே வசித்துக் கொண்டிருந்தார். வேங்கடம் எனும் அம்மலையின் பதியான எம்பெருமான். பெருமாளுக்கு தினசரி தீர்த்த கைங்கர்யம் செய்து கொண்டிருந்த அவரைப் பிராந்தியத்தில் பெரிய திருமலை நம்பி என்று அழைத்தார்கள்.
திருவரங்கத்தில் வைணவ நெறி தழைக்கச்செய்து கொண்டிருந்த ஆளவந்தாரிடம் சீடராக இருந்தவர் அவர். ஆளவந்தார்தான் ஒருநாள் கேட்டார். 'வேங்கடமலைப் பெருமானுக்குக் கைங்கர்யம் செய்ய, பொறுப்பாக யாராவது அங்கு இருக்க வேண்டியுள்ளதப்பா. நமது மடத்தில் இருந்து யார் போகத் தயார்?'சீடர்கள் எதிரே அமர்ந்திருந்தார்கள்.
குரு சொன்னால் எதுவும் செய்யச் சித்தமாயிருந்த சீடர்கள். திருக்கோட்டியூர் நம்பி அவர்களுள் ஒருவர். திருமலையாண்டான் இன்னொருவர். திருவரங்கப் பெருமாளரையர் மற்றவர். பெரிய நம்பி. மாறனேர் நம்பி. இன்னும் எத்தனையோ பேர். எப்போதும் குருவின் சொல் வெளிப்பட்டு முடிவதற்குள், 'நான் தயார்' என்று எழுந்து நிற்கும் அவர்கள், அன்றைக்கு அவர் கேட்டு முடித்து நெடுநேரம் ஆன பிறகும் யோசித்தபடியே இருந்தார்கள்.காரணம், சிறிது அச்சம். அவர்கள் திருப்பதி மலையைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்கள்.
ஆளரவமற்ற அபாயகரமான பிராந்தியம். ஏழு மலைகளுள் எது ஒன்றிலும் பாதை கிடையாது. ஏறிச் செல்வதும், இறங்கி வருவதும் எளிய விஷயங்களல்ல. மலைமீது கோயில் கொண்டிருந்த எம்பெருமானுக்குக் காவலாக நுாற்றுக்கணக்கான மிருகங்கள் மலையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. பசித்த மிருகங்கள். பெரும்பாலும் அவை மனிதர்களை அங்கு நடமாடக் கண்டதில்லை. காண நேர்ந்தால் சும்மா விட்டு வைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
ஒரு ஆத்திர சகாயத்துக்கு நாலு பேர் உடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.'என்ன யோசிக்கிறீர்கள்?' என்றார் ஆளவந்தார்.யாரும் பதில் சொல்லாதிருந்த அச்சமயத்தில் ஒரு குரல் மட்டும் ஓங்கி ஒலித்தது. 'இன்றே கிளம்புவதா அல்லது நாளை கிளம்ப உத்தரவாகுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் சுவாமி!'அவர்தாம் ஸ்ரீசைல பூர்ணர் என்று அழைக்கப்பட்ட பெரிய திருமலை நம்பி. ஆளவந்தார் புன்னகை செய்தார்.
அவரிடம் ராமாயணத்தின் உட்பொருள் பயில வந்தவர் அவர். தீயின் செஞ்சுடைப் போன்ற புத்திக் கூர்மை. புல்லின் மேல் படர்ந்த பனியின் உள்ளே ஊடுருவி, பிரபஞ்சத்தையே தரிசிக்கத் தெரிந்த பெரும் தெளிவு. ஆளவந்தாரின் பிரிய மாணாக்கர்.அன்றைக்குத் திருவரங்கத்தை விட்டுக் கிளம்பி திருமலைக்குச் சென்று சேர்ந்தவர்தான். அதன்பிறகு அவர் இறங்கி வந்தது, தமது தமக்கைக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என்று கேள்விப்பட்டபோதுதான்.
திருப்பெரும்புதுாரில் இருந்து மைத்துனர் ஆசூரி கேசவ சோமயாஜி தகவல் அனுப்பியிருந்தார். 'உமக்கு மருமகன் பிறந்திருக்கிறான். வந்து பார்த்து, பெயர் வைத்து ஆசீர்வதித்துச் செல்லவும்.'திருமலை நம்பிக்கு அதுவரை தனக்கு இரு தங்கைகள் இருக்கிற விஷயமே கூட நினைவில்லை. நாளும் பொழுதும் நாரணன் சேவையிலேயே கழிந்து கொண்டிருந்தது அவருக்கு. சட்டென்று மருமகன் பிறந்திருக்கிற செய்தி கிடைத்ததும் மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. உடனே ஜாதகத்தைக் கணித்துப் பார்த்தார்.
அது பிங்கள வருஷம் (கி.பி.1017). சித்திரை மாதம் பன்னிரண்டாம் தேதி வளர்பிறை பஞ்சமி திதி கூடிய வியாழக்கிழமை.
திருவாதிரை நட்சத்திரத்தில் மருமகன் மதியம் பன்னிரண்டு மணிக்கு ஜனித்திருக்கிறான்.ஆ..., ராகுவின் நட்சத்திரத்தில் அல்லவா பிறந்திருக்கிறான்? இவ்வுலகில் மாபெரும் மகான்கள், ஞானஸ்தர்கள் அத்தனை பேரும் இதுவரை ராகு அல்லது கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். தவிரவும் கடக லக்னம்.
அது தலைமைப் பதவிக்கான நுழைவாயில். லக்னாதிபதி சந்திரன் விரய ஸ்தானத்தில் இருக்கிறான். ஆக, ஆலயப் பணிகளில் நாட்டம் கொண்டவன். ஐந்தாம் இடத்தில் கேது உட்கார்ந்திருக்கிறான். சந்தேகமேயில்லை. ஒன்று சாம்ராஜ்ஜியம் அல்லது சன்னியாசம்தான்!பெரிய திருமலை நம்பி அன்றே கிளம்பி திருப்பெரும்புதுாருக்கு விரைந்தார்.
தங்கையின் மகனை அள்ளி ஏந்தி உச்சிமோந்து சீராட்டி னார். அவரது உள்ளுணர்வு அவருக்கு அனைத்தையும் சொன்னது. அது ஆதிசேஷன் அம்சம். வாராது வந்த மாமணி. குழந்தைக்கு இளையாழ்வான் என்று அவர்தான் பெயரிட்டது. 'காந்திமதி! உன் மகன் உலகை ஆளப் போகிறவன். அறத்தின் காவலனாக நின்று தழைக்கப் போகிறவன். இது அவதாரம். நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்.
' காந்திமதியும், கேசவ சோமயாஜியும் நெக்குருகிப் போனார்கள். பெரிய திருமலை நம்பியின் தாள் பணிந்து மகிழ்ந்தார்கள். அன்றைக்கு ராமானுஜருக்குப் பெயர் வைத்துவிட்டுப் போன பெரிய திருமலை நம்பி மீண்டும் மலையை விட்டு இறங்கி வந்தது, ஏழு வருடங்கள் கழித்து அடுத்த தங்கைக்கு பிள்ளை பிறந்தபோதுதான். அவள் காந்திமதிக்கு இளையவள்.
பெரிய பிராட்டி என்று பேர். அவள் பிள்ளைக்கு கோவிந்தன் என்று பெயர் வைத்தார் நம்பி.'இவன் இளையாழ்வானுக்குப் பிந்தி பிறந்தவன் மட்டுமல்ல தங்கையே. அவனுக்கு நிழலே போல் எப்போதும் உடனிருக்கப் போகிறவனும் கூட. அவனால் தழைக்கப் போகிற அறங்களுக்கு இவன் காவலனாக இருக்கப் போகிறான்.' என்று சொல்லிவிட்டுப் போனார். அதைத்தான் ராமானுஜர் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அதனால் வந்ததுதான் அந்தப் புன்னகை. அதனாலேயேதான் அவர் கோவிந்தனை மீட்டுக் கொண்டு வரும் பொறுப்பைப் பெரிய திருமலை நம்பியிடம் விட்டுவிடலாம் என்று நினைத்தார்.விவரம் தெரியாத ஒருவன் என்றால் யார் வேண்டுமானாலும் பேசி, மனத்தை மாற்றிவிட முடியும். கோவிந்தன் அப்படியல்ல. வேத வேதாந்தங்கள் பயின்றவன். பெரிய ஞானஸ்தன். ஒரு தரிசனம் போல் அவனுக்கு ஏதோ நேர்ந்திருக்கிறது. கங்கையில் கிடைத்த சிவலிங்கம்.
ஒரு பெரும் பரவச நிலையில் காளஹஸ்தியில் சிவஸ்மரணையில் லயித்துப் போனவன்.'எனக்கு அவன் வேண்டும் முதலியாண்டான்! வைணவ தரிசனம் வையம் முழுதும் பரவ வேண்டுமென்றால் அதற்கு வைராக்கிய சீலர்களின் தோள் வேண்டும். கோவிந்தனை மீட்டு வர நான் பெரிய திருமலை நம்பியைத்தான் நம்பியாக வேண்டும்' என்றார் ராமானுஜர். பேசிக்கொண்டிருந்தபோது மடத்தின் வாயிலில் யாரோ வருவது தெரிந்தது. 'யாரது...?' என்றார் ராமானுஜர்.உள்ளே நுழைந்தவர் ஒரு வயதான பெண்மணி. யாதவப் பிரகாசரின் தாயார்.
தொடரும்...
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
....................என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
பெயரிட்ட பெரியவர் - 10
அவருக்கு இந்த உலகம் என்பது திருப்பதி மலையடிவாரத்தில் தொடங்கி, ஏழாவது மலை உச்சியில் உள்ள வேங்கடேசப் பெருமாளின் சன்னிதியில் முடிகிற பரப்பளவு கொண்டது. அவரது உலகத்தில் ஒருவர் மட்டுமே வசித்துக் கொண்டிருந்தார். வேங்கடம் எனும் அம்மலையின் பதியான எம்பெருமான். பெருமாளுக்கு தினசரி தீர்த்த கைங்கர்யம் செய்து கொண்டிருந்த அவரைப் பிராந்தியத்தில் பெரிய திருமலை நம்பி என்று அழைத்தார்கள்.
திருவரங்கத்தில் வைணவ நெறி தழைக்கச்செய்து கொண்டிருந்த ஆளவந்தாரிடம் சீடராக இருந்தவர் அவர். ஆளவந்தார்தான் ஒருநாள் கேட்டார். 'வேங்கடமலைப் பெருமானுக்குக் கைங்கர்யம் செய்ய, பொறுப்பாக யாராவது அங்கு இருக்க வேண்டியுள்ளதப்பா. நமது மடத்தில் இருந்து யார் போகத் தயார்?'சீடர்கள் எதிரே அமர்ந்திருந்தார்கள்.
குரு சொன்னால் எதுவும் செய்யச் சித்தமாயிருந்த சீடர்கள். திருக்கோட்டியூர் நம்பி அவர்களுள் ஒருவர். திருமலையாண்டான் இன்னொருவர். திருவரங்கப் பெருமாளரையர் மற்றவர். பெரிய நம்பி. மாறனேர் நம்பி. இன்னும் எத்தனையோ பேர். எப்போதும் குருவின் சொல் வெளிப்பட்டு முடிவதற்குள், 'நான் தயார்' என்று எழுந்து நிற்கும் அவர்கள், அன்றைக்கு அவர் கேட்டு முடித்து நெடுநேரம் ஆன பிறகும் யோசித்தபடியே இருந்தார்கள்.காரணம், சிறிது அச்சம். அவர்கள் திருப்பதி மலையைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்கள்.
ஆளரவமற்ற அபாயகரமான பிராந்தியம். ஏழு மலைகளுள் எது ஒன்றிலும் பாதை கிடையாது. ஏறிச் செல்வதும், இறங்கி வருவதும் எளிய விஷயங்களல்ல. மலைமீது கோயில் கொண்டிருந்த எம்பெருமானுக்குக் காவலாக நுாற்றுக்கணக்கான மிருகங்கள் மலையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. பசித்த மிருகங்கள். பெரும்பாலும் அவை மனிதர்களை அங்கு நடமாடக் கண்டதில்லை. காண நேர்ந்தால் சும்மா விட்டு வைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
ஒரு ஆத்திர சகாயத்துக்கு நாலு பேர் உடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.'என்ன யோசிக்கிறீர்கள்?' என்றார் ஆளவந்தார்.யாரும் பதில் சொல்லாதிருந்த அச்சமயத்தில் ஒரு குரல் மட்டும் ஓங்கி ஒலித்தது. 'இன்றே கிளம்புவதா அல்லது நாளை கிளம்ப உத்தரவாகுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் சுவாமி!'அவர்தாம் ஸ்ரீசைல பூர்ணர் என்று அழைக்கப்பட்ட பெரிய திருமலை நம்பி. ஆளவந்தார் புன்னகை செய்தார்.
அவரிடம் ராமாயணத்தின் உட்பொருள் பயில வந்தவர் அவர். தீயின் செஞ்சுடைப் போன்ற புத்திக் கூர்மை. புல்லின் மேல் படர்ந்த பனியின் உள்ளே ஊடுருவி, பிரபஞ்சத்தையே தரிசிக்கத் தெரிந்த பெரும் தெளிவு. ஆளவந்தாரின் பிரிய மாணாக்கர்.அன்றைக்குத் திருவரங்கத்தை விட்டுக் கிளம்பி திருமலைக்குச் சென்று சேர்ந்தவர்தான். அதன்பிறகு அவர் இறங்கி வந்தது, தமது தமக்கைக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என்று கேள்விப்பட்டபோதுதான்.
திருப்பெரும்புதுாரில் இருந்து மைத்துனர் ஆசூரி கேசவ சோமயாஜி தகவல் அனுப்பியிருந்தார். 'உமக்கு மருமகன் பிறந்திருக்கிறான். வந்து பார்த்து, பெயர் வைத்து ஆசீர்வதித்துச் செல்லவும்.'திருமலை நம்பிக்கு அதுவரை தனக்கு இரு தங்கைகள் இருக்கிற விஷயமே கூட நினைவில்லை. நாளும் பொழுதும் நாரணன் சேவையிலேயே கழிந்து கொண்டிருந்தது அவருக்கு. சட்டென்று மருமகன் பிறந்திருக்கிற செய்தி கிடைத்ததும் மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. உடனே ஜாதகத்தைக் கணித்துப் பார்த்தார்.
அது பிங்கள வருஷம் (கி.பி.1017). சித்திரை மாதம் பன்னிரண்டாம் தேதி வளர்பிறை பஞ்சமி திதி கூடிய வியாழக்கிழமை.
திருவாதிரை நட்சத்திரத்தில் மருமகன் மதியம் பன்னிரண்டு மணிக்கு ஜனித்திருக்கிறான்.ஆ..., ராகுவின் நட்சத்திரத்தில் அல்லவா பிறந்திருக்கிறான்? இவ்வுலகில் மாபெரும் மகான்கள், ஞானஸ்தர்கள் அத்தனை பேரும் இதுவரை ராகு அல்லது கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். தவிரவும் கடக லக்னம்.
அது தலைமைப் பதவிக்கான நுழைவாயில். லக்னாதிபதி சந்திரன் விரய ஸ்தானத்தில் இருக்கிறான். ஆக, ஆலயப் பணிகளில் நாட்டம் கொண்டவன். ஐந்தாம் இடத்தில் கேது உட்கார்ந்திருக்கிறான். சந்தேகமேயில்லை. ஒன்று சாம்ராஜ்ஜியம் அல்லது சன்னியாசம்தான்!பெரிய திருமலை நம்பி அன்றே கிளம்பி திருப்பெரும்புதுாருக்கு விரைந்தார்.
தங்கையின் மகனை அள்ளி ஏந்தி உச்சிமோந்து சீராட்டி னார். அவரது உள்ளுணர்வு அவருக்கு அனைத்தையும் சொன்னது. அது ஆதிசேஷன் அம்சம். வாராது வந்த மாமணி. குழந்தைக்கு இளையாழ்வான் என்று அவர்தான் பெயரிட்டது. 'காந்திமதி! உன் மகன் உலகை ஆளப் போகிறவன். அறத்தின் காவலனாக நின்று தழைக்கப் போகிறவன். இது அவதாரம். நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்.
' காந்திமதியும், கேசவ சோமயாஜியும் நெக்குருகிப் போனார்கள். பெரிய திருமலை நம்பியின் தாள் பணிந்து மகிழ்ந்தார்கள். அன்றைக்கு ராமானுஜருக்குப் பெயர் வைத்துவிட்டுப் போன பெரிய திருமலை நம்பி மீண்டும் மலையை விட்டு இறங்கி வந்தது, ஏழு வருடங்கள் கழித்து அடுத்த தங்கைக்கு பிள்ளை பிறந்தபோதுதான். அவள் காந்திமதிக்கு இளையவள்.
பெரிய பிராட்டி என்று பேர். அவள் பிள்ளைக்கு கோவிந்தன் என்று பெயர் வைத்தார் நம்பி.'இவன் இளையாழ்வானுக்குப் பிந்தி பிறந்தவன் மட்டுமல்ல தங்கையே. அவனுக்கு நிழலே போல் எப்போதும் உடனிருக்கப் போகிறவனும் கூட. அவனால் தழைக்கப் போகிற அறங்களுக்கு இவன் காவலனாக இருக்கப் போகிறான்.' என்று சொல்லிவிட்டுப் போனார். அதைத்தான் ராமானுஜர் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அதனால் வந்ததுதான் அந்தப் புன்னகை. அதனாலேயேதான் அவர் கோவிந்தனை மீட்டுக் கொண்டு வரும் பொறுப்பைப் பெரிய திருமலை நம்பியிடம் விட்டுவிடலாம் என்று நினைத்தார்.விவரம் தெரியாத ஒருவன் என்றால் யார் வேண்டுமானாலும் பேசி, மனத்தை மாற்றிவிட முடியும். கோவிந்தன் அப்படியல்ல. வேத வேதாந்தங்கள் பயின்றவன். பெரிய ஞானஸ்தன். ஒரு தரிசனம் போல் அவனுக்கு ஏதோ நேர்ந்திருக்கிறது. கங்கையில் கிடைத்த சிவலிங்கம்.
ஒரு பெரும் பரவச நிலையில் காளஹஸ்தியில் சிவஸ்மரணையில் லயித்துப் போனவன்.'எனக்கு அவன் வேண்டும் முதலியாண்டான்! வைணவ தரிசனம் வையம் முழுதும் பரவ வேண்டுமென்றால் அதற்கு வைராக்கிய சீலர்களின் தோள் வேண்டும். கோவிந்தனை மீட்டு வர நான் பெரிய திருமலை நம்பியைத்தான் நம்பியாக வேண்டும்' என்றார் ராமானுஜர். பேசிக்கொண்டிருந்தபோது மடத்தின் வாயிலில் யாரோ வருவது தெரிந்தது. 'யாரது...?' என்றார் ராமானுஜர்.உள்ளே நுழைந்தவர் ஒரு வயதான பெண்மணி. யாதவப் பிரகாசரின் தாயார்.
தொடரும்...
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
அம்மா, நலமா? 11
என்னைத் தெரிகிறதா மகனே? நினைவிருக்கிறதா?'நெருங்கி வந்து கரம் கூப்பிக் கேட்ட அந்தக் கிழவியைக் கண்டதும், துள்ளி எழுந்தார் ராமானுஜர்.
'அம்மா, வரவேண்டும். நலமாக இருக்கிறீர்களா? யாதவர் நலமாக உள்ளாரா?' அவள் பதில் சொல்லவில்லை. தன்னெதிரே தகதகவென ஆன்ம ஒளி மின்னப் புன்னகையுடன் நின்றிருந்த ராமானுஜரைத் தலைமுதல் கால் வரை விழுங்கிவிடுவது போலப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
'என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? உட்காருங்கள்.''என்னை மன்னிக்க வேண்டும். பழைய நினைவில் உங்களை மகனே என்று அழைத்து விட்டேன். குரு ஸ்தானத்தில் இருக்கிறவர் தாங்கள். தவிரவும் சன்னியாசி. என்னை ஆசீர்வதியுங்கள்' என்று தாள் பணியப் போனவரை ராமானுஜர் தடுத்தார்.
'அப்படிச் சொல்லாதீர்கள் தாயே. இப்பூவுலகைத் தாங்குவதும் பெண்கள்தாம், உலகு தழைப்பதும் பெண்களால்தான். சாட்சாத் பெருந்தேவித் தாயாரேதான், இவ்வுலகில் தோன்றும் அத்தனை பெண்களாகவும் இருக்கிறவள். உமது மகனும், எனது பழைய குருவுமான யாதவரைக் கேட்டுப்பாருங்கள். அவர் நம்பும் அத்வைத சித்தாந்தத்தை வகுத்தளித்த ஆதிசங்கரர், எப்பேர்ப்பட்ட துறவி!
ஆனாலும், தமது தாயார் காலமானபோது அவருக்குச் செய்ய வேண்டிய அத்தனைச் சடங்குகளையும் சிரத்தையாகச் செய்து முடித்தவர். தாயாரைத் துறக்கத் திருமாலாலும் முடியாது; திருமால் அடியார்களாலும் முடியாது!'சிலிர்த்துவிட்டது அந்தக் கிழவிக்கு. பேச்செழவில்லை. திருப்புட்குழியில் இருந்து கிளம்பி காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்திருந்தாள் அவள். கோயிலுக்கு வந்ததாகச் சொன்னது ஒரு பாவனைதான்.
உண்மையான நோக்கம் ராமானுஜரைச் சந்திப்பதுதான். அவளது மகனுக்கு இருந்ததோ என்னவோ. அவளுக்குக் குற்ற உணர்ச்சி நிறையவே இருந்தது.ராமானுஜருக்குத் தனது மகன் செய்த கொடுமைகள். சொல்லிக் கொடுக்கிற இடத்தில் இருந்துகொண்டு, எந்த விவாதத்துக்கும் இடம் தர மறுத்த ஏகாதிபத்தியம்.
சுயமாகச் சிந்திக்கத் தெரிந்த மாணாக்கனைத் தட்டி வைக்க நினைத்த சிறுமை. அது முடியாதபோது கொல்லவே நினைத்த கொடூரம்.ஆனால், விந்திய மலைக் காட்டில் இருந்து ராமானுஜர் காஞ்சிக்கு வந்து சேர்ந்த கதையை ஊரே வியந்து பேசியபோது, அந்தக் கிழவி தன் மகனிடம் எடுத்துச் சொன்னாள். 'மகனே, நீ செய்தது தவறு. செய்ய நினைத்தது மிகப் பெரிய தவறு.
நாள் முழுதும் வேதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறவன் இப்படியொரு ஈனச் செயலை மனத்தாலும் நினைப்பது பெரும் பாவம். நீ நினைத்தது மட்டுமின்றி செயல்படுத்தவும் பார்த்திருக்கிறாய். இப்போது இளையாழ்வான் உனக்குப் பல மாதங்கள் முன்னதாகக் காஞ்சிக்கு வந்து சேர்ந்துவிட்டான். பேரருளாளனின் பெருங்கருணைக்குப் பாத்திரமானவன் அவன் என்பது நிரூபணமாகிவிட்டது. எப்படியாவது சென்று மன்னிப்புக் கேட்டுவிடு.'யாதவர் ஒன்றும் சொல்லவில்லை.
கண்மூடி அமைதியாக யோசித்தபடி இருந்தார். நடந்ததை அவரால் நம்பவும் முடியவில்லை; ஜீரணிக்கவும் முடியவில்லை. தமது சீடர்களுடன் அவர் யாத்திரை முடித்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த அன்றே, ஊர் எல்லையிலேயே ராமானுஜரை அவர் சந்தித்திருந்தார். தன் தாயிடம் அதைப் பற்றி அவர் சொல்லியிருக்கவில்லை.
மறக்கமுடியாத தினம். சாகிற வரை மட்டுமல்ல. எத்தனை பிறப்பெடுத்தாலும் மறக்கக்கூடாத தினமும் கூட.ராமானுஜர் அப்போது சாலைக் கிணற்றில் இருந்து நீர் எடுத்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தார். அதேசமயம் யாதவரின் குழு காஞ்சி எல்லையை நெருங்கியிருந்தது.'அதோ, அங்கே வருவது யார்? ராமானுஜன் மாதிரி தெரிகிறதே?' யாதவர் பரபரப்பானார்.
'ஆம் குருவே. ராமானுஜனேதான். விந்தியக் காட்டில் இறந்து போனவன் இங்கு எப்படி வந்திருக்க முடியும்? நம்பவே முடியவில்லை.' மாணவர்கள் வாய் பிளந்தார்கள்.மேற்கொண்டு ஓரடி எடுத்து வைக்கவும் யாதவரால் முடியவில்லை. கால்கள் உதறின. உதடு உலர்ந்து போனது. நெஞ்சுக்குள் நடுக்கப் பந்தொன்று துள்ளிக் குதித்தது. பேயடித்த மாதிரி நின்றவரை ராமானுஜர் நெருங்கினார்.
ஒரு கணம்தான். சட்டென்று குடத்து நீரைக் கீழே வைத்துவிட்டு அப்படியே தாள் பணிந்தார். 'குருவே வணக்கம். யாத்திரை முடிந்து நலமாகத் திரும்பினீர் களா?''ராமானுஜா, நீ... நீயா?!'ராமானுஜர் எதையும் மறைக்கவில்லை.
பேரருளாளனின் கருணையால் தாம் ஊர் திரும்பிய கதையை அவரிடம் அப்படியே விவரித்தார். 'காட்டில் வழி தவறிய என்னை அருளாளன் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்திருந்தால் நானும் காசிக்கு வந்திருப்பேன். எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது.'மறந்தும் அவரது கொலைத் திட்டம் தனக்குத் தெரிந்து போனதைப் பற்றி அவர் வாய் திறக்கவில்லை. யாதவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அழுகையும் வெட்கமும் அவரைப் பிடுங்கித் தின்றன.
மொழி கைவிட்டு நிராயுதபாணியாக நின்றவர், அப்படியே ராமானுஜரைக் கட்டியணைத்துக் கொண்டார். 'நீ காட்டு மிருகங்களால் வேட்டையாடப் பட்டிருப்பாய் என்று நினைத்து விட்டோம். நல்லவேளை, நீ சாகவில்லை. உனக்கு மரணமில்லை ராமானுஜா!'யாதவரின் சீடர்களால் நம்பவே முடியவில்லை. அவர்கள் உண்மையில் பயந்திருந்தார்கள். பேரருளா ளனே வேடமிட்டு வந்து காத்திருக்கிறான் என்றால், இவன் சாதாரணமானவனாக இருக்க முடியாது.
ஊர் திரும்பியதும் பிராந்தியம் முழுதும் இதே பேச்சாக இருப்பதை அவர்கள் கவனித்தார்கள். விந்திய மலையில் ராமானுஜர் காணாமல் போனதற்குச் சரியாக மூன்று தினங்களுக்குள் அவர் காஞ்சிக்கு வந்து சேர்ந்த விவரம். எப்படி முடியும், எப்படி முடியும் என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு, ராமானுஜர் சொன்னதே உண்மை என்ற முடிவுக்கு வந்தார்கள்.'நல்லதப்பா! நாளை முதல் நீ மறுபடியும் பாடசாலைக்கு வந்துவிடு.
நீ இருந்தால்தான் வகுப்பு களை கட்டுகிறது' என்றார் யாதவர்.'நீ எப்படி அதை அன்று ஏற்றுக் கொண்டு மீண்டும் வகுப்புக்கு வந்தாய் என்பது இப்போதும் எனக்கு வியப்புத்தான்' என்றாள் யாதவரின் தாயார்.ராமானுஜர் புன்னகை செய்தார். அது திருக்கச்சி நம்பியின் உத்தரவு.அன்றைக்கு வீட்டுக்குப் போனதும் நடந்ததை ராமானுஜர் தனது தாயிடம் சொன்னார். 'என்னிடம் கேட்காதே; திருக்கச்சி நம்பியிடம் கேள்' என்று அவள்தான் திருப்பி விட்டது.
'ராமானுஜரே! உமக்கான பாதை போடப்படும் வரை நீர் எங்காவது வாசித்துக் கொண்டிருப்பதுதான் நல்லது. யாதவர் வேதம்தானே சொல்கிறார்? போய் பாடம் கேளும். அர்த்தம் தவறாகத் தோன்றுமானால் அதை உமக்குள் குறித்துக்கொண்டு வாரும். அவரிடம் விவாதிக்க வேண்டாம்!' திருக்கச்சி நம்பி சொன்னதை யாதவரின் தாயாரிடம் எப்படிச் சொல்ல முடியும்?எனவே அவர் புன்னகை செய்தார்.
தொடரும்...
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
-
Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
பேய்ப்பெண் ! -12
யாதவப் பிரகாசரின் தாயார் உள்ளுக்குள் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தாள். ஒரு விஷயம் இருக்கிறது. நெடுநாள் உறுத்தல். அதை ராமானுஜரிடம் சொல்ல வேண்டும். அதன்மூலம் என்னவாவது நல்லது நடக்க வேண்டும். முடியுமா?
'அம்மா, உங்கள் மனக்குறையைச்சொல்லுங்கள். எதற்காகத் தயக்கம்?' என்று ராமானுஜர் திரும்பத் திரும்பக் கேட்டார். ஆனாலும், அவளால் சொல்ல முடியவில்லை. ஏனெனில் சம்மந்தப்பட்டிருந்தது அவளது மகன் யாதவப்பிரகாசர். அவருக்குத் தெரியாமல்தான் அவள் காஞ்சிக்கு வந்திருந்தாள். கேட்டால், கோயிலுக்குப் போனதாகச் சொல்லிக் கொள்வதில் பிரச்னை இல்லை. ஆனால் ராமானுஜரை தரிசிப்பதே அவளது காஞ்சி வருகையின் நோக்கம் என்று சொன்னால் அவன் தாங்குவானா? யாதவர் சில காலமாக மிகுந்த மனக்குழப்பத்தில் ஆழ்ந்திருந்த தருணம் அது.
பாடசாலை சரிவர இயங்கவில்லை. அவரால் முடியவில்லை என்பதுதான் காரணம். வயது கொடுத்த தள்ளாமை ஒருபுறம். குற்ற உணர்ச்சிகள் அளித்த குறுகுறுப்பு மறுபுறம். திருப்புட்குழியில் இருந்தபடிக்கு காஞ்சியில் ராமானுஜரின் செல்வாக்கு வளர்ந்து கொண்டிருந்ததை அவர் கவனித்தபடியேதான் இருந்தார்.
ராமானுஜரின் செல்வாக்கு வளர்கிறது என்றால், அத்வைதம் என்னும் மகாதத்துவத்தின் ஆணிவேர் அசைக்கப்படுவதாக அர்த்தம். இது சரியா? இப்படித்தான் இது நிகழ்ந்தாக வேண்டுமா? ஜகத்குருவான ஆதிசங்கரரின் தீர்மானங்களையே ஒருவன் நிராகரிப்பானா! அவனது வாதங்களும் வலுவாக இருந்துவிட முடியுமா! அதையும் மக்கள் ஆமோதிப்பார்களா?
என்னதான் நடக்கிறது இங்கே?குழப்பம் அவரைக் கொன்று கொண்டிருந்தது. நேரே போய் சிண்டைப் பிடித்து ஆட்டிவிட ஒரு நிமிடம் ஆகாது. ஆனால் ராமானுஜரை நினைக்கும்போதெல்லாம் அவருக்கு இரண்டு விஷயங்கள் முதலில் நினைவுக்கு வந்துவிடும். கொல்ல நினைத்த கொடும் தருணம். வெல்ல முடியாமல் வாதங்களில் வீழ்ந்த பல தருணங்கள்.
'ரொம்ப யோசிக்க வேண்டாம் தாயே. நமக்கு அப்பால், நன்மை தீமைகளுக்கு அப்பால், தத்துவங்களுக்கு அப்பால், சித்தாந்தங்களுக்கு அப்பால், வேதாந்தங்களுக்கும் அப்பால் விவரிக்க முடியாத பெரும் பொருளாகப் பரந்தாமன் வீற்றிருக்கிறான்.
அனைத்தையும் உதிர்த்துவிட்டு அவன் தாள்களை மானசீகத்தில் பற்றிக்கொண்டால் போதும். ஜீவாத்மா துவண்டு விழும் தருணம் உண்டு. அறிவும், ஞானமும் உதிரும் கணம் உண்டு. மாயை கண்ணைக் கட்டுகிறதென்றால், செருக்கே மாயையின் வித்து. சரணாகதி ஒன்றே அனைத்தையும் அகற்றி அவனிடம் கொண்டு சேர்க்கும் வழி.'
அந்தக் கிழவிக்குப் புரிந்தது. ஆனால், அவள் மகனுக்குப் புரிய வேண்டுமே?ஒரு சம்பவம். அவளால் சாகிற வரைக்கும் மறக்க முடியாத சம்பவம். அப்போது வட தமிழகத்தில் காஞ்சியின் சுற்றுவட்டாரப் பிராந்தியத்தை ஆண்டு கொண்டிருந்த சோழச் சிற்றரசன் ஒருவனது மகளுக்குப் பேய் பிடித்துவிட்டது என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
வராத மருத்துவரில்லை, பார்க்காத வைத்திய மில்லை. பூஜைகள், யாகங்கள் ஒரு பக்கம். மந்திர தந்திரவாதிகளின் பேயோட்டப் பிரயத்தனங்கள் ஒரு பக்கம். எதுவும் பலனளிக்காமல் அந்த இளவரசி ஆட்டமான ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தாள். யாரோ அரசனிடம் போய்ச் சொன்னார்கள்.
'திருப்புட்குழி யாதவப் பிரகாசர் பெரும் ஞானஸ்தர். தவிரவும், அவருக்கு மந்திரப் பிரயோகங்கள் தெரியும்.
மாந்திரிகம் அறிந்தவர். அரசர் அவரை அரண்மனைக்கு வரவழைத்து இளவரசியைக் காட்டலாமே?'உத்தரவு ஊருக்கு வந்து சேர்ந்தபோது யாதவருக்குக் கட்டுக்கடங்காத அகங்காரம் தலைக்கேறிவிட்டது. 'நான் எதற்கு வரவேண்டும்? யாதவப் பிரகாசன் உன்னைப் போகச் சொன்னான் என்று அந்த பிரம்ம ராட்சசனிடம் போய்ச் சொல்லுங்கள். ஓடியே விடுவான்' என்று அரசு ஊழியர்களிடம் சொல்லி அனுப்பி விட்டார்.
இது பெரிய இடத்து விவகாரம், நமக்கு பிரம்ம ராட்சசனையும் தெரியாது; யாதவப் பிரகாசரையும் தெரியாது; எதற்கு வம்பு என்று, அவர்களும் அதேபோல அரண்மனைக்குத் திரும்பி அவர் சொன்னதை அப்படியே சொன்னார்கள்.படுத்திருந்த இளவரசி சீறி எழுந்து கத்தினாள். 'அவனை ஓடிப் போகச் சொல்லுங்கள். நான் அடித்தால் நார்நாராகக் கிழிந்து விடுவான்.' செய்தி கேட்டு அதிர்ந்து போனார் யாதவர்.
இது அவமானமல்லவா? விடமுடியாது. தனது மாணவர் பரிவாரத்துடன் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். 'கூப்பிடுங்கள் உங்கள் மகளை' என்றார் அரசரிடம். சேடிகள் இளவரசியை சபைக்கு அழைத்து வந்தார்கள். பேய் பிடித்த இளவரசி. தலைவிரிகோல இளவரசி. சங்கிலி போட்டுப் பிணைத்திருந்தார்கள். அதை அறுத்தெறிந்து சீறிப் பாயும் வேகம் அவளது ஒவ்வொரு அசைவிலும் தெரிந்தது.
யாதவர் அவள் எதிரே வந்து நின்று மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினார்.'டேய், எனக்கு உன்னையும் தெரியும், நீ சொல்லும் மந்திரங்களும் பொருளோடு தெரியும். என்னை விரட்ட உன்னால் முடியாது. உயிர்மீது ஆசை இருந்தால் ஓடிவிடு' என்றது அந்தப் பேய்ப்பெண்.
'என்னைத் தெரியுமா? என்ன தெரியும் உனக்கு?''போன ஜென்மத்தில் மதுராந்தகம் ஏரிக் கரையில் ஓர் உடும்பாகப் பிறந்தவன் நீ. பரம பக்தர்கள் சிலர் சாப்பிட்டு மீந்த உணவைத் தின்றபடியால் இந்த ஜென்மத்தில் வேதம் சொல்லித்தரும் உயரிய பிறப்பு உனக்கு வாய்த்திருக்கிறது. ஆனால், இந்த ஜென்மத்துப் பாவங்கள் உன்னை இன்னும் இரண்டு ஜென்மங்களுக்கு ஆட்டிப் படைக்கப் போகிறது மூடா! ஓடிப் போ!'
அதிர்ந்து விட்டார் யாதவர். வந்திருந்த அவரது மாணவர்களுக்குப் பேச்சு மூச்சில்லை. ராமானுஜருக்கு ரொம்ப சங்கடமாகப் போய்விட்டது. குருவல்லவா? மன்னனின் சபையில் அவருக்கு இது எப்பேர்ப்பட்ட அவமரியாதை?சட்டென்று அவர் முன்னால் வந்து நின்றார். 'பேயே' என்று தொடங்காமல் 'பெண்ணே' என்று பேச ஆரம்பித்தார். ஒரு நிமிடம்.
ஐந்து நிமிடம். பத்து நிமிடங்கள். மந்திரங்கள் இல்லை. மாயம் ஏதுமில்லை. வெறும் பேச்சு. ஆனால் சாத்விகத்தின் சாறு பூசிய பேச்சு. பரமாத்மாவான நாராயணனின் பாத கமலங்களை முன்வைத்து, அந்தப் பெண் குணமாக மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டார் ராமானுஜர். அன்று அது நடந்தது. அவள் குணமானாள்.தொண்டை மண்டலம் முழுதும் ராமானுஜரின் புகழ் தீயெனப் பரவத் தொடங்கிய தருணம் அது.
'செய்தது நானில்லை; நாராயணனே' என்றார் ராமானுஜர். அந்தப் பணிவு அவரை இன்னும் உயரத்துக்கு எடுத்துச் சென்றது. யாதவர் மட்டும் புழுக்கத்தில் வெந்து கொண்டிருந்தார். தாங்க முடியவில்லை அவரால். 'வேண்டாமப்பா! என்னினும் பெரியவன் என்னிடம் படிக்க அவசியமில்லை. இனி பாடசாலைக்கு வராதே' என்று சொல்லிவிட்டார்.தன் மகன் தரம் தாழ்ந்து போனது அன்றே அத்தாய்க்கு புரிந்துவிட்டது.
தொடரும்...என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
Comment