Announcement

Collapse
No announcement yet.

Old becoming young with the grace of Shiva *திருவிளையாடல் புராணத் தொடர்.*

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Old becoming young with the grace of Shiva *திருவிளையாடல் புராணத் தொடர்.*

    **சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *(154-- வது நாள்.)*
    *23--வது படலம்.*


    ●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
    *விருத்த குமார பாலர் ஆனது.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    விக்கிரம பாண்டியன் சிறந்த முறையிலே ஆட்சி நடத்திக் கொண்டிருந்த காலம் அது.


    மதுரை மாநகரத்திலே விருபாக்ஷன் என்ற வேதியன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.


    விருபாக்ஷனுக்கு கற்பிலே சிறந்த சுபவிரதை என்ற மனைவி இருந்தாள்.


    பல ஆண்டுகளாகக் குழந்தை பிறக்காதிருந்ததால் இருவரும் சேர்ந்து பல சிவதருமங்களைச் செய்தனர்.


    விரதங்களை அனுஷ்டித்தனர். இவ்வாறாக அருந்தவம் புரிந்ததாலே அவர்களுக்குப் பெண் குழந்தையொன்று பிறந்தது.


    குழந்தைக்குக் கெளரி என்று பெயரிட்டுப் போற்றி வளர்த்து வந்தார்கள்.


    கெளரிக்கு ஐந்து வயதாயிற்று. அந்தச் சிறு வயதிலேயே அவள் பிறவி நோயை போக்குவதற்கான உயர்ந்த வழியை ஆராயத் தொடங்கினாள்.


    தனது தகப்பனாரிடம் சென்று, "தந்தையே! இந்தப் பிறவியை ஒழிக்கும் திவ்ய மந்திரம் எதுவோ?" என வினவினாள்.


    விரூபாக்ஷன் வியப்படைந்தான். மிகுந்த சந்தோஷத்தோடு தன் மகளுக்குப் பராசக்தி மகா மந்திரத்தைப் பேரன்புடன் உபதேசம் செய்தான். இது கேட்டுணர்ந்த கெளரியும் மகாமந்திரத்தை மிகுந்த பயபக்தி சிரத்தையுடன் ஜபம் செய்து கொண்டு வந்தாள்.


    வயது ஏறஏறக் கெளரியும் எழில் மிகுந்தவளாகிப் பூரித்து வளர்ந்து வந்தாள். கல்யாண வயதும் வந்து விட்டது.


    தன் அருமைக் குமாரியின் மனத்தின் பொருட்டு நல்ல வரனை எதிர் நோக்கியிருந்தான் விருபாக்ஷன்.


    இப்படியிருந்த காலத்தில் அயலூர்ப் பிரம்மசாரியொருவன் பிச்சை யெடுத்துக் கொண்டு வந்தான். அவன் ஒரு வைஷ்ணவப் பிரம்மசாரி.


    அவனுக்குத் தனது மகளைக் கொடுக்க விருப்பங் கொண்டான் விருபாக்ஷன்.


    யாரையும் கலந்தாலோசிக்காமல் வைணவப் பிரம்மசாரிக்குத் தன் மகள் கெளரியைக் கன்யாதானம் செய்து கொடுக்கத் துணிந்து விட்டான்.


    எதையும் ஆராய்ந்து பார்க்காமல் தன் மகள் கெளரியைத் தாரை வார்ப்பதைக் கண்ட சுபவிரதையும் சொந்தக்காரர்களும் மிகுந்த கவலை கொண்டனர். *"விதியின் செயலோ!"* என எண்ணி வருந்தினர்.


    பிரம்மசாரியின் குலம், கோத்திரம், சூத்திரம், எல்லாவற்றையும் ஆராய்ந்ததில் எல்லாம் ஒத்திருந்தன. ஆனால் மதம்தான் வைஷ்ணவமாக இருந்தது. குற்றமென்று ஒன்றைச் சொல்ல வேண்டியதிருந்தால் மதத்தைத்தான் சொல்ல வேண்டும். அது ஒன்றுதான் வேறொன்றுமில்லை.


    முடிவில், இதனைத் தெரிந்த சுபவிரதையும் சொந்தக்காரர்களும் ஒருவாறாக ஒப்புக் கொண்டனர். வேத நீதிக்கு உட்பட்டு விவாகம் நடந்தேறியது. பிற்பாடு பற்பல சிறந்த சீர்வரிசைகளுடன் தன் மகள் கெளரியை அவளது மணவாளனோடு அவனது ஊருக்கு அனுப்பி வைத்தான் விருபாக்ஷன்.


    வைஷ்ணவப் பிராமணன் மனைவி கெளரியுடன் வீடு சென்றான். வைஷ்ணவப் பெற்றோர் மகனின் செய்கை கண்டு வாட்டமுற்றனர். சிவக்கோலம் கொண்டு சிவ சிந்தனையுடன் துலங்கிய கெளரியின் மீது மிகுந்த வெறுப்புக் கொண்டனர். அவளை ஒதுக்கியும் வைத்தனர்.


    ஒருநாள் அவர்கள் எல்லோரும் பக்கத்து ஊருக்கு ஒரு கல்யாணத்திற்ககச் செல்ல வேண்டி வந்தது. வீட்டிலே கெளரியைத் தனியே விட்டு விட்டுப் பூட்டிக் கொண்டு போய் விட்டனர்.


    தனியாக இருந்த கெளரி பலவாறாக எண்ணமிட்டாள். குற்றம் நீங்குமாறு ஒரு சிவனடியாரையும் காணப் பெறமுடிய வில்லையே! என ஏங்கினாள்.பெருங்கவலை கொண்டாள்.


    தனது அருமைப் பக்தையின் கவலையைப் போக்கத் திருவுள்ளம் கொண்டார் சோமசுந்தரப் பெருமான். உடனே சைவக் கிழவர் போன்ற உருவமெடுத்தார். சிவச் சின்னங்கள் சிறந்து விளங்க விருத்த வேதியரான சிவபெருமான் கெளரியின் வீட்டுக்குள்ளே வந்து புகுந்தார்.


    கெளரி மிகுந்த அன்புடன் அவ்வந்தண முதியவரை வரவேற்றாள். வேதியர் தாம் பசியோடு வந்திருப்பதைத் தெரிவித்தார்.


    வீடு பூட்டப்பட்டிருப்பதைப் பற்றிக் கெளரி பெரிதும் வருந்திக் கூறினாள்.


    அது கண்ட கிழவர், *"நீ தொட்டால் பூட்டு திறந்து கொள்ளும்,"* என்று பரிவுடன் அருளினார்.


    கிழவர் சொன்னபடியே கெளரி பூட்டினைத் தொடவும், அது திறந்து கொள்ள, அடுக்களை வந்த கெளரி அமுது சமைத்துக் கிழவருக்கு பரிமாற ஆயத்தமானாள். சைவக் கிழவருக்கு ஏற்ற சிறந்த உபசாரங்களை யெல்லாம் செய்து மிகுந்த அக்கறையுடன் அமுது படைத்தாள்.


    வேதக் கிழவர் திருவமுது செய்தருளினார். அமுதுண்ட கிழவர் மூப்பு நீங்கப் பெற்றார்! என்ன விந்தை! மன்மதனைப் பழிக்கச் செய்யும் பேரழகுடன் நல்ல கட்டுடைய வாலிபனாக மாறி நின்றார்.


    வெண்ணீறு சந்தனமாயிற்று. உருத்திராட்ச மாலை நல்ல பொன் மணி மாலையாக மாறியது. அந்த யெளவனக் கோலத்தைக் கண்ட கெளரி-- கற்பிற் சிறந்தவள் ஆகையால்-- திகைத்தாள்.


    மனம் பதைபதைக்க, உடல் வியர்க்க, மிகுந்த பயத்துடன் நடுங்கிப்போய் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றாள்.


    அந்தச் சமயம் பார்த்து அயலூர் போயிருந்த கெளரியின் மாமியாரும் சொந்தக்காரரும் வீடு திரும்ப வந்து விட்டனர்.


    பதினாறு வயதுடன் விளங்கிய அந்தணப் பெருமான் உடனே பச்சைக் குழந்தையாக மாறி விட்டான். ஆடையின் மேல் கிடந்தது சிவக் குழந்தை. குழந்தையும் அழத் தொடங்கின.


    பரபரப்புடன் வீடுனுள் புகுந்த கெளரியின் மாமியார் குழந்தையைக் கண்டாள். திகைப்புக் கொண்டாள். தன் மருமகளைப் பார்த்து, *"ஏது இந்தக் குழந்தை?"* என்று சினத்துடன் கேட்டாள்.


    அதற்குக் கெளரி, "தேவதத்தன் என்னும் அந்தணன் தனது மனைவியோடு இங்கே வந்தான். *குழந்தையைப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டுப் போனான்,"* என்றாள்.


    இதனைக் கேட்ட வைணவராகிய மாமியும் மாமனும், பொறுமையும் கருணையும் இழந்தவர்களானார்கள். *"சைவக் குழந்தையின் மேல் அன்பு கொண்டவளே! நீஎங்களுக்கு வேண்டாதவள் இந்தக் குழந்தையும் எடுத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிப் போய்விடு,"* என்று கோபத்துடன் சொல்லி அவளைக் குழந்தையும் கையுமாகத் துரத்தி விட்டனர்.


    வெளியேறிய கெளரி ஒன்றும் தெரியாதவளாகி மனம் கலங்கினாள். தாயற்றத் திருமுகம் பார்த்துத் தளர்ந்தாள்.


    சோமசுந்தரப் பெருமானை இடைவிடாது தியானம் செய்து கொண்டே உமா மகா மந்திரத்தை உச்சரித்தாள்.


    என்ன ஆச்சரியம். கையிலுள்ள குழந்தையைக் காணோம். மாயமாய் மறைந்துவிட்டுப் போயிருந்தது.


    ஆகாயத்திலே சிவபெருமான் உமாதேவியாருடன் ரிஷப வாகனத்திலே திருக்காட்சி தந்தருளினார். தேவக் காட்சி கண்ட கெளரி சிவானந்தக் கடலில் மூழ்கினாள்.


    உமாதேவியின் திருமந்திரத்தை உச்சரித்து வந்த கெளரிக்குச் சாரூபம் அளித்தருளினார் சிவபெருமான்.


    கெளரியையும் உமையின் திருவடியாக்கித் தன்னிடம் ஐக்கியமாக்கிக் கொண்டார்.


    கண்ட யாவரும் வணங்கினர். தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். ரிஷப வாகனம் கெளரி சுந்தரரைத் தாங்கி விண்ணேறிச் சென்றது.


    திருச்சிற்றம்பலம்.


    *திருவிளையாடல் புராணத் தொடர் இன்னும் தொடர்ந்து வ(ள)ரும்.*


    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X