சஷ்டி என்பது மாதம் இரு முறை வரும் திதி என்றும் இது முருகக் கடவுளுக்காக அர்பணிக்கப்பட்ட நாள் என்பதும் நாம் அறிந்ததே. கந்த சஷ்டியை நாம் ஏன் அனுசரிக்கிறோம், அதன் பின்னணி என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா?
சூரபத்மன் என்பவன் கொடிய அரக்கன்.தனது தவ வலிமையால் வரங்கள் அடைந்தவன்.தேவர்களை சிறை பிடித்து துன்புறுத்தியவன். அவனின் கொடுமை தாங்காமல் தேவர்கள் பிரம்மாவிடம் போய் முறையிட,அவரும் சிவனாரின் பக்கம் கையை காண்பித்தார்.
சிவன் தனது நெற்றிக்கண்ணில் இருந்து ஒரு குழந்தையை உருவாக்கினார்.அந்த பாலகனே முருகன்.அருமையாக வளர்ந்து வாலிபனாக ஆனவுடன், தேவர்களின் சேனாபதியாக முருகன் சூரபத்மனை அழிக்கப் புறப்பட்டார். உடன் துணை நின்ற தளபதி வீரபாகு. தகப்பனாம் சிவன் அரிய சக்திகளை பரிசாக அளிக்க தாய் பார்வதி வேலை முருகனுக்கு தனது சக்தியின் அடையாளமாக அளித்தாள்.
சிங்கமுகன், தாரகாசுரன் என்னும் சூரபத்மனின் தம்பியரை அழித்த முருகன் சூரபத்மனையும் முறியடித்தார். அவன் ஒரு மரமாக மாறவே அந்த மரத்தை இரண்டாக பிளந்தார். சூரபத்மனின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு பாகம் மயிலாகவும் மற்றொரு பாகம் சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாகக் கொண்ட முருகன் சேவலை தனது கொடியில் ஏற்றுக் கொண்டார். இவ்வாறாக சூரபத்மன் இறக்கும் தருவாயில் மாபெரும் புகழைப் பெற்றார். சூரசம்ஹாரம் நடந்த இடம் திருச்செந்தூர் ஆகும்.
முருகனின் இந்த வெற்றி தீயவற்றை ஒழிக்கும் நன்மையின் வெற்றியாகும். இதனைக் கொண்டாடுவதே கந்த சஷ்டி ஆகும். இதனை பற்றி கந்தபுராணத்தில் சொல்லப்பட்டு உள்ளது.
சஷ்டி அன்று முருகனை வேண்டி இம்மையில் பாபங்களில் இருந்து விலகி நற்கதி பெறுவோமாக.
Comment