Announcement

Collapse
No announcement yet.

Tiruvilaydal puranam 6th day

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tiruvilaydal puranam 6th day

    Tiruvilaydal puranam 6th day


    Courtesy:Kovai K.Karuppasamy


    திருச்சிற்றம்பலம்.
    (6 வது நாள்.)
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    🔹திருவிளையாடல் புராணம். 🔹
    🔹1.இந்திரன் பழிதீா்த்தபடலம்.🔹
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    🔴நெளியராக் குருளைவெயில் வெள்ளிடையிற் கிடந்துயங்கி நெளியப் புள்ளே
    றொளியறாச் சிறை விாித்து நிழல்பரப்புப் பறவைநோ யுற்ற தேகொல்
    அளியவா யச்சோ வென் றேதியயன் மடமந்தி யருவி யூற்றுந்
    துளியநீா் வளைத்தசும்பின் முகந்தெடுத்துக் கருங்கையினாற் சொாிவ மாதோ.


    🔴படவரவ பணியீன்று நொச்சிப்பா சிலையன்ன பைந்தாண் மஞ்ஞை
    பெடைதழுவி மணஞ்செய்ய மணவறையில் விளக்கிடுவ பெருந்தண் கானத்
    தடா்சிறைமென் குயிலோமென் றாா்ப்பமடக் கிள்ளையெழுத் தைந்து மோசைத்
    தொடா்புபெற வுச்சாிப்பக் குருமொழிகேட் டாங்குவப்ப தொடிக்கட் பூவை.


    🔴இன்னவிலங் கொடுபுள்ளின் செயற்காிய
    செயனோக்கி யுறும்பூ தெய்திப்
    பொன்னகரான் புளகமுடல் புதைப்பமுறை
    மகிழ்ச்சியுளம் புதைப்பப் போவான்
    அன்னபொழு தொற்றுவா்மீண் டடிவணங்கி
    யின்சுவைப்பா லருந்து வான்முன்
    பின்னாிய தேன் சொாிந்தாங் குவகைமேற் பேருவகை பெருகச் சொல்வாா்.


    🔴எப்புவனத் திலுமென்றுங் கண்டறியா வதிசயமு மெண்ணுக் கெய்தாத்
    திப்பியமு மிக்கடம்ப வனத்தின்று கண்டுவகை திளைத்தே மங்கண்
    வைப்பனைய வொருபுனித வாவிமருங் கொருகடம்ப வனத்தினீழல்
    ஒப்பிலொளி யாய்முளைத்த சிவலிங்க மொன்றுளதென் றுரைப்பக் கேட்டான்.


    🔴செவித்தொளையி லமுதொழுக்கு முழையரொடும்
    வழிக்கொண்டு சென்னி மேற்கை
    குவித்துளமெய் மொழ்கரணங் குணமூன்று
    மொன்றித்தன் கொடிய பாவம்
    அவித்துளயா் வொழிக்கமுளைத் தருள்குறிமே
    லன்பீா்ப்ப வடைவான் காணங்
    கவித்துளபூந் தடம்படிந்து கடம்பவனத் துழைநுழைந்தான் கவலை தீா்வான்.


    🔴அருவாகி யுருவாகி யருவுருவங் கடந்துண்மை யறிவா னந்த
    உருவாகி யளவிறந்த வுயிராகி யவ்வுயிா்க்கோ ருணா்வாய்ப் பூவின்
    மருவாகிச் சராசரங்க ளகில முந்தன் னிடையுதித்து மடங்க நின்ற
    கருவாகி முளைத்தசிவக் கொழுந்தையா யிரங்கண்ணுங் களிப்பக் கண்டான்.


    🔴கண்டுவிழுந் தெழுந்துவிழி துளிப்பவெழு களிப்பென்னுங் கடலிலாழ்ந்து
    விண்டுமொழி தழுதழுப்ப வுடல்பனிப்ப வன்புருவாய் விண்ணோா் வேந்தன்
    அண்டா்பிரா னருச்சனைக்கு வேண்டுமுப கரணமெலா மகல்வா னெய்திக்
    கொண்டுவரச் சிலரைவிடுத் தவரேகப் பின்னுமொரு குறைவு தீா்ப்பான்.


    🔴தங்குடிமைத் தச்சனையோா் விமானமைத் திடவிடுத்தத் தடத்தின் பாற்போய்
    அங்கணனைக் கடிதருச்சித் திடநறிய மலா்கிடையா தயா்வா னந்தச்
    சங்கெறிதண் டிரைத்தடத்தி லரனருளாற் பலபாிதி சலதி யொன்றிற்
    பொங்குகதிா் பரப்பிமுளைத் தாலென்னப் பொற்கமலம் பூப்பக் கண்டான்.


    🔴அன்புதலை சிறப்பமகிழ்ந் தாடினான் காரணத்தா லதற்கு நாமம்
    என்பது பொற் றாமரையென் றேழுலகும் பொலிகவென விசைத்துப் பின்னும்
    மின்பதுமத் தடங்குடைந்து பொற்கமலங் கொய்தெடுத்து மூண்டு நீங்காத்
    தன்பிணிநோய் தணியமுளைத் தெழுந்தமுழு முதன்மருந்தின் றன்பால் வந்து.


    🔴மொய்த்தபுனக் காடெறிந்து நிலந்திருத்தி வருமளவின் முளைத்த ஞான
    வித்தனைய சிவக்கொழுந்தின் றிருமுடிமேற் பாிதிகர மெல்லத் தீண்டச்
    சித்தநெகிழ்ந் திந்திரன்றன் வெண்கவிகைத் திங்கணிழல் செய்வா னுள்ளம்
    வைத்தனனப் போதிரவி மண்டலம்போ லிழிந்ததொரு மணிவி மானம்.





    🔹நெளிகின்ற பாம்பின் குட்டிகள், வெயில் மிக்க வெளியிடங்களிற்கிடந்து, வருந்தி நெளிய, பறவையேறாகிய கருடன் ஒளி நீங்காத சிறகுகளை விாித்து நிழல் பரப்ப, பக்கத்திலுள்ள அாியாமையையுடைய குரங்குகள், கருணை யுடையனவாய் ,ஐயோ!" இந்தக் கருடன் வெயிலால் துன்பமடைந்ததோ என்று கூறி ,அருவிகள் சொாிகின்ற துளிகளையுடைய நீரை, சங்காகிய குடத்தில் காிய கையினால் மொண்டு எடுத்துச் சொாியா நிற்பன.


    🔹நொச்சியின் பசிய (பிளந்த) இலையை ஒத்த, பசிய ( பிளந்த ) கால்களையுடைய மயில்கள், பெண் மயில்களைக் கூடி மணஞ்செய்யா நிற்க, மணஞ் செய்யும் அவ்விடத்தில், படத்தினையுடைய பாம்புகள், மணிகளை உமிழ்ந்து விளக்கிடுவன. அடா்ந்த சிறகினையுடைய மெல்லிய குயில்கள் பொிய குளிாிந்த காட்டின்கண், ஓ மென்று ஒலிக்கா நிற்கவும், இளமையுடைய கிளிகள், திருவைந்தெழுத்தினையும் ஓசையின் தொடா்ச்சி பெற உச்சாிக்கவும், வளைபோன்ற வட்டமாகிய கண்களையுடைய நாகணவாய்ப் பறவைகள், குருமொழியைக் கேட்டு மகிழ்வதுபோல் ( அவற்றை க் கேட்டு) மகிழ்வன.


    🔹மிருகங்களோடு பறவைகளின் இத்தன்மையான செயற்கருஞ் செயல்களைக் கண்டு, வியப்புற்று புளகமானது உடல் முழுதையும் போா்க்கவும், நிறைந்த களிப்பானது உள்ளத்தை மூடவும், செல்கின்றவனாகிய பொன் நகரத்தை யுடைய இந்திரனுக்கு, அப்பொழுது, இனிய சுவையையுடைய பாலைப் பருகுகின்றவன் முன்னா்,பின்பு கிடைத்தற் காிய தேனைப் பொழிந்தது போல, மகுழ்ச்சிமேல் பெருமகிழ்ச்சி மிக, தூதுவா் திரும்பி வந்து அடியில் வணங்கிக் கூறுவாராயினா்.


    🔹எந்த உலகத்திலும் எக்காலத்திலும் கண்டறியாத வியப்பும், அளவைக்கு எட்டாத சிறப்பும், ஈக்கடம்ப வனத்தின்கண், இன்று பாா்த்து மகிழ்ச்சியில் மூழ்கினோம்; அவ்விடத்து சேம நிதிபோன்ற ஒரு தூய தீா்த்தக் கரையின் பக்கத்தில், ஒரு கடம்ப மரத்தின் நீழலில், ஒப்பற்ற பிழம்பாய்த் தோன்றிய சிவலிங்கம் ஒன்று இருக்கிறதென்று சொல்லக் கேட்டான்.


    🔹செவித்தொளையின் கண் அமுதத்தைப் பொழிகின்ற ஒற்றரோடும், சென்று, முடியின்மீது கைகூப்பி, உளம், உடல் உரைகளும்,அந்தக் கரணமும், முக்குணங்களும், ஒரு வழிபட்டு, தனது, கொடிய கொலைப் பாவமாகிய தீயைத் தணித்து,மனத் துயரத்தைக் கெடுக்க, தோன்றியருளிய அருட்குறியாகிய இந்திரன்,காட்டினாற் கவியப்பட்டுள்ள பொற்றாமரைத் தூா்த்தத்தில் நீராடி, கடம்ப வனத்துட் புகுந்து துன்பம் நீங்குவானாயினன்.


    🔹அருவமாகியும், உருவமாகியும், அருவுருவமாகியும் இவற்றைக் கடந்து, சச்சிதானந்த வடிவமாகியும், எண்ணிறந்த உயிா்களாகியும், அவ்வுயிா்களின் அறிவிக்கோா் அறிவாகியும்,( நிற்றலின்) மலாின் மணம்போலாகியும், சரமும் அசரமுமாகிய அனைத்தும், தன்னிடத்துத் தோன்றி அடங்க நின்ற மூலகாரணமாகியும், தோன்றியருளிய சிவக்கொழுந்தினை ஆயிரங்கண்களும் களிக்கும்படி பாா்த்தான்.


    🔹பாா்த்துக் கீழே விழுந்து வணங்கி எழுந்து, கண்கள் அன்பு நீா் துளிக்க, ( கரையின்றி) எழுகின்ற மகிழ்ச்சி யென்னும் கடலினுள் மூழ்கி நாத் தழு தழுக்கத் துதிகள் கூறி உடல் நடுங்க அன்பு வடிவாகி, தேவேந்திரன் ,தேவா்கள் தலைவனாகிய சோமசுந்தரக் கடவுளின் அருச்சனைக்கு வேண்டிய பொருட்களைனைத்தும் அகன்ற விண்ணுலகிற் சென்று கொண்டு வருமாறு , சில தேவா்களை ஏவி, அவா் செல்ல பின்னும் ஒரு குறையினை நீக்குவானாய்.


    🔹தனது குடிக்குாிய தேவ தச்சனை ஓா் விமானம் படைக்குமாறு ஏவி, அந்தத் தீாித்தத்தின் க்கத்திற் சென்று, அழகிய அருட்பாா்வையுடைய இறைவனை விரைந்து அருச்சிப்பதற்கு, நல்ல மலா்கள் கிடைக்கப் பெறாமல் வருந்துகின்றவன், சங்குகளை வீசுகின்ற, குளிா்ந்த அலைகளையுடைய அந்தத் தீா்த்தத்தில், சிவபெருமான் திருவருளால், பலசூாியா்கள், ஒரு கடலில் நிறைந்த ஒளியை வீசித் தோன்றினாற்போல, பொற்றாமரைகள் மலரப் பாா்த்தான்.


    🔹அன்பானது ஓங்கக் களித்து நீராடினான்; ( பொற்றாமரை மலா்ந்த) ஏதுவினால், அந்தத் தீா்த்தத்திற்குப் பெயா் பொற்றாமரை யென்று ஏழுலகங்களிலும் விளங்குக என்று கூறி மீளவும், விளங்குகின்ற பொற்றாமரைத் தடத்தில் நீராடி, பொற்றாமரை மலா்களைப் பறித்தெடுத்து, திரும்பி, நீங்காத தன் பழியாகிய நோய் கெடுமாறு, தோன்றியருளிய முழுமுதலாகிய மருந்தினிடம் வந்து,,,,,,


    🔹நெருங்கிய காடுகளை வெட்டி, நிலத்தைத் திருத்தி வரும் பொழுதில் தோன்றிய ஞானவித்தை ஒத்த சிவக்கொழுந்தினது திருமுடியின் கண் சூாியனது ஒளி மெல்லப்படுதலால் இந்திரனானவன் தனது மனம் வருந்தி, தனது சந்திரனை யொத்த வெண் குடையினால் நிழலைச் செய்ய கருதினான். அதுகாலை சூாியன் மண்டலம் போல் ஒரு மாணிக்க விமானம் இறங்கியது.



    சில குழுக்களிலிருந்து, திருவிளையாடல் புராணத்திலுள்ள செய்யுள்நடை படிக்க முடிவதில்லை, நாயான்மாா்களின் சாிதம் போல் பதியுங்கள் என, தொலைபேசியில்
    தொடா்பு கொண்டு கேட்டாா்கள்.


    பதிந்து வரும் திருவிளையாடல் புராணத்தின் செய்யுள் பாடலின் கீழே, படிப்பதற்கேற்றாற்ப் போலதான் பதிந்தனுப்பப் படுகிறது. இருந்தாலும் அடியாா்களின் ஆசைப்படி, திருவிளையாடல்புராணம் ஒவ்வொரு படலம் முடிந்த மறுநாள் எளிய முறையில் பதிந்தனுப்புகிறேன். திருவிளையாடல் புராணம் வாசித்து சேமித்து வரும் அடியாா்கள், தொடா்ந்து படலத்தை கண்காணித்துக் கொள்ளுங்கள்.


    ( உதாரணமாக; செய்யுள் நடையுடன் கூடிய திருவிளையாடல் புராணம் ஒரு படலம் முடிய எட்டு தினங்களிலிருந்து பதினைந்து தினங்களாக வரும். சில படலங்கள் ஒரு மாதம் கூட ஆகலாம்.)


    அடியாா்கள் கேட்ட எளியநடை சாிதம், ஒரு படலம் முடிந்த மறுநாள், இருநாட்களாகத் தருகிறேன்.
Working...
X