Announcement

Collapse
No announcement yet.

தமிழ் பொக்கிஷங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தமிழ் பொக்கிஷங்கள்

    எழுத்தாளர் சுஜாதா எழுதிய "ஸ்ரீ ரங்கத்து க் கதைகள்" என்ற தொகுப்பை ஒரே மூச்சில் ஒண்ணரை நாட்களில் படித்து முடித்தேன் . அவருடைய எழுத்துக்களில் கவரப் படாதவர்கள் தமிழ் உலகில் இல்லை. நல்ல நகைச்சுவை கலந்த படைப்பு . வைணவ பிரபந்தங் களிலிருந்து கதைகளுக்கு முகப்பு கொடுத்திருக்கிறார் . அவைகளிலிருந்து இரண்டை கொடுக்கிறேன்

    உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருகள்
    உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வுருகள்
    - திருவாய்மொழி

    விடம் கலந்த பாம்பின்மேல்
    நடம் பயின்ற நாதனே.
    -திருச்சந்த விருத்தம்
    வைணவ பிரபந்தங்களும் சைவத்திருமுறைகளும் தமிழுக்கு அழகு சேர்த்தளித்த பொக்கிஷங்கள் .

    ப்ரஹ்மண்யன்,
    பெங்களுரு

  • #2
    Re: தமிழ் பொக்கிஷங்கள்

    ஶ்ரீ:
    மிக நன்றாக குறிப்பிட்டுள்ளீர்கள்!
    ஒரு மிகச்சிறிய திருத்தம்
    "உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்"
    அளவில் மிகச்சிறிய திருத்தம் ஆயினும்
    பொருளில் மிகப்பெரிய மாற்றத்தை அளிக்கவல்லது என்பதால் சுட்டினேன்.

    உருவமற்ற பொருட்களுக்கு 'அருவம்' என்று பெயர்.

    "உளன் என, இலன் என இவை தகைவுடைமையில்
    உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே"
    என்பது அப்பாசுரத்தின் அடுத்த ஈரடி.

    "உருவமுள்ள, உருவமற்ற என இரு தன்மைத்தாய் உள்ள அனைத்தும் அவனே!
    மற்றும் அவை அனைத்தையும் தன்னுள் அடக்கியவாறு ஒரு சிறு இடத்தில் கூட இல்லை என்னாதபடி
    ஒழிவின்றி - அனைத்து இடங்களிலும் பரந்துள்ளான்" என்கிறார் நம்மாழ்வார்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: தமிழ் பொக்கிஷங்கள்

      திருத்தத்திற்கு நன்றி . நான் தமிழ் மொழியினை முறையாக கற்றறிந்தவன் இல்லை . வைணவ பிரபந்தங்களை படித்து அறிய வேண்டுமென்ற ஆவலினால் சொந்தமாக படித்து அறிந்தவரை நான் அடையும் மகிழ்ச்சயை பகிர்ந்து வருகிறேன்.
      நன்றி கலந்த நமஸ்காரங்கள் ,
      ப்ரஹ்மண்யன்,
      பெங்களூரு

      Comment


      • #4
        Re: தமிழ் பொக்கிஷங்கள்

        ஶ்ரீ:
        அன்புமிகு ப்ரஹ்மண்யன் அவர்களே!
        தமிழ் மொழியை முறையாக அறிந்தவர்களே, அல்லது அறிந்தவர்கள் என சொல்லிக்கொள்கிறவர்களே,
        தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர்களே, பன்மையில் குறிப்பிடப்பட்ட எழுவாய்க்கு ஒருமையில் பயனிலை கூறி ஒருமையில் முடிக்கிறார்கள்.
        உதாரணமாக :
        "திடீரென பல குடிசைகள் எரிந்து சாம்பலானது" என்பார்கள்.
        இப்படி தமிழைத் தாய்மொழியாக கற்றவர்களில் ஐந்து சதவீதம் பேருக்குக்கூட
        இலக்கணப் பிழையின்றி தமிழ் எழுதத் தெரிவதில்லை.

        தங்கள் ஆர்வன் அடியேனை வியக்கவைக்கிறது.
        பொதுவாக யாரையும், எதையும் அடியேன் குறை கூற மாட்டேன்,
        இந்த விஷயத்தில்கூட அதை ஒரு குறையாகத் தெரிவிக்கவில்லை,
        ஓர் ஆர்வத்தில் அதற்கு விளக்கம் எழுத முற்பட்டேன் என்பதே உண்மை.

        தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
        தொடரட்டும் தங்கள் தமிழ் ஆர்வம் மற்றும்
        தமிழ்ப் பதிவுகள்.
        அன்புடன்
        என்.வி.எஸ்


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment


        • #5
          தமிழ் பொக்கிஷங்கள் - ஆனந்த விகடன்

          நினைத்துப்பார்க்கிறேன்
          ஆனந்த விகடன்


          சிறுவயதில் நான் படித்த தமிழ்ப் பத்திரிகை உலகிலும் மற்றும் புத்தகங்களிலிருந்தும் எனது நினைவில் நிற்கும் சில படைப்புகள் பற்றி இங்கு எழுத விரும்புகிறேன். எங்கள் வீட்டில் "ஆனந்த விகடன்" வெகு நாட்களாக வாங்கிக்கொண்டிருந்தோம் . ஆக ஆசிரியர் "கல்கி" அவர்களின் படைப்புகள் எனக்கு மிகவும் பரிச்யமான ஒன்று. அந்நாட்களில் கல்கி அவர்கள் நகைச்சுவை கலந்த நடையில் பல கதை, கட்டுரை எழுதிவந்தார். ஆனால் அவரது சரித்திர கதைகள்தான் என்னை ஈர்த்தன . முக்கியமாக பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், இவற்றை பலமுறை படித்துள்ளேன். கல்கி அவர்களின் தமிழ் நடை படிப்பவர்களுக்கு இனிமையாக இருக்கும். வாசகர்களை தன்னுடன் அழைதுச்செல்வார். படிக்கும்போதெல்லாம் அவருடன் சேர்ந்து சரித்திரகாலத் தமிழகத்தில் பயணித்து இருக்கிறேன். அவரது கதைகளைப் படிக்கும்போது நாம் அவருடன் கூட இருந்து நடப்புகளை பார்ப்பது போன்ற ஒரு பிரமையை உண்டாக்குவார். அவரது ஹாஸ்யம் மிகவும் நுண்மையானது (subtle ). கல்கி அவர்களின் தியாக பூமி, மகுடபதி அவரது தேசபக்தியை வெளிப்படுத்தின. கணையாழியின் கனவு, கள்வனின் காதலி, மோகினித்தீவு, பொய்மான் கரடு இன்றும் எனது மனதில் இருக்கும் புதினங்கள். அவரது சிறுகதைகள் பலவற்றை படித்து அனுபவித்து இருக்கிறேன். "கர்நாடகம்" என்ற புனைப்பெயரில் அவர் எழுதிய இசை, நாடக விமரிசினங்களை மறக்கமுடியாது. ஆனால் அவரது மேடைப்பேச்சுகள் எனக்கு மிகவும் ஏமாற்றமளித்தன.எழுத்தில் வல்லவர்கள் பேச்சில் வல்லவர்களாய் இருப்பதில்லை என்பதை புரிந்துகொண்டேன்

          என் நினைவில் வரும் மற்றொரு பெரியவர் மகாமஹோபாத்யாய உ .வே .சுவாமிநாத அய்யர் அவர்கள். தமிழ் மூதறிஞர் உ. வே. சுவாமிநாத அய்யர் "என் சரித்திரம்" என்ற அவரது சுய சரித்திரத்தை "ஆனந்த விகடனில்" எழுதிவந்ததை படித்து மகிழ்ந்தேன். ஆனால் அவரது தமிழ் எனது இளவயதில் சரியாக புரியாததால், சமீபத்தில் மற்றொருமுறை இப்பொழுது "என் சரித்திர"த்தை படித்து முடித்தேன் . அற்புதமான புத்தகம், நம்மை அவரது காலத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறார் தமிழ்த்தாத்தா.அவரது குருபக்தி யும் தமிழ் ஆர்வமும் மற்றும் அவரது இடையுறா இலக்கிய சிந்தனையும், தேடுதலும் நம்மை வியப்புற செய்கின்றன . மிகவும் ஏழ்மையான ஒரு தமிழ் பிராமணர் தனது வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காக எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி உழைத்ததை காணும்போது மனதில் வியப்பும் வேதனையும் உண்டாகியது.


          அதே காலகட்டத்தில் ஆனந்த விகடனில் பல பிரபல எழுத்தாளர்கள் எழுதி வந்தனர். அதில் முக்கியமா னவர்க்ளில் எஸ்.வி.வி என்ற எஸ்.வி.விஜயராகவாச்சரியார். எஸ்.வி.வி. யின் நகைச்சுவை இயற்கையான ஒன்று. மற்றொருவர் பி ஸ்ரீ ஆச்சார்யா, இவர் வடமொழியிலும் தமிழிலும் நல்லறிஞர். இவரது "சித்ர ராமாயணத்தை" வெகுநாட்களுக்கு தொடர்ந்து விகடனில் படித்து வந்தேன். நான் முறையாக கம்பராமாயணத்தை இவரது எழுத்துக்கள் மூலம் தான் அறிந்தேன் .இவரது ஆன்மீக கட்டுரைகள் அற்புதமானவை.

          கல்கி அவர்கள் விகடனை விட்டு சென்று சொந்தமாக "கல்கி" வாரப்பதிப்பை ஆரம்பித்தார். தொடர்ந்து "தேவன்" என்னும் R. மகாதேவன் "ஆனந்தவிகடன் " ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொண்டார்.இவரது படைப்புகளில் ஜஸ்டிஸ் ஜகந்நாதன், கோமதியின் காதலன், மிஸ். ஜானகி,ஸ்ரீமான் சுதர்சனம் மற்றும் கோமதியின் காதலன் அவருக்கு பெயர் சேர்த்தன . ஆனால் அவரது நகைச்சுவை கலந்த "துப்பறியும் சாம்பு" தொடர் தமிழ் வாசகரிடத்தில் ஒரு புதிய கலகலப்பை உண்டாக்கியது . தேவன் எழுதிய "ஐந்து நாடுகளில் அறுபது நாட்கள்" என்ற அவரது தென்கிழக்காசிய பயண அனுபவங்கள் மற்றும் "ராஜத்தின் மனோரதம் " என்ற அவரது வீடு கட்டிய அனுபவங்கள் பற்றிய கட்டுரைத் தொடர்கள் மிகவும் ருசிகரமானவை. மல்லாரி ராவ் என்ற பாத்திரத்தின் வழியாக மராத்திய சரித்திர கதைகளை ருசியாக வடித்தளிதார் 44 வயதிலேயே காலமாகி விட்ட தேவன் நிறைய எழுதியிருக்கிறார். இவரது படைப்புகளைப்பற்றி தனியாகவே ஒரு கட்டுரை எழுதலாம்.

          "ஆனந்தவிகடன்" அளித்த, எனக்குப்பிடித்த மற்றொரு எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு . இவர் ஓர் பிறவி மேதை. தான் கண்ட வாழ்க்கை காட்சிகளை எளிய தமிழில் சிறுகதைகளாக அளித்தார் . சுப்பு அவர்கள் "கலைமணி" என்ற புனைப்பெயரில் எழுதிய எழுதிய "தில்லானா மோகனாம்பாள் " அந்நாளைய வாசகர்களிடையே ஓர் புரட்சியை ஏற்படுத்தியது. "தில்லான மோகனாம்பாள் " திரைக்காவியமாக வடிக்கப்பட்டது அது தமிழ் திரைப்பட உலகில் இன்று வரை தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது .இவரது கதைகளில் இயற்கையான நகைச்சுவை மிளிரும் . இவரது கவிதை திறன் சாதாரண மக்களை அடைந்தது .சுப்பு அளித்த "காந்தி மகான் கதை " வில்லுப்பாட்டு வடிவில் பிரபல மானது.

          ஆனந்தவிகடன் பல புதிய எழுத்தாளர்களை தமிழ் உலகிற்கு அளித்திருக்கிறது . அவர்களில் சிலர் சொந்தமாக பத்திரிகையை ஆரம்பித்தனர். சாவி & மணியம் முக்கியமானவர்கள். சா வி என்னும் சா விஸ்வநாதன் தனெக்கென்று தனி தமிழ் நடை கையாண்டு வெற்றிபெற்றவர் ஆனால் அவரது படைப்புகளில் வெகு சில கதைகளே மனதில் நின்றன இவர் பல பத்திரிகைகளுக்கு மாறினார். வெள்ளிமணி ,தினமணி கதிர், கல்கி, விகடன் , குங்குமம் ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றினார். சொந்தமாக சாவி, பூவாளி, விசைகள், மோனா ஆகிய இதழ்களை நடத்தினார் .இவரது படைப்புகளில் நவகாளி யாத்திரை, வாஷிங்டனில் திருமணம், விசிறி வாழை மற்றும் நகைச்சுவைக் கதைகள் சிலவே எனது மனதில் நின்றன.

          ஆனந்த விகடன் பல ஓவியர்களை அறிமுகப்படித்தியது நான் முதலில் பார்த்தது "மார்கன்" அவர்களது சித்திரங்கள் தொடர்ந்து வர்மா அவர்கள் கல்கியின் சரித்திரக் கதைகளுக்கு படம் வரைந்தார். பிறகு மாலி என்ற மேதை (மகாலிங்கம்) ஆனந்த விகடனில் சேர்ந்தார் அவர் ஒரு சித்திரப் புரட்சியையே செய்தார் . அவர் சித்திரம், அரசியல் கார்ட்டூன் மற்றும் போட்டோ (நிழற்ப்படம்) நேர் காணல் என்று பல்வேறு துறைகளில் வல்லவர் . அவர் புதிய இளம் சிதிரக்கரர்களை ஊக்குவித்தார் . அவர் காலத்தில் விகடனில் சாமா, ரவி, சேகர், ராஜு,தாணு, சித்ரலேகா மற்றும் கோபுலு என்று பல புதிய சித்திரக்காரர்கள் விகடனில் வரைந்து வந்தனர்.
          இதே காலத்தில் சிற்பி என்ற ஸ்ரீநிவாசன் ஆனந்தவிகடனில் தென்னாட்டு செல்வங்களை தனது துரிகயால் பதிவெடுத்து படங்கள் வரைவதில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தினார் .மிக அற்புதமான படைப்புகள். தென்னாட்டுக் கோவில்களையும் அங்குள்ள சிற்பங்களையும் மிக நுட்பமாக ஓர் அணுவளவும் மாறாமல் பதிவெடுத்துக் கொடுத்தார் சிற்பி அவர்கள். இவரது படைப்புக்கள் காலத்தில் அழியாத பொக்கிஷங்கள் .

          மேலும் நிறைய எழுதவேண்டும் என்ற ஆர்வம் உள்ளது .
          நலம் கோரும்,
          ப்ரஹ்மண்யன்,
          பெங்களுரு

          Comment

          Working...
          X