Announcement

Collapse
No announcement yet.

ப்ராப்தம்............by Krishnaamma :)

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ப்ராப்தம்............by Krishnaamma :)

    கணவன் சொன்ன பதிலைக்கேட்ட வத்சலா நிலை குலைந்தாள்...............அப்பா சொன்ன பிராப்தம் இது தானா என்ற கேள்வி அவளுள் எழுந்தது..............அவள் நினைவுகள் பின்னோக்கி சென்றன.

    அவளுக்கு ஒரு 14 - 15 வயது இருக்கும் . கொஞ்சம் கொஞ்சமாய் சுற்றிவர நடப்பவைகள் தெரிய, புரிய ஆரம்பித்தன. அவளுடைய பெரியப்பா வும் அவளின் அப்பாவும் வாத்தியார்கள் அதாவது புரோகிதர்கள். எப்பவும் பெரியப்பா புரோகிதத்துக்கு போய்வரும்போது ஏதாவது தின்பண்டங்கள் கொண்டு வருவார்.

    இருவரின் வீடுகளும் பக்கத்தில் பக்கத்தில் இருந்ததால், இவளுக்கு அங்கிருந்து பக்ஷணங்கள் வந்து விடும் இவளும், பெரியப்பாவின் மகளும் சேர்ந்தே சாப்பிடுவார்கள். ஆனால் அப்பா அப்படி இல்லை. வந்து குளித்துவிட்டு சாப்பிடுவார், சில சமயம் வீட்டையும் அலம்பிவிட நேரும். இவளுக்கு அந்த பேதம் ஏன் என்று புரியவில்லை .

    ஒருநாள் பெரியப்பா மகள் , காஞ்சனாவுடன் ஏதோ சண்டை வர, அவள் " நீ ஏண்டி எங்க அப்பா கொடுவறதை சாப்பிடற..வேண்டுமானால் உங்கப்பாவையும் கொண்டு வர சொல்லு " என்று சொல்லிவிட்டாள். இவளும் உடனே ரொம்ப கோவமாய் தன் அப்பாவிடம் வந்து தனக்கு தின்பண்டங்கள் வேண்டும் என்று சொன்னால், அவரும் கடை இல் வாங்கி வந்து கொடுத்துவிட்டார்.

    ஆனாலும் இவளுக்கு தன் அப்பா ஏன் எதுவும் கொண்டு வருவதில்லை , கடை இல் வாங்கித்தருகிறார் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்ப்பட்டது. தன் அப்பாவிடமே கேட்டுவிட்டாள். அதற்கு அவர் சொன்ன பதில்...........

    " அதுவாம்மா, பெரியப்பா கல்யாணங்கள் , காது குத்து இது போன்ற விழாக்களை நடத்திவைக்கும் வாத்தியார், நான் 'காரியங்கள்' நடத்திவைக்கும் வாத்தியார் மா" என்றார்.

    இவளுக்கு புரியவில்லை...............மீண்டும் விரிவாக சொல்லும்படி அப்பாவைக் கேட்டாள்.

    அதற்கு அவர் " அதாவது இறந்தவருக்கு காரியம் செய்து வைப்பது தான் ஏன் தொழில் " என்றார்.

    இவளுக்கு தூக்கி வாரி போட்டது...............அழ ஆரம்பித்து விட்டாள்.........பதறின அப்பா, "என்ன ஆச்சும்மா? "
    என்றார்.

    " நீ ஏன் பா இப்படிப்பட்ட வேலை செய்கிறார்?" என்று அழுகைனூடே கேட்டாள்.

    அதற்கு அவர் சிரித்தவாறே, கல்யாணம் செய்து வைக்க ஆய்ரம் பேர் இருக்கா மா, இந்த புனிதமான காரியத்தை செய்து வைக்க கொஞ்சம் பேர் தான் இருக்கா......நேரம் காலம் பார்க்காமல், சிரத்தையாய் செய்யவேண்டிய காரியம் அம்மா இது "...........என்றார்.

    ஆச்சர்யமாய் அப்பாவை பார்த்த வத்சலா, " உங்களுக்கு இப்படிப்பட்ட காரியம் செய்வது மன நிறைவைத்தருகிறதா அப்பா, நிஜமா சொல்லுங்கோ"..............என்றாள்.

    " ஆமாம் அம்மா, எனக்கு மிகவும் திருப்தியாகத்தான் செய்கிறேன்...............ஒவ்வொரு முறையும் 12 நாள் காரியங்கள் முடித்து சுபத்தின்போது அந்த பிள்ளைகள், என் கையை பிடிச்சுண்டு " மாமா, ஒரு குறையும் இல்லாமல் திருப்த்தியா செய்து வெச்சுட்டேள் .....எங்க அப்பா / எங்க அம்மா ஆத்மா நல்லபடி சாந்தி அடையும்" என்று நெகிழ்வாக சொல்லும்போது என் மனசுக்கு நிறைவா இருக்கும் மா, அது எத்தனை காசு பணம் வந்தாலும் கிடைக்காது"..................என்றாலும் எனக்கு ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது என்றார்.

    அவரே தொலை தூரப்பார்வை யுடன் தொடர்ந்தார்................."எனக்கு நீ ஒரே பெண், என்னுடையா இந்த வேலையை எனக்குப்பின் செய்ய ஆள் இல்லையே என்று வருத்தமாய் இருக்கு.................அதனால்............
    எனக்குப்பின் உனக்கு பார்க்கும் மாப்பிள்ளையை " ....................என்று இழுத்தவரை.................

    சிறு பெண்ணாக இருந்தாலும், 'சட்' என்று அவர் எதை சொல்ல வருகிறார் என்று புரிந்து, " இரண்டு கைகள் எடுத்து கும்ம்பிட்ட படி " அப்பா வேண்டாம் பா...மேல சொல்லாதீங்கோ " என்று தடுத்துவிட்டாள்.

    அவள் அப்படி சொன்னது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றாலும் ............." எல்லாம் அவா அவா பிராப்த்தப்படி தான் நடக்கும் மா"...என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

    அதன் பிறகு இவளுக்கு அங்கு நடப்பவைகள் எதுவுமே பிடிக்கலை..................காஞ்சனா மட்டும் ரொம்ப சந்தோஷமாய் இருப்பது போலவும் தான் எப்பவும் துக்கமாய் இருப்பது போலவும் நினைத்துக்கொண்டாள். அவள் அப்பா அவளுக்கு எதற்கும் குறை வைக்கலை என்றாலும் காஞ்சனா மற்றும் அவ அம்மாவுக்கு எப்பவும் யாராவது கல்யாணம் காது குத்து, சீமந்தம் என்று சொல்லிக்கொண்டு புடவைகள் தர்கியார்கள், நமக்கு அப்படி எதுவும் இல்லையே என்று ஏங்குவாள்.

    அப்பா அம்மா ஆசையாய் வாங்கித்தந்தாலும் ஏனோ அவளுக்கு திருப்தி இல்லாமலே இருந்தது. இது ரொம்ப புண்ணிய காரியம் என்று அப்பா சொன்னது அவள் மனதில் ஏறவில்லை. அப்பாவை பார்க்க வருகிறவர்கள் எல்லோரும் துக்கமாகவே வருகிறார்களே, எப்பவும் இறுக்கமான முகங்களையே பார்க்கவேண்டி வருகிறதே என்றல்லாம் வருந்தினாள்.

    இப்படி தனக்குத்தனே யோசித்ததில் , மனதில் ஒரு உறுதி பிறந்தது அவளுக்கு , 'என்ன ஆனாலும் சரி நாம் ஒரு கவர்மெண்ட் உத்தியோகம் பார்க்கும் பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்கவேண்டும்..... இப்படி காரியம் பண்ணி சம்பாதிக்கும் பணத்தில் வாழக்கூடாது' என்று.

    இது எதுவும் தெரியாமல் காலம் ஓடியது பெற்றவர்களுக்கு. ஆச்சு இதோ வரன் பார்க்க ஆரம்பிச்சாச்சு..............நிறைய வரன்கள் வந்தது, அம்மா இவளை கேட்டபோது , இவள் எனக்கு காஞ்சனா அக்கா போல வாத்தியார் மாப்பிள்ளை வேண்டாம் கவர்மெண்ட் வேலை பார்க்கும் பிள்ளை தான் வேண்டும் என்று சொல்லிவிட்டாள்.

    இதில் பெற்றவர்களுக்கு வருத்தம் என்றாலும், மகளின் விருப்பத்திற்கு குறுக்கே எதுவும் சொல்லலை. அப்படி வந்தவன் தான் சடகோபன் . ரயில்வே இல் உத்தியோகம், போட்டோவை பார்த்ததுமே எல்லோருக்கும் பிடித்துவிட்டது. ஜாதகமும் நன்கு பொருந்தி இருந்தது. மேலே விசாரிக்க சென்றவர் வந்ததும் " அம்மா வத்சலா, இந்த பையன் ரொம்ப நல்ல மாதிரி இருக்கான், நன்னா பவ்யமாய் பேசறான், அவா அம்மா அப்பாவும் நல்லபடி தோணரா .............ஆனால், நீ அவனுடன் தனியாத்தான் இருக்கணும், அவர் அப்பப்போ துடி விஷயமாய் வெளியே போகவேண்டி வரும்போது தனியாய் இருப்பியாமா? " என்றார்.

    இங்கு முச்சு முட்டுவது போல அவர் உணர்ந்ததால் தனியே இருப்பது கஷ்டமாய் தோணலை. உடனே சரி என்று சொல்லிவிட்டாள். அப்பாவுக்கு உடனே முகம் மலர்ந்தது, " ரொம்ப சந்தோஷம்மா............மேற்கொண்டு ஆகவேண்டியதை பார்க்கிறேன்" என்றார்.

    அடுத்து அடுத்து கல்யாண வேலைகள் மள மள வென துவங்கியது, பெரியப்பாவே கல்யாணத்தை நடத்தி வைத்தார். வத்சலா நல்ல அழகி என்றால் சடகோபன் நல்ல அழகன். கல்யாணத்திற்கு வந்த வர்கள் ஜோடிப்போருத்தத்தை ரொம்பவுமே சிலாகித்தார்கள். வத்சலாவுக்கு கால்கள் நிலத்தில் படியவே இல்லை, கண் நிறைந்த கணவன், எடுத்ததுமே தனிக்குடித்தனம் என்று ரொம்ப சந்தோஷமாய் இருந்தாள்.

    ஆச்சு கல்யாணத்துக்கு போட்ட லீவெல்லாம் முடிந்து சடகோபன் ஆபீஸ் சேர்ந்துவிட்டன, ஊரிலிருந்து வந்திருந்த மாமனார் மாமியார் எல்லோரும் கிளம்பியாச்சு போனவாரம். 1 வாரம் போனதே தெரியலை ரோமப் சந்தோஷமாதான் இருந்தது , அந்த போன் வரும் வரை.

    நேற்று இரவு ஒரு 11.30 இருக்கும் ஒரு போன் வந்தது....சடகோபன் " எங்கே, எப்போ.............ம்ம்...சரி சரி ........நான் ஸ்பாட் க்கு வந்துவிடுகிறேன்" என்று சொன்னான். பிறகு இவளிடம் திரும்பி, நான் ஒரு வேலையாய் வெளியே போய்விட்டு வருகிறேன், கதவை தாழ்ப்பாள் போட்டுக்கொள் , நான் வர காலை ஆனாலும் ஆகும் பயப்படவேண்டாம்" என்றான். அவ்வளவு தான், இவளுக்கு பயமாகிவிட்டது, யாருக்கு என்ன என்று பதறினாள். "ஒன்றும்மில்லை ஆபீஸ் வேலைதான்"என்று சொல்லிவிட்டு, டிரஸ் செய்து கொண்டு போய்விட்டான்.

    இவளுக்கு தூக்கம் போய்விட்டது............பாதி ராத்திரி இல் என்ன அவசர வேலை?..............என்று குழம்பினாள், அவசரமாய் கிளம்பும் கணவனிடம் ரொம்பவும் கேட்க முடியலை....இன்னும் அவ்வளவு நெருக்கம் வரலை............அப்படியே யோசனையில் இரவு கழிந்தது................அதிகாலை 3 மணி யளவில் சடகோபன் வந்துவிட்டான். வந்ததும் நேரே குளியல் அறைக்கு போனான்.................எல்லா உடைகளையும் நனைத்துவைத்துவிட்டு குளித்தான் , இவளிடம் துண்டு கேட்டான்................

    இவள் "என்ன ஆச்சு? இப்படி அகாலத்தில் குளிக்கறீங்க" என்று பதற்றமானாள். .

    அவன் பதற்றமே இல்லாமல் சொன்னான், " ஒரு ஆக்சிடென்ட் மா, ரயில் முன்னாடி ஒருத்தன் பாய்ந்து விட்டான்................அது தான் ஸ்பாட் குக்கு போய், யாரு என்ன என்று பார்த்து, body யை போஸ்ட் மாட்டத்துக்கு அனுப்பிட்டு வரேன்"............. நான் அங்கு போய்விட்டு வந்ததினால் தான் குளித்தேன்" என்றான்.

    "இந்த வேலை ரொம்ப முக்கியமானது வத்சு , இது தற்கொலையா அக்சிடெண்டா எல்லாம் அப்புறம்................முதலில் ஸ்பாட்க்கு போய் வேண்டியதை செய்தால் தான், அடுத்த வண்டி போக முடியும். எனவே , நேரம் காலம் எல்லாம் பார்க்க முடியாது, உனக்கு கொஞ்சம் கஷ்டமாய் தான் இருந்து இருக்கும், என்றாலும் நீ உங்க அப்பாவை பார்த்து இருக்கியே, எவ்வளவு புனிதமான வேலை செய்கிறார் அவர்......அதனால் உனக்கு என் வேலையை புரிந்து கொள்ள கஷ்டமாய் இருக்காது என்று நினைத்து தான் உன்னை பண்ணிக்க நான் சம்மதம் கொடுத்தேன்" என்றான் புன்னகையுடன்.

    மீண்டும் முதல் வரியை படியுங்கோ ..............................அப்பா, தான் செய்யும் புண்ணிய காரியத்தை பிள்ளை இல்லாததால் தன் மாப்பிள்ளை தொடரவேண்டும் என்று ஹிருதய சுத்தியோட நினைத்திருக்கார் . அதனால் தான் இப்படிப்பட்ட மாப்பிளை அவருக்கு வாய்த்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டாள். அப்பாவின் நல்ல மனதை புரிந்து கொள்ளாமல், அவர் செய்யும் தொழிலை வெறுத்ததை நினைத்து முதன் முறையாக வருத்தப்பட்டாள்....மானசீகமாய் மனதுக்குள் மன்னிப்பும் கேட்டாள் வத்சலா.

    கார்த்தால முதல் வேலையாய் அப்பாவுடன் பேசணும் என்று எண்ணிக்கொண்டாள். சந்தோஷமாய் கணவனுக்கு காபி போட உள்ளே சென்றாள்

    by Krishnaamma
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    Re: ப்ராப்தம்............by Krishnaamma

    கதையின் கருத்து மனதை நெகிழ வைத்துவிட்டது மாமி

    Comment


    • #3
      Re: ப்ராப்தம்............by Krishnaamma

      Originally posted by soundararajan50 View Post
      கதையின் கருத்து மனதை நெகிழ வைத்துவிட்டது மாமி

      Thank you Mama
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment

      Working...
      X