Announcement

Collapse
No announcement yet.

Krishna, the Pied piper

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Krishna, the Pied piper

    Krishna, the Pied piper
    Courtesy:Sri.JK.Sivan


    பிருந்தாவனத்தில் ராதையும் கிருஷ்ணனும் சந்திப்பதற்கு என்று ஒரு தனி இடம் கண்டுபிடித்து இருவரும் தேர்ந்தெடுத்திருந்தார்கள். அதற்கு மதுவனம் என்ற அழகான பெயர். ரம்மியமான சூழ்நிலை கொண்டது. ஒரு மயில் கூட்டமே அங்கு வசித்தது. அழகிய பூக்கள் பூத்து குலுங்கின. தெள்ளிய நீரோடை ஒன்று அங்கிருந்து யமுனையில் சென்று கலந்தது. சலசலவென்று அதன் அழகிய பளிங்கு நீர் மனத்தை கொள்ளை கொண்டது. மான்கள் துள்ளி ஆடின. ஒரு தாழ்ந்த அகன்ற பெரிய மரக்கிளை தான் அவர்களது சிம்மாசனம். கிருஷ்ணனின் பிருந்தாவன வாழ்க்கை பெரும்பகுதி மதுவனத்தில் ராதையோடு சேர்ந்தது. தலை உடல் எல்லாம் பிசு பிசு வென்று ஆகி விடும். என்னவென்று பார்த்தால் மலர்களிலிருந்து பூந்தேன் சொட்டு சொட்டாக கீழே அவர்கள் மேல் விடாது விழுந்தவாறே இருப்பதால்.


    கண்ணன் குதூகலமாக அங்கு அமர்ந்து குழல் ஊதுவான். மேலே பட்சிகள் அவனுடைய இசைக்கு பின்னணி பாடும். குழல் ஒலி கேட்ட அடுத்த கணமே எங்கிருந்தோ நிறைய கன்று பசுக்கள் , ஓடி வந்து விடும். மயில் கூட்டம் அவன் இசைக்கேற்ப நாட்டிய மாட தொடங்கும். எல்லோருமே பிரம்மானந்தம் என்ற வார்த்தையை பூரணமாக அனுபவிக்கும் இடம் மதுவனம்.


    ஆங்கிலத்தில் சின்ன வயதில் ஒரு கதை படித்தது ஞாபகமிருக்கிறதா. '' Pied piper of Hamelin என்று. ஒரு ஆசாமி ஒரு பிகில் ஊதுவான். அதை அவன் ஊதிக்கொண்டு தெருவில் வந்தான் என்றால் அவ்வளவு தான். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அப்பா எலி, தாத்தா எலி, பாட்டி எலி, அத்தை எலி, சித்தி எலி, சின்ன பேரன் எலி முதற்கொண்டு அனைத்தும் கூட்டமாக அவன் பின்னே வந்து விடும். நிறுத்தினால் எந்த வீட்டிலிருந்து வந்ததோ அந்த வீட்டுக்குள்ளேயே திரும்பி ஓடிப்போய்விடும். அந்த ஊர் (ஜெர்மனி யோ ஹாலந்தோ ஞாபகமில்லை ) கவர்னர் அவனை மெதுவாக மடக்கி அனைத்து எலிகளையும் கடலில் மூழ்கடிக்க உபயோகிப்பார்கள். அவன் பிகிலை ஊதிக்கொண்டே கடலில் இறங்குவான். அவனைத்தொடர்ந்து வந்த அத்தனை எலிகளும் கடலில் இறங்கி மாளும் என்று ஒரு கதை. கவர்னர் காசு கொடுக்காததால் அவன் பிகில் பிறகு ஊரிலிருந்த அனைத்து குழந்தைகளையும் கவர்ந்து அவன் பின்னே அவர்கள் ஓடி வருவார்கள். கடலுக்கு...............! இந்த கதையின் அச்சு வேர் ஆணிவேர் நிச்சயம் மதுவன் நிகழ்ச்சி தான். கண்ணன் குழல் காற்றில் மிதந்துவந்த அடுத்த கணமே கோபியர் அப்படியே போட்டது போட்டபடி எல்லா வேலைகளையும் நிறுத்திவிட்டு மதுவனம் காட்டிற்கு ஓடுவார்கள். கோபர்கள் மட்டும் என்ன செவிடர்களா என்ன. அவர்களும் தான் ஓடுவார்கள். இப்படி அனைவரையும் ஹெமலின் எலிகளாக சுண்டியிழுக்கும் சக்தி, கண்ணன் குழலின் ஓசைக்கு இருந்தது ஆச்சர்யம்.


    இந்த கண்ணனின் மூங்கில்குழல் என்ன பேசியது ஒருநாள் என்று ஒரு கதை


    அன்றாடம் ஆயர்பாடி சிறுவர்கள் சேர்ந்தே போவர் வருவர். எங்குமே. எப்போதும் உற்சாகமாகஇருக்கும் அவர்களை பார்த்து ஆயர்பாடி மக்கள் அனைவரும் பெருமிதம் அடைவார்கள். இத்தனை மகிழ்ச்சி ஆரவாரம் எல்லாம்.அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது என்பதன் ரகசியம் அனைவரும் அறிந்ததே. கிருஷ்ணன் என்கிற சிறுவன் தான் அவர்களை இவ்வாறெல்லாம் ஆட்டி படைக்கிறவன். அந்த சிறுவனே அவர்களுக்கு தலைவன். பசுக்களும் கன்றுகளும் கூட மறக்காமல் அன்றாடம் ஒரு முறை தங்கள் கூட்டத்தில் மற்ற சிறுவர்களிடையே கண்ணன் இருக்கிறானா என்று முதலில் பார்த்து கொண்டு தான் சந்தோஷமாக இரை தேட செல்லும். கன்றுகள் தாவித் தாவி குதித்து ஓட, தாய் பசுக்கள் பெருமிதமாக மிதந்து செல்லும். கண்ணன் ஏதாவதொரு பசுவின் அருகில் தான் நிற்பான்


    கூடவே அதன் கழுத்தை கட்டிக்கொண்டு நடப்பான்.


    அவன் இடையில் இருக்கும் சிறு மூங்கில் குழல் பகல் பூரா சில சமயம் அந்த காட்டு பிரதேசத்தில் அவனது வேணு கானத்தை பரப்பும். சில சமயங்களில் சிறுவர்கள் யமுனை நதியில் குதித்து நீச்சல் அடிப்பார்கள் விளையாடுவார்கள். சில சமயங்கள் கூடி பேசி பாடி ஆடுவார்கள். கண்ணன் வேணுகான இசை நிகழ்ச்சி நேரங்களில் பசுக்கள் எல்லாம் வயிறு நிரம்ப உண்டு ஒன்றாக கூடி அவனருகே மர நிழல்களில்


    கூட்டமாக அமர்ந்து அசை போட்டுக் கொண்டு கண்மூடி தலையாட்டி கண்ணனின் குழலிசையை கேட்கும்.


    ஒரு கன்று குட்டி தாயை கேட்டது


    " அம்மா, உனக்கு என்னைப் பிடிக்குமா கண்ணனின் குழல் இசை பிடிக்குமா?


    " ஏன் இரண்டுமே பிடிக்கும்.!


    " ரெண்டுலே எது ரொம்ப பிடிக்கும்?


    " உன்னை பார்த்துக்கொண்டே இருக்க ரொம்ப பிடிக்கும் ; கண்ணன் குழலிசை கேட்டுக்கொண்டே இருக்க ரொம்ப


    பிடிக்கும் " என்று பசு சொன்னது.


    ஒரு கன்றுக்குட்டி மற்றொரு ஆயர்பாடி சிறுவன் ஊதிய குழலைப் பார்த்து கேட்டது


    "ஏன் உன்னிடம் கண்ணன் ஊதும் குழலின் ஓசை வரவில்லை?''


    அந்த குழல் சொன்னது: "நானும் கண்ணன் கையில் இருக்கும் மூங்கில் குழலும் ஒரே மரத்தில் இருந்து வந்தவர்கள் தான். என்னை இந்த சிறுவன் கண்ணன் போல் உபயோகிக்கவில்லை"


    இதை கேட்ட அந்த சிறுவன் தன குழலை கண்ணனிடம் கொடுத்து அவன் குழலை வாங்கி ஊதினான்.


    ஓசையில் எந்த மாற்றமும் இல்லை. அப்போது கண்ணனின் குழல் சொல்லியது:


    "ஏ, சிறுவா, நான் மாற்றமே இல்லாத மரத்துண்டு தான். நீ ஊதினால் நான் அதுவாகவே இருக்கிறேன். கண்ணன் என் மீது அவன் காற்றை செலுத்தும்போது எனக்கு ஜீவன் கிடைத்து அவன் அருளால்


    அவனின் ஒரு பகுதியாகவே மாறி விடுகிறேன். ஆகவே தான் கண்ணன் ஊதும்போது நான் அவன் ஜீவ நாதமாகி
    காற்றில் கலக்கிறேன்".


    உலகத்தில் உள்ள பிரம்மானந்தத்தை ரெண்டு பாதியாக்கினால் அதில் ஒன்று ராதை, மற்றொன்று கிருஷ்ணன். ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. மரமில்லாமல் பூவுண்டா, பூ வில்லாமல் காயுண்டா, காயில்லாமல் பழமுண்டா? பரந்த இந்த பூமிக்கு ஆதாரம், சேஷநாகன் , அவனுக்கு ஆதாரம் கூர்மம், கூர்மத்தின் ஆதாரம் வாயு, வாயுவுக்கு ஆதாரம் பரமாத்மா, (அதாவது ஸ்ரீ கிருஷ்ணன்) எனவே ஸ்ரீ கிருஷ்ணன் ஆதார ஸ்வரூபன் என்றால் அவனுக்கே மூலாதாரம் முழ பிரக்ரிதி யான ராதை. கிருஷ்ணனின் சரீர ரூபிணி ராதை. 'த்ரிகுணா தார ஸ்வரூபிணி'' புரிகிறதா. ராதா கிருஷ்ணனின் உடல் என்றால் கிருஷ்ணன் ஆத்மா. எனவே இரண்டும் பிரிக்கமுடியாத ஒன்றே தான்!
Working...