Announcement

Collapse
No announcement yet.

'நூல்களில் அவள் முகநூல்'

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 'நூல்களில் அவள் முகநூல்'

    "கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?
    கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
    சொல்லெல்லாம் தூய தமிழ்ச் சொல்லாகுமா?
    சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?"


    என்று பாடிய கவிஞர் கண்ணதாசன் இன்று இருந்திருந்தால்,


    "நூலெல்லாம் முக நூல் ஆகுமா?" என்று பாடி இருப்பார். மேலும் அவர், 'காலங்களில் அவள் வசந்தம், கலைகளில் அவள் ஓவியம், மாதங்களில் அவள் மார்கழி, மலர்களில் அவள் மல்லிகை' என்ற வரிசையில் 'நூல்களில் அவள் முகநூல்' என்று இன்றைய கணினி யுகத்திற்குத் தகுந்தபடி காதலியை வர்ணித்துப் பாடி இருப்பார்.

    மேலோரின் அழகிய மேற்கோள்கள், அரிய வாழ்க்கை நிகழ்ச்சிக் குறிப்புக்கள், இயல்பான நகைச்சுவை உணர்வின் வெளிப்பாடுகள், அற்புதமான அனுபவப் பகிர்வுகள் என்றாற் போல் இன்று முக நூல்(பேஸ்புக்) தரும் தகவல்கள் சுவை மிகுந்தவை; சிரிக்கவும் சிந்திக்கவும் சிலிர்க்கவும் வைப்பவை.


    ஒன்பது முதல் பூஜ்யம் வரை இன்றைய தலைமுறை இளைத்த தலைமுறையாக இல்லை; மாறாக, இலக்கும் குறிக்கோளும் உள்ள எழுச்சிமிகு தலைமுறையாக உள்ளது. ஒன்பது முதல் பூஜ்யம் வரை தனது வாழ்வின் குறிக்கோள்களாக ஓர் இளைஞர் முக நூலில் தெரிவித்துள்ள அற்புதமான கருத்துக்கள் வருமாறு:


    9. நாள்தோறும் ஒன்பது குவளைகள் தண்ணீர் அருந்துதல்.


    8. எட்டு திசைகளும் சென்று சிறந்தவற்றை அறிதல்.


    7. உலகின் ஏழு அதிசயங்களைத் தனது குடும்பத்தினருடன் சுற்றுலாவாகச் சென்று கண்டு மகிழ விரும்புதல்.


    6. ஆறு இலக்க வருமானம் பெறுவதை வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருத்தல்.


    5. வாரத்தில் ஐந்து நாள் கடுமையாக உழைத்தல்.


    4. நான்கு சக்கர வாகனத்தில் செல்ல ஆசைப்படுதல்.


    3. மூன்று படுக்கை அறைகள் கொண்ட வசதியான ஒரு வீட்டினை வாங்கத் திட்டம் இடுதல்.


    2 ஆண் குழந்தை ஒன்று, பெண் குழந்தை ஒன்று என இரு அறிவார்ந்த குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள விரும்புதல்


    1. ஒரே மனைவியுடன் வாழ எண்ணுதல்.


    0. பரபரப்போ, படபடப்போ இன்றி இருத்தல்.


    வள்ளுவரின் மொழியில் கூற வேண்டும் என்றால் ஒன்பது முதல் பூஜ்யம் வரையிலான இக் கருத்துக்களைக் 'கற்க கசடற கற்றபின், நிற்க அவற்றிற்குத்தக!' எனலாம்.

    வித்தியாசமான நகைச்சுவைகள் இதுவரை பொது மேடைகளில் கேட்டிராத புத்தம் புதிய, வித்தியாசமான நகைச்சுவைகளை முக நூலில் பரவலாகக் காண முடிகின்றது. இவ் வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க சில நகைச்சுவைகளை இங்கே காண்போம்.


    சீரியல் பார்த்து அழும் பெண்களை விட
    கல்யாண 'சிடி' பார்த்து அழும் ஆண்களே அதிகம்!


    ஒரு புத்திசாலி மனிதனின் அனுபவ மொழி இது: "நீங்கள் உலகை மாற்ற விரும்பினால், பிரமச்சாரியாக இருக்கும் போதே அதைச் செய்து விடுங்கள். திருமணத்திற்குப் பிறகு என்றால், உங்களால் ஒரு 'டிவி' சேனலைக் கூட மாற்ற முடியாமல் போய்விடும்!"
    சுவையான நிகழ்ச்சி குறிப்புகள்:
    பொது மேடைகளில் பல முறை கேட்ட பழைய குட்டிக் கதையே ஆனாலும், நிகழ்ச்சிக் குறிப்பே என்றாலும் ஒரு வெற்றிப் பேச்சாளர் அதிலும் ஒரு சுவையான திருப்பத்தைத் தந்து, புது மெருகு சேர்த்து விடுவார்; அவையினரைச் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்து விடுவார். 'மீதம் 99 ரூபாய்?' என்னும் தலைப்பில் முக நூலில் காணப்பெற்ற ஒரு சுவையான நிகழ்ச்சி குறிப்பு:

    "பார்லிமெண்டில் பேசும் போது உறுப்பினர் ஒருவர் ஒரு கதை சொன்னாராம். 'ஒரு மனிதன் இருந்தான். அவன் தன் மூன்று மகன்களிடம் ஒவ்வொருவருக்கும் ரூ.100 கொடுத்து ஒரு அறை முழுதும் நிறைக்குமாறு பொருள் வாங்கச் சொன்னானாம். ஒரு மகன் வைக்கோல் வாங்கி அறையில் வைத்தான்; அறை நிறையவில்லை. அடுத்தவன் பஞ்சு வாங்கி வைத்தான். அறை நிறையவில்லை. மூன்றாமவன் ஒரு ரூபாய்க்கு மெழுகுவர்த்தி வாங்கி அறையில் ஏற்றி வைத்தான். அறை முழுவதும் ஒளி நிறைந்தது'. அந்த உறுப்பினர் பிறகு சொன்னாராம்: 'அந்த மூன்றாமவன் போலத் தான் நம் பிரதமர். அவர் பொறுப்பேற்றதும் நாட்டில் இருந்த இருள் நீங்கி ஒளி பரவி விட்டது'. பின் வரிசையில் இருந்து ஒரு குரல் எழுந்தது: 'மீதி 99 ரூபாய் என்ன ஆச்சு?'"


    கள்ளங்கபடமற்ற சூதுவாது அறியாத - ஒரு குழந்தையின் இயல்பைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் முக நூலில் இடம் பெற்றுள்ள பிறிதோர் குறிப்பு:

    "நர்சரிப் பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூடையின் மேல், 'ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்; கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்' என எழுதி இருந்தது.

    சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது: 'எவ்வளவு வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்; கடவுள் ஆப்பிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்!'"

    படித்ததில் பிடித்ததையும் பட்டறிவால் உணர்ந்ததையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் முகநூல் முன்னிலையில் உள்ளது.

    ''சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்பு தான், கருப்பு மனிதனுக்கும் ரத்தம் சிவப்பு தான், வண்ணங்களில் இல்லை வாழ்க்கை - மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை" என்பது முக நூலில் நான் பார்த்த முத்திரை வாசகம்.

    "மீசையும், தாடியும் ஒன்றாகவே வளர்கின்றன மீசை மட்டும் வீரத்திற்கு தாடி மட்டும் சோகத்திற்கா?" என முக நூலில் ஒரு நண்பர் விடுத்துள்ள கேள்விக் கணை நம்மைச் சிந்திக்கத் தூண்டுவது.


    புதுமொழிகள்:
    பழமொழிக்கு நிகராக முக நூல் படைக்கும் புதுமொழிகளும் சுவை மிகுந்தவை. இரு உதாரணங்கள்:




    * " நாள் என் செயும்,வினைதான் என் செயும்? உன் மணாளினி மாறாத வரை?"


    * "காதலித்துப் பார். திங்கட்கிழமையும் சொர்க்கமாகும் கல்யாணம் பண்ணிப்பார். ஞாயிற்றுக்கிழமையும் நரகமாகும்!"

    மிருகக் காட்சி சாலை நாம் அறிந்தது. அது என்ன மனிதக் காட்சிச் சாலை? முதியோர் இல்லத்தைப் பற்றிய உள்ளத்தைத் தொடும் ஒரு முக நூல் வாசகம் இதற்கு விடை கூறுகின்றது: "இது ஒரு மனிதக் காட்சிச் சாலை! 'பால் குடித்த மிருகங்கள்' எப்போதாவது வந்து போகும் இடம்!!"

    முக நூல் பற்றிய புதுக்குறள் இது: "எல்லாப் பொருளும் முகநூலின்பால் உள இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்!" நல்லன தரும் முக நூலினை நல் வழிக்கு மட்டுமே பயன்படுத்தி, நம்மைச் செதுக்கிக் கொள்வோம்.


    Source:kn ramesh

  • #2
    Re: 'நூல்களில் அவள் முகநூல்'

    I REALLY ENJOY THIS ARTICLE

    Comment

    Working...
    X