ஏன் இப்படி? ஏன் அப்படி?
நியூயார்க் உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் தூள் தூளாக்கப்பட்ட தினத்தன்று, அமெரிக்காவில் வசிக்கும் என் பேரக்குழந்தை தன் அம்மாவிடம், 'உலகத்தில் ஏன் கெட்ட ஜனங்கள் இருக்கிறார்கள்?' என்று கேட்டதாயும் அதற்கு எனக்கு பதில் தெரியவில்லை என்றும் சில வாரங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன்.
பல சினேகிதர்கள் எனக்கு போன் செய்து ஒவ்வொரு விதமாய் பதில் சொன்னார்கள். அண்ணா நகர் பழைய ஒய் பிளாக், 'சங்கீத ஆலயம்' இல்லத்திலிருந்து எச். கிருஷ்ணமூர்த்தி என்ற அன்பர், இத்தகைய கேள்விகளுக்கான பதில்களை ஆன்றோர்களின் நூல்களிலிருந்துதான் பெற முடியும் என்று தெரிவித்து, விவேகானந்த சுவாமிகளின் உபதேசங்களில் சில பகுதிகளை எழுதி அனுப்பியிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து அவர் செய்துள்ள மொழி பெயர்ப்பு இயல்பான நடையில் இருப்பதால் அந்த வரிகளை இங்கே தருகிறேன்.
1. நல்ல சிந்தனைகளும், தீய சிந்தனைகளும் மகத்தான சக்தி வாய்ந்தவை. அவை இந்தப் பிரபஞ்சத்தை நிரப்புகின்றன. செயல்களாக மாறும் வரையில் அவை சிந்தனை வடிவிலேயே இருக்கின்றன. நாம் தூயவர்களாக இருந்தால், நல்ல சிந்தனைகள் நமக்குள்ளே பாயும். ஒரு நல்ல ஆத்மா தீய சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளாது.
2. உலகின் துன்பங்களுக்குக் காரணம் வேறு யாரும் இல்லை. நாமேதான். பிறருக்கு முற்பகலில் செய்த தீமைகள், பிற்பகலில் தாமாகவே நம்மிடம் திரும்பி வருகின்றன. மனிதனே தீவைகளுக்குக் காரணம். தெய்வம் அல்ல.
3. நாம் ஓரிடத்தில் சந்தோஷத்தைச் சிருஷ்டி பண்ணும்போது, இன்னோரிடத்தில் துக்கம் பிறக்கிறது. இது இயற்கையின் நியதி. சமுத்திர வெள்ளத்தில், ஓரிடத்தில ஒரு பள்ளத்தை ஏற்படுத்தாமல், வேறொரு இடத்தில் உயரமான அலையை எழுப்ப முடியாது. மனிதனின் தேவைக்கும், பேராசைக்கும் ஏற்ப உலகத்தில் நல்ல விஷயங்களின் மொத்த அளவு எல்லாக் காரியங்களிலும் ஒரே அளவாகவே இருந்திருக்கிறது. அதைக் கூட்டவோ, குறைக்கவோ முடியாது.
4. நாம் எப்போதும் சந்தோஷமாகவே இருக்க விரும்புகிறோம். ஆனால், சந்தோஷம் என்று உலகத்தில் தனியாக எதுவுமே இல்லை. நாம் சந்தோஷம் என்று நினைக்கிற எல்லா விஷயங்களிலும், துக்கமும் உள்ளடங்கியே உள்ளது, நாணயத்தின் இரு பக்கங்களைப் போல. அதிலிருந்து ஒன்றை விரும்பி ஏற்போமானால் மற்றதும் கூடவே வரும். அதை ஏற்கும் மனப் பக்குவம் நமக்கு வேண்டும். இரண்டும் மாறி மாறி வரும். எதுவுமே நிரந்தரம் இல்லை.
மேற்கண்ட விளக்கத்துக்காகக் கிருஷ்ணமூர்த்திக்கு நன்றி கூறுவதோடு, சில நாட்களுக்கு முன் இஸ்லாமிய நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த ஒரு விஷயத்தையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
தமிழ் எழுத்தாளர் சங்கம் தொடங்கப்பட்ட சமயம் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு எழுத்தாளர்கள் எனக்கு நெருங்கிய நண்பர்களாக விளங்கினார்கள். ஒருவர், அரசியல் துறையில் பிரவேசித்து, பாராளுமன்ற உறுப்பினராகத் திகழ்ந்த அப்துஸ் ஸமது, (இவர் பெயரை அப்துல் ஸமது என்று பலர் அச்சிட்டு வந்தார்கள். ஒருநாள் இவர் எனக்கு போன் செய்து தமது பெயரை அப்துஸ் ஸமது என்று குறிப்பிடுவதே சரியானது என்று தெரிவித்தார்.) இனிய இயல்புகள் நிறைந்த இந்த நண்பரைச் சில வருடம் முன்பு இழந்துவிட்டேன்.
ஹாஜி மெளலானா எம். அப்துல் வஷ்ஹாப் இன்னோர் எழுத்தாளர். 'பிறை' என்ற மாத இதழை நடத்தி வருகிறார். இந்தியாவுக்குள்ளும் வெளிநாடுகளிலும் சொற்பொழிவுகளுக்காகப் பயணம் செய்துகொண்டே இருப்பவர். நேரில் சந்திக்க நேரும்போது மார்போடு அணைத்துக் கொண்டு நலம் விசாரிப்பார். என் கதையில் எங்காவது இஸ்லாமியப் பழக்க வழக்கங்கள் பற்றிய சந்தேகம் ஏற்பட்டால் இவரைத் தொடர்பு கொண்டு தெளிவு பெறுவேன்.
நண்பர் வஷ்ஹாப்பிடம் பேசியபோது, 'இறைவனின் செயல்களை ஏன் அப்படி ஏன் இப்படி என்று ஆராய்வதே தவறு. மரத்திலிருந்து விழும் ஒவ்வோர் இலையும் ஆண்டவன் அறியாமல கீழே விழுவதில்லை என்று திருக்குரான் சொல்லியிருக்கிறது. உலகத்தில் எத்தனை கோடானு கோடி மரங்களிலிருந்து தினம் எத்தனை கோடானு கோடி இலைகள் விழுந்துகொண்டிருக்கின்றன! அப்படியானால் ஆண்டவனின் அறிவு எவ்வளவு பரந்தது! நினைத்துப் பாருங்கள்!' என்றார். கூடவே, இப்படி ஆராய்ச்சிகள் செய்த ஒருவரைப் பற்றிய பழங்கதையையும் சொன்னார்.
சாலமன் என்ற மன்னர் சிறந்த விவேகி. தத்துவஞானி. கி.மு. 970'ம் ஆண்டு வாக்கில் இஸ்ரேலை ஆண்ட மூன்றாவது மன்னர். அரசாட்சியைக் காட்டிலும் ஆன்மிகத்தில் அதிகப் பற்று- அளவுக்கு அதிகமான பற்று- கொண்டிருந்தார். குடிமக்களை கவனிப்பதை விட்டுவிட்டு, 'ஆண்டவன் ஏன் உலகத்தை இப்படிப் படைத்தான்?- நன்மை தீமை என்று எதற்காக ஏற்படுத்தினான்? நல்லவர்கள் கெட்டவர்கள் என்று இரண்டு வகையினரை ஏன் சிருஷ்டித்தான்?' என்பது போன்ற சிந்தனைகளில் சதா சர்வதா மூழ்கியிருந்தார். நாட்டை ஆளவேண்டிய ஒரு மன்னர் இப்படி இருக்கலாமா என்று இறைவனுக்குக் கவலை உண்டாயிற்று. அவர் போக்கைத் திருத்த வேண்டுமென்று ஒரு தேவதூதனை அனுப்பினார்.
அன்று சாலமன் மன்னர் கடற்கரையில் சிம்மாசனம் போட்டுக்கொண்டு உட்கார்ந்து, வழக்கம்போல கடவுள் ஏன் அப்படிச் செய்தார், ஏன் இப்படிச் செய்தார் என்றெல்லாம் சிந்தனை செய்த வண்ணமிருந்தார். தேவதூதர் ஒரு சிறுவனாக வடிவமெடுத்தார். ஒரு சுரைக் குடுக்கையை - அதுவும் ஓட்டை உள்ளது - எடுத்து, கடலில் நீர் மொண்டு அதைக் கரையில் கொண்டு வந்து கொட்டுவதும், மறுபடி கடலுக்குப் போய்த் தண்ணீரை எடுத்து வந்து மறுபடி கரையில் கொட்டுவதுமாக இருந்தான் அந்தச் சிறுவன்.
சாலமன் அவனைக் கூப்பிட்டு, 'தம்பி, என்ன செய்கிறாய் நீ?' என்று கேட்டார்.
'தயவுசெய்து என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள், அரசே. இன்று பொழுது சாய்வதற்குள் இந்தக் கடல் தண்ணீர் மொத்தத்தையும் மொண்டு வந்து கரையிலே கொட்டிக் கடலை வற்றடிக்கப் போகிறேன்' என்றான் சிறுவன்.
'பைத்தியக்காரத்தனமாய் இருக்கிறதே நீ செய்வது? எங்காவது ஓட்டைக் குடுக்கையில் தண்ணீர் மொண்டு வந்து கொட்டி இவ்வளவு பெரிய கடலை வற்றடிக்க முடியுமா?' என்று சிரித்தார் சாலமன்.
'ஏன் முடியாது, அரசே! அளக்க முடியாத அறிவு படைத்தவன் ஆண்டவன். இது சரியா, அது ஏன் இப்படி, ஏன் அப்படி என்று இறைவனின் செயல்களைத் தங்களது சிறிய மூளையைக் கொண்டு ஆராய்கிறார்களே சிலர், அதைக் காட்டிலுமா என் செய்கை பைத்தியக்காரத்தனம்?' என்று பதிலளித்தான் பையன்.
மன்னர் சாலமன் தன் ஆராய்ச்சிகளை அன்றோடு மூட்டை கட்டி வைத்துவிட்டு நாட்டைச் சரிவர ஆளும் பணியில் இறங்கினாராம்.
உனக்கு நியமிக்கப்பட்டது எதுவோ அதை சிரத்தையுடன் செய், மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கீதையில் கண்ணன் சொன்னதன் பொருளும் இங்கே புரிகிறது.
R.K.Rangarajan