தோசை மாவு... புளித்துவிட்டதா? புளிக்கவில்லையா?
By - கீதா ஹரிஹரன்.
இட்லி தோசைக்காக மதியம்தான் மாவு அரைத்தீர்கள். ஆனால் இரவே இட்லி, தோசை தயாரித்தாக வேண்டும். என்ன செய்வீர்கள்? மாவு இருக்கும் பாத்திரத்தை மூடி அப்படியே வெயிலில் வைக்கலாம். அடுக்கு மாடி வீடுகளில் குடியிருப்பவர்கள் வெயில் வரும் ஜன்னல் பக்கமாக வைக்கலாம் அல்லது குக்கரில் இருக்கும் சூடான நீரிலும் மாவு பாத்திரத்தை வைக்கலாம். சட்டென்று புளித்து மாவு தயாராகிவிடும்.
பேனாவில் மை நிரப்ப உபயோகிக்கும் இங்க்ஃபில்லர் ஒன்றிரண்டு வாங்கி சமையலறையில் வைத்துக் கொள்ளுங்கள். எஸ்சென்ஸ் வகைகள் சோயா சால்ட் போன்றவற்றை சரியான அளவுகளில் சமையலில் சேர்க்க வசதியாக இருக்கும்.
தோசைக் கல்லின் ஓரம் எண்ணெய்க் கறை படிந்து இறுகிப் போய்விட்டதா? அடுப்பை ஏற்றி தோசைக்கல்லின் விளிம்புப் பகுதியை மட்டும் எரியும் தீயில் வட்டமாகச் சூடேற்றி உடனே ஒரு மரக்கரண்டியால் சுரண்டினால் இறுகியுள்ள பிசுக்குப் பகுதி இளகி உதிர்ந்துவிடும்.
தோசை மாவு புளித்து விட்டதா? அதில் பாதியளவு கோதுமை மாவு, பாதியளவு ரவை கலந்து தேவையான உப்பு மற்றும் தண்ணீரைச் சேர்த்து தோசை வார்த்தால் சுவையான புளிப்பில்லாத தோசை ரெடி.
Comment