கசப்பு சுவை உள்ள காபி, பலருக்கும் பிடித்த பானம்; அதிலும், மண மணக்கும், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' இன்னும் ஸ்பெஷல்!
சென்னையை தாண்டி, திருச்சி செல்லும் சாலையில், இதற்காக பல கடைகள் இருந்தாலும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சென்றால், ஒரிஜினல் சுவை காபியை பருகலாம்.
நயமான, ஒரு கிலோ காபிக் கொட்டைகளை, பதமான சூட்டில் வறுக்கும் போது, 800 கிராம் அளவில் குறையும்; அதை அரைத்தால், மூன்று தரங்களில் பொடி கிடைக்கும். 'பி' எனப்படும் தரம் தான், நம்பர் ஒன். அதிலிருந்து, ஒருமுறை மட்டும் டிகாஷன் எடுத்து, பாலில் கலந்தால், டிகிரி காபி தயார்!
கும்பகோணத்தில், டிகிரி காபி கடை வைத்திருக்கும் சுபாஷ், 'கறந்த, நீர் சேர்க்காத பசும் பால்; ஒருமுறை மட்டுமே டிகாஷன் எடுக்கப்படும் காபி; இவை இரண்டும் தான், சுவைக்கு அடிப்படை. அடர்த்தியான, கறந்த பாலின் தரத்தை, 'டிகிரி' என்பர். அப்பாலில் தயாரிப்பதால், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' என்ற பெயர் உண்டானது.
'கடந்த, 1960ல் அய்யச்சாமி ஐயர் மற்றும் பஞ்சாமி ஐயர் இருவரும் தங்கள் கடையில், கறந்த பாலில், நீர் சேர்க்காமல், காபி போட்டு கொடுக்க, அதன் சுவையில் மயங்கிய வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்தது. கோவில் நகரம் என்பதாலும், இசைக் கலைஞர்கள் கூடும் இடம் என்பதாலும், வெளியூரில் இருந்து வந்தோர், காபியின் சுவையில் இளைப்பாற, அதன் புகழ், உலகம் முழுக்க பரவியது...' என்கிறார்.
அத்துடன், பித்தளை பாத்திரங்களுக்கும், பெயர் பெற்ற ஊர் கும்பகோணம். காபியை அதிலேயே கொடுக்க, இன்று, அதுவும் ஒரு பிராண்ட் ஆகி விட்டது என்கிறார் சுபாஷ்.