மனிதநேய சிந்தனைகள் - 02
இரு தினங்களுக்கு முன் ஒரு நாள் இரவு,
'ஏன் இப்படி தங்கள் தங்கள் கடவுள்தான் பெரியவர், சிறந்த்வர் என்று
மனிதர்கள் அதற்காக சண்டையிட்டுக்கொண்டு பொன்னான
நேரத்தையும் வாழ்க்கையையும் வீணடித்துக்கொள்கிறார்களே'
- என்று யோசித்த வண்ணம் இருந்தேன்.
பொதுவாக எல்லோருக்குமே, சிந்தனையின் ஊடே விவஹாரமான
(வக்ரமான) சிந்தகைளும் வரக்கூடும் தானே?!
அப்படிச் சில யோசனைகள் இந்த சிந்தனையிலும் ஏற்பட்டது:
1. பொதுவாக ஒரு நல்ல வஸ்து ஒருவருக்குக் கிடைத்தால்
அதை இரண்டாம்பேர் தெரியாமல் - அனுபவிப்பதுதானே
மனித குணம்! அப்படியிருக்க, கடவுள் விஷயத்தில் மட்டும்
இதைக் கடைப்பிடிப்பதில்லையே ஏன்?!
2. கடவுள் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்
என்று எல்லா மதமும் சொல்கின்றன, எல்லோரும்
அதை ஒப்புக்கொள்ளவும் செய்கின்றனர் - அப்படியிருக்க,
வேறொருவன் வேறொரு உருவத்தில் கடவுளைப் பார்கிறான்,
அதை மட்டும் ஏன் ஏற்க மறுக்கின்றனர்?
3. மனிதர்களின் ரசனைகள் மாறுபட்டு இருக்கின்றன,
ஒவ்வொருவன் ரசனைக்கேற்ற வகையில் அந்த
பரப்ரஹ்மம்தானே வெவ்வேறு வடிவில் இருக்கிறார்!
நம் ரசனைப்படியே அடுத்தவரும் இருக்கவேண்டும்
என்று எண்ணுவது எப்படி நியாயம்? மேலும்,
நம் ரசனைப்படி உள்ள கடவுளை மற்றொவனை
நம்பி ஏற்கச் செய்வதால் என்ன பயன்?
எனவே,
நாராயணன்தான் பரப்ரஹ்மம்
சிவன்தான் பரப்ரஹ்மம்
கணபதிதான் பரப்ரஹ்மம்
சக்திதான் பரப்ரஹ்மம்
என்று அவரவர்களுக்கு பிடித்த தெய்வத்தை
முன்னிருத்திப் பார்க்காமல்,
எது பரப்ரஹ்மமோ அதுதான் நாராயணன்
எது பரப்ஹ்மமோ அதுதான் சிவன்
எது பரப்ரஹ்மமோ அதுதான் கணபதி
எது பரப்ரஹ்மமோ அதுதான் சக்தி
என்று பார்த்தோமானால் அனைத்தும்
பரப்ரஹ்மமாகத் தெரியும்.
ஒரு குடும்பத்தில் ஒருவர் சயின்ஸ் படிக்கிறார், ஒருவர் பொறியியல் படிக்கிறார், ஒருவர் சரித்திரம் படிக்கிறார், ஒருவர் கணிதம் படிக்கிறார் ஆனால் அனைவரும் பெறுவது ஒரே தரமான பட்டம்தானே?
வேறு பாடத்தில் பட்டம் பெற்றவரையும் மதித்துப் போற்றும் மனிதன்,
வேறு வழியில் தன் தெய்வத்தை தொழும் மனிதனிடம் மட்டும்
காழ்புணர்வு கொள்வதில் எந்த நியாமும் இல்லை.
என்.வி.எஸ்.