Announcement

Collapse
No announcement yet.

பஜ கோவிந்தம் தமிழாக்கம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பஜ கோவிந்தம் தமிழாக்கம்




    கோவிந்தா சொல் கோவிந்தா சொல்
    கோவிந்தா சொல் மட மானிடனே
    இலக்கண விதிகள் தருவது யாது
    மரணத்தின் வாயில் நீ செல்லும் போது

    வேண்டாம் வேண்டாம் செல்வத்தின் மோகம்
    முன்வினை பலன்கள் கிடைத்தால் போதும்
    நேர்மையை உந்தன் விதியாக்கு
    பற்றற்ற வாழ்வை வழியாக்கு

    கண்ணை கவரும் பெண்ணின் தேகம்
    கண்டால் தோன்றும் மனதில் மோகம்
    கண்களை மூடி உள் நோக்கு
    எலும்பும் சதையும் நமக்கெதர்க்கு?

    ஆணவம் தந்திடும் சோகம் ரோகம்
    அனைவரின் மனமும் அனுதினம் வேகும்
    தாமரை மலர் மேல் மழைத்துளி அன்ன
    மனிதனின் வாழ்வில் நிலைப்பது என்ன?

    செல்வந்தனாய் நீ இருக்கும் வரைக்கும்
    சுற்றமும் நட்பும் அன்பால் அணைக்கும்
    உயிரை உடலை மரணம் பிரிக்கும்
    உடனே பிணமென உறவுகள் எரிக்கும்

    எப்போதும் செல்வம் துயரை கொடுக்கும்
    எப்போது செல்லுமென உயிரை எடுக்கும்
    மகனிடம் செல்வந்தன் கொள்வான் பகைமை
    எங்கும் எப்போதும் இது தான் நிலைமை

    சிறியோர் மனதில் விளையாட்டு வேடிக்கை
    இளைஞர் மனதில் காமத்தின் வாடிக்கை
    முதியவர் அழுகிறார் நடந்ததை எண்ணி
    நிறைவது யாரிங்கு நற்றவம் பண்ணி?

    உற்றவள் யார்? உறவுகள் யார்?
    பெற்றவர் யார்? பிள்ளைகள் யார்?
    எங்ஙனம் வந்தோம் விசித்திர உலகில்?
    என்பதை எண்ணு உந்தன் மனதில்

    நல்லவர் நட்பு பற்றினை வெறுக்கும்
    பற்றற்ற மனமே மாயையை அறுக்கும்
    மாயை அறுபட உண்மை புலப்படும்
    உடலை உதறுமுன் மோட்சம் அகப்படும்

    இளமை மறைந்த பின் காமம் இனிக்குமோ?
    நீரை இழந்த பின் ஏரி நிலைக்குமோ?
    செல்வத்தை இழந்த பின் உறவுகள் ஏது?
    உண்மையை உணர்ந்த பின் இவ்வுலகம் ஏது?

    இள நட்பில் பணத்தில் பெருமை உரைக்கும்
    மனிதன் மகிழ்ச்சியை காலம் கரைக்கும்
    மாய உலகத்தின் பற்றை அறுத்திடு
    அழியா உண்மையில் மனதை நிலைத்திடு

    சூரியன் பலமுறை வந்தாலும் போனாலும்
    கோடையும் வாடையும் ஆயிரம் சென்றாலும்
    மனிதனின் வாழ்க்கையை காலம் கொன்றாலும்
    அந்தோ பாவம் அவன் ஆசைகள் நின்றாடும்

    மேலே சொன்ன பாடல்கள் மூலம்
    இலக்கண மேதை ஒருவனின் மூடம்
    அறுத்தார் எறிந்தார் அதிஷங்கரர்
    உலகம் போற்றும் பகவத்பாதர்

    பத்மபாதர் சொன்னார்

    மனைவியை நினைத்தாய் செல்வத்தை நினைத்தாய்
    கால்போன போக்கில் காற்றாய் அலைந்தாய்
    ஒருவரும் இல்லையோ உண்மையை உரைக்க
    காதுகளை கொடுப்பாய் துன்பத்தை ஒழிக்க
    நல்லவர் நட்பே உன்னை உயர்த்திடும்
    சம்சாரக் குழியின் வெளியே எடுத்திடும்

    தொதகாச்சாரியர் சொன்னார்

    சடைமுடி தரித்தவர் தலைமுடி சிரைத்தவர்
    உடல்முடி களைந்தவர் காவிகள் அணிந்தவர்
    பசிக்கும் நேர வயிற்றின் பாசம்
    போட வைக்கும் ஆயிரம் வேஷம்
    பேருண்மை கண்முன் தோன்றிடும் போது
    மயங்கிய மானிடர் காண்பது ஏது

    ஹஸ்தாமலக்கா சொன்னார்

    வலிமை இழந்த உடல் சக்கையானது
    பற்களை இழந்த வாய் பொக்கையானது
    முதியவர் செல்கிறார் ஊன்றுகோல் எடுத்து
    நிறைவேறா ஆசைகள் நெஞ்சத்தில் பிடித்து

    சுபோதா சொன்னார்

    வெம்மை வேண்டி நெருப்பை நெருங்குவான்
    கையை போர்த்தி தரையில் உறங்குவான்
    பிச்சை எடுத்து உணவை உண்டு
    மரத்தின் நிழலில் உறக்கம் கொண்டு
    வாழ்க்கை நடத்தும் யாசகனுக்கு
    ஆயிரம் ஆசைகள் இன்னமும் இருக்கு

    வார்த்திககாரர் சொன்னார்

    மோட்சத்தை வேண்டி கங்கையில் மூழ்கலாம்
    விரதம் இருக்கலாம் தானம் கொடுக்கலாம்
    உயர்ந்த உண்மையை உணரா விடில்
    உனதென்று ஆகாது அழியா குடில்

    நித்யானந்தர் சொன்னார்

    தெருவில் குடிபுகு வீட்டை மறந்து
    எளிமையை கைக்கொள் மான்தோல் அணிந்து
    உறக்கம் கொண்டிடு மண்ணில் கிடந்து
    அன்பால் காணிக்கை ஏற்பதை துறந்து
    இப்படி வாழ்பவன் உள்ளம் நிறைந்து
    வருந்துவதெப்படி செல்வம் இழந்து

    அனந்தகிரி சொன்னார்

    பேரின்பப் பெருநிலை யோகத்தில் நிலைத்திடு
    சிற்றின்ப கேளிக்கை ஆட்டத்தில் களித்திடு
    இறையில் இதயத்தை நிறுத்தியவனுக்கு
    இன்பத்தை தவிர வேறென்ன இருக்கு?

    தீர்த்தபக்தர் சொன்னார்

    நீ கீதையை மட்டும் எப்போதும் படிப்பாய்
    பெருகிடும் கங்கையில் ஒருதுளி குடிப்பாய்
    உன்மனம் எப்போதும் இறைவனை நினைக்கட்டும்
    இறைவன் உந்தன் எமபயம் போக்கட்டும்

    நித்யநாதர் சொன்னார்

    மீண்டும் மீண்டும் பிறந்தேன் இறந்தேன்
    தாய்மையின் கருவறை அயராது கடந்தேன்
    கடப்பது கடினம் இவ்வுலகின் அரணை
    முகுந்தா என்மேல் கொள்வாய் கருணை

    குப்பையில் கந்தல் கிடக்கும் விரவி
    எளிமையாய் அணிந்து வாழ்வான் துறவி
    பதவியின்றி பட்டம் இன்றி
    கொள்கையின்றி கோட்பாடின்றி
    அலைபவன் கண்ணில் உலகம் இல்லை
    நீயும் இல்லை நானும் இல்லை
    இதை உணர்ந்தால் இல்லை சோகத்தின் தொல்லை

    சுரேந்திரர் சொன்னார்

    உன்முன் நிற்கும் நான் யார்?
    என்முன் நிற்கும் நீ யார்?
    உடலை சுமந்த தாய் யார்?
    உயிரை தந்த ஆண் யார்?
    இங்கே வரும்முன் எவ்விடம் நம்மிடம்?
    இவற்றை நீ கேள் நீயே உன்னிடம்
    மாய உலகின் அபத்தம் உணர்ந்து
    விடுதலை பெற்றிடு உலகை மறந்து

    மேததிதிர் சொன்னார்

    உன்னிலும் என்னிலும் விஷ்ணுவே வாழ்கிறார்
    காண்பவை எல்லாம் அவரே ஆகிறார்
    அர்த்தம் அற்றது உந்தன் கோபம்
    செய்யும் செயலில் நீ காட்டிடும் வேகம்
    எல்லோர் முகத்திலும் உன்னையே கண்டிடு
    வேற்றுமை விகாரம் இன்றே வென்றிடு

    நட்பும் பற்றே பகையும் பற்றே
    போரில் காட்டும் வீரம் பற்றே
    அமைதியை நாடும் ஈரம் பற்றே
    பிள்ளையை கொஞ்சும் பாசம் பற்றே
    உறவில் மகிழும் நேசம் பற்றே
    எல்லாம் எதுவும் சமமென கொள்ள
    எளிதாய் ஆகும் வைகுண்டம் செல்ல

    பாரதிவம்சர் சொன்னார்

    காமம் க்ரோதம் லோபம் மோகம்
    தன்னை உணர்ந்தால் உடனே போகும்
    தனக்குள் உறையும் உண்மையை காணார்
    நரகம் செல்லும் முட்டாள் ஆனார்

    சுமதிர் சொன்னார்

    ஞானத்தை அடைய கீதையை நாடு
    விஷ்ணுவின் ஆயிரம் நாமம் பாடு
    மனதால் அவனுக்கு கோவில் கட்டு
    நல்லோர் ஞானியரின் உறவை பெற்று
    தானம் தந்திடு ஆசையை விட்டு
    பசியால் ஏங்கிடும் ஏழையை தொட்டு

    காமத்தை உற்று திரிபவன் மேனி
    ரோகத்தை பெற்று குறுகிடும் கூனி
    மரணம் மட்டுமே இறுதி விடுப்பு
    என்பதை உணர்ந்தும் பாவத்தில் பிடிப்பு

    சுவாசத்தை அடக்கி தன்னில் நிலைத்திடு
    பொய்மையும் மெய்மையும் சிந்தையில் பிரித்திடு
    இறைவனின் நாமத்தை அயராது ஜபித்திடு
    அலையும் மனதை கட்டுக்குள் வைத்திடு
    அண்டத்தின் சட்டம் இதுவென உணர்ந்திடு
    உயிரை மனதை இம்முயற்சிக்கு தந்திடு

    குருவை உந்தன் உயிரென எண்ணி
    பாதத்தில் வைத்திடு உந்தன் சென்னி
    உலகில் அடிமை வாழ்வை நிறுத்து
    மனதை அடக்கும் யோகத்தில் நிலைத்து

    ஆதி ஷங்கரர் சிஷ்ய பிள்ளைகள்
    அவர் அன்பில் மலர்ந்த ஞான முல்லைகள்
    மேலே சொன்ன பாடல்கள் சொல்லி
    இலக்கண மேதையின் மூடம் எள்ளி
    அறியாமை தந்திடும் அழிவை தடுத்தனர்
    நற்சோதியை தேடும் பாதையில் விடுத்தனர்

    கோவிந்தா சொல் கோவிந்தா சொல்
    கோவிந்தா சொல் மட மானிடனே
    இன்ப தேவன் நாமத்தை சொல்ல
    துன்ப உலகம் கரைந்திடும் மெல்ல



    Last edited by bmbcAdmin; 25-10-14, 10:35.
Working...
X