Announcement

Collapse
No announcement yet.

முக வீணை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • முக வீணை

    பெயர் என்னவோ முகவீணை என்பதுதான். ஆனால், வீணையைப் போன்ற தந்தி வாத்தியம் அல்ல இது. துளையிசைக் கருவி. தற்போது ஜனநாயக ரீதியில் பெரும்பான்மையாக புழக்கத்தில் இருந்து வரும் பாரி நாதஸ்வர இசைக்கருவியின் மிக மூத்த ஆதி வடிவமே முகவீணை. இக்கருவிக்குத் தண்டுப் பகுதியான உலகில் எட்டு துவாரங்கள் உண்டு. சுமார் ஒண்ணரை அடி நீளம் கொண்டது. இதைவிட அரை அடி உயரம் கூடுதலானது திமிரி நாதஸ்வரம். அதனையும்விட சற்று நீளமானது பாரி நாதஸ்வரம். முற்காலத்தில் அதன் நீளம் ஏன் மிகவும் குறைவாக வடிவமைக்கப்பட்டது?

    அந்தக் காலத்தில் மின் சாதன வசதிகள் ஏதும் இல்லை. அதனால், கோயிலில் அர்த்தஜாம பூஜையின்போது, ஒரு கலைஞர் முகவீணையைப் பிடித்து வாசித்தார் என்றால், அதன் இசையொலி சுற்றுவட்டாரக் கிராமங்களுக்குள் நுழைந்து சுழன்றடிக்கும். கருவியின் நீளம்தான் குறைவே தவிர, அதிலிருந்து வெளிப்படும் ஒலியின் அளவு மிகமிக அதிகம்.

    இதோ அர்த்தஜாம பூஜை. முகவீணை இசை அதிர பள்ளியறைக்கு எழுந்தருளப் போகிறார் எங்கள் சுவாமி. ஊர் மக்களே வந்து தரிசியுங்கள். நீங்களும் தரிசித்துவிட்டு துயில் கொள்ளச் செல்லுங்கள் என்று சொல்லாமல் சொல்லி இசைக்கப்படுகிறது முகவீணை.

    ஒலிபெருக்கி வசதிகள் வரத் தொடங்கிய காலங்களில் எட்டு ஊருக்கு அதிரும் முகவீணை ஓசை தேவையற்றுப் போனது. அதன் நீளத்தை படிப்படியாக உயர்த்தி, ஓசை குறைத்து மின் சாதனக் கருவிகள் வாயிலாக அதன் ஒலியினைத் தேவைக்கேற்ப கூட்டி அல்லது குறைத்து வைத்துக் கொள்ள நேர்ந்தபோது நாதஸ்வரம் எனப் பெயர் மாற்றம் பெற்று, அதன் வடிவத்திலும் கூடுதல் நீளத்துக்கு வடிவமைக்கப்பட்டது. மிகவும் புராதன இசைக்கருவியான முகவீணை தற்போது புழக்கத்தில் இல்லாதபோதிலும், அத்தனை எளிதாக அதனைப் புறந்தள்ளிவிட முடியாது.

    இந்த இசைக்கருவியானது வீணைக்கு இணையாக நாதம் பேசக் கூடியது. வீணையைப் போல இதுவும் நாதமுகம் கொண்டிருப்பதால் இது முகவீணை என அழைக்கப்பட்டு வந்துள்ளதாகக் கூறுகின்றனர். ஆய்வாளர்கள். பெருமாள் கோயில்களில் நடைபெறும் அர்த்தஜாம பூஜையின்போது ஆனந்தபைரவி, நீலாம்பரி, கேதாரகௌளை, புன்னாகவராளி போன்ற ராகங்களை முகவீணை மூலம் இசைப்பார்கள்.

    குறிப்பிட்ட சில சிவன்கோயில்களிலும், சுவாமி மலை உள்ளிட்ட சில முருகன் கோயில்களிலும் முகவீணை வாசிக்கப்பட்டுள்ளது. நாதஸ்வர இசைக் கலைஞர்களே இதனையும் வாசித்துள்ளனர். தற்போதும் திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் அர்த்தஜாம பூஜையின்போது முகவீணை வாசிக்கப்படுகிறது. இதற்குப் பக்க வாத்தியமாக சுத்தமத்தளம், நட்டுவாங்கம் ஆகியன சேர்ந்திசைக்கப்படுகின்றன. மன்னர்கள் காலத்தில் கோயில்களில் இறைவனுக்கான இரவு நேர பூஜையின் போது, முகவீணை இசையுடன் நிகழும் ஆடல்- பாடல் காட்சிகள் அதியற்புதம். சுத்தி மத்தளம் வாசிப்புடன் நட்டுவனார்கள். பதம் பாட, தேவதாசியர் நடனம் ஆட... அவற்றை ரசித்தபடி இறைவன் பள்ளியறைக்குப் புறப்பாடு ஆகிச் செல்வார். ஆக, ஆடல் பாடல் கலையாகவே அது நிகழ்த்தப்பட்டு வந்துள்ளது. பின்னர் முகவீணை இசை மட்டுமே நிரந்தரமானது,

    நாட்டுப்புற வழக்கில் இதற்கு கட்டைக்குழல் என்றும் பெயர் உண்டு. ஒரு காலகட்டத்தில் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை வட்டாரங்களில் கட்டைக்குழல் கொண்டு நிகழ்த்தப்படும் நாட்டுப்புற ஆடற்கலை நிகழ்த்தப்பட்டு வந்துள்ளது. அப்போது தவில், பம்பை, உருமி போன்ற தோலிசைக் கருவிகளோடு கட்டைக்குழல் எனப்படும் முகவீணையும் வாசிக்கப்பட்டுள்ளது.

    இக்கருவியின் அனசுப்பகுதி வெண்கலத்தால் ஆனது. அதன் சீவாளி பனை ஓலையால் செய்யப்பட்டிருக்கும். முகவீணை பின்புறம் உள்ள அனசு, மா, பலா, வேம்பு போன்ற மரங்களால் செய்யப்படுகிறது. நீளமான தண்டுப்பகுதி செய்ய கருங்காலி மர ரகங்களில் ஒன்றான ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது. நன்கு நீர் வற்றிப்போன மரங்களே முக வீணை செய்யத் தகுந்தவை. நாதஸ்வரத்தைவிட வாசிக்க மிகவும் சிரமமானது முகவீணை! எனச் சொல்கிறார் கும்பகோணம் அருகே நரசிங்கம் பேட்டை கிராமத்தின் சேகர் ஆசாரி. அந்தக் கிராமத்தில் நாதஸ்வரம் தயாரித்துத் தரும் அக்குடும்பத்தினர்தான், யாரும் கேட்டால் முகவீணையும் செய்து தருகின்றனர்.

    சுடுகாட்டு சித்தன்
Working...
X