Announcement

Collapse
No announcement yet.

அட்டமா சித்தி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அட்டமா சித்தி

    ஒரு சமயம் கார்த்திகைப் பெண்களின் ஆணவத்தையும் அடக்க திருவிளையாடல் புரிந்தார் சோமசுந்தரர். கைலாயத்தில் ஒருமுறை அவர் உமாதேவியுடன் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்னும் அஷ்டமாசித்திகளும் எட்டுப் பெண்களாக உருமாறி, அம்பிகைக்கு சேவை செய்து கொண்டிருந்தன. அந்த சித்திகளின் மகிமை அளவிடற்கரியது. அந்த சித்திகளைப் பெற வேண்டுமானால் பெரும் தவம் செய்ய வேண்டும். கார்த்திகைப் பெண்களுக்கு அந்த சித்திகளைப் பெறும் ஆசை இருந்தது. அதைப் பெறுவதற்காக கைலாயம் வந்த அவர்கள், சிவபெருமானை வணங்கி, ஐயனே! அஷ்டமாசித்தியை எங்களுக்கு அருளவேண்டும், என்று கேட்டுக்கொண்டனர். அவர் அந்தப்பெண்களிடம், பெண்களே! அஷ்டமாசித்திகளும் அம்பிகையின் பணிப்பெண்களாக உள்ளனர். அவற்றைப் பெற வேண்டுமானால் நீங்கள் அம்பாளை வழிபட வேண்டும். அவளைப் போய் கேளுங்கள், என சொல்லிவிட்டார். அப்போது, அந்தப்பெண்களின் விதிப்பலன் மாறும் சமயமாக இருந்தது. இதனால், புத்திகெட்டு போன அவர்கள் அம்பிகையை மதிக்காமல் அங்கிருந்து கிளம்பினர். அவளுக்கு மரியாதை நிமித்தம் கூட வணக்கம் சொல்லவில்லை. தன் கட்டளையையும் மீறி, அம்பிகையையும் வணங்காமல் சென்ற அந்தப் பெண்களை சிவன் சபித்து விட்டார்.

    ஏ பெண்களே! நீங்கள் என் கட்டளையையும் மீறி, அம்பாளையும் மதிக்காமல் சென்றதால் நீங்கள் பட்டுப்போன மரங்கள் போல் ஏதுமே இல்லாமல் போகக் கடவீர்களாக, என்றார். அந்தப் பெண்கள் பட்டுப்போன மரங்களைப் போல் தங்கள் அழகு, ஐஸ்வர்யம் அனைத்தையும் இழந்து பூலோகத்தில் வந்து விழுந்தனர். அவர்கள் விழுந்த இடமே பட்டமங்கை எனப்பட்டது. தற்போது சிவகங்கை மாவட்டத்தில் பட்டமங்கலம் என்ற பெயரில் இப்போதும் இந்த ஊர் உள்ளது. அவ்வூரில் அவர்கள் கல்லாகக் கிடந்ததாகவும் வரலாறு உண்டு. ஆயிரம் தேவஆண்டுகள் அவ்வாறு கல்லாகக் கிடந்த அவர்களை, அங்கிருந்த ஆலமரத்தின் பழங்கள் விழுந்து விழுந்து மூடின. சாப விமோசன நேரத்தில் அந்தப் பழங்களின் ஊடேயிருந்து அந்தக் கற்கள் வெளிப்பட்டன. அங்கே லிங்கவடிவில் இருந்த சுந்தரேஸ்வரரின் கருணைப் பார்வையால் விமோசனம் பெற்று தங்கள் இருப்பிடம் சேர்ந்தனர். உமாதேவியாரிடம் மன்னிப்பு கேட்டு, அஷ்டமா சித்திகளையும் வேண்டினர். அவர்களிடம் சிவபรถருமான், பெண்களே! சிவயோகிகள் இத்தகைய சித்திகளை விரும்பமாட்டார்கள். அந்த சித்திகளின் பெருமையை மட்டும் உங்களுக்கு சொல்கிறேன். அவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள், என்று சொல்லி உபதேசித்தார். அந்தப் பெண்களும் உபதேசத்தைக் கேட்டு, சிவயோகினிகளாக மாறினர். பட்டமங்கலத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கார்த்திகைப் பெண்களின் சிலைகள் இப்போதும் இருப்பது குறிப்பிடத்தக்கது. சித்திகள் எட்டு வகைப்படும். அவையாவன: அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பனவாகும். இவை அஞ்ஞானம் நீங்கிய ஞானிகளின் விளையாட்டுகளின் வகைகளாகும்.

    மிக நுண்ணிய உயிர்கள் தோறும் தான் மிக்க சிறுமையாகிய பரமாணுவாய்ச் சென்று தங்கும் நுண்மையே அணிமா ஆகும். மண் தத்துவம் முதல் சிவத்தத்துவம் வரை, முப்பத்தாறு தத்துவங்களின் உள்ளும் புறமும் நீங்காமல், நிறைந்துள்ள பெருமையே மகிமா ஆகும். மேருமலை போலக் கனத்திருக்கும் யோகியை எடுத்தால், இலேசான பரமாணுவைப் போல் கனமற்று இருப்பதே இலகிமா ஆகும். லேசான பரமாணுவைப் போல் மெலிந்திருக்கும் யோகியை எடுத்தால், மேருமலையின் பாரம் போலக் கனமாக இருப்பது கரிமா ஆகும். பாதலத்தில் உள்ள ஒருவன், பிரமலோகத்தில் புகுவது, மீண்டும் பாதலத்தை அடைவது பிராத்தி ஆகும். வேறு உடலிற் புகுதலும், விண்ணில் சஞ்சரித்தலும், தான் விரும்பிய இன்பங்கள் அனைத்தையும், தான் இருக்கும் இடத்திலே நினைத்த வண்ணம் வரச் செய்தலும் பிராகாமியம் ஆகும். சிவபெருமானைப் போல் ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும், தம் இச்சையின்படியே இயற்றி, சூரியன் முதல் ஒன்பது கோள்களும் ஏவல் கேட்க வீற்றிருப்பதுவே ஈசத்துவம் ஆகும். அவுணர், பறவை, விலங்கு, பூதம், மனிதர் முதலிய பல்வகை உயிர்களையும் இந்திரன் முதலிய திக்குப் பாலர் எண்மறையும் தன் வசமாகச் செய்து கொள்வது வசித்துவம் ஆகும். சிவபெருமான் இயக்கியர் அறுவருக்கும் இந்த அட்டமா சித்திகள் பற்றித் தெளிவுபட உபதேசித்தருளினார். இயக்கிமார்கள் அறுவரும் உமாதேவியாரின் தியான வலியாலே நன்கு பயின்றனர். பிறகு விண் வழியே சென்று கயிலை மலையை அடைந்தார்கள்.
Working...
X