ராவணனுக்கு மண்டோதரி தவிர, மற்றொரு மனைவி தான்யமாலினி! ராவணன் - தான்யமாலினி இருவருக்கும் பிள்ளையாகப் பிறந்தவன் அதிகாயன். பார்ப்பவர் பயப்படும்படியான பருத்த உடல், மார்பு, இடுப்பு என்றெல்லாம் அவன் உடலில் பாகப் பிரிவினையே கிடையாது. மலை ஒன்று நடந்து வருவதுபோல் இருக்கும், அவன் நடந்து வரும் தோற்றம்! மலைக்கச் செய்யும் அவன் தோற்றத்தைக் கண்டே அவனுக்கு அதிகாயன் என்று பெயர் வைத்தார்கள். உடல்தான் அப்படியே தவிர, உள்ளம் வன்மையும் திண்மையும் மிக்கது. தந்தை ராவணனுக்கு சமமான வீரன், வில் வித்தையில் நிகரற்றவன். பிரம்மாவை எண்ணிக் கடுந்தவம் இருந்து, அவரது அருளையும் வரத்தையும் பெற்றான். என்ன வரம்? அசுரர்கள் யாராலும் எனக்கு மரணம் நேரக் கூடாது! பிரம்மாவும் அப்படியே அருளினார். சாம, பேத, தான, தண்டம் என்கிற நான்கு வித உபாயங்களையும் கற்றவன். அதிகாயனுக்கு பிரம்மா திவ்ய கவசம் ஒன்றையும் தங்கத்தால் செய்யப்பட்ட ரதம் ஒன்றையும் பரிசாக அளித்திருந்தார். அதன் பலத்தைக் கொண்டு இந்திரனையும் வருணனையும் தன் வீரப் பராக்கிரமத்தால் கலங்கச் செய்தான், அதிகாயன். இலங்கையில் ராம -ராவண யுத்தம் உக்கிரமாக நடைபெற்றது. ராவணன் படையின் முன்னணித் தளபதிகளான திரிசிரஸ், மகோதரன், நராந்தகன், தேவாந்தகன் போன்றோர் மாண்ட பிறகு, அதிகாயனே படைத் தலைமை ஏற்று ராமருடன் போரிட வந்தான். அவன் பிரம்மா அளித்த தங்க ரதத்தில் வருவதைக் கண்ட ராமர் வியப்படைந்தார். தன்னருகில் இருந்த விபீஷணனிடம், இவன் யார்? எனக் கேட்டார். அதிகாயன்! ராவணனின் மகன்களுள் ஒருவன். உருவத்தைப் பார்த்து ஆளைக் குறைவாக எண்ணிவிட வேண்டாம். அவன் ஒற்றை அம்பு ஓராயிரம் பேரை வீழ்த்தி, பின்னும் வேகம் குறையாமல் சீறிப் பாயும்! அப்படியா! என்று கேட்டுவிட்டு, ராமர், அதிகாயன் புயலென வரும் ரதத்தை நோக்கினார். அந்த ரதத்தில் சூரியனைப் போல் ஒளிர்கின்ற பாணங்களும், பொன்போல தகத்தகாயமாக மின்னும் கூர்மையான கத்திகளும், வாள், வேல்களும் மாட்டப்பட்டிருப்பதைக் கண்டார்.
அண்ட சராசரங்களும் அதிரும்படியான கர்ஜனையோடு ஆவேசமாக ரதம் ஓட்டி வரும் அதிகாயனைக் கண்ட ராம பிரானின் வானரப் படைகள், இறந்த கும்பகர்ணனே எழுந்து வந்து விட்டான்! என்று அலறி அடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறியோடின. கிரீடம் போர்க்களமெங்கும் ஒளிவீச, காதில் அணிந்திருந்த குண்டலங்கள் மின்னலடிக்க, அதிகாயன் நெஞ்சு நிமிர்த்தி, தன் ரதத்தில் இருந்தபடி அடுத்தடுத்து அம்புகளை எதிரிகளின் திசையெங்கும் எய்தான்; எய்தான்; எய்துகொண்டே இருந்தான். போர்க்களம் முழுதும் அவனது அம்பு மழை. ராமர் படையினர் தங்கள் வில்லில் நாண் ஏற்றும் முன்பே அதிகாயன் அம்புகளுக்கு பலியாகி அலறி வீழ்ந்து கொண்டே இருந்தனர். இறந்து கிடந்த வீரர்களின் உடல்கள் மீது தன் ரதத்தை ஏற்றி ஓட்டிக்கொண்டு வந்து, ராமரின் முன் நின்றான். ராமரை நோக்கி, நீ தான் ராமனோ! உன் பக்கம் வேறு வீரன் இருந்தால் வரச்சொல், அவன் கதையையும் முடித்து விட்டு, அதன் பின் உன்னை அழைக்கிறேன் என்று இறுமாப்புடன் கூறினான். அதுகேட்ட லட்சுமணன் வெகுண்டெழுந்து, வந்து பார்! இதோ நானிருக்கிறேன். முடிவது என் கதையா, உன் கதையா என்பது இப்போதே தெரிந்துவிடும்! என்று வில்லுடன் களத்தில் குதித்தான். சிறுவனே! என்னை சண்டைக்கு அழைக்கும் துணிவு உனக்கு இருப்பதில் தவறில்லை. இளங்கன்று; பயமறியாது! உன்னோடு போருக்கு இறங்குவது என் வீரத்திற்கு இழுக்கு! போய்விடு! என்று லட்சுமணனைப் பார்த்து, இளக்காரமாகச் சொன்னான் அதிகாயன்.
பேச்சு எதற்கு? இனி என் பாணங்களே உன்னோடு பேசும்! என்று லட்சுமணன் கூறிவிட்டு, தனது வலிய வில்லை வளைத்தான். அவன் வில் வளையும்போது எழும்பிய பேரொலி, எட்டுத் திக்கில் இருந்த மலைகளும் நடுங்கும்படியாக கிடுகிடுத்தது! அது கண்டு அதிகாயனே, இவனும் வீரனே! என்று கருதி, போரில் இறங்கினான். இருவரில் வெற்றி யார் பக்கம்? தேவர்களும், வித்யாதரர்களும்கூட கணிக்க முடியாத வெற்றிக் கணக்கு அது! அதனால் தேவர்களும் வித்யாதரர்களும் வானில் கூடி நின்று அதிகாய - லட்சுமணரின் அதிபயங்கரப் போரைக் கண்கொட்டாமல் பார்த்தனர். வில்லோடு வில்லும் வாளோடு வாளும் மோதிச் சிதறின. இரு பக்கத்து அஸ்திரங்களும் ஒன்றுடன் ஒன்று பொருந்தி, விழுந்தன. சண்டை முடிவதாக இல்லை. என்னதான் முடிவு? அப்போது வாயுபகவான் லட்சுமணனிடம் ரகசியமாக, அதிகாயன், யாராலும் பிளக்க முடியாத கவசம் தரித்துள்ளான். அதைப் பிளக்கும் சக்தி பிரம்மாஸ்திரத்திற்கே உண்டு. அதைப் பிரயோகி! என்றான். லட்சுமணன் இறுதி ஆயுதமாக தன் பிரம்மாஸ்திரத்தை அதிகாயன் நெஞ்சை நோக்கி எய்தான். அதிகாயனும் தன் வலிமை மிக்க பல பாணங்களால் அந்த பிரம்மாஸ்திரத்தை எதிர்த்து நின்றான். ஆனால் வலிமை மிக்க அந்த அஸ்திரம் இறுதியில் வென்று, அதிகாயனின் தலையை அறுத்தெறிந்தது. லட்சுமணனால் அதிகாயன் வீழ்த்தப்பட்ட செய்தி அறிந்த ராவணன், தோல்வி என்பது என்னவென்றே அறியாத அதிகாயன் தோற்றானா! வீழ்ந்தானா! மாய்ந்தானா! என்று புலம்பிக் கதறி கண்ணீர் விட்டழுதான். அதிகாயன் - ஓர் அசகாய சூரன்.