Announcement

Collapse
No announcement yet.

சுதந்திரம் எனது பிறப்புரிமை’

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சுதந்திரம் எனது பிறப்புரிமை’

    சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கிய பால கங்காதர திலகர் –
    ஒரு முறை ஜெயகாந்தன் சொன்னார், “திலகர், விவேகானந்தர், வ.உ.சி இவர்களெல்லாம் அடிமை நாட்டிலே வாழ்ந்த சுதந்திர புருஷர்கள்; நாமெல்லாம் சுதந்திர நாட்டில் வாழ்கிற அடிமைகள்!!” எத்தனை உண்மை…! எந்தெந்த கோவில் எங்கெங்கு இருக்கிறது, எந்தெந்த நாளில் என்னென்ன உற்சவங்கள் விசேஷங்கள் வருகிறது என்று தெரிந்துகொள்வதைவிட முக்கியமானது நாட்டின் விடுதலைக்காக பாடுப்பட்ட உத்தமர்களை பற்றி தெரிந்துகொள்வது. நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கவேண்டும் என்பதற்காக தங்கள் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த அந்த மாமனிதர்களை என்றென்றும் நாம் மறக்கக்கூடாது. தேச விடுதலைக்காக பாடுபட்டவர்களை புறக்கணித்துவிட்டு தங்களை சுரண்டுபவர்களின் பின்னே செல்லும் ஒரே நாடு இந்தியா தான். தமிழகம் அதில் முன்னோடி என்றால் மிகையாகாது. இந்த நிலை மாறவேண்டும். இருளை சபிப்பதற்கு பதில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கும் முயற்சியே இது போன்ற பதிவுகள்.
    அன்று வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த மக்களுக்காக விடுதலை போரை நடத்தினார்கள் நம் தலைவர்கள். இன்றும் தேவை ஒரு விடுதலை போர். எதற்கு தெரியுமா? சினிமா மோகத்திலும் குடிப்பழக்கத்திலும் அடிமைப்பட்டுக் கிடக்கும் நம் இளைஞர்களை மீட்க. திலகர் போன்ற தன்னலமற்ற இந்திய தேசிய விடுதலை போராட்ட வீரர்களை பற்றிய வரலாறு அதற்கு உதவும் என்பதில் ஐயமில்லை.
    வெள்ளையரிடம் நாம் அடிமைப்பட்டு கிடந்த காலத்திலேயே, நாம் அடிமைகளாக இருக்கிறோம் என்பதை மக்கள் உணராத காலக்கட்டத்திலேயே ‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என முழங்கிய ஒப்பற்ற தலைவர் பால கங்காதர திலகர். இன்று அவர் பிறந்த நாள்.
    பால கங்காதர திலகர் 1856-ம் ஆண்டு ஜூலை 23 ல் பிறந்தார். சிப்பாய் புரட்சி எனப்படும் முதல் சுதந்திரப்போர் ஏற்படுவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர். அவர் ஒரு அறிஞர். கணிதத்தில் புலமை மிக்கவர். தத்துவவாதி. தேசிய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்.
    மராட்டிய மாநிலம் ரத்தினபுரியில், நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் திலகர். சிறு பிராயத்திலிருந்தே அநீதிக்கு எதிராகப் பொங்கி எழுந்தார். நேர்மையும் உண்மையும் கடைப்பிடிக்கத் தகுந்தவை என எண்ணி இறுதிவரை செயல்பட்டார். பத்து வயதில் அம்மாவை இழந்த திலகர் பதினாறு வயதில் அப்பாவையும் இழந்தார்.
    பூனா நகரில் 5ம் வயதில் திலகர் பள்ளியில் சேர்க்கப்பட்டார். சமஸ்கிருதத்திலும் கணிதத்திலும் சிறந்து விளங்கினார். டெக்கான் கல்லூரியில் 1876ம் ஆண்டு முதல் மாணவராக இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றார். சட்டம் படிக்க முடிவு செய்து சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். அப்போது சிலர், “நீ கணிதத்தில் சிறப்பாக உள்ளாய். எனவே அதையே சிறப்புப் பாடமாக படித்தால் நல்ல எதிர்காலம் ஏற்படும்” என்றனர்.
    அதற்கு, “சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவோர் அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்காக வாதாடி அவர்களை காப்பாற்ற வேண்டும். அதையே என் நாடு என்னிடம் எதிர்பார்க்கிறது. அதற்காகவே நான் சட்டம் படிக்க விரும்புகிறேன்” என்றார்.
    திலகர் எந்தக் காலத்திலும் தனது பாரம்பரிய பழக்கவழக்கங்களை மாற்றாமல் பின்பற்றி வந்தார். தலைப்பாகை, அங்கவஸ்திரம், காலணி ஆகியவையும் குடும்ப வழக்கப்படியே அணிந்தார். கல்லூரிக் காலத்திலும் அதேதான்.
    உண்மையே பேசினார்; அநியாயம் கண்டு வெகுண்டார். தேசபக்திக் கனல் பரப்பினார். அவர் கொண்ட வைராக்கியத்தின்படி வக்கீலாகி, சிறையிலிருந்த பல தேச பக்தர்களை விடுதலையடைய செய்தார்.
    இவர் பரந்துபட்ட பல துறையிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அந்நியக் கல்வி முறையை கடுமையாக எதிர்த்தார். அதற்கு மாற்றாக இந்திய கல்விமுறையில் கல்வி புகட்ட விரும்பினார். சில நண்பர்களுடன் சேர்ந்து ‘நியூ இங்லீஷ் ஸ்கூல்’ என்ற பெயரில் பள்ளி தொடங்கினார். இப்பள்ளியின் மூலம் தேசிய உணர்வை எழுப்பினார்.
    ஆங்கிலேய ஆட்சியின் அலங்கோலங்களைக் கண்ட திலகர் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என விரும்பினார். இதனால் கேசரி, மராத்தா என்னும் இரண்டு வார இதழ்களை நடத்தினார். கேசரி மராட்டிய மொழியிலும் மராத்தா ஆங்கில மொழியிலும் வெளிவந்தது. இவற்றின் மூலம் திலகர் வெளிப்படுத்திய கருத்துகள் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வையும் விடுதலை வேட்கையையும் உருவாக்கின. உறங்கிக் கிடந்த தேசத்தின் ஆன்மாவைத் திலகரின் எழுத்துகள் உலுக்கின. 1890-ல் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.
    தேசம் முழுவதும் ஆங்கிலேய ஆட்சிக்கெதிரான மனநிலையை உருவாக்கவும் தேசியவாத இயக்கம் பரவவும் மக்களை ஒன்று திரட்டவும் அவர் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டையும் வீர சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் பயன்படுத்திக்கொண்டார். இவரது முயற்சியால் தேச விடுதலைப் போராட்ட மனநிலை நாடு முழுவதும் உருவானது.
    இதனால் சினம் கொண்ட ஆங்கிலேய அரசு 1897-ல், சட்டம் ஒழுங்கைக் குலைப்பதாகவும் சமூக ஒழுங்குக்குப் பங்கம் விளைவிப்பதாகவும் அவர்மீது குற்றம் சுமத்தி அவரைச் சிறையிலடைத்தது. ஆனால் சிறை சென்ற அவருக்கு லோகமான்ய அதாவது மக்களால் விரும்பப்படும் தலைவர் என்னும் அடைமொழி கிடைத்தது. சிறையிலிருந்து வெளிவந்த சில ஆண்டுகளுக்குப் பின்னர் 1905-ல் கர்சன் பிரபு கொண்டுவந்த வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து சுதேசி இயக்கத்தைத் திலகர் தீவிரமாக முன்னெடுத்தார்.

    1906-ல் தேசத் துரோகக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி மீண்டும் திலகரை பர்மாவில் உள்ள மண்டலே சிறையிலடைத்தது ஆங்கிலேய அரசு. இந்த நாட்களில் சிறைச்சாலையை தவச்சாலையாக்கி, ‘கீதா ரகசியம்’ என்ற நூலை நமக்களித்தார் திலகர். ஏற்கனவே நலிவடைந்திருந்த அவர் மேலும் நலிவுற்று 16.6.1914 அன்று விடுதலை அடைந்தார். சிறையிலிருந்து வெளிவந்த திலகர் தீவிரவாதிகளையும் மிதவாதிகளையும் ஒன்றிணைக்கப் போராடினார். ஆனால் அவரது எண்ணம் ஈடேறவில்லை. 1916-ல் ஹோம் ரூல் இயக்கத்தைத் தொடங்கி இந்தியா முழுவதும் கிராமம் கிராமமாகச் சென்றார். 1919-ல் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் திலகரைக் கடுமையாகப் பாதித்தது. 1920-ம் ஆண்டு ஆகஸ்டு 1 அன்று திலகர் காலமானார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பம்பாயில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
    ===========================================================
    உங்களுக்கு தெரியுமா?
    * சுவாமி விவேகானந்தர் பிரபலம் அடைவதற்கு முன்னமே அவரை தனது இல்லத்தில் தங்கவைத்து ஆத்மவிசாரணை புரிந்த கொடுப்பினை பெற்றவர் திலகர்.
    * கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் தங்கள் குருவாக ஏற்றுக்கொண்ட பெருமை கொண்டவர் திலகர்.
    * விநாயகர் சுதுர்த்தி ஊர்வலம் மூலம் மக்களை ஒருங்கிணைத்து அதைக்கொண்டு வெள்ளையர்களுக்கு எதிராக விடுதலை உணர்வை ஊட்டியவர் திலகர்.
    ===========================================================
    1908ம் ஆண்டில் பால கங்காதர திலகர் நினைவாகச் சென்னை மெரினா கடற்கரையில் சென்னை மாநிலக் கல்லூரி எதிரில் திலகர் திடல் உருவானது. இப்பெயரைச் சுப்பிரமணிய சிவா முன்மொழிந்தார். சுப்பிரமணிய பாரதி வழிமொழிந்தார். விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரும் இங்கிருந்தே உத்வேகம் பெற்றுள்ளனர்.
    இந்த இடத்தில் மகாம்தா காந்தி 7 முறை பேருரையாற்றியது வரலாறு. ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலில் ஒத்துழையாமை இயக்கம் பற்றிய செய்தியை இந்த இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில்தான் காந்தி குறிப்பிட்டார். இதன் பின்னரே இந்தப் போராட்டம் குறித்த தீர்மானம் கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
    திலகர் திடல் சரித்திரத்தையும் நினைவுகளையும் இல்லாமலாக்க அந்த இடத்திற்கு சீரணி அரங்கம் என இடையில் பெயரிட்டனர். வழக்கு போடப்பட்டு தற்போது திலகர் கட்டம் நினைவு கல்வெட்டு நிறுவ உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் தற்போது மெரினா கடற்கரையில் ‘திலகர் திடல்’ கல்வெட்டு தற்போது நிறுவப்பட்டுள்ளது.
    சுதந்திரம் அடைந்த இக்காலத்திலும் சுதந்திர உணர்வை மங்கச் செய்யும் சதிகளை உணர்வோம், போராடி வென்று சுதந்திரத் தீயை வளர்ப்போம்.
    கல்வி, ஆன்மிகம், சேவை, தேசத் தொண்டு, பத்திரிகை என பல துறைகளில் சாதனை படைத்த லோகமான்ய பால கங்காதர திலகரின் பெருமையைப் போற்றுவோம். இப்படிப்பட்ட தேசத் தலைவர் வாழ்ந்த பூமியில் நாமும் வாழ்கிறோம். அவரது நற்குணங்களை நம்மிலும் ஏற்றி நாட்டுக்காய் வாழ்வோம்.
    (ஆக்கத்தில் உதவி : என்.டி.என்.பிரபு | desamaedeivam.blogspot.in | tamil.thehindu.com)
    - See more at: http://rightmantra.com/?p=12628#sthash.mXTGgGyX.dpuf
Working...
X