புதுடில்லி: ஒவ்வொரு இந்தியனின் நீண்ட நாள் கனவான புல்லட் ரயில், மிக விரைவில் ஓடப்போகிறது. முதன் முதலாக ஆமதாபாத்திற்கும், மும்பைக்கும் இடையில் புல்லட் ரயில் ஓடும் என்ற அறிவிப்பு, இன்றைய ரயில்வே பட்ஜெட்டில் வௌியாகி உள்ளது.
சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புல்லட் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏராளமான பயணிகள் பயன் அடைந்து வருகின்றனர். ஆனால், இந்தியாவில் இந்த திட்டம் இதுவரை கனவு திட்டமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி, புல்லட் ரயிலை ஓட்டியே ஆக வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளார். இதன் வௌிப்பாடாக, ரயில்வே பட்ஜெட்டில் புல்லட் ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறிவி்த்த அமைச்சர் சதானந்த கவுடா, 'புல்லட் ரயில் என்பது ஒவ்வொரு இந்தியனின் கனவு, எனவே, எவ்வளவு விரைவாக முடியுமா, அவ்வளவு விரைவாக புல்லட் ரயில்களை இயக்குவோம், இதன் மூலம் பல ஆண்டு கனவு நிறைவேறும். இந்தியாவின் முதல் புல்லட் ரயில், ஆமதாபாத்திற்கும், மும்பைக்கும் இடையில் விரைவில் ஓடும்,' எனறார்.
ஆமதாபாத்-மும்பை இடையே புல்லட் ரயில் இயக்குவதற்கான பல கட்ட சோதனைகள் முடிந்துள்ளன. தற்போது, இந்த இரண்டு நகரங்களையும் இணைக்கும் வகையில் அதிவேக ரயிலான சதாப்தி எக்ஸ்பிரஸ் இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, இத்தடம், புல்லட் ரயில் திட்டத்திற்கு முதலாவதாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. புல்லட் ரயில், மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டமாக, டில்லி்-ஆக்ரா, டில்லி-சண்டீகர், மைசூர்-பெங்களூரு-சென்னை, மும்பை-கோவா-ஐதராபாத் ஆகிய தடங்களில் புல்லட் ரயில்கள் இயக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என ரயில்வே அமைச்சர் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். புல்லட் ரயில் திட்டங்களுக்கு தனியார் பங்களிப்பை ஏற்றுக் கொள்ளவும் ரயில்வே அமைச்சரகம் முன்வந்துள்ளது.
பிரதமர் நரேந்திரமோடியின் மனம் கவர்ந்த திட்டமான புல்லட் ரயில் திட்டத்திற்கு முதற்கட்டமாக 100 கோடி ரூபாயை அமைச்சர் சதானந்த கவுடா ஒதுக்கி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'பிரதமர் நரேந்திரமோடி தனது தேர்தல் பிரசாரத்தின்போது புல்லட் ரயில் திட்டத்தை கொண்டு வருவோம் என்று கூறினார். அதற்கான முயற்சிகளில் தற்போது இறங்கி உள்ளோம்,' என்றார்,.
புல்லட் ரயில் தவிர, மணிக்கு 200 கி.மீ., வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மும்பை, டில்லி, கோல்கட்டா மற்றும் சென்னை ஆகிய மெட்ரோ நகரங்களையும் இணைக்கும் வகையிலான வைர நாற்கர ரயில் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.