மூணாறு : இன்று இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா பகுதி என உலக அளவில் பிரசித்து பெற்றுள்ள மூணாறு, 90 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலையில் பெய்த தொடர் மழையால் முற்றிலுமாக அழிந்து, பின் புது ஜென்மம் எடுத்துள்ளது. இது பெரும்பாலானோருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.
கடந்த 1924 ஜூலை 6ம் தேதி முதல், ஒன்பது நாட்கள் பகலும், இரவும் இடை விடாமல் பெய்த பேய் மழையினால், நகர் மட்டும் இன்றி, சரக்குகளை கையாளுவதற்கு அமைக்கப்பட்ட சரித்திர புகழ் வாய்ந்த ரயில் பாதைகள், 'ரோப் வே' போன்றவைகள் அழிந்தன.
மூணாறு தோன்றிய வரலாறு:
மூணாறு பகுதிக்கு பூஞ்சார் ராஜா மற்றும் ஆங்கிலேயர் போன்றோர் வரும் முன், இப்பகுதி முழுவதும் முதுவான் இன, மலை வாழ் மக்களின் வசம் இருந்தது. இவர்கள் பாண்டியர், -சோழர் மன்னர்களிடையே நடைபெற்ற போரின்போது, மதுரையில் இருந்து தப்பி வந்த வம்சாவளியை சேர்ந்தவர்கள். மலை வாழ் மக்கள் வசம் இருந்த மூணாறு, அஞ்சுநாடு பகுதிகளை 1252ல் பூஞ்சார் ராஜ குடும்பத்தினர் தங்கள் வசமாக்கினர். 100 ஆண்டுகள் பூஞ்சார் ராஜ குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தினார். இப்பகுதிக்கு வழி காட்டியாக அமைந்த மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த கண்ணன், தேவன் ஆகியோரின் நினைவாக, 'கண்ணன்- தேவன் ஹில்ஸ்' என இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறது. மைசூர் திப்பு சூல்தான் மன்னர், திருவிதாங்கூர் மீது படையெடுத்த காலத்தில், ஆங்கிலேயர்கள் முதன் முறையாக மூணாறுக்கு வந்தனர். மதுரையில் இருந்து ஆங்கில படைகளுக்கு தலைமை வகித்து வந்த கர்னல் ஆர்தர் வெல்லஸ்லி 1790ல், கம்பம்மெட்டு வழியாக மூணாறுக்கு வந்தார். ஆங்கிலேயர்களின் வருகை, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு சவாலாக விளங்கிய திப்பு சுல்தான் மன்னனை எதிர்ப்பதை நோக்கமாக கொண்டிருந்தனர். யுத்தத்திற்கு பிறகு திப்பு சுல்தான் மைசூருக்கு சென்று விட்டபோதிலும், ஆங்கிலேயர் மூணாறை விட்டு செல்லவில்லை.பூஞ்சார் ராஜாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலத்தில், ஆங்கிலேயர்கள் தேயிலை விசாயத்தை தொடங்கினர். முதன் முறையாக 1880ல், ஆங்கிலேயர் ஏ.எச். ஷார்ப் தேயிலை செடிகளை நட்டார். அதன் பின்பு இங்கு நிலவிய இயற்கை எழிலில் மயங்கிய ஆங்கிலேயர்கள் பல தலைமுறைகளாக தேயிலைத் தோட்டங்களை நிர்வகித்தனர். தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தமிழகத்தில் இருந்து ஆட்களை வரவழைத்தனர். திருச்சியில் சிறப்பு மையம் அமைத்து, ஆட்கள் தேர்வு நடந்தது. இவர்களின் உழைப்பால், மூணாறு நகர் உருவாகியது.மூணாறை, சுற்றிலும் 16 தேயிலை தொழிற்சாலைகளை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர். தேயிலை உள்ளிட்ட சரக்குகளை கையாளுவதற்கு, பிரிட்டனில் இருந்து 500 காளை மாடுகளையும், அவற்றை பராமரிப்பதற்கு ஒரு டாக்டர் இடம்பெற்ற மூன்று பேர் குழுவை அழைத்து வந்தனர். தேயிலைத் தோட்டங்கள் அதிகரித்து, உற்பத்தி உயர்ந்ததால், காளை மாடுகள் மற்றும் தொழிலாளர்கள் மூலம் சரக்குகளை கையாள இயலாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து சரக்குகளை கையாளுவதற்கு ரயில் வசதியை ஏற்படுத்தினர். கடந்த 1902ல் ரயில்கள் ஓடத் தொடங்கியது. மூணாறில் இருந்து மாட்டுப்பட்டி, குண்டளை வழியாக தமிழகத்தில் தேனி மாவட்ட எல்லையான 'டாப் ஸ்டேஷன்' வரை ரயில் பாதை அமைக்கப்பட்டது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலை டாப் ஸ்டேஷன் வரை ரயிலிலும், அங்கிருந்து 'ரோப் வே' மூலம் போடிக்கும் கொண்டு செல்லப்படும். அங்கிருந்து துாத்துக்குடி துறை முகம் வழியாக பிரிட்டன் கொண்டு செல்லப்பட்டது. இதன் மூலம் மூணாறில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை உலக அளவில் பிரசித்து பெற்றது.ஆங்கிலேயர்கள் அமைத்த ரயில் மற்றும் 'ரோப் வே' போன்றவை உலக அளவில் சிறந்ததாக திகழ்ந்தது. ரயில் வசதி தொடங்கி 5ம் ஆண்டில், டெலிபோன் வசதி ஏற்படுத்தப்பட்டது.
அழிந்தது:
90 ஆண்டுகளுக்கு முன் 1924ம் ஆண்டு ஜூலை மாதம், 6ம் தேதி முதல் 24ம் தேதி வரை, கேரளா முழுவதும் கன மழை பெய்தது. அப்போது மூணாறில் 9 நாட்கள் பகலும், இரவும் இடைவிடாமல் பெய்த பேய் மழையினால், மலைகளில் இருந்து பெருக்கெடுத்த நீர், பிரளயத்தை ஏற்படுத்தியது. கரை புரண்டு ஓடிய தண்ணீரால், மூணாறு நகர் உள்பட 10 கி.மீ., சுற்றளவு நீருக்குள் மூழ்கியது. மலை மீது அமைந்துள்ள நகர் என்ற கர்வம் அழிந்து, மூணாறு முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கி உருத் தெரியாமல் அழிந்தது. நகர் மட்டும் இன்றி, சரித்திர புகழ் வாய்ந்த ரயில்வே ஸ்டேஷன், ரயில் பாதை மற்றும் பாலங்கள், 'ரோப் வே' மற்றும் டெலிபோன் மற்றும் மின் கம்பங்கள், ரோடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவைகள் காணாமல் போயின. தண்ணீர் வற்றுவதற்கு இரண்டு வாரங்கள் ஆனது. நீர் ஓட்டத்தினால், ஆறுகளின் போக்கு மட்டும் இன்றி, ரோடு மார்க்கமான வழித் தடங்களும் மாறின. அதன் பின் கட்டடங்கள், ரோடுகள் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய மூணாறு உருவாக்கப்பட்ட போதிலும், ரயில் சேவை, 'ரோப் வே' போன்றவைகள் சீரமைக்க இயலாமல் அழிந்து விட்டன. ரயில்கள் இயக்கப்பட்டதற்கு அடையாளங்கள் தற்போது பெரும்பாலான இடங்களில் உள்ளன. இவை ரயில் பாதையாக அல்ல, ரயில் தண்டவாளங்களைக் கொண்டு, உருவாக்கப்பட்ட மின் கம்பங்களாக காட்சியளித்து வருகின்றன. மூணாறுக்கு அழிவை ஏற்படுத்தியபோது, ஜூலையில் மட்டும் 485 செ.மீ., மழை பெய்ததாக ஆங்கிலேயர்களால் எழுதப்பட்டுள்ள வரலாற்று புத்தகங்கள் சாட்சியளிக்கின்றன. கன மழைக்கு நுாற்றுக் கணக்கானோர் இறந்தனர். பலரது உடல்கள் கட்டங்களுக்குள் சிக்கிய நிலையில் காணப்பட்டன. வீடுகளும், கால்நடைகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளப் பெருக்கின்போது, மூணாறில் கட்டடத்திற்குள் சிக்கியவர்கள் பலியான நிலையில், அதிர்ஷ்டவசமாக 19 வயது பெண்ணும், 6 வயது சகோதரரும் உயிர் தப்பினர். தங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால், எஞ்சிய அவர்களும், தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.அதன்பின் மீண்டும், மூணாறு மீண்டது தனி வரலாறு.
- நமது நிருபர் குழு -
Source: Dinamalar