தக்காளிக்குள் செடி
சென்னை: சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்த தக்காளிகளின் உள்ளே, செடி முளைத்திருப்பது வியாபாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதை சாப்பிட்டால், நோய் வரும் என்ற அச்சத்தால், பொதுமக்கள் திருப்பிக் கொடுத்துள்ளனர்.
சென்னை, எம்.ஜி.ஆர்., நகர் பகுதி வியாபாரி, தாமரைக் கண்ணனின் கடையில், நேற்று காலை, தக்காளி வாங்கிச் சென்ற பெண்கள், 'தக்காளியை உடைத்தால் உள்ளே செடி முளைத்திருக்கிறது; எங்களுக்கு பயமாக இருக்கிறது' என, மீண்டும் திருப்பிக் கொடுத்தனர். கடையில் இருந்த தக்காளிகளும், இது போன்றே இருக்கவே, கோயம்பேடு, மொத்த விற்பனை மார்க்கெட்டிற்கு, தக்காளி பெட்டியை வியாபாரி எடுத்துச் சென்றார். அங்கு, மொத்த விற்பனைக் கடை ஒன்றில் இறக்கப்பட்ட சரக்கில், எல்லா தக்காளிகளும் அப்படியே இருந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வியாபாரிகள், விற்பதா, வேண்டாமா என, குழப்பம் ஏற்பட்டது.
வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகி பாண்டியராஜ் கூறுகையில், ''இது, கர்நாடக மாநிலம், சீனிவாசபுரத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு, வியாபாரிகள் பொறுப்பேற்க முடியாது. ஆனால், இது மாதிரி பொருட்கள் விற்றால், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், எங்கள் மீது தான் நடவடிக்கை எடுப்பர்; நாங்கள் என்ன செய்ய முடியும்?'' என்றார். சென்னை முழுவதும், நேற்று, 500க்கும் மேற்பட்ட பெட்டிகள், விற்பனைக்கு அனுப்பப்பட்டதில், சில வியாபாரிகள், தக்காளியை திருப்பிக் கொடுத்துள்ளனர். பல இடங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தக்காளியை சாப்பிடலாமா என்பது குறித்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, மகசூல் அதிகரிக்கவும், குறுகிய காலத்தில் விளைவிக்கவும் அதிக அளவில் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் பாதிப்பால், அதிக வெப்பமாகி, தக்காளிக்குள்ளேயே விதைகள் முளை விட்டிருக்கலாம். தட்ப வெப்ப நிலை மாற்றமும், காரணமாக இருக்கக்கூடும். தக்காளிக்குள் முளைவிட்ட இலை தான் உள்ளது என்றால் பிரச்னை இல்லை. இருந்த போதிலும், சாப்பிட்ட பின் ஏதாவது பிரச்னை வருவதை விட, சந்தேகம் வந்து விட்ட நிலையில், அதை உணவுக்கு பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. இவ்வாறு, அவர் கூறினார்.
Dinamalar
Comment