மிளகுப்பொடி ஸ்ப்ரேவை அடித்தது உள்ளிட்ட அமளி துமளியில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த 18 எம்.பி.க்கள், மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அவை ஒத்திவைக்கப்பட்டதற்கு பின்னர், இதற்கான அறிவிப்பை மக்களவைத் தலைவர் மீரா குமார் வெளியிட்டார்.
மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படும் எம்.பி.க்களின் பெயர்களை வாசித்த அவர், அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்தது, மோசமாக நடவடிக்கையில் ஈடுபட்டது உள்ளிட்ட காரணங்களால், விதி எண் 754 ஏ-வின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மக்களவையில் இன்று மிளகுப்பொடி ஸ்ப்ரேவை அடித்து, உறுப்பினர்களை திக்குமுக்காடச் செய்த ஆந்திர எம்.பி. ராஜகோபால், மைக்கைப் பிடுங்கி வீசிய தெலுங்கு தேச கட்சி உறுப்பினர் வேணுகோபால் ரெட்டி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.
மிளகுப்பொடி ஸ்ப்ரே அடிப்பு...
மக்களவையில் இன்று தெலங்கானா மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், மக்களவையில் விஜயவாடா எம்.பி. ராஜகோபால் தான் மறைத்து வைத்திருந்த பெப்பர் ஸ்ப்ரேவை அடித்து போராட்டம் நடத்தினார். இதையடுத்து, மக்களவையில் உறுப்பினர்கள் பலருக்கும் தொடர்ந்து இருமல் ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளாகினர்.
அதேவேளையில், தெலங்கானா ஆதரவு மற்றும் எதிர்ப்பு எம்.பி.க்களுக்கு இடையே மக்களவையில் கடும் மோதலும் வாக்குவாதமும் ஏற்பட்டது. இதனால், அவையே போர்க்களமாகக் காட்சியளித்தது.
தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் மிளகுப்பொடி ஸ்ப்ரே தெளிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட எம்.பி.க்கள் சிலர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மிளகுப் பொடி ஸ்ப்ரேவின் தாக்கம், மக்களவைக்கு வெளியேவும் இருந்தது. இதனால், பத்திரிகையாளர்களும் தொடர் இருமலால் பாதிக்கப்பட்டனர்.
மக்களவையில் இன்று நடந்தவை தங்களை வெட்கப்படவைத்துவிட்டது என்று சபாநாயகர் மீரா குமார் குறிப்பிட்டார்.
அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களும் இந்நிகழ்வை கடுமையாக விமர்சித்துள்ளனர்.