தீபாவளியின் சிறப்பு
பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன்
பூமாதேவியின் அம்சமான சத்தியபாமாவின் துணைகொண்டு, ஸ்ரீகிருஷ்ணன் நரகாசுரனை வதம் செய்தார். அதன் பிறகு ஒரு வருடம் கழித்து நரகாசுரனின் மகன் பகதத்தன், ஸ்ரீகிருஷ்ணனைத் தனது நகரத்துக்கு அழைத்து, வரவேற்று மகிழ்ந்தான்.
அப்போது பகதத்தன் நகரம் முழுவதையும் தீபங்கள் ஏற்றி அலங்கரித்தான். அன்று முதல், தீபாவளி தொடங்கியது.
இறைவனின் நாமங்களை வரிசைப்படுத்திப் பாடுவதை, ‘நாமாவளி’ என்கிறோம். அதுபோல் தீபங்களை வரிசையாக ஏற்றும் திருநாள் தீபாவளி என்றாயிற்று.
‘நரகன்’ என்ற சொல்லே கொடிய பாபச் செயல்களைச் செய்யும் தீயவர்களைக் குறிக்கும். "நரகன் ஒருவனின் உயிருக்குப் பதிலாக நல்லவனின் உயிரை நான் எடுத்துக் கொள்ள மாட்டேன்" என்று புகார் நகரில் இருந்த சதுக்கப்பூதம் கூறியதாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
கொடிய நரகாசுரனை ஸ்ரீகிருஷ்ணன் வதைத்து உலக மக்களைக் காப்பாற்றிய நாளை நரகாசுரனின் மகனே கொண்டாடினான்.
பொறுமைக்குப் பூமாதேவியைத்தான் உதாரணமாகக் கூறுவார்கள். "அகழ்வாரைத் தாங்கும் நிலம்" என்று திருவள்ளுவரும் மண்மகளின் பொறுமையைக் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய பொறுமைசாலியே நரகாசுரனிடம் சினம் கொண்டாள். மேலும், மகன் கொடியவன் என்றாலும் அவனைக் கொல்ல எந்தத் தாயும் விரும்ப மாட்டாள். பெற்ற தாயே வெறுத்துக் கொல்லும் அளவிற்கு நரகாசுரன் கொடும்பாவியாக இருந்தான்.
சத்தியபாமாவின் தியாக உள்ளம், தன் மகன் இறந்த சோகத்திலும் உலக மக்களின் நலனைப் பெரிதாக நினைத்தது. மாநிலம் உய்ய மகனை இழந்தாள் சத்தியபாமை.
அவளுடைய வேண்டுகோளின்படியும், நரகாசுரனின் இறுதிக்கால விருப்பத்தின் படியும், நரக சதுர்த்தசி என்ற தீபாவளிப் பண்டிகை தோன்றுவதற்கு ஸ்ரீகிருஷ்ணன் வரம் கொடுத்து அருளினார்.
ஒருசமயம் நீரில் மூழ்கிய பூமியை திருமால் வராக அவதாரமெடுத்து மேலே கொண்டுவந்தார். அந்த அவதாரத்தில் அவர் பூமாதேவியை மணந்து ஒரு மகனைப் பெற்றார். அவனே நரகாசுரன்.
"உலகத்தை ஆள்பவனின் மகனே தவறு செய்தாலும் அவன் தண்டிக்கப்பட வேண்டும்" என்பதை உணர்த்தத் திருமால், தானே கிருஷ்ணாவதார காலத்தில் நரகாசுரனை வதம் செய்தார். திருமாலின் காத்தல் தொழிலுக்கு, சத்தியபாமாவும் உடன் இருந்து உதவினாள்.
மற்ற ஐதீகங்கள்
திருமால் மூன்று உலகங்களையும் இரண்டடியால் அளந்து, மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது வைத்து, அவனைப் பாதாள உலகில் வாழச் செய்தார். மகாபலி, ஆண்டுக்கு ஒரு முறை பூமிக்கு வந்தபோது அருள் செய்யும்படியும், அந்த நாளை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாடச் செய்யவும் திருமாலிடம் வேண்டினான். திருமால் அவன் கேட்ட வரத்தைக் கொடுத்தார். அந்த வரத்தின்படியே, அந்த நாள் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீராமன் இராவணனை வென்று, வனவாசம் முடிந்து, அயோத்திக்குத் திரும்பி, முடி சூட்டிக் கொண்ட நாளே தீபாவளி என்றும் கூறப்படுகிறது.
சதுர்த்தசி - கங்கா ஸ்நானம்
"தீபாவளி ஆயிற்றா?" என்பதைவிட, "கங்கா ஸ்நானம் ஆயிற்றா?" என்று கேட்கும் வழக்கமே அதிகமாக உள்ளது. அத்துடன் தீபாவளியன்று பக்தர்கள் காசியில் கங்கா ஸ்நானம் செய்து, விஸ்வநாதரையும், தங்க அன்னபூரணியையும் தரிசிக்கின்றனர். இவற்றின் காரணம் என்ன?
பகீரதனின் முன்னோர்களைக் கடைத்தேற்றுவதற்காகவும், பூமிக்கு வளமையைக் கொடுப்பதற்காகவும், ஆகாயகங்கை பூமிக்கு இறங்கி வந்த நாள்தான் தீபாவளி என்று தில்லிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சிவப்பிரியா அவர்கள் விளக்கியிருக்கிறார்கள். சதுர்த்தசி திதி சிவபெருமானுக்கு உகந்தது. மாதசிவராத்திரியும், மகாசிவராத்திரியும் சதுர்த்தசியில்தான் வருகின்றன. அந்த வகையில் சிவபெருமான் ஆகாயகங்கையை ஐப்பசி சதுர்த்தசி நாளில் பூமிக்குக் கொடுத்தருளினான். ஆகாயகங்கையை, பூமியில் வரவேற்க தீபங்கள் ஏற்றி விழா எடுத்தனர். ஆகவே கிருஷ்ணாவதார காலத்துக்கு முன்பிருந்தே தீபாவளி கொண்டாடப்பட்டது என்று கூறும் டாக்டர் சிவப்பிரியா, பிற்காலத்தில் நரகாசுரன் வரலாறும் தீபாவளியுடன் இணைந்திருக்க வேண்டும் என்கிறார்.
குழந்தைகள் தீபாவளியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர். ஏனெனில், அவர்கள் பெரிதும் விரும்பும் இனிப்பு வகைகள், புத்தாடைகள், பட்டாசு வகைகள் ஆகியவை தீபாவளியில் கிடைக்கின்றன.
உட்கருத்தும் உள்ளது
குழந்தைகள் கொளுத்தி மகிழும் வாண வெடிகளிலும் ஆழ்ந்த ஆன்மிகத் தத்துவங்கள் உள்ளன. நம்முள் ஆத்ம ஒளியும், ‘அஹம் ப்ரம்மாஸ்மி’ போன்ற நுண்ணிய ஒலிகளும் இருக்கின்றன. அவற்றைப் பொதுவாக நாம் உணர்வதில்லை.
நெருப்பைத் திரியில் வைக்கும்போது வாணங்கள் பிரகாசமாக எரிகின்றன. வெடிகள் ஒலியெழுப்புகின்றன. ஜடமான வாணமும், வெடியும் திரியில் தீப்பொறி பட்டவுடன் ஒளியும், ஒலியும் கொடுக்கின்றன. அதுபோல் ஞானகுரு, சீடனிடம் வைக்கும் ஞானக்கனல் ஆத்ம சைதன்யத்தின் பிரகாசத்தையும், ஒலியையும் சீடனிடமிருந்து வெளியே கொண்டுவருகின்றன.
பிற மாநிலங்களில் தீபாவளி
தீபாவளி சமயத்தில் இமாசலப் பிரதேசத்தில் கோபூஜையும், உத்தரப் பிரதேசத்தில் அன்னபூரணி வழிபாடும், கங்கா ஸ்நானமும் முக்கிய இடம் பெறுகின்றன. வங்காளத்தில் தாம்பூலத் திருவிழாவாகவும், துர்க்கா பூஜையாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. குஜராத்தில், தீபாவளி குபேரபூஜையாக நடைபெறுகிறது. மகாராஷ்டிரத்தில், மகாபலிக்கும், லட்சுமிக்கும் சிறப்புப் பூஜைகள் செய்கின்றனர். குஜராத் மாநிலத்தில் மட்டும் தீபாவளி ஐந்து நாள்கள் விரிவாக நடைபெறுகிறது.
தமிழகத்தில் தீபாவளி
தீபாவளி பட்சணங்களோடு, ‘தீபாவளி லேகியம்’ என்ற மருந்தையும் உட்கொள்ளும் முறை தமிழகத்தின் தனிச்சிறப்பு எனலாம். அத்துடன் தமிழகத்திலுள்ள சிவகாசியில் தயாராகும் வாணங்களும் வெடிகளும் பெருமளவில் இந்தியா முழுவதற்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும், ஓவியர்களுக்கும், அச்சக உரிமையாளர்களுக்கும் தீபாவளி நல்ல வாய்ப்பும் வருவாயும் பெற்றுத்தரும் பண்டிகையாகும்.
பிற சமயங்களில் தீபாவளி
இந்தியாவில் உள்ள மற்ற சமயங்களிலும் தீபாவளி சற்றே வேறுபட்ட ஐதீகங்களுடன் கொண்டாடப்படுகிறது. சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு கோவிந்தசிங், மொகலாய மன்னர்களிடமிருந்து தப்பி, பொற்கோவிலுக்கு வந்தார். சீக்கியர்கள் தங்கள் குருநாதர் கோவிந்தசிங் அவர்களை வரவேற்க, தீபங்களை வரிசையாக ஏற்றினர். அதுமுதல், தீபாவளி சீக்கியர்களுக்கும் உரிய திருவிழாவாக விளங்குகிறது.
ஜைன (சமண) மதத்தைத் தோற்றுவித்த குருநாதர் மகாவீரரின் முக்தி தினத்தில், ஜைனர்கள் தீபங்களை ஏற்றுவார்கள். தீபங்களைப் போல் மகாவீரரின் போதனைகள் தங்கள் உள்ளத்தில் பிரகாசிக்க வேண்டி அவர்கள் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
இவை தவிர, உஜ்ஜயினியை ஆண்ட விக்கிரமாதித்தன் தன்னுடைய எதிரிகளை வென்று, பேரரசனாக முடிசூட்டிக் கொண்ட நாளே தீபாவளி என்ற கருத்தும் நிலவுகிறது.
அதுபோல், நரகாசுரனை வதம் செய்ய, திருமால் புறப்பட்டவுடன் அசுரர்கள் பெரிதும் சினம் அடைந்தார்கள். அவர்கள் தனியே இருந்த மகாலட்சுமியைக் கடத்திச் செல்ல முற்பட்டனர். அப்போது திருமகள் தீபத்திற்குள் ஐக்கியமாகிவிட்டாள். அதனால், தீபங்களை, திருமகளின் அம்சமாகக் கருதி வழிபாடுகள் செய்யும் மரபு தோன்றியது என்றும் கூறுகின்றனர்.
மராட்டிய மன்னன் வீரசிவாஜி தன்னுடைய எதிரிகளை வென்ற பிறகு பெரிய கோட்டையைக் கட்டினான். அதனுள் வரிசையாக தீபங்களை ஏற்றினான். அதனால் இன்றும் மராட்டியர்கள் மண்ணால் கோட்டைகள் கட்டி, தீபங்கள் ஏற்றி வழிபடுகின்றனர்.
http://www.ammandharsanam.com/magazine/Deepavali2011unicode/page005.php

Comment