Announcement

Collapse
No announcement yet.

ஜகத்குரு பாமாலை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஜகத்குரு பாமாலை

    ஜகத்குரு பாமாலை
    (இயற்றியவர் - திரு. சு. கிருஷ்ணமுர்த்தி)


    கணபதிக்கோர் காப்பிசைதுன் மலர்பதமே போற்றவந்தோம்
    குரு சந்த்ரசேகரனே! போற்றி! போற்றி!
    ஜயவருடம் வைகாசி அனுஷமதில் அவதரித்தாய்
    ஜகம்புகழும் ஜகத்குருவாய் ஜயமுடனே திகழ்கின்றாய்
    பாலகனாய்ப் பதின்மூன்றாம் ஆண்டினிலே பட்டமுற்றாய்
    குரு சந்த்ரசேகரனே! போற்றி! போற்றி!

    'பட்டவிழா' 'பராபவத்து' மாசியிலே நாலாம் நாள்
    'பவழவிழா' 'துன்மதியின்' மாசி பதினாலாம் நாள்
    அகிலமெல்லாம் போற்றிடுமோர் அருங்குருவாம் சங்கரனே
    அறுபத்து எட்டாகும் பீடமதில் அமர்ந்தவனே
    தென்னாடு உடையோனே 'பெரியவாள்' எம்பிரானே
    எந்நாடும் 'இறைவ'னெனப் போற்றும் சிவபெருமானே
    எல்லையிலாப் பெருங்கருணை பொழிந்தெமையே காப்பவனே
    தொல்லையெலாம் களைந்தெமக்கே அருள் வழங்கும் கற்பகமே
    குரு சந்த்ரசேகரனே! போற்றி! போற்றி!

    கயிலைபதி ஈஸ்வரனே கலியில் குரு ஆனவனே
    கருணைமிகு சங்கரனே அருணைசிவ சோதியனே
    பித்தனென பேயனென சுந்தரன் சொல் கேட்டவனே
    அத்தனென ஐயனென அடியவர் சொல் கேட்டவனே
    பொன்னான மேனியனே கொன்றை மிளிர் சடையோனே
    கண்ணான கண்மணியே மங்களமே சங்கரனே
    ஐயாறு அகலாத செம்பொன்னாம் சோதியனே
    தேர்ஊரும் ஆரூரா தென்பாண்டி நாட்டானே
    குரு சந்த்ரசேகரனே! போற்றி! போற்றி!

    மாசில்லாத் தங்கமென உனைச்சிலபேர் ஏத்திடுவார்
    மனிதரிலே மாணிக்கம் எனச் சிலபேர் ஏத்திடுவார்
    மனிதரிலே தெய்வமென உனைச் சிலபேர் ஏத்திடுவார்
    முக்காலும் அறிந்தகுரு எனச் சிலபேர் ஏத்திடுவார்
    மாத்தவம் செய் மாமுனிவர் எனச் சிலபேர் ஏத்திடுவார்
    மாமோனத் தவமுனிவர் எனச் சிலபேர் ஏத்திடுவார்
    நீபேசும் தெய்வமென நயமுடனே ஏத்திடுவார்
    நடமாடும் தெய்வமென நயந்துனையே ஏத்திடுவார்
    எங்கும் நிறை ப்ரம்மமென பகுத்தறிந்தோர் ஏத்திடுவார்
    மங்களம் சேர் சங்கரன் நீஎனத் தெளிந்தார் ஏத்திடுவார்
    குரு சந்த்ரசேகரனே! போற்றி! போற்றி!

    திருவானைக் காவிற்கு திக்விஜயம் செய்தவனே
    தேவியற்குத் திருக்கரத்தால் தாடங்கம் பதித்தவனே
    சிதம்பரமாம் கூத்தனவன் திருத்தலமே வந்தவனே
    நடமிடுவான் பதமலர்க்குக் குஞ்சிதமே கொடுத்தவனே
    வடதிசைக்கோர் சிதம்பரமே நிர்மாணம் செய்தவனே
    குடமுழுக்கு காண 'சதா ராப்' பகலாய் நினைத்தவனே

    காமாட்சி குடமுழுக்கு காஞ்சியிலே செய்தவனே
    தாயாட்சி செய்வதற்கே தங்கரதம் அமைத்தவனே
    அரங்கத்தான் கோபுரத்தை நிறைவு பெறச் செய்தவனே
    குருவாயூர்க் கண்ணனுக்கோர் லட்சதீபம் கொடுத்தவனே
    சங்கரர்க்கோர் 'ஸ்தூபி' தனைக் காலடியில் அமைத்தவனே
    காமகோடி ஆலயமே காசியிலே அமைத்தவனே
    குருபதமே பாரதமாம் தேசமெங்கும் பதித்தவனே
    குருநாதர் ஆலயமோ எங்கெங்கும் அமைத்தவனே

    ஆலயங்கள் எல்லாமே புதுமையுறச் செய்தவனே
    அனுதினமும் பூஜைசெய நிதிவகைகள் வகுத்தவனே
    தூர்ந்துவிட்ட கிணறு குளம் தூய்மை பெறச் செய்தவனே
    தொன்றுதொட்டு வரும் மறைகள் தினம் ஒலிக்க வைத்தவனே
    அருச்சனைகள் லட்சமொடு கோடிசெய வைத்தவனே
    அகிலமெல்லாம் உய்யபல வேள்விசெயச் செய்தவனே
    புண்ணிய நல் பாரதமே பாதவலம் வந்தவனே
    புண்ணியனுன் திருவருளால் வான் பொழியச் செய்தவனே
    குரு சந்த்ரசேகரனே! போற்றி! போற்றி!

    நித்தமொரு பிடிஅரிசி போடும் திட்டம் வகுத்தளித்தாய்
    நிதமதனால் பசித்தோரின் பிணிதீர்க்கும் பயனளித்தாய்
    'பால்' அளிக்கும் பசுகாக்கும் காப்பகங்கள் நிறுவச் செய்தாய்
    காய் பழங்கள் கழிதோல்கள் பசுக்களிக்கப் பரிந்துரைத்தாய்
    நாலு மறை வேதியரை தனிச்சிறப்பாய்ப் போற்றச் செய்தாய்
    திருமறை ஒதிடுவோரைத் தக்கவிதம் ஏற்றம் செய்தாய்

    சைவமொடு வைணவத்தை ஒருங்கிணைக்கப் பாடுபட்டாய்
    பாவையொடு எம்பாவாய் மாநாடு கூட்டி வைத்தாய்
    வித்தைமிகத் தேர்ந்தோர்க்கு பொன்தோடா பரிசளித்தாய்
    வித்வத்துச் சபை கூட்டி அமர்ந்திருந்தே அலங்கரித்தாய்
    கலைச்சிறப்பை கௌரவித்து சால்வை மிகப் போர்த்திடுவாய்
    முச்சமயத் தத்துவங்கள் ஒருசேரும் வகை வகுத்தாய்
    அத்வைத தத்துவத்தை உலகறியப் பணி செய்தாய்
    வேதம் சொல் தர்ம வழிகாட்டி எங்கள் கண் திறந்தாய்

    அருள்வாக்காய் பொழிந்தெமக்கே பொருள் விளக்கம் தந்திட்டாய்
    இருள் நீக்கி ஒளிசேர்க்கும் இன்பநிலை தெரிய வைத்தாய்
    திரிகாலம் தெரிந்தெமக்கே உய்யும்வகை செய்திடுவாய்
    வருபவைகள் அறிந்தெமக்கே வழிவகைகள் காட்டிடுவாய்
    கொடிய புயல் வந்திடுமுன் சேது வந்து தங்கிவிட்டாய்
    தந்திடுங்கள் தானியங்கள் எனக்குவித்து உணவளித்தாய்
    விளங்காதோர் கிராமத்தில் வந்தொருநாள் தங்கிநின்றாய்
    அளந்தாளா படி அம்பாள் எனவியப்பில் ஆழ்த்தி நின்றாய்
    குரு சந்த்ரசேகரனே! போற்றி! போற்றி!

    திருஞானசம்பந்தன் பதிகத்தைப் பாட வைத்தாய்
    கோள்கள் செயும் தீமைகள் தகர்ந்திடவே செய்திட்டாய்
    பகைவர் பயம் நீங்க துர்க்கா பஞ்சரத்னம் பாடச் சொன்னாய்
    போர் முனையில் வெற்றி தந்து பாரதத்தைக் காத்து நின்றாய்
    சத்ரபதி ஆண்ட சதாரா நகரில் நீயிருந்தாய்
    நிலமகளால் கொண்டதொரு நடுக்கத்தை நீ அடக்கி நின்றாய்
    அண்டை மாநிலம் கடந்து ஹம்பி எனும் ஊர் வந்தாய்
    கல்வெட்டைக் காட்டி வித்யாரண்யர் புகழ் விளக்கி நின்றாய்

    எல்லையில்லா நின்கருணைதனைப் பேச வார்த்தையில்லை
    இல்லை இனி எமக்கிங்கு உனையின்றி ஒரு தெய்வம்
    அருள் செய்வோர் அவதாரம் இதுவெனவே அருளுகின்றாய்
    அருள் கரத்தால் புன்னகையால் பிறவிதுயர் அகற்றிடுவாய்

    குறைவிலா நிறைவும் நீ! அழிவில்லா பிரம்மம் நீ!
    ஒருகோடி ஆண்டில்லை என்றும் நிறை ஸத்யம் நீ!
    நின்பாதமலர் நினைந்துன் திருவடியில் எமைச் சேர்ப்பாய்!
    குரு சந்த்ரசேகரனே! போற்றி! போற்றி!


    Source: erodenagaraj.blogspot.in

Working...
X