Announcement

Collapse
No announcement yet.

வேதம் – தசோபநிஷத்துக்கள் _ Part 5

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வேதம் – தசோபநிஷத்துக்கள் _ Part 5

    வேதம் – தசோபநிஷத்துக்கள் _ Part 5

    வைசம்பாயனருக்குத் தம்முடைய சிஷ்யரான யாக்ஞவல்கியரிடம் மனோபேதம் உண்டாகி, "நான் சொல்லிக் கொடுத்த வேதத்தைக் கக்கிவிடு"என்று கோபித்துச் சொன்னதாகவும், யாக்ஞவல்கியர் அப்படியே செய்துவிட்டு, பிறகு சூரியபகவானிடம் சென்று அவரிடமிருந்து இதுவரை லோகத்துக்கு வராதிருந்த சுக்ல யஜுர்வேதத்தில் உபதேசம் பெற்று வந்தார் என்றும் முன்னே சொன்னேனல்லவா?யாக்ஞவல்கியர் முதலில் கற்றுக்கொண்ட வேதத்தைத் தம்முடைய மந்திர சக்தியால் வாஸ்தவமாகவே அன்ன ரூபமாக்கிக் கக்கி விட்டார்.

    அப்போது வைசம்பாயனரின் உத்தரவுப்படி, மற்ற சிஷ்யர்கள் தித்திரி என்கிற புறா மாதிரியான பக்ஷியின் ரூபத்தை எடுத்துக் கொண்டு யாக்ஞவல்கியர் கக்கியதைச் சாப்பிட்டு விட்டார்கள். அதனால், உடனே அவர்களுக்கு அந்த வேதம் முழுவதையும் அறிந்து கொள்ள முடிந்து விட்டது. அந்த வேத சாகைக்கு கிருஷ்ண யஜுஸின் தைத்திரீய சாகை என்ற பெயரும் உண்டாகிவிட்டது.

    'தித்திரிக்கு' adjectival form 'தைத்திரீய'என்பது. தைத்திரீய சாகையில் உள்ள ஸம்ஹிதை, பிராம்மணம், ஆரண்யகம் எல்லாவற்றுக்கும் தைத்திரீயம் என்றே பெயர். தைத்திரீய ஆரண்யகத்தில் தான் இந்த உபநிஷத்து உள்ளது.

    மற்ற எல்லா உபநிஷத்துக்களைவிட அதிகமாக அத்யயனம் செய்யப்படுகிற உபநிஷத்து இதுதான். கர்மாநுஷ்டானங்களில் பிரயோகமாகும் அநேக மந்திரங்கள் இதிலிருந்து எடுத்தவைதான்.

    சீக்ஷ£வல்லி, ஆனந்தவல்லி, ப்ருகுவல்லி என்று இந்த உபநிஷத்தில் மூன்று பாகங்கள் உண்டு. சீக்ஷ£வல்லியில் சி¬க்ஷயை (கல்விப் பயிற்சியை) ப் பற்றிய பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறது. பிரம்மச்சர்ய ஆசிரம நியமங்கள், அதன் மகிமை, வேத அத்யயனக் கிரமம், பிரணவ உபாஸனை முதலியவற்றைப் பற்றி இந்த பாகம் உபதேசிக்கிறது.

    பிரம்மசாரிகள் தங்கு தடையில்லாமல் தன்னிடம் வந்து வேதத்தை ஸ்வீகரிக்க வேண்டும் என்று ஆசாரியன் செய்கிற ஆவஹந்தீ ஹோமம் இதில்தான் இருக்கிறது. இன்றைக்குக்கூட, இந்த ஹோமத்தைப் பண்ணிப் பார்த்ததில் பல இடங்களில் குற்றுயிரும் குலை உயிருமாக இருந்த (வேத) பாடசாலைகளில் புதிதாக வித்யார்த்திகள் சேர்ந்து அவற்றுக்குப் புத்துயிர் உண்டானதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.

    இப்போது ராஜரீக ரீதியில் நாம் சொல்கிற ஸ்வராஜ்யத்தைவிட, சாச்வதமான ஆத்ம "ஸ்வராஜ்ய"த்தைப் பற்றியும் இதிலே சொல்லியிருக்கிறது. ஸத்யம் வத, தர்மம் சர (உண்மையே பேசு;தர்மப்படியே ஒழுகு) முதலான உபதேசங்கள் இங்கேதான் வருகின்றன. வேத அத்யயனத்தையும் ஸ்வதர்மத்தையும் ஒருநாளும் விடக்கூடாது;இவை எந்நாளும் லோகத்தில் இருந்து வருவதற்காகவே, கலியாணம் பண்ணிக்கொண்டு பிரஜா விருத்தி பண்ணவேண்டும் என்று சிஷ்யனுக்கு குரு உபதேசிக்கிறார்.

    மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆசார்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ (அன்னை, தந்தை, குரு அதிதி ஆகியோரை தெய்வமாகப் போற்ற வேண்டும்) என்ற மந்திரங்கள் இங்கேதான் இருக்கின்றன. தான தர்ம சிந்தனையை விசேஷித்து உபதேசிப்பதும் இங்குதான்.

    மற்ற ஆனந்தங்கள் ஒவ்வொன்றையும் நூறால் பெருக்கிக் கொண்டே போய்க் கடைசியில் பிரம்மானந்தத்தைச் சோல்லியிருக்கிறது என்று முன்னே சொன்னேன் அல்லவா?அந்தப் பெருக்கல் வாய்ப்பாட்டைச் சொல்லி பிரம்மானந்தத்தோடு முடிகிற உபநிஷத் பாகத்துக்கே 'ஆனந்தவல்லி' என்று பெயர். சோற்றால் வளரும் மாம்ஸ சரீரமான அன்னமயகோசம், அதற்குள் மூச்சு விடுகிற பிராணமய கோசம், எண்ணங்களை உண்டாக்குகிற மனோமய கோசம், அவற்றல் நல்லது கெட்டதுகளை அறிந்து கொள்கிற விஞ்ஞானமய கோசம், இந்த நாலு கோசத்துக்கும் ஆதாரமாக இருக்கிற தனிஜீவ மூலமான ஆனந்தமய கோசம் என்று ஐந்தைச் சொல்லி, ஆனந்தமயத்துக்கு அடி ஆதரமாய்யுள்ள பிரம்மம் ஸ்வச்சமாகத் தன்னுடைய பேரின்ப நிலையில் இருக்கிற விஷயம் இங்கே விளக்கப்படுகிறது.

    ஒவ்வோரு கோசத்தையும் ஒரு பக்ஷியாக உருவகக்படுத்தி, அந்த பக்ஷிக்கு இது தலை, இது வலதுபக்க சிறகு, இது இடதுபக்க சிறகு, இது உடம்பு, சொல்லியிருக்கிறது. அடிக்கடி quote பண்ணப்படும் "யதோ வாசோ" ('எந்த ஸ்தானத்தை எட்டிப் பிடிக்க முடியாமல் வாக்கும் மனஸும் திரும்பி விடுகன்றனவோ, அந்த ஆனந்தமான பிரம்மத்தை அறிந்தவனுக்கு பயமில்லை') முதலான மந்திரங்கள் இதில் வருவதுதான்.

    "பிருகுவல்லி"என்பது, வருணபகவான் தன்னுடைய புத்திரரான பிருகுவுக்குச் செய்த உபதேசமாகும். உபதேசம் என்று சொன்னாலும் எல்லாவற்றையும் குருவே 'டிக்டேட்' பண்ணுவதாக இல்லாமல் சிஷ்யன் தானாக ஒவ்வொரு ஸ்டேஜாக எக்ஸ்பெரிமென்ட் பண்ணி, சொந்தத்தில் எக்ஸ்பீரியன்ஸ் அடைகிற விதத்தில் இங்கே பிருகுவை வருணன் உத்யாஹப்படுத்திக் கொண்டு போகிறார்.

    இந்த மாதிரி பிருகு தாமாகத் தபஸ் பண்ணிப் பண்ணியே, முதலில் அன்னமயமான சரீரம்தான் ஸத்தியம் என்று நினைத்த ஸ்திதியிலிருந்து ஒவ்வொன்றாக மேலே ஏறிப்போய், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம் இவற்றைக் கடந்து, கடைசியில் ஆனந்த மயத்துக்கு ஆதாரமான ஆத்மாதான் பரம ஸத்தியம் என்று அநுபவத்தில் தெரிந்து கொள்கிறார்.

    Contd…6…Source: subadra
Working...
X