Announcement

Collapse
No announcement yet.

தெய்வ சங்கல்பம்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தெய்வ சங்கல்பம்!

    கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நாட்கள். பெரியவாளைப் பற்றிப் பொதுவாகத் தெரிந்து கொண்டிருந்தேனே தவிர, விசேஷமான பக்தி என்று எதுவும் இல்லாத காலம்.

    திடீரென்று தரிசனம் கொடுத்தார்கள் – கனவில்! ‘ஏதோ, பிரமை’ என்று ஒதுக்கித் தள்ள முடியவில்லை. அடிக்கடி வந்து தரிசனம் கொடுத்தார்கள்.
    இந்தப் புனிதக் கனவுகளுக்கு ஒரு கௌரவம் கொடுக்க வேண்டாமா?

    குருவார விரதம் மேற்கொண்டேன். அது முதல் ஒவ்வொரு வியாழனிலும் தரிசனம் கிடைக்க ஆரம்பித்தது. சந்தோஷமாக இருந்தது. ஆனால் அது நீடிக்கவில்லை.
    பெரியவா வருவதை நிறுத்திக் கொண்டுவிட்டார்கள். நான் என்ன தவறு செய்தேன்?

    அன்று வியாழக்கிழமை. படுக்கையில் உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டு பிரார்த்திக்கிறேன். ‘இன்றைக்காவது தரிசனம் கொடுக்கணும்’.
    ஊஹூம்… பெரியவாள் வரவில்லை.

    ரொம்பவும் ஏக்கமாகத்தான் இருந்தது. என் பிரார்த்தனையை ஏன் பெரியவாள் ஏற்றுக் கொள்ளவில்லை?

    இரண்டு நாட்கள் கழித்து சொப்பனத்தில் காட்சி தந்தார்கள். “பெரியவாள் தரிசனம் முன்பெல்லாம் அடிக்கடி கிடைச்சுது. இப்போ பெரியவா வரதே இல்லை” என்று வருத்தத்துடன் கூறினேன்.

    பெரியவாள் மெல்லச் சிரித்தார்கள். “எனக்கு வயசாயிடுத்தோன்னோ? நான் கிழவனாயிட்டேன். (தண்டத்தைக் காட்டி) இந்தக் குச்சியை எடுத்துண்டு அவ்வளவு தூரம் வரமுடியல்லே. நீ தான் என்னைப் பார்க்க வரணும்”.

    “பெரியவா அனுக்ரஹம் இருந்தால் வருவேன்.”

    “உத்ஸவத்துக்கு வரயா?”

    “அனுக்ரஹம் செய்தால் வருவேன்”.

    கனவு கலைந்தது. ஒன்றும் விளங்கவில்லை. எந்த உற்சவத்துக்கு வரவேண்டும்? அதற்கும் பெரியவாள் தரிசனத்துக்கும் என்ன சம்பந்தம்?

    மறுநாளே அந்த ஆச்சரியம் நடந்தது.

    சென்னையில் ஒரு கல்யாணத்துக்கு என் பெரியம்மா போக வேண்டியிருந்தது. “துணைக்கு நீ வாயேன். நீ வந்தால்,, போகிற வழியில், காஞ்சிபுரத்தில் பெரியவாளை தரிசனம் பண்ணிவிட்டுப் போகலாம்.”

    அடுத்த நிமிடமே நான் தயாராகிவிட்டேன்!

    மறுநாள் காலை நாங்கள் காஞ்சிபுரம் மடத்து வாசலுக்குச் சென்றபோது, அங்கே காமாக்ஷி வந்து நின்றுகொண்டிருந்தாள். ஏகக் கூட்டம். மூன்று பெரியவர்களும் வலம் வந்து கொண்டிருந்தார்கள்.

    “என்ன விசேஷம் இன்னிக்கு” என்று உள்ளூர்ப் பெண்மணியைக் கேட்டேன்.

    “தெரியாதா உனக்கு? காமாக்ஷி கோயில் உத்ஸவம் நடந்து கொண்டிருக்கு”.

    எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. “உத்ஸ்வத்துக்கு வரயா?” – வெறும் கனவு அல்ல; தெய்வ சங்கல்பம்!

    ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!
    Source: ஜானா கண்ணன், மைலாப்பூர், சென்னை.
Working...
X