Announcement

Collapse
No announcement yet.

வேதம் - வேதமும் வேதாந்தமும் முரணானவையா? - 3

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வேதம் - வேதமும் வேதாந்தமும் முரணானவையா? - 3

    வேதம் - வேதமும் வேதாந்தமும் முரணானவையா? - 3

    பிற்காலத்திய வேதாந்த (ஹிந்து) மதத்தை, வேத கர்மாநுஷ்டான காலத்திலிருந்து பிரித்து, "இந்த ஹிந்துக்களுக்கு individual salvation (தனி மநுஷ்யனின் மோக்ஷம்) தான் முக்யம்;லோக க்ஷேமத்தை இவர்கள் கவனிப்பதேயில்லை;தியானம், யோகம், ஸமாதி எல்லாம் இன்டிவிஜுவல் ஸால்வேஷனையேதான் மையமாகக் கொண்டவை"என்று பிற மதஸ்தர்கள் சொல்கிறார்கள்.

    "கிறிஸ்து, நபி,புத்தர் மாதிரி அன்பு (love) ஸஹோதரத்வம் (brotherhood) இவற்றைச் சொல்லி social consciousness (சமூக உணர்வை) ஹிந்து மதம் வளர்க்கவில்லை"என்கிறார்கள். ஆனால் நம் மதத்தைச் சரியாக புரிந்து கொண்டால் வேத மதம், வேதாந்த மதம் என்று பிரிப்பதே முழுப் பிசகு. கடைசியில் ஸந்நியாஸாச்ரமத்தில் எவன் வேதாந்தியாக ஞானவிசாரம் பண்ணி, இண்டிவிஜுவல் ஸால்வேஷன் அடைகிறானோ, அவனேதான் அதற்கு முந்திய ஆச்ரமங்களில் அத்யயனமும், கர்மாநுஷ்டானமும் பண்ணும் வைதிகனாக இருந்துகொண்டு, இவற்றால் லோக க்ஷேமத்தை உண்டு பண்ணுகிறான்.

    அப்படிப் பண்ணியதே தான் இவனுக்கு சித்த சுத்தியைக் கொடுத்து, தன்னுடைய சொந்த மோக்ஷத்துக்கு நேர்வழியான வேதாந்தத்தில் சேர்க்கிறது. அதிலே ஸித்தி அடைந்து ஞானியான பிறகும், இவன் காரியம் என்று பண்ணாமலே, தன் ஸந்நிதான விசேஷத்தாலேயே லோகாநுக்ரஹம் பண்ணிக் கொண்டிருக்கிறான். தனி மநுஷ்யனின் விமோசனம் ( individual salvation) ,சமூக க்ஷேமம் (collective welfare ) என்ற இரண்டில், எது மதத்துக்கு முக்கியமாக இருக்க வேண்டும் என்ற பெரிய கேள்வியை இங்கே நான் ஆராயவில்லை. அது தனி விஷயம். சமூகம் ஷேமம் அடைவதும், அடையாததும் ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு மதத்தைச் சேர்ந்தவன் பரமாதம தத்வத்தை அநுபவத்தில் தெரிந்து கொள்கிற ஞானியாகாவிட்டால் அந்த மதம் இருந்தாலென்ன, இல்லாவிட்டால் என்ன?

    இந்த ஞானநிலைக்கு வருவதற்காகத்தான் அத்தனை கர்மாவும் உபாஸனையும் வைத்திருக்கிறது. வித்யாஸமே இல்லாமல் எல்லாம் ஒன்றாகிப் போய்விடுகிற ஞான நிலையை அடைவதற்கு வழியாகவேதான் நூறாயிரம் வித்யாஸமுள்ள வர்ணாச்ரம தர்மங்கள், இன்னார்தான் இன்ன பண்ணலாம் என்ற அதிகார பேதங்கள் எல்லாம் பூர்வாங்கமாக வைத்திருக்கிறது.

    வெறும் கர்மாவோடு, வித்யாஸத்தோடு நின்றுவிட்டால் தப்பு. 'கர்மாவைச் சொல்கிற வேத பாகம்தான் அர்த்தமுள்ளது. ஞானத்தைச் சொல்கிற பாகம் அர்த்தமில்லாதது' என்று சொன்ன பூர்வ மீமாஸகர்களைத் திட்டுகிற உத்தேசத்தில்தான், கிருஷ்ண பரமாத்மா வேதத்தையே திட்டுகிற மாதிரிப் பேசுகிறார். அவர் வாஸ்தவத்தில் திட்டினது 'வேத வாத ரதா:என்று அவரே சொல்கிறபடி, வேதத்தைப் பற்றி வெறும் வாய்ச்சவடாலில் அர்த்தம் பண்ணிக்கொண்டு அதிலேயே சந்தோஷப்பட்டுவிட்டு, அதன் லக்ஷ்யமான அநுபவ ஞானத்துக்கு யத்தனம் பண்ணாதவர்களைத் திட்டினதுதான்.

    முதலில் கர்மா வேண்டும். அதாவது வேதம் சொன்னபடி காரிய ரூபத்தில் கடமைகளைப் பண்ண வேண்டும். ஆனாலும் கர்மா இல்லாமல் போகிற பெரிய ஆத்மாநுபூதி நிலைக்குப் போவதற்கே இது ஆரம்பப் படி என்று தெரிந்து கொண்டு பண்ண வேண்டும். இதே மாதிரி, முதலில் தேவதாஉபாஸனை வேண்டத்தான் வேண்டும். ஆனாலும், உபாஸிக்கப்படும் தேவதையும் உபாஸகனான தானும் வேறில்லை என்று ஆகிறதற்கு ஆரம்ப ஸாதனமாகவே உபாஸிக்கிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

    முதலில் வித்யாஸங்கள் பார்க்கத்தான் வேண்டும். லோக வியாபாரம் ஒழுங்காக நடக்க வேண்டுமானால், நமக்குள் காரியங்களைப் பல தினுஸாகப் பிரித்துக் கொண்டு, அந்தந்த காரியத்தையும் சுத்தமாகப் பண்ணுவதற்கு என்ன தனிப்பட்ட ஆசார அநுஷ்டானாதிகள் உதவி செய்யுமோ, அப்படிப் பிரிந்துதான் அவரவருக்கான தர்மங்களைக் கடைபிடிக்கவேண்டும். ஆனாலும் இதுவும், கடைசியில் ஸகல வித்யாஸமும் போய், எல்லாமும் எல்லாரும் "தானே"என்று தெரிந்து கொள்வதற்குத்தான் என்ற அடிப்படை உணர்ச்சி இருக்க வேண்டும். வேத அத்யயனம், வேத கர்மாநுஷ்டானம் எல்லாம் அந்த வேதமே அவசியமில்லாமல் போய்விடுகிற அகண்டமான மஹா அநுபவத்துக்கு வழிதான் என்று வைத்துக் கொண்டு, அவற்றை அப்பியாஸம் பண்ண வேண்டும்.


    புஷ்பம் இருந்தால்தான் பிறகு பழம் உண்டாகும். புஷ்பம் பார்க்க ரொம்ப அழகாக இருந்தாலும், அது காய்ந்து போய் விழுந்தால்தான் பழம் உண்டாகும். பூவே இல்லாமல் காய்க்க வேண்டும் என்று, இந்த நாளில் வைதிகாநுஷ்டானமே இல்லாமல் வேதாந்தத்துக்கு போகிறவர்கள் நினைத்தால், அது யதார்த்தத்துக்குச் சரியாக வராது. இதனால் பூவோடேயே நின்றுவிட வேண்டும் என்று நினைத்து, வேதாந்த ஞானத்துக்கு யத்தனம் செய்யாமல் கர்மடர்களாக நின்றுவிட்டால், அதுவும் தப்புத் தான். எதிலும் sense of proportion வேண்டும்.

    கீதையில் சொன்ன மாதிரியே, பிருஹதாரண்யக உபநிஷத்திலும் (iv.3.22) "எவன் ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்து கொண்டு விட்டானோ அவனுக்கு அந்த நிலையில் வேதம் அத்தனையும் வேதமில்லாமல் போய்விடும்;தேவர்கள் யாவரும் தேவரல்லாமல் போய்விடுவார்கள்;பிராமணர்கள் பிராமணரில்லாமல் ஆகிவிடுவார்கள்;சண்டாளன் சண்டாளனில்லாதவனாகி விடுவான் என்று சொல்லியிருக்கிறது. ச்ருதி எனற வேதத்தைச் சொல்கிற போது அதில பிராமணமும், ஆரண்யகமும் (உபநிஷத்துக்களும்) அடக்கந்தான். கீதை ச்ருதி இல்லை. அது ஸ்மிருதியைச் சேர்ந்ததாகவே சொல்வது வழக்கம். ஸ்மிருதிகளைப் பற்றிப் பிறகு பதினாலு வித்யையகளில் ஒன்றான தர்மசாஸ்திரத்தைப் பற்றி சொல்கிறபோது சொல்கிறேன்.

    வேதகர்மாவும் உபாஸனையும் ஞானத்தில் கொண்டு போய் விடாவிட்டால் பிரயோஜனம் இல்லை என்று கீதையான ஸ்மிருதி சொல்கிறது. ச்ருதி-ஸ்மிருதி -புராணம் என்கிற மூன்று பிரமாணங்களில், புராணத்திலும் அநேக இடங்களில் வெறும் கர்மாநுஷ்டானத்தோடு நின்று விடுவதைக் கண்டித்திருக்கிறது. தாருகா வனத்தில் ரிஷிகள் கர்ம மார்க்கமே ஸகலமும் என்று தங்களுடைய யக்ஞோபாஸனையிலேய கர்வப்பட்டுக் கொண்டிருந்தபோது, பரமேச்வரன் அவர்களுடைய அஹங்காரத்தை அழித்த கதையை சைவமான புராணங்கள் சொல்கின்றன.

    பாகவதத்திலும் இப்படியே யக்ஞபத்தினிகளின் உபாக்யானத்தில், ஒன்றுமே தெரியாமல் innocent - ஆக இருந்த அந்தப் பிராம்மண ஸ்திரீகளுக்குத்தான் யக்ஞபுருஷனான மஹாவிஷ்ணுவே பாலகிருஷ்ணனாக வந்திருக்கிறான் என்று தெரிந்தது என்றும், அவர்களுடைய புருஷர்களான கர்மமார்க்க்காரர்கள் இதைத் தெரிந்து கொள்ள முடியாமல், பிறகு ரொம்பவும் பச்சாதாபப் பட்டார்கள் என்றும் வருகிறது.

    Contd…Part 4……
    Source: subadra

  • #2
    Re: வேதம் - வேதமும் வேதாந்தமும் முரணானவையா? - 3

    ஸ்ரீமன்,
    பாகம் 1ன் தொடர்ச்சி(2) இல்லாமல் 3 ஆம் பாகம் படித்தேன் தொடரும் 4ல் என இருந்தது இதன் தொடர்ச்சி எப்போது வரும் எனக்காத்திருக்கிறேன்.தங்களது விவரிக்க்கும் பாங்கு மிக அருமை,நன்றி

    Comment

    Working...
    X