Mayavaram Brothers!
ஒரு தடவை நாங்கள் தரிசனத்துக்குப் போயிருந்த போது, மாயவரம் ப்ரும்மஸ்ரீ சிவராம சாஸ்திரிகளும் அங்கே வந்திருந்தார்.
ஓரிரு நிமிடங்கள் கழித்து, அவர் பின்னாலேயே, மாயவரம் முனிசிபல் கமிஷனரும் வந்தார்.
பெரியவாள், அவர்கள் இருவரையும் பார்த்து, “உங்களுக்குள் பழக்கம் உண்டா? ரெண்டு பேரும் மாயவரம் ஆச்சே?” என்று கேட்டார்கள்.
“தெரியும், அவ்வப்போது பார்த்திருக்கிறோம பழக்கம் என்று சொல்வதற்கில்லை” என்றார்கள் இருவரும்.
பிரும்மஸ்ரீ சாஸ்திரிகள், “இவர் மாயவரம் முனிசிபல் கமிஷனர்” என்றார்.
அவர், “இவர் பாகவதம் சொல்வதில் நிபுணர். நானும் கேட்டிருக்கேன்” என்றார்.
“நான் அதைக் கேட்கவில்லை. உங்களுடைய முப்பாட்டனார்கள், ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்கள். அது தெரியுமான்னு கேட்டேன்!”
இரண்டு பேர்களும் பிரமித்துப் போய், ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
“குடும்பத்தில் ஏதோ தகராறு – ரெண்டு பேரும் பிரிஞ்சு போயிட்டா… அதனாலே, நீங்க ரெண்டு பேரும் பந்துக்கள் என்பது தெரியாமலே போச்சு! இப்போ சண்டைக்குக் காரணம் ஏதும் இல்லே; இனிமேயாவது சேர்ந்து, ஒற்றுமையா இருங்கோ..”
இதைக் கேட்டதும், சாஸ்திரி – கமிஷனர் முகங்கள் மகிழ்ச்சியில் பூரித்துப் போயின.
அப்புறம் சாராவது, சாஸ்திரியாவது? “அண்ணா, வாங்கோ; தம்பி வாடா” தான்!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர! மஹா பெரியவாள் முக்காலமும் அறிந்த மாமுனி என்பதி ஐயம் உண்டோ?
நினைவு கூர்ந்தவர்: எஸ். சீதாராமன், சென்னை – 28