TAMIL PROVERB- LEARN In EARLY LIFE.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது
தமிழில் அருமையான 20,000 பழமொழிகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஆழமான பொருள் உடையவை. ‘இளமையில் கல்’ என்பது ஒரு பொன்மொழி. எதையும் இளமையில் செய்தால் மிகவும் எளிதாகவும் வாழ்க்கை முழுதும் பயன் தருவதாகவும் அமையும். இன்னொரு பழமொழி ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பதாகும். இதை விளக்க குமரகுருபரர் எழுதிய ‘நீதிநெறி விளக்கத்தில்’ ஒரு அருமையான பாடல் உள்ளது.
பல்லக்கு மூங்கில்
“ வருத்த வளைவே அரசர் மாமுடியின் மேலாம்
வருத்த வளையாத மூங்கில்—தரித்திரமாய்
வேழம்பர் கைப்புகுந்து மேதினி எல்லாம் திரிந்து
தாழும் அவர்தம் அடிக்கீழ்தான்”
பொருள்: இளமையில் பல்லக்குத் தண்டு போல வளைத்துவிடப்பட்ட மூங்கில் பின்னர் மன்னர்களைத் தூக்கும் பல்லக்குத் தண்டாக உயரும். அப்படி வளையாத மூங்கிலின் கதியோ பரிதாபமானது. கழைக் கூத்தாடிகளின் கையில் அகப்பட்டு ஊர் ஊராகத் திரியும். இதேபோல இளமையில் கஷ்டப்பட்டு கல்வி கற்பவர்கள் மேல்நிலையையும் கல்லாதவர்கள் தாழ்வான நிலையையும் அடைகின்றனர்.
இளைஞன் முதுகில் யானை!
ஒரு சர்கஸில் 5 அல்லது 6 டன் எடை உடைய ஒரு யானை சுமார் 100 கிலோ எடை உடைய ஒரு மனிதன் மேல் நிற்பதைப் பார்த்து எல்லோரும் வியந்தார்கள். அவன் படுத்தவுடன் அவன் மீது ஒரு பெரிய பலகையை வைப்பார்கள். அதன் மீது யானை ஏறி நிற்கும். இதைப் பார்த்த ஒரு பத்திரிகையாளர் அவரைப் பேட்டி காணச் சென்றார். ‘நீங்கள் யோகாசனம் பயின்று ஏதேனும் அபூர்வ சக்தி பெற்றிருக்கிறீர்களா? எப்படி இதைச் செய்ய முடிகிறது? என்று பத்திரிகை நிருபர் கேட்டார். அதற்கு அந்த இளைஞர், நான் பள்ளிக்கூடம் கூட போனது இல்லை, எனக்கு யோகமும் தெரியாது, ஆசனமும் தெரியாது. இந்த யானை குட்டியாக இருந்தபோது இந்த சர்க்கஸ் அதை விலைக்கு வாங்கியது. அன்று முதல் என் மீது ஏறி நிற்கும் பயிற்சியைத் துவக்கினார்கள். அது சிறிது சிறிதாக வளர்ந்து பெரிதானபோதும் எனக்கு பாரம் தெரிவதில்லை என்றார்.
இது நம் வாழ்க்கையில் பெரிய உண்மையைப் போதிக்கிறது. பல்லக்கு மூங்கில் போல வளையவும், பெரிய பாரத்தைச் சுமக்கவும் இளமை முதல் பயிற்சி தேவை.
(20000 தமிழ் பழமொழிகள், பெண்கள் பற்றிய பழமொழிகள், யானை பற்றிய பழமொழிகள் முதலிய பழமொழிக் கட்டுரைகள் ஏற்கனவே இந்த பிளாக்கில் ஏற்றப்பட்டுள்ளன).
Source: tamilandvedas
This post is for sharing knowledge only, no intention to violate any copy rights