Announcement

Collapse
No announcement yet.

வேதத்தில் சொன்ன நல்ல பல விஷயங்களை..

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வேதத்தில் சொன்ன நல்ல பல விஷயங்களை..

    வேதத்தில் சொன்ன நல்ல பல விஷயங்களை......






    வேதத்தில் சொன்ன நல்ல பல விஷயங்களை, கதைகள் மூலம் பெரிது பண்ணிக் காட்டுவதே புராணம்’







    மிகுந்த இறை நம்பிக்கை கொண்ட, வசதிமிக்க கல்கத்தா சேட்ஜி ஒருவருக்கு தீராத ஒரு நோய். எந்த உணவையும் சாப்பிட பிடிக்கலை. எதை சாப்பிட்டாலும், அதன் ருசி தெரியாமல், உப்பு சப்பில்லாமல் இருந்தன. தாகம் கூட எடுப்பது இல்லை. அதனால், நாளடைவில் மிகவும் மெலிந்து போனார். பார்க்காத வைத்தியம் இல்லை. இறுதியில் யாரோ சொல்லக்கேட்டு, மகாபெரியவரை போய் சந்தித்தார். விவரம் கூறினார். பெரியவா ஒரு விஷயம் சொன்னார். பரிகாரம் போல் இருந்தது.


    அந்த கல்கத்தா சேட்ஜிக்கு, மகா பெரியவா சொன்ன பரிகாரம் என்பது மேலோட்டமாக பார்த்திட ஒரு பெரிய விஷயம்போல தெரியாது. ஆனால், நடைமுறையில் அதைச் செய்திட உண்மையில் இறையருள் நிறையவே வேண்டும்.
    நம் மதத்தின் தனிப்பெரும் சிறப்புக்குரியவை, முதலில் வேதங்களே! அதைத் தொடர்ந்து இந்த மண்ணில் வந்தவை இதிகாச புராணங்கள். இதிகாசங்கள் என்றாலே, ராமாயணமும், மகாபாரதமும் வந்துவிடும்.

    புராணம் என்று வரும்போது ஒரு பட்டியலே உள்ளது. அந்த வகையில், ‘பிரம்ம புராணம், பத்மபுராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம், லிங்க புராணம், கருட புராணம், நாரத புராணம், பாகவத புராணம், அக்னி புராணம், ஸ்கந்த புராணம், பவிஷ்ய புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், மார்க்கண்டேய புராணம், வாமன புராணம், வராக புராணம், மச்ச புராணம், கூர்ம புராணம், பிரம்மாண்ட புராணம்’ என்று பதினெட்டு புராணங்களோடு வாயு புராணத்தையும் சேர்த்தால், 19 புராணங்கள் வருகிறது.

    பெரியவர் அந்த சேட்ஜிக்கு சொன்ன பரிகாரம் இதுதான். மேலே கண்டவற்றில், நான்கு வேதங்கள் மற்றும் இரண்டு இதிகாசங்களையும் விட்டுவிட்டு, மீதமுள்ள அவ்வளவு புராணங்களையும் மூலத்தில் உள்ளது உள்ளபடி துளியும் பிசகின்றி, நூலாக அச்சிட்டு அதை இந்த பாரததேசம் முழுக்க உள்ள வேத பண்டிதர்களுக்கும், விரும்பிக் கேட்பவர்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும். சேட்ஜியால் செய்ய முடியுமா? என்று கேட்டார். சேட்ஜியே உப்புச் சப்பில்லாத ஒரு வாழ்வை வாழ்ந்தபடி இருக்கிறார். எனவே, மறுபேச்சே பேசாமல் அந்த பரிகாரத்துக்கு தயாராகிவிட்டார்.

    ஆனால், பதினெட்டு புராணங்களையும் மூலத்தில் உள்ளது உள்ளபடி துளியும் மாறாமல், அச்சிட வேண்டும் என்று பெரியவர் அடிக்கோடிட்டு விட்டபடியால், அதை தேடிக்கண்டுபிடிப்தே ஒரு பாடாக இருந்தது. அதற்காக ஒரு அலுவலகம் அமைந்து, அதில் வேத பண்டிதர் களை நியமித்து, அவர்களுக்கு உரிய சன்மானமும் மரியாதையும் தந்து, ஒரு அர சியல் கட்சித் தலைவர் ஒரு இயக்கத்தை நடத்துவதுபோலவே நடத்த வேண்டி யிருந்தது.

    தோராயமாக சில லட்ச ரூபாய் செலவாகும் என்று கணிக்கப்பட்ட விஷயம், பல லட்சங்களை விழுங்கியது. ஒவ்வொரு புராணத்தையும் தேடிப்பிடித்து அச்சேற்றி புரூஃப் திருத்தி, பின் உரிய முறையில் புத்தகமாக்கி, அதை பாதுகாப்பாக வைத்துவிட்டு, அடுத்த புராணம் என்று செயல்பட வேண்டியிருந்தது.

    இவ்வாறு செய்வதால், அவருக்கு குணமாகிவிடும் என்கிற உறுதியை பெரியவர் தரவில்லை. சொல்லப் போனால், இந்த பரிகாரத்தைக்கூட, எடுத்த எடுப்பில் கூறிவிடவில்லை. ஒருமுறைக்கு பலமுறை அந்த சேட்ஜி சார்பில் ராஜகோபால சர்மா என்னும் உபன்யாச சிரோன்மணி ஒருவர், முயற்சி செய்தபிறகே அவர் கூறியிருந்தார். இதைக் கூற காரணம் உண்டு.

    ஒரு நம்பிக்கை அடிப்படையில், பெரியவர் சொன்னதை செய்ய, அதைவிட கூடுதலான நம்பிக்கை செய்பவரிடம் வேண்டும். அடுத்து அந்த நம்பிக்கை துளியும் குறையாதபடி நீடிக்கவும் வேண்டும். ஏனென்றால், பெரியவர் சொன்ன இந்த பரிகாரப்படி பதினேழு புராணங்களைத் தேடிப்பிடித்து, அச்சேற்றிவிட்ட நிலையில், பதினெட்டு ஒன்றே பாக்கி என்றிருக்கும் நிலையில், அந்த சேட்ஜியிடம் எந்த குணப்பாடும் இல்லை. சொல்லப்போனால் குணமாவதற்கான அறிகுறிகள் கூட கண்ணில் படவில்லை.

    ஆனால், பணமோ கரைந்தபடி உள்ளது. சொல்லப்போனால், சேட்ஜி சம்பாதித்ததை எல்லாம் கரைத்துவிட்டார் என்று கூட கூறலாம்தான். ஆனால், சேட்ஜியோ துளியும் நம்பிக்கை குன்றாமல் பதினெட்டாவதையும் வெளியிட்டு முடித்தார். பதினெட்டாவதாக ஸ்ரீஸ்கந்த புராணத்தை அச்சடிக்கத் தொடங்கும்போதே அவரிடம் ஒரு மாற்றம். தாகம் எடுக்க ஆரம்பித்தது. அச்சடித்து முடிக்கும்போது சாப்பிடவே தொடங்கிவிட்டார். நாக்குக்கு ருசி உணர்வு வந்து, அவரது மர்மநோய் இனி என்னால் உன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பதுபோல நீங்கியேவிட்டது.
    சேட்ஜியின் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அதன் பிறகு, அவர் பெரியவரை எப்படி எல்லாம் கொண்டாடி மகிழ்ந்திருப்பார் என்று கூறத் தேவையே இல்லை. இந்த விஷயத்தில் பெரியவர் சொன்ன பதில்தான் சிகரம்.

    ‘இந்த அதிசயத்தை நான் செய்யவில்லை. அப்படிச் சொன்னால் தவறு. பதினெட்டு புராணங்களுக்குள்ளம் சப்த ரூபமாய் வாழ்ந்துகொண்டிருககும் நம் ரிஷிகளும் முனிவர்களும் இறை அம்சங்களுமே இதைச் செய்தன. சேட்ஜியின் கர்ம வினைக்கு இணையான பரிகாரமாக, நான் இதை எண்ணிடக் காரணம் கூட, நமது ரிஷிகளும் முனிவர்களுமே…’ என்று, அவருக்கு வந்த வந்தனங்களை எல்லாம், அப்படியே ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் சமர்ப்பணமாகும்படி செய்துவிட்டார்.

    இதை அறிந்தபோது, எனக்குள் பெரும் நம்பிக்கை ஒளி ஏற்பட்டது. ‘விதியை மதியாலெல்லாம் வெல்ல முடியாது என்பது உண்மையாயினும், அந்த மதிக்குள் விதியை ஏற்றுக்கொள்ளும் தெளிவை, திட சித்தியை நாம் பெற்றாலே கூட போதுமே.’ அதுதான் பகவான் ரமணரின் அனுபவம். வலியை விரும்பு – வலியே வலிமை போன்றவை… இவ் வேளையில், சிறு வயதில் நான் பார்க்க என் அத்தை ஒரு நோட்டில், ‘சாதுஜன ப்ரியா ஸ்ரீராமா – ராமராஜ்ய விட்டலா ஜெயராமா. ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம் – ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்…’ என்று எழுதிய ஸ்லோகங்கள் நினைவுக்கு வருகின்றன.

    அத்தையின் இல்வாழ்க்கை தொடக்கம், அத்தனை இனியதாயில்லை. கர்மத்தைவிட வேறு எதை காரணமாக கூற முடியும்? மருந்தாக அத்தை எடுத்துக் கொண்டது அந்த ஸ்லோகத்தைத்தான். அத்தை, இன்று பேரன் பேத்திகளுடன் வாழ்ந்து வருகிறார். அந்த ஸ்லோகம் அத்தையின் கர்மத்தை கொஞ்சம் கொஞ்சமாய் கரைத்துக் குறைத்தது.

    நான் பார்க்க பலர் ஸ்ரீராமஜெயம் எழுதக் காண்கிறேன். சிவபுராணம், ஹனுமன் சாலீசா என்று சிறு சிறு புத்தகங்களை அச்சிட்டு, அனைவருக்கும் கொடுக்கக் காண்கிறேன் – எல்லாவற்றுக்கும் மூலம் பெரியவர் சொன்ன இந்த பரிகாரமே!

    உலக மருத்துவர்களெல்லா கை விட்டுவிட்ட வியாதிக்கே, மருந்தாக நமது அறநூல்கள் இருக்கிறதென்றால், இதை வைத்துக்கொண்டு, நாம் கர்மத்தில் உழல்வதும் இதை அறியாமல் இருப்பதும் எத்தனை அறியாமை?

    ஒன்றை மட்டும் இமயத்தின் உச்சியில் நின்றுகொண்டு சொல்வதுபோல் சொல்வேன். மந்திரங்களால் நிரம்பியிருக்கும் மனங்களுக்கு பெரிய துன்பம் வரவே வராது. ‘நான் சொல்லவா… ஒரு பெரிய கனபாடிகள் புற்றுநோயால் அவதிப்படுவதை…’ என்று உடனே வரிந்துகட்டிக் கொண்டு பதில் சொன்னால், அவர்களுக்கு எனது பதில் இதுதான்:

    ஒரு புத்தகத்தை வாங்குவது, வீட்டு அலமாரியில் வைப்பதற்காக அல்ல. வாசிப்பதற்காக! அதேபோல மந்திரங்களை நாம் அன்றாடம் கூறுவது என்பதும் வாய்ப்பாட்டு ஒப்பிப்பதுபோல் இருக்கக்கூடாது. துளியாவது அதன் பொருளை உணர்ந்துகொண்டு, உருக்கத்தோடு சொல்ல வேண்டும். அதே போல ராமஜெயம் என்று எழுதும்போது, ராம காவியம் மனத்துக்குள் ஓட வேண்டும். ஹனுமனின் சாகசங்களை நம் சாகசம்போல லயித்து அனுபவிக்கவேண்டும்.
    திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தைச் சொல்வதும் எழுதுவதும் எந்த வகை பக்தி? மாறிக் கொண்டேயிருக்கும் உலகில், மாறாதது மாற்றம் ஒன்றே என்றும், உலகில் அந்த திரும்பத் திரும்பச் சொல்லப்படும் ஒரு மந்திரம் அல்லது ஒரு சப்தத்தால் என்ன பெரிதாக ஏற்பட்டு விடும் என்று, அறிவுபூர்வமாக உணர்ச்சி பூர்வமாக கேட்பதில் உள்ள வேகத்தை அடக்கி, மனத்தை அதன் போக்குக்குப் போய்விடாதபடி, வளைத்துத் திருப்பி திரும்பத் திரும்பச் சொல்; திரும்பத் திரும்ப எழுது என்றும் இந்த அற்புதத்துக்குள் சிரமப்பட்டு முயல வேண்டும்.

    நல்ல விதியமைப்பு கொஞ்சமாவது இருந்தாலே, இதில் நம்பிக்கை ஏற்படும். கோயிலுக்கு செல்வதை நித்ய பரிகாரம் என்று சான்றோர்கள் கூறுவார்கள். பசுவுக்கு அகத்திக் கீரை தருவதை சிறந்த பரிகாரம் என்பார்கள். ஏழைப்பெண்களின் திருமணத்துக்கு உதவுவதை, பசி என்று நம் காதுபட கூறுபவர்களுக்கு அன்னமிடுவதை, தாகம் என்று தவிப்பவர்களுக்கு தண்ணீர் தருவதை அன்றாட பரிகாரங்கள் என்பார்கள்.

    இவற்றுக்கு நடுவில், இறை நாமங்களை ஜபிப்பது, எழுதுவது என்பதெல்லாம் விளக்கை பளிச்சென்று துலக்க முற்படுவது போன்றது. நான் இம்மட்டில் ஒரு நாளைக்கு 108 என்ற கணக்கெடுத்து இறை நாமத்தை எழுதி வருகிறேன். அழுத்தமாய் கர்மம் கரைவதையும் உணர்கிறேன். அதே சமயம், அது வேண்டும் இது வேண்டும் என்கிற ஆசைகளோடெல்லாம் இதை செய்வதில்லை. அப்படி ஆசைப்பட்டாலே, இந்தச் செயல்பாட்டை நாம் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை என்பதே உண்மை. பல் துலக்குவது, குளிப்பதுபோல இதை ஒரு நித்ய கடமையாக முதலில் செய்ய வேண்டும். பின் நெகிழ்வோடு செய்ய வேண்டும். நெகிழ்வோடு செய்திட லயிப்பு மிக முக்கியம். ஸ்ரீராமஜயம் எழுத எழுத அது காலப்போக்கில் தானா ஏற்பட்டது.

    இந்த நாமம் குறித்து மட்டுமல்ல; புராணங்கள் குறித்தும், பெரியவர் கூறும் கருத்தும் மனத்துக்குள் ஆழமாய்ப் பதிவதாகவே உள்ளது.
    ‘மிகச்சிறிய ஒன்றை ஒரு பூதக்கண்ணாடி பெரியதாக காட்டுகிறது. அதுபோலவே, வேதத்தில் சொன்ன நல்ல பல விஷயங்களை, கதைகள் மூலம் பெரிது பண்ணிக் காட்டுவதே புராணம்’ என்று புராணங்களுக்கு அவர் விளக்கமளிக்கிறார்.
    ‘ஒன்றை சுருக்கமாகச் சொன்னால் அது மனத்தில் பதியாமல் போய்விடலாம். அதையே சுவாரஸ்யமான கதையாக விஸ்தாரமாகச் சொல்லும்போது, நன்றாக மனத்தில் பதியும்’ என்று புராணக்கதைகளின் நோக்கத்தை கூறுகிறார் பெரியவர்.

    இதெல்லாமே அருமருந்து!
    இந்த மருந்தை வைத்துக்கொண்டு, நாம் கர்மத்தை எண்ணி எதற்குக் கலங்க வேண்டும்? எனக்கும் இப்போது விதி பயமெல்லாம் இல்லை. அதே சமயம் இந்தப் பரிகாரங்களை அல்லது பரிகாரத்தை உள்ளடக்கிய பக்திமயமான வாழ்வில், ராம நாமத்தையோ, விஷ்ணு சஹஸ்ரநாமத்தையோ, ருத்ரத்தையோ விடாமல் ஜபித்து கர்ம சிரத்தையாக இருக்கும்போது, அதற்குப் பரிசாக தெய்வமும் வீடு தேடி வந்து, கருணை காட்டுகிறது.


















    source:


    B Shanmuganathan

  • #2
    Re: வேதத்தில் சொன்ன நல்ல பல விஷயங்களை..

    என்ன ஒரு ஆழமான அழுத்தமான விஷயம் மிஹச்சரளமாக கூறிவிட்டீர்கள் நன்றி

    Comment

    Working...
    X