Announcement

Collapse
No announcement yet.

5 peculiar things in Kasi

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5 peculiar things in Kasi

    5 peculiar things in Kasi
    காசி மாநகரம் என்பது இரண்டு பகுதிகளானது. ஒன்று நகர வாழ்க்கை கொண்ட பகுதி. மற்றொன்று கங்கை நதியின் கரையோரம் அனைவராலும் வணங்கப்படும் ஆன்மீக நகரம்.
    நாம் பயணம் செய்யப்போவது இரண்டாம் நகரமான ஆன்மீக நகரம். கங்கை நதியின் பயணத்திற்கு ஏற்ப கரையில் படித்துறைகள் கட்டப்பட்டுள்ளன. சுமார் 350க்கும் மேற்பட்ட படித்துறைகள் இருக்கின்றன. இவற்றை காஹட் (Ghat) என அழைக்கிறார்கள். ஒவ்வொரு காஹட்க்கும் ஒரு பின்புலமும் காரணமும் இருக்கிறது. படித்துறைகளை மூன்று வகையாக பிரித்திவிடலாம். அரசர்கள் கட்டிய படித்துறை, ஆன்மீக மடங்கள் கட்டிய படித்துறை மற்றும் பொதுமக்களுக்கான படித்துறை என வகைப்படுத்தலாம். இதில் ஆன்மீக மடங்களின் படித்துறை பொதுமக்களின் படித்துறையாகவே பயன்படுத்தபடுகிறது.


    விஷேஷ காலத்தில் மட்டும் ஆன்மீக மடாதிபதிகள் அவற்றை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அரசர்களின் படித்துறை என்பது அரசர் மட்டுமே பயன்படுத்தும் அமைப்பாக இருந்துவந்தது. தற்காலத்தில் அரசர்கள் மற்றும் முடியாட்சி இல்லாத காரணமாக இவை பயன்படுத்தப்படாமல் இருக்கிறது.


    காசியில் அதிகாலை தியானம் முடிந்ததும் நான் கண்ட காட்சி.
    குடும்பமோ வேறு நபர்களோ அதிகமாக படித்துறையை யாரும் பயன்படுத்துவதில்லை. அரசர்களின் படித்துறை என்றவுடன் ஒன்று தான் என நினைத்துவிடக்கூடாது. பாரத தேசத்தின் பல அரசர்கள் இங்கே தங்களுக்கு என பிரத்யோகமான படித்துறையை கலைநயத்துடன் கட்டியிருக்கிறார்கள். அதில் அவர்கள் மட்டும் ஏகாந்தமாக கங்கையை ரசிக்கவும், ஆராதிக்கவும் ஏகப்பட்ட விஷயங்களை வடிவமைத்து இருக்கிறார்கள்.


    பல அரசர்களுக்கு படித்துறை கட்டும் அளவுக்கு காசி நகரம் பொதுவான ஊராக இருந்தது. இவற்றை புரிந்துகொள்ள வரலாற்று பாடத்தின் சில பக்கங்களை நாம் புரட்ட வேண்டும். காசி என்பது நகரம் என்பதை காட்டிலும் அது ஒரு நாடு என கூறலாம். பாரத தேசம் பல சிற்றரசர்களால் சிதறுண்டு ஆளும் காலத்தில் காசி நகரம் ஒரு அரசின் கீழ் இருந்தது.


    காசி மற்றும் அதன் சுற்றுபுற நகரங்கள் இணைந்து காசி சமஸ்தானமாக இருந்தது. காசி சமாஸ்தானம் பிற அரசுகளை விட ஒரு தனித்துவமாக இருந்தது. காசி சமஸ்தானத்தில் ராணுவம் மற்றும் போர்படை என்பது இல்லை. காசி ராஜா காசியை நிர்வாகிக்கும் தன்மையை மட்டுமே கொண்டவராக இருந்தார். காசி மேல் யாரும் போர் தொடுக்கவோ, காசி அரசர் பிறர் மேல் போர் தொடுக்கவோ மாட்டார். தற்காலத்தில் கூட உலகில் ஒரு நாடு அப்படி இருக்கிறது. அது உங்களுக்கு ஞாபகம் வருகிறதா?


    காசியில் பல கல்விச்சாலைகள் இருந்ததால் பாரத தேசத்தில் பல நாட்டு அரசர்களும், அறிஞர்களும் அங்கே வந்து பாடம் பயின்றனர். அதனால் காசி மாநகரம் கல்விக்கு பிரதானமான விஷயமாக இருந்தது. ஐநூறு வருடத்திற்கு முன் தமிழகத்தில் ஒருவர் காசி சென்று படித்தவன் என கூறினால் அவருக்கு கிடைக்கும் மதிப்பு அளவிட முடியாதது. காசி ராஜா அங்கே இருக்கும் பல்கலைகழகத்தின் சிறந்த கல்வியாளராக தேர்ச்சி பெற்று சமஸ்தானத்தில் அறிஞர்களுடன் அலங்கரிப்பவராக இருப்பார்.


    பாரத தேசத்தில் உள்ள அறிஞர்கள் தங்களின் ஆறிவை நிரூபணம் செய்யவும், ஆராய்ச்சிகளை வெளியிடுவதற்கும் காசிக்கு செல்லுவார்கள். அங்கே அறிஞர்கள் குழு ஒன்று (Senate members) ஆய்வு செய்து சான்றிதழ் கொடுக்கும். சான்றிதழ்கள் செப்பு தகட்டில் அமைந்திருக்கும். சில அறிஞர்கள் தனது செப்பு பட்டையத்தை சுமந்து வர பல அடிமைகளையும், குதிரைகளையும் வைத்திருந்ததாக வரலாற்று தகவல்கள் கூறுகிறது.


    காசி ராஜாவின் அரண்மனை பிரம்மாண்டமானது. காசி அரசர்களுக்கு பல கலைகள் தெரியும் என்றும் அதில் பல அறிவிப்பூர்வமான காரியங்கள் செய்தார்கள் என நாடோடிக்கதைகள் உண்டு.


    காசியில் உள்ள படித்துறைகளில் பல நாட்டு ராஜக்களுக்கு சிறிய அரண்மணைகளை கட்டுவதற்கு அனுமதித்து, இரு விரோத நாட்டு ராஜாக்கள் ஒரே நேரத்தில் வந்தாலும் சச்சரவு இல்லாமல் அமைதியை நிலைநாட்டுவது காசி ராஜாவின் முக்கிய பணியாக இருந்தது.


    படித்துறையில் ராஜாக்களுக்கு கட்டப்பட்ட கட்டிடங்கள் சாதாரணமானது அல்ல. ஒவ்வொன்றும் குட்டி அரண்மனை. சில அரண்மனைகளில் இருந்து பார்த்தால் கங்கை நதியும் அதன் கரையில் உள்ள மனிதர்களுக் தெரிவார்கள். ஆனால் கரையில் இருந்து பார்த்தால் அரண்மனையில் இருப்பவர்களை பார்க்க முடியாது. இது போன்ற கலை நயம் பல அதில் உள்ளன. ராஜாஸ்தான் அரசர் ராஜா ரஞ்சித் சிங் , தனது நாட்டிலிருந்து ஊதா நிற சலவைக் கற்களை கொண்டு வந்து இங்கே அரண்மனை கட்டி இருக்கிறார். சத்ரபதி சிவாஜி இங்கே ஒரு அரண்மனை படித்துறை அமைத்திருக்கிறார். நேப்பாள் மஹாராஜாவும், சோழ அரசர்களும் இங்கே தங்கள் சந்ததியினர் வந்தால் தங்குவதற்கு அரண்மனை கட்டியிருக்கிறார்கள்.
    காசி நகரம் இவ்வளவு தொன்மையான ஊராகவும், பல நாட்டு அரசர்கள் விரும்பும் ஊராகவும் இருந்தது.
    நிற்க... எதற்கு இந்த விக்கிப்பிடியா விளக்கம் என்கிறீர்களா?
    பாரத தேசத்தில் இருக்கும் அரசர்கள் மக்கள் விரும்பும் படி காசியில் என்ன இருக்கிருக்கிறது ? அங்கே ஐந்து அதிசயங்கள் நடக்கிறது. அது ஒரு காரணமாக இருக்கலாம். அவற்றை பட்டியலிடுகிறேன்


    1) பல்லி சப்தம் எழுப்பாது. : - காசியில் பல்லிகள் உண்டு. ஆனால் அவை சப்தம் எழுப்புவதில்லை. நம் மக்கள் பல்லியின் சப்தத்தை சகுனமாக எடுப்பவர்கள். காசியில் அதற்கு இடமில்லை.


    2) பிணம் நாற்றம் எடுக்காது : பிணம் எரியும் பொழுது பக்கத்தில் நின்று இருக்கிறீர்களா? பிணத்தின் கேசமும், இரத்தம், சதை மற்றும் தோல் எரியும் பொழுது அதிலிருந்து வரும் வாடை வார்த்தையால் விளக்க முடியாது. இதைத்தான் பிண வாடை என சொல்வழக்கில் கூறுவார்கள். ஆனால் இங்கே பிணம் எரியும் பொழுது அருகில் நின்றால் எந்த விதமான நாற்றமும் இருக்காது.


    3) கருடன் வட்டமிடாது - காசியில் கங்கை கரையில் பிணங்கள் எரிக்கபட்டாலும், உணவுகள் சிதறிகிடந்தாலும் இறைக்காக கருடன் வட்டமிடுவதில்லை. கருடன் அங்கே பறந்து செல்லும் ஆனால் வட்டமிடாது.


    4) பூ மணக்காது : இது உங்களுக்கு கொஞ்சம் மிகுதியாகத்தான் தெரியும். என்ன செய்ய காசியில் அப்படித்தான் இருக்கிறது. தென்நாட்டில் கிடைக்கும் பூக்கள் வடநாட்டில் கிடைக்காது, முக்கியமாக மல்லி முல்லை இவைகள் கிடைக்காது. ஆனால் சாமந்தி பூ அதிகமாக கிடைக்கும். தென்நாட்டில் சாமந்திபூவை மலர்வளையத்தில் மட்டுமே வைப்பார்கள். சாமந்திப்பூவில் ஒருவிதமான நெடி இருக்கும்.


    பலருக்கு இந்த பூவின் வாசம் பிடிக்காது எனலாம். அதனாலேயே நம் ஊரில் பூஜைக்கு பயன்படுத்தமாட்டார்கள். ஆனால் காசியில் இந்த பூக்கள் அதிகம் கிடைக்கிறது. ஆனாலும் அவை வாசங்கள் இல்லாமல் காகிதப்பூ போல இருக்கிறது. வெளியூரில் விளையும் பூக்களை கொண்டு சென்றால் காசியில் மணக்கும். ஆனால் காசி பூக்கள் மணப்பதில்லை.


    5) பால் வற்றாது : இங்கே பசுக்கள் இறைவனைவிட அதிகமாக மதிக்கப்படுகிறது. பசுக்கள் கட்டப்படுவதில்லை. பசுவிடம் தேவையான பால் கிடைத்தவுடன் அவற்றை விட்டுவிடுகிறார்கள். பசுக்கள் யாரையும் முட்டுவதோ உதைப்பதோ இல்லை. மனிதனை கண்டு மிரளுவதில்லை. சில கடைகளுக்கு சென்று அங்கே இருக்கும் உணவை தின்று கடை முதலாளியை கதற செய்யும். இங்கே யாரும் பசுவை துன்புறுத்துவதில்லை. பசுக்கள் கங்கையின் உருவில் உலாவருவதாக மக்கள் கருதுகிறார்கள். அதனால் பசுக்களுக்கு அவ்வளவு மதிப்பு. கங்கை இந்த நகரத்தில் என்றும் __________________ அதனால் பசுக்களின் பாலும் வற்றாது என்கிறார்கள்.


    அது என்ன வாக்கியம் விடுபட்ட இருக்கிறது என்கிறீர்களா? கங்கை ________ என கூறினால் பல கோடிவருடம் தினமும் ஆயிரம் பசுக்களை கொன்ற பாவம் கிடைக்குமாம். நான் என்றைக்காவது கங்கை ________ உண்டா என கேட்க தனது துடுப்பை எடுத்து என்னை தாக்க வந்தான் ஒரு படகு ஓட்டி. எனக்கு ஏற்கனவே பாவம் கிடைத்தது. அதை கங்கையில் குளித்து சரி செய்துவிட்டேன் .


    படகோட்டி கூறிய அதிசங்களைதான் நான் இங்கே கூறி இருக்கிறேன். இதில் ஐந்தையும் ஆராய்ந்து உண்மை என உணர்ந்து இங்கே பட்டியலிடுகிறேன். பலவருடங்கலாக இன்றும் இயற்கையாகவே ஐந்து விஷயங்கள் நடக்கிறது. காசியில் மட்டும் என்ன இப்படி நடக்கிறது என உங்களால் காரணத்தை யூகிக்க முடியுமா? கொஞ்சம் யோசியுங்கள். அதற்குள் நான் கங்கை கரையின் படித்துறையில் உலா சென்று வருகிறேன்.
Working...
X