Announcement

Collapse
No announcement yet.

Daily routine of a brahmin

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Daily routine of a brahmin

    Brahmin's daily routine:
    சாஸ்திரம் பிராம்மணனுக்குப் போட்டுத் தந்திருக்கிற தினசர்யை (daily routine: அன்றாட அலுவல்) என்னவென்று சொல்கிறேன். ரொம்பவும் கடுமையான ருடீன் தான். ஸூர்யோதயத்துக்கு ஐந்து நாழிகை (இரண்டு மணி) முன்னதாகவே, அதாவது நாலு மணிக்கே எழுந்து விட வேண்டும். 'பஞ்ச பஞ்ச உஷத்காலே' என்பார்கள். 'ஐந்து X ஐந்து' அதாவது இருபத்தைந்தாவது நாழிகையில் என்று அர்த்தம். முதல்நாள் ஸூர்யாஸ்தமனத்திலிருந்து மறுநாள் உதயம் வரையுள்ள முப்பது நாழிகையில் இருபத்தைந்து நாழிகையானபின் என்று அர்த்தம். இதிலிருந்து ஸூர்யோதயம் வரை பிராம்ம முஹூர்த்தம். இப்படி விழித்துக் கொண்டு பல் துலக்கி, பச்சை ஜலத்தில் ஸ்நானம் பண்ணிவிட்டு ஸந்தியாவந்தனம் செய்ய வேண்டும். இது தேவ யக்ஞம். அப்புறம் பிரம்ம யக்ஞம். அதாவது வேத அத்யயனம் பண்ணுவது; இதில் சில தர்ப்பணங்களும் பண்ண வேண்டும். (சில ஸூத்ரக்காரர்கள் இதைப் பிற்பாடு செய்கிறார்கள்) ஒரு பகல் பொழுதை – அதாவது காலம்பற 4 மணியிலிருந்து ராத்ரி 8 மணி வரையுள்ள 16 மணியை – எட்டுப் பங்காக்கினால் இதோடு ஒரு பங்கு முடிந்திருக்கும்.


    இரண்டாம் பாகத்தில் அத்யாபனம் என்பதாக வேதத்தை சிஷ்யனுக்கு ஓதுவதில் ஆரம்பிக்க வேண்டும். அப்புறம் பூஜைக்கான புஷ்பங்களைத் தானே பறித்து வர வேண்டும். பிறகு இவனுக்குச் சம்பளம் எனறு இல்லாததால், மூலதனமாகப் போதிய மானியம் இல்லாவிடில், வாழ்க்கைச் செலவுக்காகவும், யஜ்ஞ செலவுக்காகவும் பொருள் ஆர்ஜிதம் செய்யத் தக்க ஸத்பாத்திரங்களிடம் போய் திரவியம் வாங்கி வரவேண்டும். இப்படி தானம் வாங்க (அளவோடு அத்யாவசியத்துக்கே வாங்க) பிராம்மணனுக்கு உரிமை உண்டு. தானம் வாங்கினதில் கணிசமான பகுதியை இவன் யஜ்ஞத்தில் ரித்விக்குகளுக்கு தக்ஷிணையாக தானம் கொடுத்து விடுகிறான் என்பதை கவனிக்க வேண்டும். பிராம்மணனுக்குரிய ஆறு தொழில்களில் 'ப்ரதிக்ரஹம்' என்பது தனக்கு வாங்கிக் கொள்வது; 'தானம்' என்பது இவன் பிறருக்குக் கொடுக்க வேண்டியது. 'பிராம்மணனுக்கு மட்டும் தானம் வாங்க ரைட்டா? என்கிறவர்கள், அவன் தானம் கொடுக்க வேண்டுமென்றும் விதிக்கப்பட்டிருக்கிறதென்பதையும், முக்கியமாக இப்படிக் கொடுக்கவேதான் அவன் வாங்கினான் என்பதையும் கவனிக்க வேண்டும். அது தவிர இனி சொல்லப் போகிற ஆதித்ய, பூத யஜ்ஞங்களாலும் இவன் தாதாவாக இருக்கிறான். இப்படி ஒரு நாளில் இரண்டாம் பாகமும், மூன்றாவது பாகத்தில் கொஞ்சமும் ஆகியிருக்கிற போது மாத்யான்னிக ஸ்நானம் பண்ணினால் உடனே மாத்யான்னிக ஸந்தி செய்யச் சரியாக இருக்கும். அப்புறம் பித்ரு தர்ப்பணம் முதலியன. பிறகு பூஜை. நெருப்பிலே பண்ணும் ஹோமம், ஜலத்தால் பண்ணும் தர்ப்பணம், பஞ்சேந்திரியங்களால் நுகரப்படும் ஸகல வஸ்துக்களையும் ஈச்வரார்ப்பணம் பண்ணுவதான பூஜை என்ற மூன்றும் செய்யப்பட வேண்டியவை. பூஜையோடு நாலாம் பாகம் முடிந்து, பகல் பன்னிரண்டு மணியாகியிருக்கும்.


    இதுவரை செய்த ஹோமத்தினாலும் பூஜையாலும் தேவ யஜ்ஞமும், முன்னே சொன்னபடி பிரம்ம யஜ்ஞமும், தர்ப்பணத்தால் பித்ருயஜ்ஞமும் பண்ணியாயிற்று. பஞ்ச மஹா யஜ்ஞங்களில் பாக்கி இரண்டு மநுஷ்ய யஜ்ஞம் என்ற விருந்தோம்பலும், பூத யஜ்ஞம் என்பதாகப் பிராணிகளுக்குப் பலியும் பிச்சையும் போடுவதுமாகும்.


    இந்த இரண்டையும் முக்கியமாகக் கொண்டே பகலின் ஐந்தாவது பாகத்தில் வைச்வதேவம் என்ற கர்மா பண்ணப் படவேண்டும். இதிலே ஹோமம் என்ற அக்னியில் அன்னத்தைப் போடுவதோடு, அதே அன்னத்தை பலியாக, அதாவது அக்னியில் போடாமல், பல இடங்களில் வைக்கவேண்டும். பல தேவதைகளை உத்தேசித்து அக்னியில் ஹோமமும், க்ருஹத்தின் பல ஸ்தானங்களில் பலிகளும் போட்ட பிறகு நாய், காகம் முதலிய மிருக பக்ஷிகளுக்காக வீட்டு வாசலுக்கு வெளியே மந்திரோக்தமாக அன்னத்தை பலி போட வேண்டும். பிச்சைக்கு வருகிறவனுக்காக, சண்டாளனுக்காகவும் பதிதனுக்காகவும் கூட, இதே போல பலியை மந்திர பூர்வமாக போடவேண்டும். இதுவே பூதயக்ஞம். இதன்பின் மநுஷ்ய யக்ஞமான ஆதித்யம், அதாவது அதிதி ஸத்காரம் அல்லது விருந்தோம்பல். Aathithyam என்பதே சரி. Aadityam என்றால் ஆதித்யனான ஸூர்யனைச் சேர்ந்தது என்றாகும். அது தப்பு. எல்லாரும் ஆதித்யமும் வைச்வதேவமும் ஒழுங்காகச் செய்தால் வேலையில்லாப் பிரச்சனை, பிச்சைக்காரர் பிரச்சனை, திருட்டு என்ற மூன்றின் பாதிப்புமே வெகுவாகக் குறைந்து விடும்.


    இதற்குப் பிறகுதான் அதாவது பிற்பகல் ஒரு மணிக்கு மேல்தான் பிராம்மணனுக்குச் சாப்பாடு. அதுவரை காபி, டிபன் கூடாது. மோர், க்ஷீரம் வேண்டுமானால் சாப்பிடலாம். இது நித்யப்படி. இதோடு பாக-ஹவிர்-ஸோம யக்ஞங்களோ மற்ற காம்யமான யஜ்ஞங்களோ சேர்கிற நாட்களில் இன்னும் அதிக நாழியாகும். அச்சமயங்களில் மற்ற கர்மாக்களில் சில அட்ஜஸ்ட்மென்ட்கள் உண்டு. சிராத்த தினங்களானாலும் அதிக நாழியாகும். சிராத்தம் ஆரம்பிப்பதே அபரான்ன காலத்தில்தான். அது என்னவென்று சொல்கிறேன்.


    பின்மாலையிலிருந்து முன்மாலை முடியப் பதினாறு மணியை, எட்டுப் பங்காகப் பிரித்தது போலவே, ஸூர்யோதயத்திலிருந்து ஸூர்யாஸ்தமனம் வரையுள்ள பன்னிரண்டு மணியை ஒவ்வொன்றும் ஆறு நாழிகை கொண்ட ஐந்து பாகங்களாகவும் பிரித்திருக்கிறது. இதன்படி ஆறு மணிக்கு ஸூர்யோதயம் என்றால் 8.24 வரை பிராதஃகாலம். 8.24லிருந்து 10.48 வரை ஸங்கவ காலம். 10.48லிருந்து பகல் 1.12 வரை மாத்யான்னிக காலம் (மத்தியான்னம் என்பது) 1.12லிருந்து 3.36வரை அபரான்ன காலம். 3.36லிருந்து 6 மணி வரை (அதாவது அஸ்தமனம் வரை) ஸாயங்காலம். (அஸ்தமனத்தை ஒட்டினது ப்ரதோஷகாலம். 'தோஷம்' என்றால் இரவு. 'ப்ர' என்றால் முன்னால். இங்கிலீஷ் pre -யும் இதேதான். இரவின் முந்தய காலம் பிரதோஷம்.)


    சிராத்தம் அபரான்னத்தில் செய்யவேண்டும் என்றேன். சிராத்தம் முதலான பித்ரு காரியங்களுக்குப் பிறகுதான் பூஜை முதலான தேவ காரியம் செய்யவேண்டும்.


    போஜனத்துக்கப் பின் புராணம் படிக்க வேண்டும்.


    அதன்பின் பிற ஜாதியாருக்கு அவரவர் வித்யைகளைக் கற்பிக்க வேண்டும். கொஞ்சங்கூட சிரம பரிகாரத்துக்கு பொழுதில்லாமல் மறுபடி ஸாயங்கால ஸ்நானம், ஸந்தியாவந்தனம், ஒளபாஸன அக்னி ஹோத்ரம், மற்ற ஜபங்கள், இரவில் வைக்கிற வைச்வதேவம், ஸத்கதா சிரவணம் இவற்றைச் செய்துவிட்டு அப்புறம் போஜனம் செய்து சயனிக்கப் போகவேண்டும். அநேக நாட்களில் இரவில் பலகாரம்தான். ஏகாதசியில் முழுநாளும் பட்டினி.


    ஒரு க்ஷணம் விடாமல் கர்மாதான்; tight-work -தான். சாஸ்திரங்களை பிராம்மணர்கள் எழுதி வைத்துக் கொண்டார்கள், ரக்ஷித்தார்கள் என்பதால் ஹாய்யாக வேலையில்லாமல் இருக்க வேண்டும் என்று பண்ணிக் கொண்டுவிடவில்லை. இடுப்பை உடைக்கிற மாதிரி வேலையும், மனஸைத் துளி இப்படி அப்படிப் போகாமல் கட்டிப் போடுகிற நியமங்களையுமே வைத்துக் கொண்டார்கள்.


    இப்போது பத்துமணி ஆபீஸுக்குப் போகிறவர்களும் பிராம்ம முஹூர்த்தத்தில் எழுந்து, ஒளபாஸன, அக்னி ஹோத்ர, பிரம்ம யக்ஞம் வரையில் பழைய கிரமப்படியே முடித்து, ஸங்கவ காலத்திலேயே (8.24 லிருந்து 10.48) பூஜை மாத்யான்னிகங்களைப் பண்ணி விடலாம். "மாத்யான்னிகம்" என்றே பெயர் இருந்தும் கால நிலைமையை உத்தேசித்து அதை ஸங்கவ காலத்தில் பண்ணலாம் என்கிறேன். சாயங்காலம் ஆபிஸிலிருந்து வந்து சாஸ்திரப்படியே எல்லாம் செய்யலாம். மனமிருந்தால் வழியுண்டு. லீவு நாட்களில் எல்லாவற்றையும் பண்ணலாம்.


    காலமே எழுந்தவுடன் ஷிஃப்ட் என்று ஓடுகிறவர்களும் முடிந்தவரையில் செய்ய வேண்டும். மாலையில் சேர்த்து வைத்து காயத்ரீ பண்ண வேண்டும். ஒரு வாரம் காலை ஷிப்ஃட் என்றால் என்றால் அப்புறம் ஒரு வாரம் பிற்பகல் ஷிஃப்ட், இரவு ஷிப்ஃட் என்று வருகிறதோ இல்லையோ? இவற்றில் முடிந்த அநுஷ்டானங்களையெல்லாம் செய்யவேண்டும்.


    செய்யவில்லையே என்ற தாபம் இருக்கவேண்டும்; செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும். அதற்கே ஒரு வால்யூ உண்டு. கருணாமூர்த்தியான பகவான் இதைக் கவனிக்காமல் போகமாட்டான்.


    "ரிடையர் ஆகிவிடப் போகிறோமே!" என்று அழாமல், "எப்போது ரிடையராகி அநுஷ்டானங்கள் எல்லாவற்றையும் பண்ணுவோம்?" என்று எண்ண வேண்டும். ரிடையரான பிறகே அத்யயனத்திலிருந்து ஆரம்பித்து அநுஷ்டானங்களைப் பண்ணினவர்களும் லக்ஷத்தில் ஒருவர் இல்லாமலில்லை.
Working...
X