Announcement

Collapse
No announcement yet.

மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்!

    மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்!



    பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள்.

    முருகப் பெருமான்- தெய்வானை திருமணம் நடந்த நாள். வள்ளி அவதரித்த தினம். பார்வதி தேவியை பரமேஸ்வரன் கரம்பிடித்த நாள் இது. மேலும் மதுரையில் மீனாட்சிதேவி- சுந்தரேசர் திருக்கல்யாண வைபவம் பங்குனி உத்திரத்தன்று நடைபெறும். தேவேந்திரன்- இந்திராணி திருமணம் நடைபெற்ற நாள். ராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம்.ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் - ரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்த திருநாளும் பங்குனி உத்திரமே.

    பங்குனி உத்திர விரத மகிமையால், அழகு மிக்க 27 கன்னியரை சந்திரன் மனைவியாகக் கொண்டதாகச் சொல்வர். இந்த நாளில் விரதம் மேற்கொண்ட மகா லட்சுமி, விஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பேறு பெற்றாள்.

    தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனை மீண்டும் சிவனார் உயிர்ப்பித்தது பங்குனி உத்திரம் திருநாளில்தான்.

    சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்தது இந்த நாளில்தான். பிரம்மன் தன் நாவில் சரஸ்வதியை வைத்த தினம், பங்குனி உத்திரம் என்பர். சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில். அர்ஜுனன் அவதரித்தது இந்த நாளில்தான். காரைக்கால் அம்மையார் பங்குனி மாதத்தில்தான் முக்தி பெற்றார்.

    வடநாட்டில், ஹோலிப் பண்டிகை கொண்டாடுவது, வசந்தகாலம் துவங்குவது என்று பங்குனி உத்திரத்துக்கு பல பெருமைகள் உண்டு.

    காஞ்சியில், பௌர்ணமி திதி கூடிய பங்குனி உத்திரத்தன்று, காமாட்சி- ஏகாம்பரேஸ்வரர் திருமணம் நடக்கும். அப்போது அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வர். இந்த நாளில் காஞ்சி வரதராஜர் கோயில்- பெருந்தேவி தாயார் சந்நிதியில், தேவி-பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவி தாயார் சகிதம் காட்சி தருகிறார் வரதராஜ பெருமாள்.

    மேல்கோட்டை என்ற திரு நாராயணபுரத்தில்- பங்குனி மாதத்தில் வைரமுடி சேவை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தலம் ‘தென்னக பத்ரிகாஸ்ரமம்’ எனப்படும். வடபத்ரிகாஸ்ரமம் செல்ல இயலாதவர்கள் இங்கு வந்து, நாராயண பெருமாளை தரிசித்தால், பத்ரி போய் வந்த புண்ணியம் உண்டு என்பது ஐதீகம்.

    திருவையாறு அருகே உள்ள நவக்கிரக (சந்திரன்) சேத்திரம், திங்களூர். இங்குள்ள சிவாலயத்தில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர நன்னாளில், காலையில் 6 மணிக்கு சூரியக் கதிர்களும், மறு நாள் மாலை 6.00 மணிக்கு சந்திரனின் ஒளியும் சிவலிங்கத்தின் மீது விழுகின்றன. அப்போது, இங்கு சூரிய- சந்திர பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த பூஜையை தரிசித்தால் எல்லா வளமும் பெறலாம் என்பது பக்தர்களது நம்பிக்கை.

    திருவையாறு அருகிலுள்ள புண்ணிய திருத்தலம் திருமழபாடியில், பங்குனி மாதத்தில் நடைபெறும் நந்திதேவரின் திருமண வைபவம் வெகு பிரசித்தி. திருமண தோஷம் உள்ளவர்கள், திருமழப்பாடி சென்று இந்த வைபவத்தை தரிசித்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

    ‘நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் நடக்கும்’ என்று பழமொழியே உண்டு.

    பங்குனி உத்திர நாள் அன்று பிறந்ததால், அர்ஜுனன் ‘பல்குநன்’ என்ற பெயர் பெற்றான்.

    சில பகுதிகளில் பங்குனி உத்திரம், ஐயனாரின் அவதார தினமாகக் கருதப்படுகிறது. சிவகங்கை மாவட்டம்- புதுக்குடி கிராமம், காடய்யனார் கோயி லில், ஐயனார் சிலை குப்புறக் கவிழ்ந்த கோலத்தில் உள்ளது. அந்த நிலையிலேயே பக்தர்கள் அபிஷேகம், ஆராதனை செய்து ஐயனாரை வழிபடுகின்றனர்.

    நெல்லை மாவட்டம், கருங்குளத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில், பங்குனி உத்திர விழாவன்று ஆண்கள் தங்கள் வாயில் துணியைக் கட்டிக் கொண்டு, 63 கிலோ பச்சரிசியை உரலில் இடித்து, அந்த மாவால் ஒரே கொழுக்கட்டை தயாரித்து, ஐயப்பனுக்குப் படைக்கிறார்கள்.

    புதுக்கோட்டை மாவட்டம்- வடக்கு புதுக்குடி கிராமத்தில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பங்குனி உத்திரத்தன்று மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட படகில் தெப்பம் உருவாக்குகின்றனர். அதில் வள்ளி- தெய் வானை சமேதராக ஸ்ரீசிவசுப்பிரமணியர், சுமார் ஐந்து கி.மீ. தூரம் வரை கடலில் பவனி வருகிறார். மற்றொரு படகில், மங்கள இசை முழங்க இசைக் கலைஞர்களுடன் பக்தர்களும் செல்கிறார்கள்.

    ஸ்ரீ ரங்கம் கோவிலில் பங்குனி உத்திரத்தன்றுக்கு 'சேர்த்தி உத்ஸவம்' நடைபெறும்....பெருமாளும் தாயாரும் சேர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.

    தி ருவாரூர் - திருத்துறைப்பூண்டி பாதையில் திருவாரூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் வரும் கிராமம் பொன்னிறை. இங்குள்ள அகஸ்தீஸ்வரர் கோயிலில், அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத் துக்கு பங்குனி உத்திரத்தன்று, நெல்லிக் கனிப் பொடி மற்றும் அரிசி மாவால் அபி ஷேகம் செய்கிறார்கள். இதனால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.

    நாகை மாவட்டம் திருப்புகலூரில் உள்ள அருள்மிகு அக்னீஸ்வர சுவாமி திருக்கோயிலின் மூலவர் சுயம்பு மூர்த்தி. இறைவி: அருள்மிகு கறுத்தார் குழலி. ஒரு முறை சுந்தரமூர்த்தி நாயனார், பங்குனி உத்திரத் திருவிழாவுக்கு நிதி வேண்டி திருப்புகலூர் வந்தார். இரவில் அவர், ஆலய வளாகத்தில் செங்கற்கள் சில வற்றை தலைக்கு வைத்துத் தூங்கினார். மறு நாள் காலை அவர் எழுந்து பார்த்தபோது அந்த கற்கள் பொன்னாக மாறியிருந்தது. அதனால் இன்றும் புது வீடு கட்டுவோர், செங்கல்லை இங்கு கொண்டு வந்து பூஜித்து, மனை முகூர்த்தம் செய்கின்றனர். இதனால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம்.

    இணையத்தில் படித்தவைகளின் தொகுப்பு
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X