Announcement

Collapse
No announcement yet.

Arjuna & Hanuman

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Arjuna & Hanuman

    அர்ஜூனனுக்கு ஒரு முறை ஒரு சந்தேகம் வந்தது. "இராமர் உண்மையிலேயே சிறந்த வில்லாளி எனில், ஏன் அவர் தன் வில்லைக்கொண்டே சேதுவுக்கு பாலம் கட்டவில்லை. வானரங்களை வைத்து ஏன் பாலம் கட்டினார்?" எப்படியாவது இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவேண்டும் என்று விரும்பினான்.


    பாசுபதாஸ்திரம் வேண்டி அவன் சென்று கொண்டிருந்தபோது, ஒரு நதிதீரத்தில் அனுமன் தனது சுய உருவை மறைத்து ஒரு சாதாரண வானரம் போல உருக்கொண்டு அமர்ந்து இராமநாமம் ஜபம் செய்துகொண்டிருப்பதை பார்க்கிறான்.


    அவரிடம் சென்று, "ஏய்… வானரமே… உன் இராமனுக்கு உண்மையில் திறன் இருந்திருந்தால் வில்லினாலேயே பாலம் கட்டியிருக்கலாமே… ஏன் வானரங்களை கொண்டு பாலம் கட்டினார்?" என்றான் எகத்தாளமாக.


    தியானம் களைந்த அனுமன், எதிர் நிற்பது அர்ஜூனன் என்பதை உணர்ந்துகொள்கிறார். அவன் கர்வத்தை ஒடுக்க திருவுள்ளம் கொள்கிறார்.


    "சரப்பாலம், என் ஒருவன் பாரத்தையே தாங்காது எனும்போது எப்படி ஒட்டுமொத்த வானரங்களின் பாரத்தையும் தாங்கும்?"


    "ஏன் முடியாது… நீ நின்றால் தாங்கும்படி இந்த நதியின் குறுக்கே நான் ஒரு பாலம் கட்டுகிறேன். நீயல்ல… எத்தனை வானரங்கள் அதில் ஏறினாலும் அந்த பாலம் உறுதியாக நிற்கும்" என்கிறான் அர்ஜூனன்.


    தனது காண்டீபதின் சக்தி மேல் அபார நம்பிக்கை கொண்டிருந்த அர்ஜூனன், "பந்தயத்தில் நான் தோற்றால், வேள்வித் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் துறப்பேன்" என்கிறான்.


    "நான் தோற்றால், என் ஆயுளுக்கும் உனக்கு அடிமையாக உன் தேர்க்கொடியில் இடம்பெறுவேன்" என்கிறான் அனுமன்.


    அர்ஜூனன் சரப் பாலத்தை கட்டத் துவங்கினான். அனுமன் ஒரு ஓரத்தில் அமர்ந்து இராமநாமம் ஜெபம் செய்யத் தொடங்கினான்.


    அர்ஜூனன் பாலத்தை கட்டி முடித்ததும், அனுமன் அதன் மீது ஏற தனது காலை எடுத்து வைத்தது தான் தாமதம், பாலம் தகர்ந்து சுக்குநூறானது. அனுமன், ஆனந்தக் கூத்தாட அர்ஜூனன் வெட்கித் தலைகுனிந்தான்.


    "பார்த்தாயா என் இராமனின் சக்தியை?" என்கிறான் அனுமன் கடகடவென சிரித்தபடி.


    தனது வில் திறமை இப்படிபோயாகிப் போனதே என்ற வருத்தம் அவனுக்கு. "போரில் வெற்றி பெற பாசுபாதாஸ்திரத்தை தேடி வந்த நான், தேவையின்றி ஆணவத்தால் ஒரு வானரத்திடம் தோற்றுவிட்டேனே… நான் உயிர் துறந்தால் என் சகோதரர்களை யார் காப்பாற்றுவார்கள்… கிருஷ்ணா என்னை மன்னிக்கவேண்டும்" என்று கூறியவாறு சொன்னது போலவே வேள்வித் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் துறக்க எத்தனித்தான். அனுமன் தடுத்தபோதும், தனது பந்தயத்திலிருந்து பின்வாங்க அவன் தயாராக இல்லை.


    அர்ஜூனன் குதிக்க எத்தனித்தபோது, "என்ன நடக்கிறது இங்கே… என்ன பிரச்சனை?" என்று ஒரு குரல் கேட்டது.


    குரல் கேட்ட திசையில், ஒரு அந்தணர் தென்பட்டார்.


    இருவரும் அவரை வணங்கி, நடந்ததை கூறினார்.


    "பந்தயம் என்றால் சாட்சி என்ற ஒன்று வேண்டும். சாட்சியின்றி நீங்கள் பந்தயத்தில் ஈடுபட்டதால் அது செல்லாது. மற்றொருமுறை நீ பாலம் கட்டு… மற்றொருமுறை இந்த வானரம் அதை உடைத்து நொறுக்கட்டும்… பிறகு முடிவு செய்துகொள்ளலாம் யார் பலசாலி என்று" அந்தணர் கூற இருவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.


    இரண்டாவது முறை கட்டுவதால் மட்டும் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப்போகிறது என்று கருதிய அர்ஜூனணன் கிருஷ்ணனரை நினைத்துக்கொண்டு "கிருஷ்ண, கிருஷ்ண" என்று சொல்லியபடி பாலம் கட்டினான்.


    தன் பலம் தனக்கே தெரியாது அனுமனுக்கு. இருப்பினும் முதல்முறை பாலத்தை உடைத்திருந்தபடியால், கர்வம் தலைக்கு ஏறியிருந்தது. இம்முறை இராம நாம ஜெபம் செய்யவில்லை.


    அர்ஜூனன் பாலம் கட்டியவுடன் அதில் ஏறுகிறார்… நிற்கிறார்… ஓடுகிறார்… ஆடுகிறார்… பாலம் ஒன்றும் ஆகவில்லை.


    "பார்த்தாயா எங்கள் கண்ணனின் சக்தியை ? நீயே சொல் யார் இப்போது பெரியவர்? எங்கள் கண்ணன் தானே?"


    அர்ஜூனனின் கேள்வியால் அனுமனுக்கு குழப்பம் ஏற்படுகிறது.


    அங்கே சாட்சியாக நின்றுகொண்டிருந்த அந்தணரை நோக்கி வந்து "யார் நீங்கள்?" என்று கேட்கிறார்.


    அந்தணரின் உருவம் மறைந்து அங்கு சங்கு சக்ரதாரியாக பரந்தாமன் காட்சியளிக்கிறார். இருவரும் அவர் கால்களில் வீழ்ந்து ஆசி பெற்றனர்.


    "நீங்கள் இருவருமே தோற்கவில்லை. ஜெயித்தது கடவுள் பக்தியும் நாம ஸ்மரணையும் தான். அர்ஜூனன் முதல் தடவை பாலம் கட்டும்போது, தன்னால் தான் எல்லாம் நடக்கிறது என்கிற அகந்தையில் என்னை மறந்து பாலம் கட்டினான். அனுமன் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று இராம நாமத்தை ஜபித்தான். இராம நாமம் தோற்காது. எனவே முதல் முறை அனுமன் வென்றான். இரண்டாம் முறை, அகந்தை ஒழிந்த அர்ஜூனன் என்னை நினைத்தபடி பாலம் கட்டினான். அனுமன், தன் பலத்தாலே தான் வென்றோம் என்று கருதி இராமநாமத்தை மறந்தான். எனவே இரண்டாம் முறை அர்ஜூனன் வென்றான். எனவே இருமுறையும் வென்றது நாம ஸ்மரணையே தவிர நீங்கள் அல்ல!!" என்றார்.


    கர்வம் தோன்றும்போது கடமையும் பொறுப்புக்களும் மறந்துவிடுகின்றன. எனவே தான் சும்மா இருந்த அனுமனை சீண்டி பந்தயத்தில் இறங்கினான் அர்ஜூனன்.


    "உங்கள் இருவருடைய பக்தியும் அளவுகடந்தது, சந்தேகமேயில்லை.
    ஆனால் இறைவன் ஒருவனே என்பதை உணர மறந்துவிட்டீர்கள். அதை உணர்த்தவே இந்த சிறிய நாடகம். மேலும் அர்ஜூனா, இந்த வானரன் வேறு யாருமல்ல, சிரஞ்சீவி அனுமனே!"


    உடனே அனுமன் தனது சுய உருவைக் காட்டுகிறார். அர்ஜூனன், அவரின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்கிறான்.


    அனுமனை நோக்கி திரும்பிய கிருஷ்ணர், "ஆஞ்சநேயா, பாரதப்போரில் அர்ஜூனனுக்கு உன் உதவி தேவை. நீ போர் முடியும்வரை அவன் தேர் கொடியில் இருந்து காக்கவேண்டும். அதன் பொருட்டே இந்த திருவிளையாடலை நிகழ்த்தினேன். நீ இருக்கும்வரை அந்த இடத்தில எந்த மந்திர தந்திரங்களும் வேலை செய்யாது!"


    "அப்படியே ஆகட்டும் பிரபோ!" என்று அவரிடம் மறுபடியும் ஆசிபெற்றான் அனுமன்.


    இன்றும் பாரதப் போர் சம்பந்தப்பட்ட படங்களில் அர்ஜூனனின் தேரில் அனுமனின் உருவம் இருப்பதை பார்க்கலாம். அர்ஜூனன் தேரின் கொடியில் அனுமன் இடம் பெற்ற கதை இது தான்.
Working...
X