Announcement

Collapse
No announcement yet.

Brahmacaryam- Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Brahmacaryam- Periyavaa

    Courtesy: http://www.kamakoti.org/tamil/2dk19.htm
    தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
    பிரம்மச்சரியம்
    சௌளத்துக்குப் பின் வருவது உபநயனம்.
    குழந்தையாயிருந்தவனுக்கு அறிவு வந்து, தானே மந்திரங்களைச் சொல்கிற சமயத்தில் உபநயனம் நடக்கிறது. "பிக்ஷாசர்யம் சர" (பிக்ஷை எடு) என்று இந்தச் சடங்கில் சொன்னால் பூணூல்காரப் பையன் "பாடம்" ( baad `ham) (அப்படியே செய்கிறேன்) என்கிறான். அதனால் இவனுக்கு உபநயனத்துக்கு முன்பே "பிக்ஷாசர்யம் சர" என்று சொன்னால் அதைப் புரிந்துகொள்வதற்கான ஸம்ஸ்கிருத ஞானம் இருக்க வேண்டும். ஐந்து வயதில் படிக்க ஆரம்பித்தால் இரண்டு அல்லது மூன்று வருஷத்தில் இப்படிப்பட்ட பாஷா ஞானம் வந்துவிடும். ஆதலால் எட்டு வயதில் பூணூல் போடவேண்டும் என்றாகிறது.
    எட்டு வயசுக் குழந்தைகள் அர்த்தம் தெரிந்து பூணூல் போட்டுக் கொண்டு ஜபம் பண்ணிவிட்டால் லோகமெல்லாம் நன்றாக ஆகிவிடும். இப்போதோ இளம் மனசுகளில் நாஸ்திகத்தைத் தான் ஏற்றியிருக்கிறோம்!
    பிரம்மச்சரிய ஆசிரமம்.
    உப-சமீபத்தில், நயனம் - அழைத்துக் கொண்டு போகிறது. யாருக்கு ஸமீபத்தில் அழைத்துக் கொண்டு போகிறது? ஒருவனை குருவுக்கு ஸமீபத்தில் அழைத்துக் கொண்டு போகிறதுதான் உபநயனம். குரு யார்? வேதவித்துக்கள். முதல் ஆசிரமமான பிரம்மச்சரியத்துக்கு ஒரு குரு; கடைசி ஆசிரமமான ஸந்நியாசத்துக்கு ஒரு குரு. வேத வேதாங்கம் அறிந்தவர்கள் முதல் ஆசிரமத்துக்கு குரு. வேதம் உள்பட எல்லாவற்றையும் விட்டு பிரம்ம ஞானம் அடைந்தவர்கள் கடைசி ஆசிரமத்துக்கு குரு. வித்தையைத் தெரிந்து கொள்வது முதல் ஆசிரமம். ஞானத்தைத் தெரிந்து கொள்வது கடைசி ஆசிரமம்*.
    உபநயனம் பிரம்மச்சரியத்துக்கு ஆரம்பம். அதன் முடிவு 'ஸமாவர்த்தனம்', உபநயனம் முதல் ஸமாவர்த்தனம் வரையில் இருப்பது ப்ரஹ்மச்சரியம். ஸமாவர்த்தனம் என்றால் திரும்பி வருகிறது என்று அர்த்தம். ஒரு இடத்துக்குப் போனால்தான் போன இடத்திலிருந்து திரும்பி வருவது என்பது முடியும். அகத்திலிருந்து குருகுலத்துக்குப் போய் வேத அத்யயனத்தைப் பூர்த்தி பண்ணிவிட்டு அகத்திற்குத் திரும்பி வருவதுதான் ஸமாவர்த்தனம்.
    உபநயனம் பூர்வாங்கம். அங்கம் என்றால் பிரதானம் ஒன்று வேண்டும். பிரதானத்திற்கு அங்கி என்று ஒரு பெயருண்டு. உபநயனம் என்ற அங்கத்துக்கு அங்கியாக இருப்பது ப்ரஹ்மச்சர்யம். ப்ரஹ்மச்சர்யம் என்ற இடத்தில் ப்ரஹ்ம என்பதற்கு வேதம் என்பது அர்த்தம். வேதத்தை மனப்பாடமாகக் கற்று ஸ்வாதீனப்படுத்தவே ஒரு ஆசிரமம் ஏற்பட்டிருக்கிறது. அதுதான் ப்ரஹ்மச்சர்யம். அதற்கு பூர்வாங்கம் உபநயனம். அந்த ஆசிரமத்துக்கு கடைசி பக்ஷமாக ஏற்பட்ட காலம் பன்னிரண்டு வருஷங்கள். ஒரு வேதத்தை ஸாங்கோபாங்கமாக அத்தியயனம் பண்ணுவதற்குப் பன்னிரண்டு வருஷங்கள் வேண்டும்.
    பிரம்ம என்பதற்கு ஆறு அர்த்தங்கள் உண்டென்று சொன்னேன். பிரம்ம என்பது விஷ்ணுவுக்கு ஒரு பெயர். பரமசிவனுக்கும் ஒரு பெயர். பிராம்மண ஜாதி, தபஸ், பரமாத்ம ஸ்வரூபம் என்பவைகளுக்கும் அந்தப் பெயருண்டு. பிரம்மா என்று நீட்டினால் சதுர்முகனுக்குப் பெயராகிறது.
    ப்ரம்மச்சரியம் என்பது வேதாத்தியயனம் பண்ணுவதற்காக ஏற்பட்ட ஒரு தீக்ஷை. அதற்குப் பூர்வாங்கமாக ஏற்பட்ட ஒரு காரியம் உபநயனம். பரிஷேசனம் என்று ஜலத்தால் சாதத்தைத் தெளிப்பது எதற்கு? அது போஜனத்திற்கு அங்கம். சாதத்தை அப்படியே சாப்பிட்டு விடக்கூடாது. ஈச்வரப் பிரஸாதமாக்கிச் சாப்பிட வேண்டும் என்றே முதலில் அதன் மேல் ஜலம் தெளிக்கிறோம். இப்படிச் செய்துவிட்டு சாப்பிடாமல் இருந்தால் எத்தனை அசட்டுத்தனம்? உபநயனம் பண்ணிவிட்டு வேதாத்தியயனம் பண்ணாமலிருப்பது பரிசேஷனம் பண்ணிவிட்டு சாப்பிடாமலிருப்பதைப் போன்றது. இப்போது அத்தனை பேரும் இப்படி அசடுகளாக இருந்து வருகிறோம்.
    உபநயனம் என்ற பூர்வாங்கத்திற்கும் ஸமாவர்த்தனம் என்கிற உத்தராங்கத்திற்கும் நடுவில் நான்கு வ்ரதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நம்முடைய தக்ஷிண தேசத்தில் பெரும்பாலும் அநுஷ்டானத்திலுள்ள க்ருஷ்ண யஜுர் வேதத்தை எடுத்துக் கொண்டால், அவை பிராஜபத்யம், ஸெளம்யம், ஆக்னேயம், வைச்வதேவம் என்பவை.
    எந்த மந்திர ஸித்திக்கும் நியமம் அவசியம் வேண்டும். ஆத்மா கடைத்தேறுவதற்கு மந்திரமயமான வேதம் இருக்கிறது. அதைப் பாடம் பண்ணுவதற்கு ஒரு நியமம் வேண்டும். வேத ஸமூஹம் முழுவதற்கும் ஏற்பட்ட இந்த நியமமே பிரம்மச்சரியமாகும். இது தவிர, வேத பாகம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நியமங்கள் இருக்கின்றன. அவ்வளவுக்கும் சேர்த்து மொத்த விரதம் பிரம்மச்சரியம். தனித்தனி பிரிவுக்குத் தனித்தனி விரதங்கள் இருக்கின்றன. வேதத்தை நான்கு காண்டமாக பிரித்திருக்கிறார்கள். அவைகளை நாலு மஹரிஷிகள் பிரவர்த்திப்பித்திருக்கிறார்கள். அந்த மஹரிஷிகளை உத்தேசித்து பிரம்ம யக்ஞம் பண்ணப்படுகிறது. (பிரம்ம யக்ஞம் என்பதற்கு வேத யக்ஞம் என்பதுதான் அர்த்தம்) . ஒவ்வொரு காண்டத்திற்கும் தனித்தனியாக ஒரு விரதம் உண்டு. பிரம்மச்சரிய ஆசிரமத்தின்போது ஒவ்வொரு காண்டத்தை அத்தியயனம் பண்ணுகிறபோது அதற்கு ஏற்பட்ட விரதத்தையும பண்ணவேண்டும். பிரஜாபத்ய காண்டத்திற்கு ஒரு விரதம் ஏற்பட்டிருக்கிறது. அது பிரஜாபத்யம். அப்புறம் ஸெளம்ய விரதம், பின்பு ஆக்நேய விரதம், அப்புறம் வைச்வதேவ விரதம் செய்ய வேண்டும். நான்கு காண்டங்களும் முடிந்தபின்பு குருவினுடைய அனுஜ்ஞை [அனுமதி] யின் மேல் ஸமாவர்த்தனம் பண்ணிக் கொள்ள வேண்டும். [வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் ஸம்ஸ்காரத்தை பண்ணிக் கொள்ள வேண்டும்.]
    முன்பு சொன்ன நான்கு காண்ட விரதங்களும் கிருஷ்ண யஜுர் வேதத்துக்கு ஏற்பட்டவை. ரிக்வேதத்துக்கு மஹா நாம்னி விரதம், உபநிஷத் விரதம், கோதான விரதம் ஆகிய நான்கு விரதங்கள் உண்டு. இப்படி ஒவ்வொரு வேதத்துக்கும் தனித்தனி விரதங்கள் இருக்கின்றன. கிருஷ்ண யஜுர் வேதமே அதிகம் பிரசாரத்திருப்பதால் அதை முதலில் சொன்னேன்.
    குருகுல வாஸத்தை முடிக்கும்போது செய்யும் ஸமாவர்த்தனத்திற்கு ஸ்நானம் என்றும் ஒரு பெயர் உண்டு. அதைச் செய்து கொண்டவனுக்கு ஸ்நாதகன் என்று பெயர்.
    எல்லாரும் தம் தம் வேதத்தையும் வித்தைகளையும் அத்தியயனம் பண்ண வேண்டும். ஆவணி அவிட்டம் வருகிறது. அன்று உபாகர்மா பண்ணுகிறோம். அன்று வேதத்தில் புது பாகம் ஆரம்பித்துக் கொள்ள வேண்டும். தை மாஸம் பூர்ணிமையில் உத்ஸர்ஜனம் [முடித்தல்] பண்ண வேண்டும். ஆவணி மாதத்தில் ஆரம்பித்துத் தை மாதத்தில் விட்டுவிட வேண்டும். அதாவது ஏறக்குறைய தக்ஷிணாயன ஆறு மாதத்தில் வேதாத்தியயனம் பண்ணவேண்டும். மற்ற ஆறு மாதங்களில் வேதத்தின் ஆறு அங்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
    வேதாத்யயனம் செய்யும்பொழுது அந்த அந்தக் காண்டத்துக்கு ஏற்பட்ட தனி நியமத்தோடும் பிரம்மச்சரியத்துக்கு ஏற்பட்ட தனி நியமாத்தோடும் பண்ணினால் தான் மந்திர ஸித்தி உண்டாகும். நாம் ஒன்றும் பண்ணுவதில்லை. "உபயோகம் இல்லை" என்று மட்டும் சொல்லுகிறோம். கல்யாணத்துக்கு முன்பு 'வ்ரதம்' என்று ஒரு பெயர் வைத்து ஒரு மணி நேரத்துக்குள் எல்லா ஸம்ஸ்காரங்களையும் சுருக்கி அர்த்தமே தெரியாமல் கிடுகிடு என்று பண்ணுகிறோம். அதுவாவது இருப்பதனால் இந்த உபந்நியாஸம் பண்ண நேரிட்டது.
    வேதத்தை ஸ்வீகரிப்பதற்கு ஒருத்தனை அர்ஹனாக்கி [அருகதை உள்ளவனாக்கி] அதன் மூலம் லோகம் முழுவதற்கும் நல்ல திவ்ய சக்திகளைப் பரப்புகிற பரம ச்ரேஷ்டமான கர்மாவான உபநயனத்தின் பெருமையை அறிந்து அதை உரிய காலத்தில் பண்ண வேண்டும்.
    த்வி-ஜன்-இருபிறப்பாளன்-எனப்படும் பிராம்மண, க்ஷத்ரிய, வைச்யர்கள் லோகோபகாரமான இரண்டாவது பிறப்பை அடைவது அவர்கள் எப்போது வேதத்தைக் கற்கத் தகுதி பெறுகிறார்களோ அப்போதுதான். இந்தத் தகுதியை அவர்கள் பெறுவது உபநயன ஸம்ஸ்காரத்தில்தான். இதைக் காலத்தில் செய்ய வேண்டியது பெற்றோர் கடமை.
    இப்போது இம்மாதிரி விஷயங்களில் சாஸ்திரங்கள் ரொம்பவும் அநாதரவு செய்யப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் சாஸ்திரத்தைப் பார்த்துச் செய்து வந்த நம் தேசத்தில் இப்போது நிலைமை அடியோடு மாறிவிட்டது.
    ________________________________________
    * உபநயன சம்ஸ்காரத்தால் வேதமோத அதிகாரம் பெற்று "பிரம்மசாரி"யாகிறவன் ஆசிரியரிடம் ஒழுகவேண்டிய முறைகளை "குருகுல வாசம்" என்ற உரையில் காண்க.
Working...
X