Announcement

Collapse
No announcement yet.

40 samsmkaras by parents - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 40 samsmkaras by parents - Periyavaa

    courtesy: http://www.kamakoti.org/tamil/2dk17.htm


    தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
    நாற்பது ஸம்ஸ்காரங்கள்
    பெற்றோர் செய்யும் ஸம்ஸ்காரங்கள்
    கர்ப்பாதானம் முதற்கொண்டு ஸம்ஸ்காரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. தாயார் வயிற்றில் தேஹம் ஏற்படுகிற க்ஷணம் முதல் ஸம்ஸ்காரங்கள் ஆரம்பமாகின்றன. சரீர பிண்டமானது மந்திர பூர்வமாக உற்பத்தியாகவேண்டும். கர்ப்பாதானம், பும்ஸவனம், ஸீமந்தம் என்பவை தாயார் தேஹத்துக்கு ஏற்பட்ட ஸம்ஸ்காரமென்று நினைக்கிறார்கள். அது தப்பு. அவை உள்ளே உண்டாகிற ஜீவனைக் குறித்தவை. அந்த ஜீவனுடைய பரிசுத்திக்காக ஏற்பட்டவை. கர்ப்பத்திலுள்ள வேறொரு ஜீவனை உத்தேசித்துப் பண்ணப் படுபவைகளாதலினால் அந்த ஸம்ஸ்காரங்களின் விஷயத்தில் பெரியவர்களுக்குப் பொறுப்பு அதிகம். தங்களுக்காக என்றால் வேண்டாம் என்று எண்ணலாம். வேறொரு ஜீவனுக்காக இருப்பதால் இவர்கள் அதை அநாதரவு பண்ணித் தடுப்பது பெரிய பாபமாகிறது. இக்காலத்தில் சாந்தி கல்யாணம் (கர்ப்பாதானம்), ஸீமந்தம் முதலியவை ஃபாஷனாக இல்லை என்று அநேகர் விட்டு வருவது பெரிய பாபமாகும். ஸ்திரீ-புருஷ உறவிலே நிஜமாக வெட்கப்பட வேண்டிய விஷயங்களில் லஜ்ஜை இல்லாமல் வெள்ளைக்கார ஃபாஷனில் விவஸ்தை கெட்டு நடந்துகொண்டே, இதைப் பரிசுத்தி பண்ணி நல்லதாக ஒரு புது ஜீவனை உண்டாக்குவதற்காக ஏற்பட்ட வைதிக கர்மாக்களை லஜ்ஜைக்குரியவை என்று விட்டுவிடுவது கிரமமே இல்லை.


    தேஹம் வெளியில் வருவதற்கு முன்பு பண்ணப்படுபவை கர்ப்பாதானம், பும்ஸவனம், ஸீமந்தம் என்னும் மூன்று ஸம்ஸ்காரங்களும். மந்திர பூர்வமாகத்தான் ஸ்திரீ-புருஷ ஸங்கம் ஏற்பட வேண்டும். மிருகப் பிராயமான வேகமாக இல்லாமல் இதையும் ஒரு ஸம்ஸ்காரமாக மந்திரத்தின் மூலம் உயர்த்தி கருவாக உண்டாகக் கூடிய ஜீவனுக்கும் அதனால் க்ஷேமத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த உயர்ந்த தத்துவத்தை விட்டு விட்டு, இதனால் நாம் ஏதோ ஒரு அநாகரிகமான சடங்கை விட்டுவிட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்வது பைத்தியக்காரத்தனம்தான். லஜ்ஜை இருந்தால், சாந்தி கல்யாணத்துக்கு ஊர் கூட்ட வேண்டாம். ஆனால் அகத்து மட்டோடாவது அவசியம் இந்த கர்மா பண்ணத்தான் வேண்டும். நித்ய ஒளபாஸனம், நாலு நாள் கலியாணம் என்பவையெல்லாம் போய், கல்யாணத்துக்கு மறுநாள் சேஷஹோமம் கூட இல்லாமல், (கல்யாணம் நடக்கும்) அன்றே ஒரு விதமான மந்திர பூர்வ ஸம்ஸ்காரமும் இல்லாமல் இப்போது இதை [ஸ்திரீ-புருஷ ஸங்கத்தை] செய்து வருவது ரொம்பவும் துராசாரம்; ரொம்பவும் பாபமும் ஆகும். மிருகப் பிராயமாகப் பண்ணுவதால் ஸந்ததியும் அப்படியே [மிருகம் மாதிரியே] அமைகிறது. பும்ஸவனம் கர்ப்பத்தின் மூன்றாவது மாதம் செய்ய வேண்டும். ஆறு அல்லது எட்டாவது மாதத்தில் ஸீமந்தம் பண்ணவேண்டும். இப்போது இரண்டையும் சேர்த்து ஏதோ பண்ணுகிறார்கள்.
    குழந்தை பிறந்தவுடன் ஜாதகர்மா என்ற ஸம்ஸ்காரம் செய்யவேண்டும். தானங்கள் கொடுக்கவேண்டும். பதினோராவது நாள் நாமகரணம். பெயர் வைப்பதுகூட ஜீவனைப் பரிசுத்தி பண்ணுகிற ஸம்ஸ்காரமாகத்தான் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இன்ன நக்ஷத்திரத்தில் பிறந்தால் இன்ன மாதிரிப் பெயர் வைக்க வேண்டும் என்று இருக்கிறது. பகவந் நாமாக்களாகப் பேர் வைக்க வேண்டும். அந்தப் பேரைச் சொல்லிக் கூப்பிடுவதே நம்மையும் சுத்தப்படுத்தும் ஸம்ஸ்காரமாகிறது! லாங்ஃபெல்லோ (நீள ஆள்), ஸ்டோன் (கல்) என்றெல்லாம் கண்ட பெயர்களை வைத்துக் கொள்கிற மாதிரி நம் மதத்தில் இல்லை. இப்போது இப்படிப்பட்ட அசட்டுப் பெயர்கள் இங்கேயும் வந்து விட்டன. ஸ்வாமி பெயராகவே வைத்தாலும் அதைக் கன்னாபின்னா என்று சிதைத்துக் கூப்பிடும் வழக்கமும் நீண்டகாலமாக இருந்திருக்கிறது. இதெல்லாம் ரொம்பத் தப்பு. வைதிக ஸம்ஸ்காரமாக வைத்த பெயர் என்பதற்கான கௌரவத்தை அதற்குக் கொடுக்கவேண்டும்.
    குழந்தையின் ஆறாம் மாஸம் உணவூட்டுவதான 'அன்ன ப்ராசன' ஸம்ஸ்காரம்.
    கர்ப்பாதானம் முதல் நாமகரணம் வரை குழந்தையை முன்னிட்டு (on behalf ) பெற்றோரே பண்ணுவது. அன்ன ப்ராசனத்தில் தகப்பன் மந்திரம் சொன்னாலும் குழந்தையே சாப்பிடுகிறது.


    தாயார் மருந்து சாப்பிட்டால் பால் குடிக்கிற குழந்தைக்கு தேஹபுஷ்டி ஏற்படுகிறதோ இல்லையோ? அதைப்போலவே மாதா பிதாக்களுடைய சித்தவிருத்தி எப்படி இருக்கிறதோ அப்படியே உள்ளே இருக்கும் ஜீவனும் ஸாத்விக ஸ்வபாவமோ, பாப பிரவிருத்தியோ உண்டாகும். மனது சாந்தமாக இருந்து ஒரு ஸமாசாரம் எழுதி அதைப் படித்துப் பார்த்தால் நன்றாயிருக்கும். கோபமாக இருக்கும் பொழுது எழுதி அப்புறம் பார்த்தால் நன்றாக இருப்பதில்லை. சரீரத்திலும் அப்படியே குணதோஷங்கள் ஏற்படுகின்றன. ஒரு தம்பதி உத்தம குணங்களோடு ஸங்கமித்தால்தான் நல்ல பிண்டம் ஏற்பட்டு உள்ளே இருக்கும் ஜீவனுக்கும் நல்ல சுபாவம் உண்டாகும். மந்திர பூர்வமாகப் பண்ணுவது இதற்காகத்தான்.


    இத்தகைய கர்மாக்களை அடியோடு தள்ளாதவர்களும் உரிய காலத்தில் பண்ணாமல் சேர்த்துப் பண்ணி விடுகிறார்கள். இப்படியின்றி, அந்த அந்தக் காலத்தில் அந்த அந்த மந்திரத்தைச் சொல்லி அந்த அந்த திரவியங்களைக் கொண்டு அந்த அந்த ஸம்ஸ்காரத்தைச் செய்யவேண்டும்.


    அன்னப் பிராசனத்துக்கப்புறம் 'சௌளம்' செய்ய வேண்டும். அதாவது சிகை (குடுமி) வைக்கிறது. ஸத் கர்மாவுக்கு உபயோகமாக இருக்க அது பண்ணவேண்டும். ஸந்நியாஸிக்கு சிகை இல்லை. மொட்டைத் தலையாக இருக்க வேண்டும். ஸந்நியாஸிகள் மந்திரபூர்வமாகத்தான் சிகையை எடுத்துக் கொள்ளவேண்டும். மந்திரபூர்வமாக வைத்துக் கொண்ட சிகையைப் பரமேச்வரனுக்கு முன்பு பண்ணின பிரதிக்ஞைக்கு விரோதமாக இஷ்டப்படி எடுத்து விடுவது தப்பு. சிகையை எடுப்பது ஒரு பெரிதா என்று கேட்கலாம். பொய் சொல்லுகிறது தப்பு அல்லவா? அது எவ்வளவு தப்போ அவ்வளவு தப்பு இதுவும். 'பரமேச்வர ப்ரீதியாக' என்று ஸங்கல்பம் பண்ணியே, சௌள ஸம்ஸ்காரத்தில் சிகை வைக்கப்படுகிறது. அப்படி வைத்துக் கொண்டதைக் கிள்ளுக்கீரையாக எண்ணி மனம் போனபடி எடுத்தால் அந்தப் பரமேச்வரனிடமே பொய் சொன்னதாக ஆகவில்லையா? சிவலிங்கப் பிரதிஷ்டை செய்கிறார்கள். வேல், ஸாளக்கிராமம் வைத்து பூஜை செய்கிறார்கள். பின்பு, கோபித்துக் கொண்டு எடுத்து எறிந்து விடலாமா? அகஸ்மாத்தாகப் போனால் - திருடன் கொண்டு போனால் பாதகம் இல்லை. நாமாக வைத்ததை நாமாக வேண்டுமென்று மாற்றுவது பெரிய தப்பு. சௌளத்தை மட்டும் ஸங்கல்பத்தோடு பண்ணிக் கொண்டு அப்புறம் இஷ்டப்படி அதை எடுத்து விட்டு 'க்ராப்' பண்ணிக் கொள்வது தப்பு.


    '.......ஏ போச்சு' என்று பேச்சு வழக்கிலே ரொம்ப அலக்ஷ்யமான ஸமாசாரமாகச் சொன்னாலும், வாஸ்தவத்தில் இது பெரிய ஸமாச்சாரம்தான். வேத அத்யயனம், வைதிக கர்மாநுஷ்டானம், தர்மப்படி இல்லறத்திலிருந்து கொண்டு பண்ணும் தாம்பத்தியம் இவற்றிலே சரீரத்துக்கும், சரீரத்தின் நாடி சலனங்கள் மூலம் சித்தத்துக்கும் ஏற்படவேண்டிய பலத்துக்குத் தலையில் பிரம்மமரந்திரத்தில் சிகை என்ற ரக்ஷை இருப்பது பெரிய காப்பாகும். கூரைக்கு ஓடு போடுகிற மாதிரி அது! வேத கர்மாவும், தாம்பத்தியமும் நின்றுபோன ஸந்நியாஸ ஆச்ரமத்தில் தான் இந்த ரக்ஷை தேவையில்லாமல் போகிறது. ஆகையால் கிருஹஸ்தன் ஸந்நியாஸியாக ஆனாலன்றிக் குடுமியை எடுக்கக் கூடாது. தற்காலத்தில் பிரம்மச்சரிய, கிருஹஸ்தாச்ரம காலங்களிலும் வேத ஸம்பந்ததத்துக்கு முழுக்குப் போட்டு விட்டதால், சிகையும் இல்லாமலிருக்கிறோம்!
    பாபம் பண்ணி நரகவாஸம் பண்ணுகிற ஜீவர்களின் பிரீதிக்காக, ஒரு கிருஹஸ்தன் ஸ்நானம் செய்யும்போது மந்திர பூர்வாக சிகோதகம் தரவேண்டும் (குடுமியிலிருந்து ஜலத்தைப் பிழிந்து கொடுக்க வேண்டும்) என்று இருக்கிறது. சிகை இல்லாவிட்டால் இதை எப்படிப் பண்ணுவது?


    சௌளத்துக்கு அப்புறம் வருவது உபநயனம். பிரம்மோபதேசம், பூணூல் கல்யாணம் என்பதெல்லாம் இதுவே.
    உபநயனம் முதல் பண்ணப்படும் ஸம்ஸ்காரங்கள் ஒரு ஜீவனுக்கு அறிவு வந்த பின்பு ஏற்படுபவை. குழந்தையாக இருந்த ஜீவன் அறிவுடன் மந்திரம் சொல்லிப் பண்ணத் தொடங்கும் முதல் ஸம்ஸ்காரம் உபநயனமே.
    மாதா பிதாக்களிடத்தில் ஏதாவது பாபதோஷங்களிருந்தால் அவை அவர்களிடத்திலுண்டாகிற ஜீவனையும் பாதிக்கும். அதற்காக, ஒரு ஜீவன் எந்த மாதாவுடைய கர்ப்பத்தில் வாஸம் பண்ணுகிறதோ, எந்தப் பிதாவால் உண்டாகிறதோ அவர்களுடைய தோஷங்கள் அந்த ஜீவனுக்கு ஏற்படாமலிருப்பதற்காக ஸம்ஸ்காரங்கள் செய்யவேண்டும். மாதா பிதாக்களிடம் துர்க்குணங்கள் உண்டு. அவை அவர்களால் ஏற்படும் ஜீவன்களுக்கு உண்டாகாமலிருக்க ஸம்ஸ்காரங்கள் செய்ய வேண்டும். அந்த தோஷங்கள் [கர்ப்ப சம்பந்தமான] கார்ப்பிகம் என்றும் [பீஜ சம்பந்தமான] பைஜிகம் என்றும் இரண்டு வகைப்படும். கார்ப்பிகம் தாயால் உண்டாவது. பைஜிகம் தந்தையால் உண்டாவது. இந்த தோஷங்களின் நிவாரணத்திற்காக உபநயனம் வரையில் உள்ள சம்ஸ்காரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவைகளைச் செய்ய வேண்டியவர்கள் மாதா பிதாக்கள். உபநயனம் வரைக்கும் ஸம்ஸ்காரங்களைத் தானே செய்து கொள்ளப் புத்திரனுக்கு அர்ஹமான [தகுதியான] வயது வரவில்லை.


    எந்த ஸம்ஸ்காரத்தையும் உரிய காலத்தில் பண்ண வேண்டும். அதனால் பாப பரிகாரம் ஏற்படுகிறது. பூர்வத்தில் வேறொரு காரியம் பண்ணிப் பாபம் ஸம்பாதித்திருக்கிறோம். அதை நீக்க மனம்-வாக்கு-காயங்களால் ஸம்ஸ்காரம் பண்ணவேண்டும்.
    நாம், பாபம் அந்த மூன்று கரணங்களாலேயும் பண்ணியிருக்கிறோம். மனதால் கெட்ட எண்ணம் நினைத்திருக்கிறோம். வாக்கால் பொய் பேசியிருக்கிறோம். தேஹத்தால் பொய் பண்ணியிருக்கிறோம். அதாவது பல தினுஸாகப் பாசாங்கு பண்ணியிருக்கிறோம். மனோ-வாக்-காயங்களால் பண்ணிய பாபங்களை அவைகளாலேயே ஸத் காரியங்களைப் பண்ணிப் போக்கிக் கொள்ள வேண்டும். மனத்தினால் பரமேச்வரத் தியானம் பண்ணவேண்டும்; வாக்கினால் மந்திரம் சொல்ல வேண்டும்; காயத்தால் ஸத்காரியம் பண்ண வேண்டும். மனோ-வாக்- காயங்களால் தானாக ஒரு ஸம்ஸ்காரத்தைப் பண்ணும் பக்குவம் ஜீவனுக்கு உபநயனத்திலிருந்து ஏற்படுகிறது. இதுவரை தகப்பனார்தான் இவனுக்காக மந்திரம் சொல்லிப் பண்ணினார்.


    இங்கே இன்னொரு விஷயமும் சொல்லவேண்டும். ஒரு ஜீவனை direct -ஆக [நேராக] உத்தேசித்தே அதன் பிதா பண்ணும் [கர்ப்பாதானம் முதற்கொண்டு சௌளம் வரையிலான] கர்மாக்கள் மட்டுமின்றி, அந்தப் பிதாவாகப்பட்டவன் மற்ற எல்லா ஸம்ஸ்காரங்களையும் பண்ணி நல்ல அநுஷ்டாதாவாக இருப்பதும் indirect -ஆக (மறைமுகமாக) அவனுடைய புத்திரர்களுக்கு நல்லதைச் செய்கிறது. 'மாதா பிதா பண்ணுவது மக்களைக் காக்கும்' என்ற வார்த்தைப்படி இது மாதிரி நடக்கிறது. வைதிக பிராமண ஸந்ததிக்கு ஸமீப காலம் வரையில் புத்திப் பிரகாசம் அதிகம் இருந்து வந்ததற்கு ஒரு முக்ய காரணம், முன்னோர்கள் பண்ணிய ஸம்ஸ்காரங்களின் சக்திதான். முன்பு இருந்தவர்கள் செய்தது இரண்டு அல்லது மூன்று தலைமுறைக்கு அஸ்திவாரமாக இருக்கிறது. அந்த எல்லை தாண்டிப் போனால் அப்புறம் கஷ்டந்தான். இந்த ஸந்ததியில் பிறந்த குழந்தைகளே லௌகிகத்தில் பிரவேசித்தபின் அதிகமாகக் கீழே போய்விட்டார்கள். ரொம்பவும் கெட்டுப் போனார்கள். மடை அடைத்து வைத்ததைத் திறந்துவிட்டால் வெகு வேகமாக ஜலம் போகிற மாதிரி இவர்கள்தாம் கடுமையாக லௌகிகத்தில் இறங்கி விட்டார்கள்.


    நம்முடைய பெற்றோர்கள் ஸம்ஸ்காரம் பண்ணவில்லை; அதனால் நமக்கு நன்மை உண்டாகவில்லை என்ற குறை நமக்கு இருக்கலாம். அதைப்போல நம்முடைய குழந்தைகள் குறை கூறாமல் நாம் நல்ல ஸம்ஸ்காரங்களைப் பண்ணவேண்டும். அவர்களுக்கும் பண்ணி வைக்க வேண்டும்
Working...
X