"மாமா பஞ்சகச்சம் உடுத்தும் சமயத்தில் கவணிக்க வேண்டிய, நியமங்கள் தெரிந்துக்கொள்ள ஆசை"
பேஷாக. சிலவற்றை பார்ப்போம்.:
* பஞ்சகச்சம் கட்டிக்கொள்ளும் சமயத்தில் பூணுலை நிவித்தமாக (மாலையாக) போட்டுக் கொள்ளவேண்டும். மேலும் பூணூலை வலது காதில் மாட்டிக் கொள்ளவேண்டும்.
* திவிதீய வஸ்த்ரம் தலையில் (முண்டாசு மதிரி) இருத்தல் நல்லது. அல்லது தோளில் போட்டுக் கொள்ளவேண்டும். அதாவது அந்த சமயத்தில் ஒற்றை வஸ்தரமாக இருப்பது தவிற்க்கப்பட வேண்டும்
*ஸ்மார்த்த சம்ப்ரதாயத்தில் நாபி (தொப்புள்) வெளியே தெரியாமல், தொப்புளை மறைத்துதான் கச்சம் அணிந்துகொள்ளுவது பழக்கத்தில் உள்ளது.
* கச்சம் கட்டி முடித்தவுடன் அங்கவஸ்த்ரத்தை (த்விதீய வஸ்த்ரம்) இடுப்பில் கட்டிகொள்ளவேண்டும்.
* அங்கவஸ்த்ரத்தை இடுப்பில் கட்டி கொள்ளும்போது 'பெல்ட்' மாதிரி வேஷ்டியின் மேல் சுற்றிகொள்ளுவதை தவிற்கவேண்டும். அதாவது இடுப்பில் சுற்றிக் கொள்ளும்போது அங்கவஸ்த்ரம் ப்ரதான வேஷ்டியை தொட்டுக் கொண்டிருக்கலாமே தவிற, அதன்மேல் பெல்ட் மாதிரி இழுத்து கட்டி முடிச்சு போட்டுக் கொள்ளுவதை தவிற்கவேண்டும்.
* அதே மாதிரி கச்சம் கட்டி முடித்தவுடன் கால்களை அலம்பிக் கொள்ளுவதும் பழக்கத்தில் உள்ளது. புதிய வஸ்த்ரமாக இருந்தால் இதை அவசியம் கடைப்பிடிக்கவேண்டும்.
கச்சம் அணியும்போதோ அல்லது சாதாரணமாக வேஷ்டியில் இருக்கும்போதோ மேல் வேஷ்டியை எப்படி அணியவேண்டும் என குழப்பமும் சிலரிடம் உள்ளது. அதையும் சற்று இங்கு பார்ப்போம்
இதில் பல பழக்கங்கள் உண்டு. தேசாச்சாரத்தின்படி சிலது மாறுபடலாம்.
பொதுவாக பூஜை,பாராயணம், ஜபாதிகள் போன்றவை செய்யும்போது மேல் வேஷ்டி நமது கழுத்தைச் சுற்றி போட்டுக் கொள்ளக் கூடாது. அதாவது கழுத்து முழுவதும் மூடி இருக்கக்கூடாது. யோக வேஷ்டியாக (அதாவது இடது தோள் பட்டையிலிருந்து் குறுக்காக) மேல் வேஷ்டியை தரித்துக்கொள்ளலாம்.
அல்லது இடுப்பில் சுற்றிக்கொள்ளலாம்.
இரண்டும் ஏற்புடையதே.
ஆனால் வேதம் கற்றுக் கொள்ளும்போது கற்றுக் கொள்ளுபவர்களின் மேல் வேஷ்டி அவர்களின் இடுப்பில் இருப்பதுதான் சம்ப்ரதாயம். யோக வேஷ்டியையும் இந்த சந்தர்பத்தில் தவிற்பது நல்லது,.
மற்ற சமயத்தில் பொதுவாக மேல் வேஷ்டி கழுத்தை சுற்றி கழுத்தை மூடியப்படி அணியலாம். வசதியும்கூட.
கடைசியில் ஒரு வார்த்தை.
இந்த நியமங்களில் ஒன்றிரண்டு விட்டுப்போனாலோ அல்லது அனுஷ்டிக்காவிட்டாலோ கவலைப் படவேண்டாம். பஞ்சகச்சம் தரிக்கவேண்டும் என்பதுதான் குறிக்கோளாக இருக்கவேண்டும். மற்றவையெல்லாம் தன்னால் போகப்போக சரியாகி விடும்.