Announcement

Collapse
No announcement yet.

முதியோர் தின சிந்தனைகள்"

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • முதியோர் தின சிந்தனைகள்"

    முதியோர் தின சிந்தனைகள்"

    அறுபதைத் தொட்டு, பணியிலிருந்து ஓய்வு பெற்று, ‘பெரிசுகளின்’ பட்டியலில் சேர்ந்துவிட்டேன். (செட்டிநாட்டுப் பகுதியில் வாஞ்சையோடு ‘ஐயா’, நெல்லைப் பகுதியில் எகத்தாளமாக ‘பாட்டையா’, மதுரைப் பகுதியில் மரியாதையோடு ‘பெரிசு’).

    முதுமையில் உடலையும், மனத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதைப் பற்றி நிறையப் படித்திருக்கிறேன். அவற்றோடு என் கருத்துக்களையும் இணைத்து இங்கே எழுதுகிறேன்.நேரமேயில்லை என்று ஓடிக்கொண்டிருந்த காலம் போய், பலருக்கு நேரத்தை என்ன செய்வது என்ற பிரச்சினை.

    என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.அதிகாலை எழுந்து தியானம், உடற்பயிற்சி, பிரார்த்தனை, மனம் ஒன்றினால் பஜனை, காலையும் மாலையும் திறந்த வெளியில் சென்று நடந்து வருவது, இயற்கையை ரசிப்பது, கோவில்களுக்கு சென்று வருவது, விரும்பிய புத்தகங்களை, அதிலும் உற்சாகமூட்டும் சீரிய சிந்தனைகள் கொண்டவற்றை, தேடிப் படிப்பது, இன்டர்நெட்டில் தேடித் தேடி நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்வது, நமக்கென்று ‘வலைப்பூக்களை’ உருவாக்கி சிறந்தவற்றை, சீரியவற்றை அவற்றில் பதிவு செய்வது, ‘ஆர்குட்’ போன்ற சமுதாய இணையங்களில் பழைய மற்றும் புதிய நண்பர்களோடு உரையாடுவது, சிரமமில்லாத பயணங்களை மேற்கொள்வது, குழந்தைகளோடு விளையாடுவது-பொழுதுபோக்குவது, அவர்களுக்கு நல்ல விஷயங்களை கதைகள் மூலம் சொல்லித்தருவது, வீட்டில் அனைவருக்கும் பயனுள்ள வகையில் செயல்படுவது, நல்ல ‘Hobby’ ஒன்றை ஏற்படுத்திக் கொள்வது (நான் புதிய கேமரா ஒன்றை வாங்கி, மனதிற்கு பிடித்தவற்றைஎல்லாம் ‘கிளிக்’ செய்கிறேன்) – இப்படி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தேவையில்லாமல் மனதைத் தளரவிடாது இப்படி நமது மனதிற்கும், ‘பர்சுக்கும்’ ஏற்ற பல விஷயங்களைச் செய்யலாம்.

    சில எச்சரிக்கைகள்:

    1. வீட்டிலும் வெளியிலும் நாம் சொல்வதுபோல் மற்றவர்கள் குறிப்பாக மனைவி மக்கள் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரச்சினை பண்ணாமல் இருக்கவேண்டும். மனத்தில் தோன்றும் கருத்துக்களை சொல்லிவிட்டு ஒதுங்கிவிடுவதே மரியாதை. நாம் வளர்ந்த-வாழ்ந்த காலங்கள் வேறு, அவர்கள் வாழ்கின்ற காலம், கருத்துக்கள் வேறு. இதை மனதில் கொள்ளவேண்டும்.

    2. நமது ஆரோக்கியத்தைப் பேணி, இறுதிவரை நோய்நொடியில்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். வேறுவகையில் சொல்வதானால், நம் மனைவி மக்களுக்கோ மற்றவர்க்கோ எந்த வகையிலும் சுமையாக ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

    3. வீட்டில் அதுவேண்டும், இதுவேண்டும் என்று கேட்டு நச்சரிக்காமல், எளிய வாழ்க்கை வாழவேண்டும். நமக்கு வேண்டியவற்றை நாமே செய்துகொள்ளவேண்டும்.

    4. முடிந்தால் பயனுள்ள, பிரச்சினை இல்லாத சமுதாயப் பணி ஒன்றை மேற்கொண்டு சமுதாயப் பிரக்ஞையோடு செயல்படலாம்.

    5. பேச்சைக் குறைத்துக் கொள்ளுதல் அவசியம். வயதானவர்கள் பலருக்கு இந்த தொணதொணக்கும் வியாதி இருக்கிறது. இதனாலேயே நம்மைக் கண்டு பலர் ஓடுவது.

    6. முடிந்தவரை நாமாக யாருக்கும் அறிவுரைகள் வழங்காதிருப்பது (பொதுவாக யாரும் அவற்றைக் காதுகொடுத்துக் கேட்கப் போவதில்லை – நடக்கப் போவதில்லை. தேடிவந்து யாரவது கேட்டால் மட்டுமே – சுருக்கமாகக் கூறலாம்.)

    சுவாமி விவேகானந்தர் கூறியதுபோல ‘மனம் விரிந்துகொண்டே போகவேண்டும்’. இறுதியில் எல்லையற்ற இப்பிரபஞ்சத்தோடு ஒன்றோடு ஒன்றாகக் கலந்திடல் வேண்டும். பிறவிப்பயனை அடைதல் வேண்டும்.

    சாதனைகள் படைத்திடல் வேண்டும். ஆன்மிகத்தில்தான் இவையெல்லாம் கைகூடும், மனமும் அமைதி பெறும். இறுதிவரை வாழ்க்கையில் பிரச்சினைகள் வந்துகொண்டேதான் இருக்கும். அவற்றை அமைதியுடனும், பொறுமையுடனும் எதிர்கொள்ளும் ஆற்றலையும், மனப்பக்குவத்தையும், அன்புள்ளத்தையும் ஆன்மிகத்தில் மட்டுமே பெறமுடியும்.

    இது என் உறுதியான நம்பிக்கை.என் வாழ்வில் இவை அனைத்தையும் கடைப்பிடிக்க முயல்வேன். So help me God!

    (This article is taken from suriyodayam)
    Last edited by S Viswanathan; 15-01-16, 08:46.
Working...
X