!
சத்-சித்-ஆனந்த வடிவினனான கடவுள் ஒருவர் இருக்கிறார் எனப் பூவுலகப் பெருமதங்கள் எல்லாம் ஒரே குரலில் பறைசாற்றுகின்றன. இவ்வுயரிய கடவுள் உங்களிலிருந்து அப்பாற்பட்டவர் அல்லர் என்று கூறும் என்னை நம்புங்கள். அவர் உங்களுக்கு வெகு அருகிலேயே இருக்கிறார். அவர் உங்களது சரீரக் கோவிலில், இதயக் குகையினுள் வாசம் செய்கிறார். உங்கள் மனத்தின் மௌன சாட்சியாக விளங்கும் அவர் உங்களின் அறிவுத்துறை வேலைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். மறை நூல்கள் தெரிவிக்கும் மிக உயரிய சக்தி அவர்தான். முனிவர்கள், துறவிகள், யோகிகள், வேதாந்திகள், தீர்க்கதரிசிகள் அனைவராலும் போற்றப்படும் கடவுளை யோகப்பயிற்சியின் மூலமே நீங்கள் உணரமுடியும்.
தோற்றங்களின் பின் நிற்கும் உண்மை
ஆரம்பத்தில் ஒன்றென்ற எண் இல்லாத நிலையில் எவ்வளவு பூஜ்யங்களை அடுக்கிச் சென்றாலும் அந்தப் பூஜ்யங்களுக்கு மதிப்பில்லாமல் ஆகிவிடுவது போல், ஆத்மீக வாழ்க்கை வாழவில்லை என்றால், ஆத்மீகப் பொக்கிஷத்தைப் பெறவில்லையென்றால், ஆத்மானுபூதிக்கான முயற்சி இல்லையென்றால் மூவுலகச் செல்வங்களும் வீணே. நீங்கள் உள்ளுள்ள ஆத்மனில் வாழ வேண்டும்; இங்கு வாழ்வுடன் ஆத்ம ஞான்தைச் சேர்க்க வேண்டும். எனவேதான், ஏசுநாதர் தெரிவிக்கிறார்: நீங்கள் முதலாவதாக ஆண்டவனின் ராஜ்யத்தையும், அவரது நேர்மையையும் நாடி நில்லுங்கள். இந்தப் பொருள்கள் அனைத்தும் உங்கள்மீது சுமத்தப்படும்.
நீங்களே அது: உங்களுக்குள் அபாரசக்தி அமைந்துள்ளது. உங்களால் மற்றவரின் செல்வாக்கைப் பெற இயலும், அருகிலும், அதிதூரத்திலும் அநேகாயிரம் மக்கட்கு உங்களால் சந்தோஷத்தையும் சாந்தியையும் பரப்ப முடியும். வெகுதூரத்திலிருந்தே உங்களால் மற்றவரை உயர்த்த சாத்தியப்படும். அஞ்ஞானத்திரை அகன்றதும் நீங்களே கடவுள் ஆகின்றபடியால், மற்றவர்களிடம் உங்களது சக்திவாய்ந்த நன்மை மிகும் எண்ணங்களைப் பரப்ப முடியும்.
உள்மனிதனுக்குரிய கல்வி: இந்த உலகம் ஒரு மாபெரும் பள்ளிக்கூடம். இந்த உலகம் உங்களது கல்விக்காகவே இருக்கிறது. அன்றாடம் பற்பல விலையுயர்ந்த பாடங்களை நீங்கள் படிக்கிறீர்கள். வாய்ப்புக்கள் எல்லாவற்றையும் யோகநிலையில் நீங்கள் நன்கு பயன்படுத்தினால், உங்கள் இச்சா சக்தியும் தகுதிகளும் வளர்ச்சியடைவீர்கள். உங்கள் மனம் விரிவடையும். சம்பூர்ண வளர்ச்சி ஏற்படும். லட்சியத்தை நோக்கி நீங்கள் முன்னேறுவீர்கள். ஒவ்வொன்றாகத் திரைகள் எல்லாம் கீழே விழுந்து விடும். தடைகளும் எல்லைகளும் இல்லாததாகும். தளைகள் நீங்கும். தெய்வீகமான ஜோதி, அறிவு, தூய்மை, சாந்தி, ஆத்மீக சக்தி முதலியவற்றை நீங்கள் பெறுவீர்கள்.
சுய விடுதலை: உங்கள் தலைவிதியின் கர்த்தா நீங்கள் தான். நீங்களே அதற்கு ஜவாப்தாரி. உங்களுக்கு ஏற்படும் இன்பம் துன்பங்களின் சிற்பி நீங்கள் தான். எங்ஙனம் பட்டுப்புழுவானது தன்னைச் சுற்றி வலையை ஏற்படுத்திக் கொள்வதனால் தனக்கே அழிவைத் தேடிக்கொள்கிறதோ, அதேபோல் உங்களுடைய செய்கைகள், விருப்பு வெறுப்புகள், பொய்யான ஆணவம் முதலியவற்றால் நீங்கள் இந்த மாமிசத்தாலான கூட்டை உண்டாக்கியிருக்கிறீர்கள். நீங்கள் மாமிசத்தின் அடிமையாக, உங்கள் சரீரம் மனத்தின் அடிமையாக எண்ணற்ற ஆசைகளின் அடிமையாக ஆகிவிட்டீர்கள். வருந்தாதீர்கள்! பிரகாசம் பொருந்திய வருங்காலம் உங்களை எதிர்நோக்கி நிற்கிறது. இப்பொழுதே இந்த வினாடியிலேயே மயக்குறும் இந்தப் பொய்யான கூட்டை விட்டு வெளிவர முயலுங்கள். உங்கள் முயற்சி உண்மையாக இருந்தால், இம்முடிவை அடைய நீங்கள் முழு முயற்சியையும் செய்வீர்களேயானால், கடவுளின் கிருபையால் நீங்கள் அறியாமையெனும் இந்த இருண்ட மேகத்தை விரட்டி, உங்களின் இயற்கையான தெய்வீக நிலைகளில் உயரிய பிரகாசத்தில் சிறந்து விளங்குவீர்கள். பரமாத்மனுடனுள்ள உங்களது ஒருமைப்பாட்டை உணர விழித்தெழுங்கள். தொடர்ந்து ஆத்மனையே எண்ணி நில்லுங்கள். போராட்டம் தீவிரமாக நடைபெறுக. உங்கள் முயற்சிகள் ஆத்மார்த்த தன்மையுடன் அமைவதாக. உங்கள் நோக்கம் பரிசுத்தமாக இருக்குமாக. இறுகிய ஒழுங்குமுறை, உயரிய உறுதிப்பாடு, உயர்ந்த இச்சா சக்தி, முதிர்ந்த சாதனை அல்லது ஆத்மீகப் பயிற்சி இவை நின்று நிலவ வேண்டும். அப்பொழுது இறுதி மோட்சத்தைப் பெறக் கஷ்டமே இராது.
உண்மையின் தன்மயமாதல்: வெறும் அறிவுத்துறை ஞானம் மட்டும் உங்களுக்குப் பயன்படாது. நீங்கள் உண்மையாகவே பரமாத்மனுடனுள்ள உங்களது ஒன்றுபட்ட தன்மையை உணருவதோடு, அந்தரங்கத்தில் அதை அனுபவிக்கவும் வேண்டும். என்றும் இந்த லட்சிய ஆத்மீக வாழ்வில் நீங்கள் வாழ வேண்டும். உங்கள் அண்டை வீட்டுக்காரர்கள் அனைவரும் உங்களது முற்றிலும் மாறுபட்ட நிலையை உண்மையாகவே உணரட்டும். ரோஜாப்பூவிலிருந்து நறுமணம் பரந்து நிற்பதைப் போல், உங்களைச் சுற்றி ஆத்மீக நறுமணம் வீசி நிற்கும். தாமதம் வேண்டாம். கவலை வேண்டாம். ஒரு வினாடிப் பொழுதையும் வீணாக்காதீர்கள். ஒவ்வொரு மணிதோறும் நீங்கள் வயதாகிக் கொண்டே வருகிறீர்கள். மானிடப் பிறவி, விடுதலைக்கான வேட்கை, பூரண நிலையடைந்த மாமுனிவரின் சீரிய பாதுகாப்பு இம்மூன்றும் அரிதான பொருள்கள். கடவுள் கிருபையால் உங்களிடம் இம்மூன்றுமே அமைந்துள்ளன. காற்றுள்ளபோது தூற்றிக்கொள்ளுங்கள். தியானத்தை ஒழுங்காக அப்பியசிப்பதால் கடவுளை அடைந்து, சிரஞ்ஜீவித்துவத்தின் அமிருதத்தைப் பருகுங்கள். ஒன்றித்தலைப் பின்தொடர்ந்து தியானம் தோன்றி நிற்கிறது. ஒன்றித்தல் தியானத்திலுள் லயமாகிறது. ஒரு குறிப்பிட்ட பொருளையே மனதில் கொண்டு நிற்றல் ஒன்றித்தல். அந்தப் பொருளிலுள்ள தொடர்ந்த அறிவுப்பெருக்கே தியானம். தியானம் மனக்கதவைத் திறந்து மெய்யறிவுக்கு அழைத்துச் செல்கிறது. அது உங்களுக்குப் பற்பல சித்திகளை அளிக்கிறது. வேண்டியவற்றை எல்லாம் நீங்கள் தியானம் மூலமாகப் பெற்றக்கொள்ளலாம். இப்பொழுது நான் உங்களுக்குத் தியானத்திற்குரிய சில நடைமுறை விதிகளைக் கொடுக்கிறேன். ஆன்மீகப் பாதையில் வழிகாட்டுவதுடன் உங்களுக்கு சேவையும் செய்யச் சித்தமாயிருக்கிறேன். ஆனால் அந்தப் பாதைவழிச் செல்ல வேண்டியது உங்கள் கடமையாகும்.
சூழ்நிலை: தியானத்துக்கெனத் தனித்ததோர் அறையை ஏற்பாடு செய்யுங்கள். அதனுள் யாரையும் அனுமதிக்காதீர்கள். அறையினுள் ஊதுவத்திகளைப் பொருத்தி வையுங்கள். கால்களை நன்கு சுத்தம் செய்த பிறகே அவ்வறையினுள் செல்லுங்கள். அவ்வறையினுள்ளோ அல்லது தொந்தரவு ஏற்படாதவாறுள்ள வேறு ஏதாவது அமைதியான இடத்திலோ ஓய்வெடுங்கள். அங்கு உங்கள் மனம் ஓய்வு பெறும் நிலையை அடையும். எப்பொழுதும் இதே மாதிரி அமைதி மிகும் நிலை இருக்குமெனக் கூற முடியாது. எனவே நீங்கள் உங்களால் முடிந்த அளவு முனைய வேண்டும். நீங்கள் தனித்துக் கடவுளுடன் ஒன்றாக இருக்க வேண்டும்.
காலம்: பிரம்ம முகூர்த்த காலமாகிய அதிகாலையிலிருந்து 6 மணி வரையிலுள்ள நேரம் தியானப் பயிற்சிக்கு மிகச்சிறந்தது. இதேபோல் இரவு 7 மணி முதல் 8 வரையிலும் இனியொருமுறை தியானத்திற்கு அமரலாம்.
ஆயத்தம்: நீங்கள் வெகுவாக விரும்பும் தெய்வத்தின் உருவத்தையோ, படத்தையோ அறையில் வைத்துக் கொள்ளுங்கள். அங்கே கீதை, பைபிள் முதலிய ஓரிரண்டு சமய நூல்களையும் வைப்பதோடு, தியானத்திற்கு முன்னதாக எண்ண அலைகளை மாற்றுவதற்கு வேண்டி அந்த நூல்களில் ஓரிரண்டு பக்கங்களைப் பாடம் செய்யுங்கள். படத்தின் முன் ஒரு சிறிய போர்வையை விரித்து அதன்மீது பத்மாசனத்திலோ, அல்லது உங்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஒரு ஆசனத்திலோ அமருங்கள். தலை, கழுத்து, முதுகெலும்பு மூன்றையும் ஒரே கோட்டில் நிமிர்ந்த நிலையில் வையுங்கள். முன் பக்கமோ பின் பக்கமோ சாயாதீர்கள்.
மனதிலேயே குருவின் முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யுங்கள்.
குருர் பிரஹ்மா குருர்விஷ்ணு
குருர் தேவோ மஹேஸ்வரஹ
குருர் சாக்ஷรตத் பரப் பிரம்ம
தஸ்மைஸ்ரீ குரவே நமஹ: என்ற கீதத்தையோ அல்லது உங்களுக்குப் பிடித்தமான பாடலையோ குருஸ்துதியாகப் பாடுங்கள். பிறகு, கீழ்க்கண்டவாறு உச்சரியுங்கள். ஓம் ! ஓம் ! ஓம் !!!
மன ஒருமைப்பாடு: உங்கள் கண்களை மூடி இரு புருவங்களுக்கும் நடுவிலுள்ள இடமாம் திரிகுடியில் உங்கள் பார்வையை ஒன்றிக்கச் செய்யுங்கள். கைவிரல்களைக் கோர்த்துக் கொள்ளுங்கள். ஒருபொழுதும் மனதுடன் குஸ்தி போடாதீர்கள். மனதை ஒன்றிக்கச் செய்யும் பொழுது பலாத்கார முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். தசைகள், நரம்புகள் எல்லாவற்றையும் தளர விடுங்கள். மூளைக்கு ஓய்வு கொடுங்கள். மெதுவாகக் கடவுளை நினையுங்கள். மெல்லிய குரலில் உங்கள் இஷ்ட மந்திரத்தை ஜபம் செய்யுங்கள். கொப்பளிக்கும் மனதைச் சாந்தப்படுத்துங்கள். எண்ணங்களை இல்லாதாக்குங்கள். மனதை பலாத்கார முறைகளால் அடக்கமுயலாதீர்கள். ஆனால் அதன் போக்கிலே அதை ஓட அனுமதியுங்கள். தளர்ச்சியுறும் வரை அதை ஓடவிடுங்கள். ஆரம்பத்தில் வாய்ப்பைப் பயன்படுத்திக் கம்பத்தில் கட்டப்படாத குரங்கைப்போல் அங்குமிங்கும் குதித்துத் திரிந்து கடைசியில் சோர்ந்து போனபின் மனமானது உங்கள் உத்திரவை எதிர்நோக்கி நிற்கிறது. மனதை வசப்படுத்தச் சில காலம் ஆகலாம். ஆனால் ஒவ்வொரு சமயம் நீங்கள் முயற்சிக்கும்போதும் அது குறுகிய காலத்துக்குள்ளேயே உங்களிடம் வந்து சேரும்.
இருவிதத் தியானம்: தியானம் இருவகைப்படும் - சகுணம், நிர்குணம். தெய்வத்தின் ஒரு உருவத்தின் மீதுள்ள தியானமே சகுணத்தியானம். இதுவே உறுதியான தியானம். உங்களுக்குப் பிடித்தமான தெய்வத்தின் உருவத்தைத் தியானித்து அவர் பெயரை மானசிகமாக ஜபம் செய்யுங்கள். இதுவே சகுணத்தியானம். அல்லது ஓம் எனும் பிரணவத்தை மானசிகமாக உச்சரித்து, எல்லையற்ற தன்மை, நித்தியத்தன்மை, தூய்மை, உணர்வு, உண்மை, பேரின்பம் முதலிய கருத்துக்களைத் தியானம் செய்யுங்கள். இவற்றுடன் ஒன்றுபடுத்தி நில்லுங்கள். இதுவே நிர்குணத் தியானம். ஒரு முறையைக்கைக் கொள்ளுங்கள். ஆரம்ப நிலைகளில், பெரும்பான்மை மக்களுக்கு சகுணத் தியானமே மிகவும் பொருத்தமானது. தியானப் பொருளிலிருந்து வெருண்டோடும்-போதெல்லாம் உலகியல் பொருள்களிலிருந்து மனதைப் பன்முறை பின்னிழுத்து அத்துடன் ஒன்றச்செய்யுங்கள். இந்தவிதப் போராட்டம் மாதக்கணக்கில் நடைபெறும்.
சகுணத் தியானம்: ஏசுநாதர் அல்லது கிருஷ்ண பகவானை நீங்கள் தியானிக்கும் பொழுது, அவர்களின் படத்தை உங்கள் முன்வைத்துக் கொள்ளுங்கள். இமைகொட்டாது, நேராக அதைப்பார்த்த வண்ணமிருங்கள். முதலில் அவர் திருப்பாதங்கள், பிறகு கைகள், முகம், சிரம், மறுபடியும் கைகள், கடைசியாகத் திரும்பவும் கால்கள் என முறையே நோக்குங்கள். இதே முறையில் மறுபடியும் பார்க்கத் தொடங்குங்கள். இங்ஙனம் அரைமணி நேரத்திற்குத் திரும்பத் திரும்பச் செய்யுங்கள். நீங்கள் சோர்வடையும் நேரத்தில், முகத்திலேயே நேராகப் பாருங்கள். இந்தப் பயிற்சியை மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்யுங்கள். பிறகு கண்களை மூடி மானசிகமாகப் படத்தைப் பார்க்க முயலுங்கள், கண்களைத் திறந்தவண்ணம் பல உறுப்புகளையும் முறையே பார்த்ததுபோல் கண்களை மூடிய நிலையிலும் மனதினால் பார்க்க முயலுங்கள். சர்வவல்லமை, சர்வஞ்ஞத்வம், தூய்மை, பூரணத்தன்மை முதலிய கடவுளின் உயர்தன்மைகளை உங்கள் தியான நேரத்தில் நினைத்து நில்லுங்கள்.
மனவடக்கம்: தீய எண்ணங்கள் மனத்தினில் புகுமாயின் அவைகளை விரட்ட உங்கள் இச்சா சக்தியை உபயோகிக்காதீர்கள். நீங்கள் உங்கள் சக்தியைத்தான் இழந்து நிற்பீர்கள். உங்கள் இச்சா சக்திதான் சிதைய நேரிடும்; நீங்கள் சோர்வடையக் கூடும். எவ்வளவுக்கெவ்வளவு அதிகமான முயற்சிகளைச் செய்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு அதிகமான தீய எண்ணங்கள் இரட்டிப்பு வலுவுடன் திரும்பி வந்து கொண்டிருக்கும். வெகு விரைவிலேயே அவைகள் வரவும் செய்யும். எண்ணங்கள் மிக சக்தி வாய்ந்தவையும் ஆகிவிடும். எனவே, கவனிக்காமல் இருந்து விடுங்கள். சும்மா இருங்கள். எண்ணங்கள் வேகமாக ஒவ்வொன்றாகச் சென்று மறையும். அல்லது நல்ல எதிரிடை எண்ணங்களைக் கொள்ளுங்கள். அல்லது கடவுளின் படத்தை நினையுங்கள். அல்லது, மந்திரத்தைப் பன்முறை உச்சரியுங்கள். அல்லது பிரார்த்தனை செய்யுங்கள். ஒரு நாளைக்காவது தியானமின்றி இராதீர்கள். ஒழுங்காகவும், முறை தவறாமலும் தியானம் செய்யுங்கள். பழங்களும் பாலும் மனஒருமைப்பாட்டை வளர்க்க உதவும். புலால், மீன், முட்டை முதலிய உணவு வகைகளையும், புகைபிடித்தல், மது வகைகள் முதலியவைகளையும் அறவே வெறுத்தொதுக்குங்கள். மயக்கநிலை ஏற்படுமாயின், குளுமையான நீரை முகத்தில் தெளித்து தூக்கக் கலக்க நிலையைப் போக்குங்கள். பதினைந்து நிமிடங்களுக்கு எழுந்திருந்து நில்லுங்கள். பிராணாயாமப் பயிற்சியில் சிறிது நேரம் ஈடுபடுங்கள். ஒரு நிமிடத்திற்குச் சிரசாசனம் செய்யுங்கள். இந்த முறைகளால் நித்திரை நிலையை வென்றுவிடலாம். இரவில் பால், பழங்களை மட்டும் உணவாகக் கொண்டால், காலைத் தியான நேரத்தில் உறக்கம்வந்து உபத்திரவிக்காது. சிநேகிதர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஜாக்கிரதையாக இருங்கள். சினிமா பார்ப்பதை நிறுத்திவிடுங்கள். குறைத்துப் பேசுங்கள். அன்றாடம் இரண்டு மணி நேரத்திற்கு மௌனத்தைக் கடைப்பிடியுங்கள். விரும்பத்தகாத நண்பர்களுடன் உறவாடாதீர்கள். நல்ல உணர்ச்சிகளைத் தூண்டவல்ல ஆத்மீக நூல்களையே படியுங்கள். இவையனைத்தும் தியானத்தை ஊக்குவிக்கும் உயரிய அம்சங்கள். தியான காலத்தில் உடம்பை ஆட்டாதீர்கள். அதைப் பாறை போன்று உறுதியாக நிலைக்கச் செய்யுங்கள். மெதுவாகச் சுவாசம் விடுங்கள். அடிக்கடி உடலைச் சொறியாதீர்கள். நேரிய மனப்போக்குடன் அமைந்து நில்லுங்கள். மனம் சோர்ந்திருக்கும் நேரத்தில் மனஒருமைப்பாட்டுப் பயிற்சியினால் ஈடுபட முனையாதீர்கள். மனதிற்குச் சிறிது ஓய்வளியுங்கள்.
நிறைந்த நிலை: எண்ணம் மனதைப் பூராவும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அது தூல அல்லது மனோ நிலையாக மாற்றப்படுகிறது. எனவே, கடவுளைப் பற்றிய எண்ணத்தினோலயே மனதை நிரப்பிவிட்டால், வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் சமாதி நிலையை எய்துவது உறுதி. எனவே, முழு மனதுடன் முயற்சி செய்யுங்கள்.
பயிற்சியும் வைராக்கியமும்: அப்பியாசமும் வைராக்கியமும் தியானத்தின் இருபெரும் நண்பர்கள். ஒழுங்கான பயிற்சியே அப்பியாசம். உலகியல் பொருள்களிடத்திலும், புலன் வழி இன்பங்களிலும் உள்ள பற்றின்மையே வைராக்கியம். நற்பண்புகளை வளர்த்தலும் தீய குணங்களைத் தவிர்த்தலும் தியானப் பயிற்சியுடன் கூட தொடர்ந்து நடைபெற வேண்டும். அப்பொழுதுதான் தியானப் பயிற்சியின் மூலம் நீங்கள் பெரும் பயனைப் பெற முடியும்.
இவ்வஸ்திவாரத்தை முதலில் கட்டுங்கள்: யோக ஏணியின் ஏழாவது படியே தியானம். யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை என்பவையே ஏனைய ஆறுபடிகள். அன்பு, உண்மை, தூய்மை, களவாமை, பொருளாசையின்மை முதலிய நற்பண்புகளின் தொடர்ந்த பயிற்சியே யமம். அகப்புறத் தூய்மை, நிறைவு, கடும் அனுஷ்டானங்கள், மறை நூல் ஓதுதல் பகவத் சரணாகதி முதலியவற்றை ஆக்கும் நடவடிக்கைகள் தாம் நியமம். தியானத்திற்குரிய சுகமான இருக்கையே ஆசனம். ஒழுங்குபடுத்தப்பட்ட சுவாசமே பிராணாயாமம். உலகியல் பொருள்களின் மேல் பாயும் மனதைப் பின்னிழுத்து நிறுத்துதலே பிரத்யாஹாரம். மனம் ஒன்றித்த நிலையே தாரணை. அதன்பிறகு தோன்றி நிற்கிறது சமாதி நிலைக்கு இட்டு செல்லும் தியானம். எனவே நல்லொழுக்கம், அன்பு, தன்னலமின்மை, வைராக்கியம் முதலிய பண்புகளில் சிறந்து விளங்கினால் நீங்கள் தியானத்தில் வெகுவாக முன்னேறுவது எளிதாகிறது.
பிரார்த்தனை: கடவுளுடன் ஒன்றுபடுவதற்கான முயற்சியே பிரார்த்தனையாகும்.
பிரார்த்தனை மாபெரும் ஆன்மீக சக்தியாகும்.
உண்மையான தூய உள்ளத்திலிருந்து எழும் பிரார்த்தனை உடனே இறைவனால் கேட்கப்படுகிறது.
அனைத்துப் பிணிகளையும் அறவே அகற்றும் அருமருந்து இறைவனின் நாமமேயாகும். இறைவனின் நாமமே இன்பத்தின் ஊற்று.
-சுவாமி சிவானந்தர்
ஓம் தியானம்: கரையில்லாத சம்சாரமாகிய கடலில் விழுந்து தத்தளிக்கும் மனிதர்களுக்கு ஓம் அல்லது பிரணவமானது படகாக அமைகிறது. இப்படகின் உதவியால் பலர் சம்சார சாகரத்தைத் தாண்டியிருக்கிறார்கள். நீங்களும் அவ்விதம் செய்யலாம். ஓம் எனும் எழுத்தின்மீது இடைவிடாத பாவத்தோடும் அர்த்தத்தோடும் தியானம் செய்து ஆத்மனை அறிந்து மகிழ்வீர்களாக. எங்கும் நிறைந்த ஆத்மனுக்கு ஓம் எனும் எழுத்து ஒரு அடையாளமாக இருக்கிறது. இந்த ஓம் என்பதையே சிந்தனை செய்யுங்கள். உலக சிந்தனையை விட்டு விடுங்கள். திரும்பத் திரும்ப வரமுயலும் உலக எண்ணங்களைத் தவிர்த்து நில்லுங்கள். ஆத்மனைப் பற்றியே எண்ணுங்கள். ஓம் என்பதோடு, பரிசுத்தம், பரிபூர்ணம், விடுதலை, ஞானம், மரணமின்மை, நித்தியத்தன்மை, முடிவில்லாதது போன்றவற்றைக் குறித்த எண்ணங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். மனதில் ஓம் எனும் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள். அனைத்தும் ஓம் ஆகவே இருக்கிறது. ஓம் என்பது இறைவன், ஈசுவரன் அல்லது பிரம்மத்தின் அடையாளமாக அமைந்துள்ளது. உங்களுடைய உண்மைப் பெயரும் ஓம் என்பதேயாகும். உங்களுடைய வாழ்க்கை, எண்ணம், புத்தி அனைத்திற்கும் ஓம் என்பதே ஆதாரம். பொருள்களைக் குறிக்கும் எல்லா வார்த்தைகளும் ஓம் என்பதையே மத்யஸ்தமாக உடையவை. இதனால் இவ்வுலகம் ஓம் அல்லது பிரணவத்தில் பிறந்து பிரணவத்தில் வாழ்ந்து, பிரணவத்திலேயே ஒடுங்கியும் நிற்கிறது. ஓம் என்பது பிரஹ்மம் அல்லது பரம்பொருளுக்கு ஒரு அடையாளம். அந்த ஓம் எனும் அக்ஷரத்தின் மீது தியானம் செய்யுங்கள். அந்த ஓம் எனும் அக்ஷரத்தை நீங்கள் தியானம் செய்யும்போது பிரணவம் குறிக்கும் பிரம்மத்தை நினைத்துக் கொள்ளுங்கள்.
குருதேவர் சிவானந்தரின் இருபது இணையற்ற போதனைகள்
1. நாள்தோறும் அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்திருங்கள். பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அந்தக்காலம் கடவுள் தியானத்திற்கு மிகவும் உகந்தது.
2. பத்மாசனம், சித்தாசனம் அல்லது சுகாசனத்தில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக உட்கார்ந்து அரைமணி நேரத்திற்கு ஜபம், தியானத்தில் ஈடுபடுங்கள். இந்தக்கால அளவை மெல்ல மெல்ல மூன்று மணி நேரத்திற்கு உயர்த்துங்கள். பிரம்மச்சர்யத்தைப் பேணவும், ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், சிரசாசனத்தையும், சர்வாங்காசனத்தையும் செய்யுங்கள். உலாவுதல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒழுங்காக மேற்கொள்ளுங்கள். இருபது முறை பிராணாயாமம் செய்யுங்கள்.
3. ஓம் அல்லது ஓம் நமோ நாராயணா, ஓம் நமசிவாய, ஓம் நமோ பகவதேவாஸுதேவாய, ஓம் சரவணபவாய நம, சீதராம், ஸ்ரீராம், ஹரிஓம், காயத்ரி ஆகிய ஏதாவது உங்களுக்குப் பிடித்தமானதொரு மந்திரத்தை 108 தடவை முதல் 21600 தடவை வரை (200 மாலைகள் 108 = 21600) அன்றாடம் ஜபம் செய்யுங்கள்.
4. சாத்வீக உணவை உட்கொள்ளுங்கள். மிளகாய், புளி, வெள்ளைப் பூண்டு, வெங்காயம், புளிப்பான பொருள்கள், எண்ணெய், கடுகு, பெருங்காயம் ஆகியவற்றைத் தவிர்த்து மிதமாக உண்ணுங்கள். மனம் அதிகமாக விரும்பும் பொருட்களை வருடத்திற்கு இரு வாரங்கள் வெறுத்து ஒதுக்குங்கள். எளிய உணவை உட்கொள்ளுங்கள். பாலும் பழமும் தியானத்திற்கு உதவும் உணவுப்பொருட்கள். வாழ்வதற்கு உரிய மருந்து போன்று உணவை உட்கொள்ளுங்கள். மகிழ்வுக்காக உண்பது பாபம். ஒரு மாதத்திற்கு உப்பையும் சர்க்கரையையும் உட்கொள்வதை விலக்குங்கள். சாதம், பருப்பு, சப்பாத்தி ஆகியவற்றில் தொடுகறி இன்றி நீங்கள் வாழ முயல வேண்டும். குழம்பிற்கு உப்பு அதிகம் வேண்டும் என்றும், தேயிலை, காபி அல்லது பாலுக்கு அதிகம் சர்க்கரை வேண்டும் என்றும் கேட்காதீர்கள்.
5. பூட்டும் சாவியும் கொண்ட தனி அறையை தியானத்திற்கு பயன்படுத்துங்கள்.
6. ரூபாய்க்கு 10 பைசா வீதமோ அல்லது உங்களுடைய தகுதிக்கு ஏற்றவாறோ ஒவ்வொரு மாதமும் முடிந்தால் ஒவ்வொரு நாளும் ஒழுங்காக தருமம் செய்யுங்கள்.
7. கீதை, ராமாயணம், பாகவதம், விஷ்ணு சஹஸ்ரநாமம், ஆதித்ய ஹிருதயம், உபநிடதங்கள் அல்லது யோகவாசிஷ்டம் ஆகிய நூல்களைத் தவறாமல் தினமும் அரைமணி நேரம் வரை பாராயணம் செய்து தூய விசாரத்தை மேற்கொள்ளவும்.
8. வீரிய சக்தியை மிக ஜாக்கிரதையுடன் காப்பாற்றவும். வீரிய சக்தியே கடவுள்; அதுவே செல்வம்; வாழ்க்கையினுடைய சாரமும் அறிவினுடைய சாரமும் அதுவே தான்.
9. பிரார்த்தனை சுலோகங்கள் மற்றும் ஸ்தோத்திரங்கள் சிலவற்றை மனப்பாடம் செய்து ஜபம், தியானம் தொடங்குமுன் ஆசனத்தில் உட்காரும்போதே சொல்லி வாருங்கள். இது உங்கள் மனதை விரைவிலேயே உயர்வடையச் செய்யும்.
10. தீயவர்கள் தொடர்பு, புகைபிடித்தல், புலால் புசித்தல், மதுவகைகள் அனைத்தையும் அறவே விலக்கி ஒதுக்குங்கள். தீய சுபாவம் எதையும் வளர்க்காதீர்கள். நல்லார் தொடர்பில் தொடர்ந்து நில்லுங்கள்.
11. ஏகாதசி அன்று உபவாசம் இருங்கள். அல்லது பாலும் பழமும் சாப்பிடுங்கள்.
12. கழுத்திலோ அல்லது பாக்கெட்டிலோ அல்லது இரவில் தலையணைக்கு அடியிலோ ஜபமாலை ஒன்றை வைத்திருங்கள்.
13. நாள்தோறும் இரண்டு மணி நேரமாவது மௌனத்தைக் கடைபிடியுங்கள்.
14. எந்த நிலையிலும் உண்மையைப் பேசுங்கள். குறைத்து பேசுங்கள். இனிமையாகப் பேசுங்கள்.
15. உங்கள் தேவைகளைச் சுருக்கிக் கொள்ளுங்கள். உங்களிடம் நான்கு சட்டைகள் இருந்தால் அவற்றை மூன்று அல்லது இரண்டாகக் குறையுங்கள். மகிழ்வோடும் நிறைவோடும் வாழுங்கள். வேண்டாத கவலைகளை விடுத்து நில்லுங்கள். எளிமையான வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள். உயரிய சிந்தனையைக் கொண்டு விளங்குங்கள்.
16. ஒருவருக்கும் தீங்கு செய்யாதீர்கள். அன்பு, பொறை, தயை இவற்றால் கோபத்தை அடக்குங்கள்.
17. வேலைக்காரர்களை நம்பி வாழாதீர்கள். தன்னம்பிக்கையே எல்லா பண்புகளுக்கும் தலையானது.
18. படுக்கைக்குச் செல்லும் முன் அன்று நீங்கள் செய்த தவறுகளை ஒவ்வொன்றாக நினைத்துப் பாருங்கள். பெஞ்சமின் பிராங்களின் போன்று அன்றாட டயரியையும் தன்னைத் திருத்தும் பட்டியலையும் தயாரித்து வாருங்கள். முன் செய்த தவறுகளை எண்ணி வருந்தாதீர்கள்.
19. ஒவ்வொரு நிமிடமும் கூற்றுவன் வருகையை நினைந்து நில்லுங்கள். கடமையை நிறைவேற்றுவதில் எப்பொழுதும் பின் வாங்காதீர்கள். நன்னடத்தையை மேற்கொண்டு ஒழுகுங்கள்.
20. காலையில் படுக்கையைவிட்டு எழுந்திருக்கும் போதும், இரவில் உறங்கச் செல்லும் பொழுதும் இறைவனை நினையுங்கள். ஆண்டவனிடம் பூரண சரணாகதி அடையுங்கள்.
ஆத்மீக சாதனைகள் அனைத்தினுடையவும் சாராம்சம் இதுவேயாகும். இது உங்களை மோட்ச வாயிலுக்கு அழைத்துச் செல்லும். இவ்வரிய ஆத்மீக நியதிகளை ஒழுங்காகக் கடைபிடிக்க வேண்டும். இதில் எந்தவிதமான மனத்தளர்ச்சிக்கும் இடம் தரக்கூடாது.
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !!!
ஜகத்குரு சிவானந்தரின் பொன்னுரைகள்
1. கடவுள் உண்டு. உன்னுள்ளே கடவுள் இருக்கிறார். சாந்தம், ஆத்மா, பிரம்மம், கடவுள், சுதந்தரம், அமரத்தன்மை, முக்தி எல்லாம் ஒருபொருட்சொற்கள்.
2. எப்போதும் கடவுளையே நினைத்தால் தீமைக்கே இடமிராது.
3. தொல்லை மோதும்போது நாத்திகன்கூடக் கடவுளை நினைக்கிறான்.
4. தத்துவ வாதங்களும், வாய் வீச்சும் வீணே. உள்ளாழ்ந்தே கடவுளைக் காணலாம். உண்மை உள்ளே. ஆத்மானுபவம் இல்லாத வாயளப்புப் பாண்டித்தியம் காசு பெறாது.
5. ஆத்ம சுகமே பரம சாந்தம். ஆத்ம சாந்தம் அடைந்தால், இந்திரிய விஷயங்கள் துச்சமாகத் தோன்றும். நிலையில்லாத இந்த உலகின் விஷயாதிகள் ஒருக்காலும் சுகமோ சாந்தமோ தராவாம். நீ உலகரசனானாலும் சாந்தானந்தம் வராது. மனதை அடக்கு; சித்த சுத்தி பெறு; அன்புப் பாலம் அமை; சாந்த ராஜ்யத்திற் புகு. தன்னமைதியின்றி உலகமைதியில்லை.
6. உலகம் மனோமாத்திரம்; காலம் கானல் நீரோட்டம். இறந்த காலம் இன்று கனவு போலத் தோன்றுகிறது; நிகழ்காலமும் நாளை, கனவுபோலத் தோன்றும். உலகரங்கில் போலிப் புலன்களின் விஷயகானத்திற்கு ஏற்றபடி, மனப்பேயே பல வேஷம் போட்டு ஆடுகிறது. உலகம் மாயா விலாசம்; பிரம்ம ஞானம் உதித்தால் மாயை மறையும். பிறப்பும் இறப்பும் உலக நாடகத்தின் இரண்டு காட்சிகளாகும். உலகைக் கண்டு அஞ்சாதே, மயங்காதே. உன் சொரூபத்தை அறி; அது சச்சிதானந்தம்.
7. சள சள வென்று பேசாதே; அது உன் சக்தியை வீணாக்கும். நூறாண்டுகள் பேசுவதினும் ஒரு நாள் தியானிப்பது மேல். ஊண், உறக்கம், பேச்சு, செயல் அனைத்திலும் மிதமாயிரு. அளவறிந்து வாழ். சாதனம் செய்.
8. உலகம் வேறு - நீ வேறு என்று எண்ணாதே; மன விகாரத்தை ஒழி. ஏகரச பாவனையே இன்பம். அனைத்திலும் தானான ஆன்மாவைக் காண்பதுவே மனித வாழ்வின் இலட்சியமாகும்.
9. உடல், மனம், உள்ளம், ஒழுக்கம், ஆத்ம உணர்ச்சி எல்லாம் உறுதியாயிருக்க வேண்டும். விடாது முயல்; முறையாகப் பயில். இந்தப் பிறவியிலேயே கடவுளை அடையத் தீவிரமான சாதனம் செய்.
10. ஞானத்தால் அஞ்ஞானம் ஒழிதலே துன்பமொழிந்து இன்பம் வளரும் வழி. அவித்தையாலே தான் மனிதன் துன்ப வெள்ளத்தில் விழுந்து தத்தளிக்கிறான். அந்தரங்கத்தில் எல்லாரும் ஞானவான்களே! அதனாலே தான் முட்டாள் கூடத் தன்னைக் கெட்டிக்காரன் என்று நினைக்கிறான்.
11. உலகில் பல துக்க அனுபவங்களால் மனிதன் புத்தி தெளிகிறான். அனுபவம் அறிவைத் தருகிறது. இடர்களைப் பொறுப்பதால் மனத்திட்பமும் கடவுளுறுதியும் உண்டாகும்; அகம்பாவம் ஒழியும். இடர் வரும்போது கலங்காதே; தைரியமாக வெல். ஒவ்வொரு இடரும் மனவுறுதியைத் திண்மையாக்கும் சாதனமாகும். வைரவுறுதியுடன் இடர்களையும் அபாயங்களையும் எதிர்த்து நின்று வெற்றி கொள். எப்போதும் மகிழ, தொல்லைகளை நகைத்தொழி. மூடக் கோழை போல முனங்காதே. தீரனாயிரு.
12. நானா பாவனை செய்வது மனமே. மனம் பிரம்மத்தினின்றே தோன்றி, சங்கற்பமாக விரிகிறது. மனம் ஸம்ஸ்கார மூட்டை. சித்த விருத்திகளின் சமுதாயம். மனம் நிலையற்றது. அது நிமிஷத்திற்கு நிமிஷம் உருவும் நிறமும் மாறுகிறது. மனம், கண்ணிமைப்பதற்குள் உலகை ஆக்கும்-நீக்கும். மனம் ஜடமே. சைதன்யப் பிரம்மத்தாலே தான் அது அறிவுள்ளதாகக் காண்கிறது. மனத்தின் உள்ளுருவே உணர்வு; புறவுருவே உலகம்.
13. உருக்கிய தங்கம் எதில் வார்த்தாலும் அதன் உருக்கொள்கிறது. அதுபோல் மனமும் எந்த விஷயத்தை நினைக்கிறதோ, அதன் உருவையடைகிறது. ஆரஞ்சை நினைத்தால் உடனே அது ஆரஞ்சுப் பழமாகிறது. பொறாமை கொண்டால் பொறாமைத் தீயாகிறது. யார்மேல் பொறாமையோ அவர் தீமையெல்லாம் அதற்கும் வந்து சேருகிறது. ஒரு பெண்ணை நினைத்தால் மனமே பெண்மயமாகிறது. எந்த குணதொந்த விகாரத்தை நினைத்தாலும் மனம் அதுவாகிறது. கடவுளையே நினைத்தால் மனம் கடவுள் தன்மை பெறுகிறது. முதலில் தாமஸ-ராஜஸ நினைவிலிருந்து மாற்றி, மனதை ஸாத்வீக மயமாக்க வேண்டும். சாத்வீக மனது சுத்த மனதாகும். பிராணாயாமம், தியானம் முதலிய சாதனங்களால் சித்தசுத்தியும் மனஒருமையும் பெறலாம்.
14. சித்த சுத்தியும் ஏகாக்ரமும் இருந்தால், மனதை நல்ல பாவனையில் திருப்பலாம். கருணை, அன்பு, பக்தி, பரோபகாரம் முதலிய நல்ல குணங்களில் மனதைச் செலுத்தினால், அந்தந்தக் குணவடிவுகளைக் கொண்டு மனம் சீர் பெறும் மனம் மின்சாரத்தை விட வலியது. மனம் நினைவின் ஆட்டம், நினைவு எப்படி. வாழ்வு அப்படி. தீய நினைவால் வாழ்வே தீமையாகும். நல்ல நினைவால் வாழ்வெல்லாம் நலமாகும். ஆத்திரம், பொறாமை, வஞ்சம், காமக் குரோதாதி நினைவுகளால் மனம் நரகமாகி, வாழ்வும் எமகண்டமாகும். சாந்தம், தெய்வ பக்தி முதலியவற்றால் மனம் சக்தி பெற்று, வாழ்வும் நிம்மதியாக நடக்கும். மனதைப் பண்படுத்துவதே வாழ்வைப் பண்படுத்துவதாகும். மனம் போல மங்கலம்.
15. பெரும்பாலோர் மனதை வெளியே அலைய விட்டு அமைதியிழந்து வருந்துகிறார்கள். மனம் அடங்கினாலே அமைதி கிடைக்கும். பிராணனாகிய கடிவாளத்தை இழுத்துப் பிடித்து, மனக்குதிரையை அடக்க வேண்டும். உலகில் காணும் கட்சிப் போர்கள் ராஜஸ மனத்தின் வேலையாகும். ஒரு குரு, ஓர் இடம், ஒரு சாதனத்தில் தீவிரமாக நின்றால் மனம் படிமானத்திற்கு வரும்.
16. சொற்படி நினைப்பு; நினைவின்படி செயல் நிகழ வேண்டும். உண்மை யொழுக்கத்தால் மனம் அடங்கி நடக்கும். மலையை உன்னால் தகர்க்க முடியாது. ஆனால் மலை நினைப்பைத் தகர்க்கலாம். நினைப்பெல்லாம் ஒழிந்து நிச்சிந்தையானால் மனம் என்பதே இராது.
17. மனதிற்கு அடிமையாகாதே. சித்த விருத்திகளை அடக்கு; மனதை மிஞ்ச விடாதே. நிந்திப்பவன் மனம் நித்திக்கத்தக்க தீமையுள்ளது.
18. செருக்கை விடு; செல்வச் செருக்கு, அதிகாரச் செருக்கு, சாத்வீக அகங்காரம் ஆபத்தானது. மனத்தொல்லை மனிதனைக் கெடுக்கும். மனம், சினம், ஆத்திரம், பொறாமையுற்றால் இரத்தம் கொதித்து விஷத்தன்மையுறும்.
19. அச்சத்தை வென்றவன் மனதையும் வெல்வான்; அனைத்தையும் பெறுவான். தைரிய உணர்ச்சி அச்சத்தை மாற்றும் மருந்தாகும்.
20. புலனடக்கமின்றி எதுவும் நிறைவேறாது. மனமின்றி புலன்கள் தாமே ஒன்றும் செய்ய முடியாது. மனத்தை அடக்கினால் புலன்களும் அடங்கிப் போகும். மனப்புலன்கள் அடங்கினாலே சுத்தாத்ம நாதம் கேட்கும். பொறி புலன்களை அடக்கு. மனதை நிச்சலமாக்கு; உள்ளே ஆழ்ந்து தியானி; அமரானந்த அமுதுண்.
21. மனிதன் காமத்திற்கு அடிமையாகிக் கெட்டான். காமக்குழியில் விழ, விழ நைப்பாசை அதிகரித்து, அதை அடக்குவதே கடினமாய் விடும். வாளையும், சீறும் பாம்பையும் விடச் சினமும் காமமும் அபாயமானவை. காமசிந்தனையே ஒழிய வேண்டும்; அப்போதுதான் சாதனம் இயலும்.
22. பிரமசரியமே பரிசுத்தம்; அதுவே பரமசாந்தம். பிரமசரியத்தால் தேஜஸ் வளரும்; யோக சக்தி மிகும்; உன்னத நிலை அடையலாம். வீரியபலமே பேரின்பத் திறவுகோல். காமத்தை முற்றிலும் வென்றவன் பிரம்மமேயாகிறான். நல்ல காரியங்களில் சதா ஈடுபட்டிருத்தல் பிரமசரியத்திற்கு ஒரு வழியாகும்.
23. ஆசையே விஷயப் பற்றாகும். ஆசையறுந்தால் ஆனந்தம். ஆசை மேவிய ராஜஸ மனிதன் ஒருக்காலும் அத்யாத்ம வாழ்வு பெற மாட்டான். ஆசை ஒரு சித்தவிருத்தி; அமைதிக்குப் பகை. போகத்தால் தணியாது. ஆசாபாச முனைப்பால் பலர் யோகமிழந்தனர். வாஸனாத்ரயங்களைக் கிழித்தெறிந்து ஊன் கூட்டை விட்டுச் சிங்கம் போல் வெளியே வருக. நிராசையாளனே உலகில் நிறைவான செல்வன். ஆசையை வென்ற முனிவன் அடையும் சுகத்தை இந்திரன்கூடப் பெற முடியாது.
24. எல்லாரும் உலகில் துன்பமொழிந்த இன்பம் வேண்டுகின்றனர். பற்றினாலே தான் நோவுத் துயரும் பந்தமும் உண்டாகின்றன. தேகாத்ம புத்தியும் தற்போதமுமே துன்பத்திற்குக் காரணமாகும். சுக துக்கங்களைச் சமமெனக் காண். இசை வசைகளைப் பாராட்டாதே. உலகை மகிழ்விப்பது கடினம். சங்கரர், ராமகிருஷ்ணாதி மகான்களையும் உலகம் பழிக்கிறது! உலகைத் திருப்தி செய்ய முடியாது; ஆத்ம திருப்தி பெறு.
25. ஏகாக்ர தியானமே நித்யானந்த அமர நிலைக்கு வழியாகும். பரமாத்ம தியானமே துக்க நிவர்த்தி தரும். ஜபமாலையைவிட லிகித ஜபத்தில் ஏகாக்ரம் அதிகமாகும். இயம நியமாதிகளைப் பயின்றாலே தியானம் கைகூடி வரும். மனம் தொல்லையற்று நிலைத்தாலே தியானம் ஓடும். மனோலயம், தியானப் பொருளில் மனதை ஈடுபடுத்தும். மனோ நாசமே பிரம்ம ஞானமும் முக்தியுந்தரும்.
26. கடவுள் அன்பருக்கு உருவாக, அறிஞருக்கு அருவாக உணர நிற்கும், பக்தர் தியானத்திற்கே பிரம்மம் பல பெயர் வடிவ பேதங்களாகத் தோன்றுகிறது. பெயர் வடிவங்கள் பலவானாலும் சத்துப்பொருள் ஒன்றே. ஒன்றையே தியானித்து அதிலேயே லயித்துக் கலப்பதே இன்பம்.
27. ஓங்காரத் தியானம் பிரம்மஞானந்தரும்; ஆத்ம தியானம் நித்திய அமரானந்தம் அளிக்கும். தீவிர வைராக்கியமான ஓமக் குழலால், தியானாக்னியைத் தூண்டுக. சூக்ஷ்மமான சுத்தபுத்தி பிரம்மத் தியானத்திற்கு அவசியமாகும். சிரவணமனன-நித்தியாசனங்களும் வைராக்கியமும் சித்தித்த பிறகே, தியானமும் சித்திக்கும்.
28. மனோராஜ்யம் தியானத்திற்குக் கெடுதல். நினைப்பற்ற நிம்மதியிலே தான் தியானமும் நிலைக்கும். கர்மம் ஆரம்பிகளுக்குத் துணையாகும்; யோகாரூடர்களுக்கு இடராகும். பழைய நினைவுகளை விலக்கு. விรทக்ஷபத்திற்கு இடந்தராதே. மெல்ல மெல்லப் பக்குவமாகத் தியானத்தைத் தீவிரமாக்கு.
29. தியானத்தில் ஒளிக்காட்சி நல்லதே. நீ தூல உணர்வைத் தாண்டுவதன் அறிகுறியே ஒளி. ஆனால் ஒளிக்காட்சி பிரமாதமானதில்லை. தீவிர தியானத்தால் மனம், மூளை நரம்புகளில் பெரிய மாறுதல்கள் உண்டாகும்; அமைதி நிலைக்கும்.
30. மனம் தியானத்தில் முழுதும் கரைந்து போதலே சமாதியாகும். சமாதி என்பது கல்லைப் போல் உட்கார்ந்திருப்பதன்று. சமாதியில் ஜீவாத்ம - பரமாத்ம ஐக்கியம் உண்டாகிறது. சமாதியில் தற்போதும் இழந்து அருட்போதம் உதித்து, அறிபொருளுடன் அறிவு கலந்து ஒன்றிப் போகிறது. நிர்விகல்ப சமாதியால் ஜனன மரணங்களை யோகி வெல்கிறான்.
31. உலகாயதர் உறவை நீக்கு; மகாத்மாக்களான புனிதர் உறவை நாடு. நல்லார் உறவே பரமபாவனமாகும். நல்லாரைக் காண்பதுவும் நன்றே. தீயாரைக் காண்பதுவும் தீதே.
32. ஜப சாதனத்தால் சித்த சுத்தியும் ஏகாக்ரமும் உண்டாகும். திவ்ய கானத்தால் ஆனந்தம் உண்டாகும். சுயநலத்தையும் அகம்பாவத்தையும் உதறித் தள்ளி, தெய்வத்தைச் சரண்புகு. நிஷ்காம்ய கர்மமும் பரோபகாரமும் செய். அருள் வளரும்.
குருதேவர் சிவானந்தர் எழுதிய நாட்குறிப்பில் சில :
1. தொண்டு செய்; நாராயணராக நரரை நினைத்துத் தொண்டு செய்; சிவமயமாக சீவரை அன்பு செய்.
2. சாதிமத பேதம் பாராது தொண்டுசெய்; பங்கி, பாவி. போக்கிரி, சாக்கிலி, ஏழை எளியவர் அனைவருக்கும் தொண்டு செய்.
3. குறித்த நேரத்தில் குறித்ததைச் செய். காலத்தை வீணாக்காதே; வைத்திய உதவிக்கும் இரண்டொரு மணிநேரமே ஒதுக்கு; தியானம் பக்தி-சாதனமே முதன்மை.
4. பகைக்காதே; யாரையும் வெறுக்காதே; பிறர் துன்புறுத்தினாலும் நன்மையே நினை! தீமையை நினைக்காதே; மனப்புண்ணை மற; சுயாபிமானத்தைத் துற; குழந்தை போல மாசற்று, சூதுவாதற்றிரு.
5. ஏட்டிக்குப் போட்டி செய்யாதே. துன்பங்களைப் பொறுத்திரு.
6. தூற்றல், வசை, பழி, தீக்குறளை - எல்லாம் பொறு. தீமைக்கும் நன்மையே செய்.
7. அக்ரோதம் நிர்வைரம் இரண்டும் அமைதியைத் தரும்.
8. பணிவு மட்டு மரியாதை, நன்மை பெருந்தன்மை, சாத்வீகம், நளினம், மென்மை, கருணை - உதவி இவற்றை எங்கும் காட்டு.
9. சளசளப் பேச்சை விடு. கேட்டதற்கு உரிய மறுமொழி சுருக்கமாய்ச் சொல்லிச் சும்மா இரு; வாதாடாதே.
10. எல்லாம் சிவமயம்; பிரம்மமயம் என்றுணர். எல்லோரையும் வணங்கு. மேல் கீழ் பாராதே.
11. தியாகமே மோட்சத்திற்கான திறவுகோல்.
12. ஆசையற்றவனே அகில உலகிம் பெரும் பணக்காரன்.
13. உண்மை பக்தன் ஒருவரையும் வெறுக்க மாட்டான்.
14. நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படியே ஆகிறீர்கள்.
15. உலகிலுள்ள அனைத்து சக்திகளிலும் அன்பே அதிக ஆற்றல் படைத்தது.
16. சமயம் என்பது கடவுளில் வாழ்வதாகும். அது வெறுமனே கடவுளைப் பற்றி பேசுவதல்ல.
(இமயஜோதி சுவாமி சிவானந்தர்)

Comment