Announcement

Collapse
No announcement yet.

பொன்னம்பல தத்துவம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பொன்னம்பல தத்துவம்

    பொன்னம்பல தத்துவம்
    ஜூன் 24 ஆனி உத்திரம்


    ஒரு ஆண்டில் ஆறு நாட்கள், நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்படும். இதில், மூன்று நட்சத்திர நாட்கள், மூன்று திதி நாட்கள். ஏன் ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்த வேண்டும்... ஏழு நாட்களோ, 10 நாட்களோ, 70 நாட்களோ நடத்தலாமே என்ற கேள்வி எழுகிறதல்லவா! இதற்கு காரணம் உண்டு.
    பொதுவாக, கோவில்களில் தினமும் ஆறுகால பூஜை நடை பெறும். அதாவது, அதிகாலை, 4:00 மணிக்கு, திருவனந்தல் என்னும் அதிகாலை பூஜையும், 6:00 மணிக்கு, காலசந்தி எனப்படும் காலை பூஜையும் நடக்கும். பகல், 12:00 மணிக்கு உச்சிகாலம் எனப்படும் மதிய பூஜையும், மாலை, 4:00 மணிக்கு சாயரட்சை எனப்படும் சாயங்கால பூஜையும், இரவு, 7:00 மணிக்கு ராக்காலம் எனப்படும் இரவு பூஜையும், 9:00 மணிக்கு அர்த்தஜாமம் எனப்படும் பள்ளியறை பூஜையும் நடக்கும்.
    தேவர்களும் இதே போல, ஆறுகால பூஜையை நடத்துவர். ஆனால், அவர்களுக்கு ஒருநாள் என்பது, நமக்கு ஒரு ஆண்டு. அவர்களுக்கு தட்சிணாயணம், உத்ராயணம் என்ற இருவகை காலப்பிரிவுகள் உண்டு. தை முதல் ஆனி வரை (காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை) உத்ராயணம்; ஆடி முதல் மார்கழி வரை (மாலை, 6:00 மணி முதல் அதிகாலை, 6:00 மணி வரை) தட்சிணாயணம்.
    அதாவது, அவர்களது அதிகாலைப் பொழுது, நமக்கு மார்கழி. காலைப் பொழுதோ, மாசி மாதம்; மதியம் - சித்திரை திருவோணம்; மாலைப்பொழுது - ஆனி; ராக்காலம் - ஆவணி; அர்த்தஜாமம் - புரட்டாசி. இதனால் தான், தேவர்களின் அதிகாலைப் பொழுதான மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜருக்கு அபிஷேகம் நடத்துகிறோம்.
    இதை, ஆருத்ரா தரிசனம் என்பர். அடுத்து, மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசியன்று காலை, 6:00 மணிக்கும், சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தன்று மதியம், 12:00 மணிக்கும் அபிஷேகம் செய்வர். இதையடுத்து, ஆனி உத்திரத்தன்று மாலை, 4:00 மணியளவிலும், அடுத்து, ஆவணி வளர்பிறை சதுர்த்தசியன்று இரவு, 7:00 மணிக்கும், புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசியன்று இரவு, 9:00 மணிக்கும் அபிஷேகம் செய்வர்.
    இந்த அபிஷேக நிகழ்ச்சிகளில் மிக முக்கியமானது மார்கழி திருவாதிரையும், ஆனி உத்திரமும் தான். மார்கழி காலைப்பொழுதில் அபிஷேகம் காண வாய்ப்பில்லாதவர்கள், ஆனி, மாலைப்பொழுதில் இந்த அபிஷேகத்தை தரிசிக்கலாம். பஞ்ச சபைகளான திருவாலங்காடு ரத்தின சபை, சிதம்பரம் பொன்னம்பலம், மதுரை வெள்ளியம்பலம், திருநெல்வேலி தாமிர சபை, குற்றாலம் சித்திர சபைகளில் இந்த அபிஷேகங்களைத் தரிசிப்பது மிகவும் சிறப்பு.
    இவற்றில் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் சன்னிதி, மனிதனின் உருவ அமைப்போடு ஒத்துப் போகிறது.
    ஒரு நாளைக்கு மனிதன் விடும் சுவாசத்தின் எண்ணிக்கையை குறிப்பிடும் விதமாக, இங்குள்ள பொன்னம்பலத்தில், நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்ட, 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள் வேயப்பட்டுள்ளன. இதில் அடிக்கப்பட்டுள்ள, 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்புகளைக் குறிக்கிறது. கோவிலில் உள்ள ஒன்பது வாசல்கள், மனித உடலிலுள்ள ஒன்பது துவாரங்களை (கண், காது, மூக்கிலுள்ள ஆறு துவாரங்கள், தொப்புள், பிறப்புறுப்பு, குதம்) குறிக்கிறது.
    மனிதனும் தெய்வாம்சம் கொண்டவனே! அவனுக்கு ஆண்டவன் தந்துள்ள உறுப்புகளைப் பயன்படுத்தி நற்பெயர் எடுக்க வேண்டும் என்பதே பொன்னம்பலத்தின் தத்துவம். நடராஜர் பற்றி அரிய தகவல்களை அறிந்து கொண்ட நாம், ஆனி உத்திர திருநாளன்று, அந்த ஆனந்தக்கூத்தனின் அருள் பெற புறப்படுவோமா!


    தி.செல்லப்பா
Working...
X