Information
ராமேஸ்வரம்: வங்கக் கடலில், கடந்த, 1964, டிச., 22ம் தேதி நள்ளிரவு, 12:30 மணிக்கு உருவான புயல், வணிக நகரமான தனுஷ்கோடியை முற்றிலும் அழித்தது. இன்றும், புயலின் எச்சங்களாக உருக்குலைந்த கட்டடங்கள் காட்சியளிக்கின்றன. புயல் தாக்கி, இன்றுடன், 50 ஆண்டுகள் ஆகிறது.
வணிக நகரம்:
Notice
இலங்கையில், ராவணனை வதம் செய்து, சீதையை மீட்டு, ராமபிரான் திரும்பிய போது, அவர் எய்த அம்பு விழுந்த இடம் தான் தனுஷ்கோடி என, ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து, 18 கி.மீ., துாரத்தில் இந்திய நாட்டின் தென்கிழக்கு எல்லையாக தனுஷ்கோடி உள்ளது. கடந்த, 100 ஆண்டுகளுக்கு முன், புனித தலமாகவும், ஆங்கிலேயர் ஆட்சியில் சிறந்த வணிக நகரமாகவும், ராமேஸ்வரத்தை விட பிரசித்தி பெற்ற நகரமாகவும் தனுஷ்கோடி விளங்கியுள்ளது.கடந்த, 1914ல், தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்தும், சென்னை முதல் தனுஷ்கோடி வரை, 'போர்ட் மெயில்' என்ற எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் இருந்தது.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின், இரு போக்குவரத்து வசதிகளும், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. தனுஷ்கோடியில் புனித நீராடினால், 'பாவங்கள் நீங்கி, புண்ணியம் சேரும்' என்பது இந்துக்களின் நம்பிக்கை.இத்தகைய தனுஷ்கோடி, புயலின் கோர தாண்டவத்தால் முற்றிலும் அழிந்து போன சோகத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இதே நாளில், அதாவது 1964ம் ஆண்டு டிச., 22ம் தேதி நள்ளிரவு, 12:30 மணியளவில், வங்கக் கடலில் உருவான புயலால், ராட்சத அலைகள் உருவாகி, தனுஷ்கோடியை தாக்கின.அப்போது, உறக்கத்தில் இருந்த மீனவர்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்கள் என, ௧,௦௦௦க்கும் மேற்பட்டோர், புயலின் கொடூர பசிக்கு இரையாயினர். இங்குள்ள ரயில்வே ஸ்டேஷன், சர்ச், தபால் அலுவலகம், கோவில்கள், தங்கும் விடுதிகள், ஊராட்சி அலுவலக கட்டடங்கள் இடிந்து உருகுலைந்து விட்டன.
சிதைந்த கட்டடங்கள்:
அவை, இன்றும், புயலின் எச்சங்களாக காட்சியளிக்கின்றன. இதை தேசிய பேரிழப்பாக அறிவித்த மத்திய அரசு, தனுஷ்கோடியில் மனிதர்கள் வாழ தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தது.அன்று முதல், இன்று, 50 ஆண்டுகள் ஆகியும், தனுஷ்கோடிக்கு சாலை, ரயில், மின்சாரம், குடிநீர் வசதி இல்லாததால், சிதைந்த கட்டடங்கள் சுற்றுலா பயணிகளுக்கு புராதன சின்னங்களாக காட்சிஅளிக்கின்றன.தற்போது, தனுஷ்கோடிக்கு சாலை அமைக்க, மத்திய அரசு, 57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பணிகளை துவக்கி உள்ளதால், அழிந்து போன தனுஷ்கோடியை மீண்டும் காண முடியும் என, சுற்றுலா ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
அடிப்படை வசதி அறவே இல்லை:
சுற்றுலா ஆர்வலர் என்.ஜெயகாந்தன் கூறியதாவது: தனுஷ்கோடியில், புனித நீராடவும், புயலால் இடிந்த கட்டடங்களை பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு, போக்குவரத்து, குடிநீர், மின் வசதி இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.இங்கு, சேதமடைந்த கட்டடங்களை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும். தனுஷ்கோடிக்கு தேசிய சாலை அமைக்கும் பணி முடிந்தும், அங்கு பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
கலங்குகிறது கண்:
புயலில் உயிர் தப்பிய தனுஷ்கோடி ரயில் இன்ஜின் பயர்மேன் நாகலிங்கம், 92, கூறியதாவது:கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில், மதியம் முதல், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. நள்ளிரவு, 100 கி.மீ., வேகத்தில் வீசிய காற்றால் எழுந்த ராட்சத அலைகள், ஊருக்குள் புகுந்து, ஆயிரக்கணக்கானவர்களை காவு வாங்கின.நானும், மற்றும் சிலரும் கடல் நீரில் நீந்தி, மணல்மேட்டில் ஏறி உயிர் தப்பினோம். மறுநாள் காலை, 9:00 மணிக்கு மேல் எங்களை படகில் மீட்டனர். எங்கு பார்த்தாலும் பிணக் குவியலாக இருந்ததை, இப்போது நினைத்தாலும் கண் கலங்குகிறது.இவ்வாறு அவர் கூறினார்.