
கோல்கட்டா: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் "டுவென்டி-20' போட்டி இன்று நடக்கிறது. சமீபத்தில் ஒரு நாள் தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, தனது வெற்றியை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து ஒரு நாள், ஒரே ஒரு "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இதில் இந்தியா 5-0 என ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. இன்று "டுவென்டி-20' போட்டி, கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.
இந்திய அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. இன்று காம்பிருக்கு திருமணம் என்பதால் துவக்க வீரர்களாக ரகானே, உத்தப்பா களமிறங்கலாம். உள்ளூர் "டுவென்டி-20' போட்டிகளில் அசத்திய உத்தப்பா, தனது திறமை நிரூபிக்கலாம். "மிடில் ஆர்டரில்' சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி, யூசுப் பதான், கேப்டன் தோனி அடங்கிய பெரும் படையே அதிரடிக்கு தயாராக உள்ளது.
ஜடேஜா நம்பிக்கை:
பவுலிங்கில் ஜடேஜா, அஷ்வின், வருண் ஆரோன் நம்பிக்கை தருகின்றனர். யூதப் பதான் சுழலில் அசத்தலாம். பிரவீண்குமார், வினய் குமார் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம்.
நெருக்கடியில் சாம்பியன்:
"டுவென்டி-20' உலக சாம்பியனான இங்கிலாந்து அணி, சுவான் தலைமையில் களமிறங்குகிறது. கீஸ்வெட்டர் அதிரடி துவக்கம் தரலாம். "டுவென்டி-20' போட்டியின் "ஸ்பெஷலிஸ்ட்' அலெக்ஸ், பட்லர் ஆகியோருடன் இணைந்து ரவி போபராவும் மிரட்டலாம்.
இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில், இங்கிலாந்தின் ஸ்டீபன் பிரஸ்னன், சமித் படேல் ஆகியோர் பவுலிங்கில் ஆறுதல் தந்தனர். இவர்களுடன் மீக்கரும் இணைந்து இந்திய பேட்ஸ்மேன்களின் ரன்குவிப்பு தடை போடலாம்.
ஆறுதல் வெற்றியை பதிவு செய்ய இங்கிலாந்து அணியும், தொடர் வெற்றி பெற இந்தியாவும் ஆர்வமாக இருப்பதால், இன்று விறுவிறுப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.
கொலை மிரட்டல்
இங்கிலாந்து வீரர் சுவானுக்கு ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்தது. அதிலும் ஐந்தாவது போட்டியில் வலுவான துவக்கம் கிடைத்தும், அநியாயமாக தோற்றது. இதனால் ஆத்திரமடைந்த இங்கிலாந்து ரசிகர்கள், சுவானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து இவர் கூறுகையில்,""ரசிகர்களின் ஆத்திரத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும், நடந்தது வெறும் கிரிக்கெட் போட்டி தான். இதற்காக "டுவிட்டர்' இணையதளம் மூலம் நூற்றுக்கணக்கானோர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்ததை ஏற்றுக் கொள்ள முடியாது,''என்றார்.
[
