செல்லம்மா!
முற்றத்தில் தொங்கிய தூக்கணாங்குருவிக் கூட்டை, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் செல்லம்மா. எந்த அறிவியலுக்கும் சவால் விடும் வேலைபாட்டுடன், தலைகீழாய் தொங்கிய கூட்டை பார்க்க பார்க்க, இறைவனின் படைப்பை எண்ணி, மனம் வியந்தது.
''என்னக்கா... இப்படி உட்கார்ந்துட்டு இருக்க...'' பக்கத்தில் வந்து அமர்ந்து, ஆதரவாய் பார்த்தான் தம்பி தங்கவேலு. பக்கத்து வீட்டில் இருந்தாலும், தங்கவேலுவிற்கு எப்போதும் செல்லம்மாவின் மீது தான் நினைப்பு.
ஆறு ஆண்பிள்ளைகளுக்கு நடுவில், அழகான நிலவாய் பிறந்த செல்லம்மா, குடும்பத்தில் நடக்கிற எல்லா நல்ல காரியங்களிலும் குத்துவிளக்காய் வந்து நிற்பாள். அந்த மங்களத்திற்கு பங்கம் ஏற்படுத்தியவனை, அத்தனை எளிதாய் மன்னிக்க முடியுமா?
ஊருக்குள் நல்ல பேரோடும், புகழோடும் இருந்தவன் தான் கிருஷ்ணமூர்த்தி. அவனுக்கு உறவு முறையில் தம்பி முறையான ரங்கராஜன், ஊரில் தொழில் நசிந்து போனது என்று, இவர்கள் வீட்டோடு வந்து தங்கியவன், அப்பிராணியான கிருஷ்ணமூர்த்திக்கு, மதுவின் ருசியை அறிமுகப்படுத்தினான்.
குருவிக்கூட்டில் புகுந்த கருநாகம் போல், அவனுடைய ஆதிக்கத்தால், குடும்பம் சிதைய ஆரம்பித்தது.
எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிருஷ்ணமூர்த்தி கேட்கவே இல்லை. பக்கத்து வீட்டில் இருந்த தங்கவேலு, அக்கா படுகிற வேதனையை பார்க்க சகிக்காமல் கேள்வி கேட்டபோது, அவனை அடித்து விரட்டினான் கிருஷ்ணமூர்த்தி.
இக்குடி பழக்கத்தினாலேயே பார்த்து வந்த அரசுப் பணியும் கிருஷ்ணமூர்த்திக்கு கை விட்டு போனது. ரங்கராஜனின் ஆலோசனையின் பேரில், சீட்டு பிசினஸ் செய்ய எல்லாரிடமும் பணம் வசூல் செய்தான். இந்த பணவேட்டை உச்சகட்டத்தை அடைந்த ஒரு நாளில், பணத்துடன் ஊரை விட்டு ஓடிப் போனான் ரங்கராஜன்.
அன்று தான் கிருஷ்ணமூர்த்திக்கு பிடித்திருந்த தலைக் கிறுக்கும் விலகியது. உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுதான். செல்லம்மாவின் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்து மன்னிப்பு கேட்டான்.
மறுநாள், நடுநிசியில் நெஞ்சை பிடித்து விழுந்தான்; சுற்றியிருந்த உறவு கூட்டம் ஓடோடி வந்தது.
'செல்லம்மா... என்னை மன்னிச்சுடு; ஆனா, அவனை எக்காரணத்த முன்னிட்டும் மன்னிச்சுடாத...' கடைசியாய் அவன் சொன்ன வார்த்தைகள் மட்டும், எல்லார் மனதிலும் நின்று போனது.
அவன் மறைவிற்கு பின், மிகுந்த சிரமத்துடன் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினாள். பூர்வீக சொத்துகளை விற்று, கிருஷ்ணமூர்த்தி விட்டுச் சென்ற கடன்களை அடைத்தாள். இந்த, 15 ஆண்டுகளில், எந்த நல்ல காரியத்திலும் கலந்து கொண்டது இல்லை. ஏன், வீட்டை விட்டு வெளியில் கூட செல்லாமல், வீட்டிற்குள்ளேயே தன்னை சிறைபடுத்திக் கொண்டாள்.
அன்றைய விடியற்காலை, இத்தனை பரபரப்பாய் விடியும் என்று யாரும் துளியும் எதிர்பார்க்கவில்லை. ரங்கராஜனிடமிருந்து வந்திருந்த தொலைபேசி அழைப்பில் வீடே கொதித்து போயிருந்தது.
கிருஷ்ணமூர்த்தியின் சாவிற்கு கூட வராதவன், இப்போது எதற்கு வர வேண்டும் என்ற கேள்வி எல்லாருக்குள்ளும் குடைந்தது.
''இதோ பாருக்கா...அவன் செஞ்ச பஞ்சமா பாதகத்தை, இந்த உலகம் வேணா மறந்து போயிருக்கலாம்; ஆனா, அவன் செஞ்ச துரோகத்தை நாம மறக்க முடியுமா... நம்ம குடும்பத்தின் வேரை அழிச்சவன சும்மா விடலாமா...'' என்று கேட்டு முஷ்டியை மடக்கியபடி ஆர்ப்பரித்தான் தங்கவேலு.
''மாமா இவ்வளவு சொல்லும்போது, நீ ஏன்மா அமைதியா இருக்கே... எங்கள தகப்பன் இல்லாத அனாதையா ஆக்கினவன் அந்தாளு... எங்க ரத்தமெல்லாம் கொதிக்குதும்மா,.. அவன் வரேன்னு சொன்னபோதே, நீங்க செருப்பால அடிச்ச மாதிரி கேள்வி கேட்டிருக்க வேணாமா...''என்று கோபத்துடன் கேட்டான் செல்லம்மாவின் மகன்.
எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள் செல்லம்மா. அந்த மவுனம் அவர்களுக்குள் எரிச்சலை ஏற்படுத்தியது.
''அவனை மட்டும் நீ வீட்டுக்குள்ள சேர்த்த, மாமாவோட கடைசி வேண்டுகோளை நிராகரிச்ச பாவியாயிடுவே... அவர் கடைசியா சொன்ன வார்த்தைகள் இன்னும் என் மனசுக்குள் ஓடிட்டே இருக்கு... அப்புறம் உன் இஷ்டம்...'' தளர்வாய் எழுந்து போனான் தங்கவேலு.
சனிக்கிழமை காலை, தன் குடும்பத்துடன் வந்து சேர்ந்தான் ரங்கராஜன். ஆள் ரொம்பவும் மெலிந்திருந்தான். அவன் மனைவியும், மகளும் கூட வந்திருந்தனர். கையை முறுக்கிக் கொண்டு, எந்நேரம் சண்டை வந்தாலும் சந்திக்க தயார் என்பது போல் காத்திருந்தான் செல்லம்மாவின் மகன்.
எல்லாருடைய கண்களும் செல்லம்மா சொல்லப் போகிற வார்த்தைக்காக, அவள் மீதே லயித்திருந்தது. எந்த சலனமும் இல்லாமல், இதழோரம் மெல்லிய புன்னகை இழையோட, ''வாங்க ரங்கு தம்பி... நீயும் வாம்மா...'' என்றாள்.
கூடத்தில் இருந்த பழைய மர நாற்காலியில் ரங்கராஜன் அமர்ந்திருக்க, அருகில் பாய் விரித்து அவன் மனைவி சுலோச்சனாவும், மகளும் அமர்ந்து இருந்தனர்.
யாரும் சுமுகமாக இல்லாததால், யாரிடமும் வேலை ஏவாமல் தானே சென்று டீ தயாரித்து வந்தாள் செல்லம்மா.
குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தான் ரங்கராஜன்.
''என்ன சுலோச்சனா... எதுவுமே பேசாம உட்கார்ந்திருக்க... உன் பொண்ணு என்ன படிக்கிறா?'' என்று கேட்டாள் செல்லம்மா.
''எட்டாவதுக்கா...'' அவளை நிமிர்ந்து பார்க்கும் திராணியற்று வெறுமை பார்வையில் சொன்னாள்.
கொஞ்ச நேரம் அவ்விடத்தில் மவுனம் நிலவியது.
''அக்கா... ஏன் திடீர்ன்னு வந்திருக்கோம்ன்னு கேட்க மாட்டீங்களா...'' குற்ற உணர்வில் சுலோச்சனாவின் உதடுகள் தன்னிச்சையாய் துடித்தன.
''எதுக்கு கேட்கணும்... நீங்க வந்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்ல; முக்கியமான விஷயம்ன்னா நீங்களே சொல்வீங்கன்னு காத்திட்டு இருக்கேன்.''
இதுவரை தேக்கி வைத்திருந்த சோகம் எல்லாம் விம்மி வெடிக்க, முகம் மூடி விசும்பினாள் சுலோச்சனா. நாற்காலியில் உட்கார்ந்திருந்த ரங்கராஜனுக்கு, மனதில் எழுந்த துக்கத்தை அடக்க முடியாமல், பார்வையை வேறு பக்கம் திருப்பினான்; கண்ணில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.
''அக்கா... தப்பு செய்றது மனுஷனோட குணம். அந்த தப்ப மறக்கிறது அத்தனை லேசான காரியமில்ல. எங்க பக்கம் நடந்ததுக்கு ஆயிரம் விளக்கம் சொல்லலாம்; ஆனா, எத்தனை நியாயமான காரணம் சொன்னாலும் நடந்த தப்பும், அதனால் ஏற்பட்ட விளைவுகளும், எத்தனை கொடுமையானதுங்கிறது எங்களுக்கு புரியுது.
''தீர்ப்புக்கு தப்பின வழக்குகள், தண்டனைக்கு தப்பின வரலாறே இல்ல. நல்லா இருந்த என் குழந்தைக்கு திடீர்ன்னு புத்தி சுவாதீனம் ஆயிடுச்சு. பாக்காத வைத்தியம் இல்ல; போகாத கோவில் இல்ல. ஒரு வேளை போல, ஒரு வேளை இருக்க மாட்டேங்கறா. அதனால, பள்ளிக்கூடத்துக்கும் வரக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க.
''எல்லாருமே, செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் தேடுன்னு சொல்றாங்க. எங்க காலத்துக்கு பின், எங்க பிள்ளையோட நிலைமை என்ன ஆகும்ன்னு, இப்பயே கவலை வந்திருச்சு. நீங்க மன்னிச்சாலாவது ஆண்டவன் மன்னிப்பார்ன்னு, ஒரே நம்பிக்கையில வந்திருக்கோம்,'' என்று கூறி அழுதாள் சுலோச்சனா.
தங்கவேலுவுக்கும், செல்லம்மாவின் மகனுக்கும் அடிமனதில் மெல்லிய நிம்மதி பரவியது. குரூரமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அதுவரை அமைதியாய் அமர்ந்திருந்த ரங்கராஜன், மெல்ல தொண்டையை கனைத்த பின், ''அண்ணி... வர வர குழந்தையை, நாங்க எங்கேயும் அழைச்சுட்டு போறதே இல்ல; வீட்டுக்குள்ளயே முடங்கிக் கிடக்கிறா. வெளியில் தெரிஞ்சா இதே பேராயிடும்ன்னு நாங்களும் உள்ளுக்குள்ளயே முடங்கிக்கிறோம். இந்த வலியெல்லாம் எப்போ தீரும்ன்னு தெரியல. அந்த பாவ மூட்டைய, உங்க முன் போட்டு, பரிகாரம் தேட வந்திருக்கோம்.
''உங்கள ஏமாத்தி, கொண்டு போன காசுல, நான் எவ்வளவோ சம்பாதிச்சுட்டேன். அத்தனையும் உங்க காலடியில கொண்டு வந்து போடறேன். இல்ல... நீங்க கை காட்டுற கோவில் உண்டியல்ல கொண்டு போய் கொட்டுறேன். என்னை மன்னிச்சிடுங்க அண்ணி... '' என்று கூறி, அவள் முன் முழந்தாளிட்டு அமர்ந்து, கை கூப்பினான் ரங்கராஜன்.
தரையை நோக்கியிருந்த செல்லம்மாவின் விழிகள் உயரவே இல்லை. செவ்வரி ஓடிய அவள் விழிகளில் மெல்லிய நீர்ப்படலம்.
''தம்பி... இந்த உலகத்துல ரொம்ப சுலபமா கிடைக்கக் கூடியது மன்னிப்பு தான்னு எல்லாரும் நம்பிட்டு இருக்காங்க. ஒரு மனிதனை எத்தனை முறை வேணா மன்னிக்கலாம்ன்னு ஏசுநாதர் சொல்றாரு.
''அவர் தெய்வம்; நாமெல்லாம் சாதாரணமான மனுஷங்க. எனக்கென்னவோ அடிபட்ட ஆன்மா மன்னிக்காதவரை, உண்மையான மன்னிப்பு கிடைக்காதுன்னு தோணுது.
''நீ, எங்களுக்கு செய்த துரோகத்தால தான், உன் வாழ்க்கையில் இதெல்லாம் நடந்ததுன்னு, நான் சொல்ல மாட்டேன். எப்பவும் மனிதர்களில் ரெண்டு ரகம் உண்டு... ஒண்ணு, தப்பே செய்யாத ரகம்; இன்னொன்னு, தப்பு செய்துட்டே, என்னால நிறுத்த முடியலன்னு புலம்பற ரகம். உன்னால, உன் தவறுகளை முழுக்க தூக்கி வீசிட முடியும்ன்னு எனக்கு தோணல.
''ஏன்னா இத்தனை வருஷத்தில உனக்கு பிரச்னை வராத வரைக்கும் என்னை வந்து பாக்கணும்ன்னு தோணவே இல்ல.
''நமக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்கும் போது தான், நம்முடைய துரோகத்திற்கான புத்தகத்தை திறந்து பாக்கிறோம். அது, முழுக்க நிறைஞ்சு வழிஞ்சாலும், ஏதோ பெரிசா ஒண்ணை கையில எடுத்துட்டு பரிகாரம் தேட முற்படுகிறோம். நீ, நிஜமாவே மாறிட்டேன்னா, ஆண்டவன் கிட்டே மண்டியிட்டு மன்னிப்பு கேளு. உன் மன மாற்றத்திற்கான கூலியா, உன் மகளை சரியாக்க சொல்லி கேட்காதே... அதை எப்ப, எப்படி செய்யறதுன்னு அவனுக்கு தெரியும்.
''நீ நிஜமா மாறினா, நிச்சயம் நல்லது நடக்கும். அந்த நல்லது நடக்க தாமதமாகுதுன்னா, உன் மாற்றத்தில், எந்த இடத்திலேயோ உண்மையில்லைன்னு அர்த்தம். உன்னை சரி செய்ய, அதுதான் மன்னிப்புக்கான பாதை,'' என்றாள் செல்லம்மா.
அவள் வார்த்தையில் இருந்த உண்மை, தங்கள் கோபத்தை விடவும் வீரியமானது என்பதை உணர்ந்தனர் தங்கவேலுவும், செல்லம்மாவின் மகனும்!
தலை தாழ்ந்து அமர்ந்து இருந்தான் ரங்கராஜன். அந்த தாழ்ச்சியே, அவனுடைய பரிபூரண மன மாற்றத்திற்கான முதல்படியாய் தோன்றியது.
எஸ்.மானசா