Announcement

Collapse
No announcement yet.

ஒருவருக்கு உள்ள அறிகுறிகளை வைத்தும் மார&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஒருவருக்கு உள்ள அறிகுறிகளை வைத்தும் மார&

    ஒருவருக்கு உள்ள அறிகுறிகளை வைத்தும் மாரடைப்பா? இல்லையா?


    யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு வரலாம்.

    ஒருவர் நெஞ்சு வலி என்று மார்பைப் பிடித்துக் கொண்டதுமே, அதை வாயுக்கோளாறு என்று நினைத்துக் கொள்கிறோம். வாயுக்கோளாறுக்கு நமக்குத் தெரிந்த மருத்துவத்தைச் சொல்கிறோம். செய்கிறோம்.


    ""மாரடைப்பின் காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டிருந்தால், உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உயிருக்கே ஆபத்தாகிவிடும்'' என்கிறார் டாக்டர் ரவி பிரதாப்.


    சென்னை அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் பணிபுரியும் ரவி பிரதாப், மாரடைப்பு வந்தால் என்ன முதல் உதவி செய்ய வேண்டும் என்று பயிற்சியளிக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து...


    ""முதலில் எல்லாம் வயதானவர்களுக்குத்தான் மாரடைப்பு வந்தது. இப்போது சிறுவர்களுக்கே மாரடைப்பு வந்துவிடுகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.


    நெஞ்சு வலி வந்தால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு தேவையான பரிசோதனைகள் செய்வார்கள். வாயுக்கோளாறா, அசிடிட்டியா? மாரடைப்பா? எதனால் நெஞ்சு வலி என்பது உடற் பரிசோதனைக்குப் பிறகுதான் தெரிய வரும். அதற்குப் பின்பு உரிய மருத்துவம் செய்வார்கள்.


    ஆனால் நாம் என்ன செய்கிறோம்? நெஞ்சு வலி வந்தவருக்கு குடிக்கத் தண்ணீர் கொடுக்கிறோம். வாயுக் கோளாறு என்று நினைத்துக் கொண்டு சோடா கொடுக்கிறோம். மார்பில் தைலங்களைத் தடவி மசாஜ் செய்கிறோம்.


    மாரடைப்பின் காரணமாக நெஞ்சு வலி வந்திருந்தால், இப்படியெல்லாம் செய்வது ஆபத்தில் முடிந்துவிடும். இரத்த ஓட்டம் தடைபட்டு இரத்தம் அங்கங்கே நின்றுவிடும்.


    எனவே மாரடைப்பு ஏற்பட்டவரை அருகில் இருப்பவர்கள் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.


    ஆம்புலன்ஸோ, வேறு வாகனங்களோ வருவதற்காகத் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் உயிருக்கே ஆபத்தைக் கொண்டு வந்துவிடும் என்பதால், விரைந்து செயல்பட வேண்டும்.


    முதலில், மாரடைப்பு வருவதற்கான காரணங்களைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.


    மாரடைப்பு பரம்பரையாக வர வாய்ப்புண்டு. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரும். அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் மாரடைப்பு வரும். இப்படி உள்ளவர்கள் நெஞ்சு வலி என்று சொன்னால் மாரடைப்பு வர அவர்களுக்கு அதிக வாய்ப்புண்டு என்று தெரிந்து அருகில் உள்ளவர்கள் உஷாராகிவிட வேண்டும்.


    ஒருவருக்கு உள்ள அறிகுறிகளை வைத்தும் மாரடைப்பா? இல்லையா? என்பதையும் தெரிந்து கொள்ளலாம். மாரடைப்பு ஏற்பட்டால் அதிகமாக வியர்க்கும். வாந்தி வரும். இதயத் துடிப்பு அதிகரிக்கும். படபடப்பு ஏற்படும். இடது தோள், இடது கைகளில் வலிக்கும். மூச்சுத் திணறல் ஏற்படும். சிலர் மயங்கி விழுந்துவிடுவார்கள்.


    எனவே நெஞ்சு வலி என்று சொன்ன ஒருவரை உட்கார வைக்கக் கூடாது. நேராகப் படுக்க வைக்க வேண்டும். தலையை மட்டும் ஒரு பக்கம் திருப்பி வைக்க வேண்டும். ஏனென்றால் தலை நேராக இருந்தால் வாந்தி வரும்போது அது திரும்பவும் வாய்க்குள்ளே போய் மூச்சுக் குழாயை அடைத்துக் கொள்ளும் அபாயம் உண்டு.


    மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த ஒருவர் நினைவுடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதைத் தெரிந்து கொள்ள அவருடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட வேண்டும். அதற்கு அவரிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை என்றால் அடுத்து அவர் மூச்சு விடுகிறாரா? என்று பார்க்க வேண்டும். பிறகு கழுத்தருகே கை விரலை வைத்து அவருக்கு நாடித்துடிப்பு இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.


    ஒருவேளை நாடித்துடிப்பு இல்லையென்றால், அவருடைய நெஞ்சில் கை வைத்து, செங்குத்தாக அழுத்துவதற்குத் தேவையான நிலையில் அவர் அருகே மண்டியிட்டு அமர வேண்டும்.


    நடு நெஞ்சில் ஒரு கையை வைத்து, அதற்கு மேல் இன்னொரு கையை வைத்து அழுத்த வேண்டும். இவ்வாறு முப்பது தடவைகள் அழுத்த வேண்டும்.

    அதற்குப் பிறகு, அவர் தலையைத் திருப்பி, அவருடைய வாயில் வாயை வைத்து மூச்சுக் காற்றை அவருடைய வாய்க்குள் இரண்டு முறை விட வேண்டும்.

    மாரடைப்பு வந்தவர் மூச்சுவிடுகிறாரா? என்று பார்க்க வேண்டும். மூச்சு விடவில்லை என்றால் மீண்டும் முப்பது தடவை கைகளை வைத்து அழுத்தி, இரண்டு முறை அவருடைய வாய்க்குள் மூச்சுக் காற்றை விட வேண்டும்.


    ஆம்புலன்ஸ் வரும் வரை இந்த முதல் உதவியைச் செய்ய வேண்டும். இந்த முதல் உதவியினால் மாரடைப்பு வந்தவரின் தடைபட்ட சுவாசம் சீர்படும். ரத்தம் ஓட்டம் நடைபெறும். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து அவரை மீட்பதற்கு இந்த முதல் உதவி உதவும்.


    இந்த இதய இயக்க மீட்பு உதவியை ஆங்கிலத்தில் "Cardiopulmonary Resuscitation (CPR)' என்பார்கள்.

    எங்கள் மருத்துவமனையில் மாதத்தில் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் இலவசமாக பொதுமக்களுக்கு இந்தப் பயிற்சியை நாங்கள் அளிக்கிறோம். உயிர்காக்கும் இந்தப் பயிற்சியினால் மாரடைப்பு வந்தவரைக் காப்பாற்ற முடியும்'' '' என்கிறார் ரவி பிரதாப்.




    http://dinamani.com
Working...
X