அனுமன் பெற்ற பரிசு! - முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யர்!
ஒரு முறை, பத்ரிகாஸ்ரமத்தில் இருந்து தென்திசை நோக்கி யாத்திரை வந்தார் நாரதர். இதேபோல் அனுமன், தென்திசையில் இருந்து பத்ரிகாஸ்ரமத்துக்குச் சென்றான்.
ஆகாச மார்க்கமாகச் செல்லும்போது இருவரும் ஓரிடத்தில் சந்தித்துக் கொண்டனர். இரண்டு பேரும் பண்டிதர்கள்; அவர்களது பேச்சில் உயர்ந்த விஷயங்களே நிறைந்திருந்தன. ''பத்ரிகாஸ்ரமம் போகிறேன்; என்னுடன் வாருங்கள்'' என்றான் அனுமன். அவரது வார்த்தையைத் தட்டமுடியாமல், நாரதரும் உடன் சென்றார்.
சமுத்திரத்துக்கு நடுவே ஓர் அழகான பட்டினத்தைக் கண்டனர். ''இதென்ன ஊர்?'' என்று கேட்டார் அனுமன். ''இதுதான் பலராமனின் ஊர்'' என்றார் நாரதர். உடனே கோபம் வந்தது மாருதிக்கு! கதாயுதத்தை ஓங்கியபடி, ''யார் பலராமன்? என் ராமனைவிட பலமானவனா..? ஊருக்குள்சென்று 'பல' சப்தத்தை இழக்க வேண்டும். அவன் பெயரில் 'பல' இருக்கக் கூடாது. இல்லையென்றால், ஊரே சமுத்திரத்தில் உருளும் என்று சொல்லுங்கள்!'' என்று கர்ஜித்தார்.
நாரதருக்கு பயம். வேறு வழியின்றி வாசுதேவனி டம் சென்றார். வாசுதேவனுடன், வைகுண்டத்தில் இருந்து வந்திருந்த கருடனும் இருந்தார். பரமாத்மாவிடம் நாரதர், ''தங்கள் அண்ணாவின் பெயரில் உள்ள 'பல' எனும் வார்த்தையை எடுத்துவிட வேண்டுமாம்! இல்லையெனில், ஊரையே சமுத்திரத்தில் உருட்டப் போவதாகச் சொல்கிறான் மாருதி'' என்றார் நடுங்கியபடி.
இதைக் கேட்டு கோபம் அடைந்த பலராமன் கலப்பையைத் தூக்கினார். கருடனோ, 'ஒரு குரங்கா இப்படிப் பேசுகிறது? உத்தரவிடுங்கள்... அவனைக் கட்டி இழுத்து வருகிறேன்'' என்றான். பரமாத்மாவும், சந்தோஷம் பொங்க உத்தரவு கொடுத்தார்.
ஆத்திரத்துடன் வந்த கருடனை, அப்படியே வாலால் சுழற்றி, கடல் நீரில் தோய்த்து எடுத்து வீசியெறிந்தார் அனுமன். இறக்கைகள் ஒடிந்த நிலையில், பகவானின் திருவடியில் வந்து விழுந்தான் கருடன். அவனிடம், ''என்ன கருடா... இறக்கைகள் ஒடிந்து விட்டனவா?! ஒரு குரங்கை உன்னால் கொண்டு வர முடியவில்லையே...'' என்றார் மாதவன். தலைகுனிந்து நின்றான் கருடன்.
அடுத்து, சைன்யத்தைத் திரட்டிக்கொண்டு ஆவேசத் துடன் சென்றார் பலராமர். அனுமன், தனது நீளமான வாலை நீட்ட, அதில் சிக்கித் தவித்தார் பலராமர்; அவரின் சைன்யம் சமுத்திரத்தில் தத்தளித்தது! ''வேறு வழியே இல்லை. அனுமனின் கோபத்தைத் தணிக்க ஒரே வழி... நான் ராமனாக மாறுகிறேன்; நீ லட்சுமணனாக மாறி விடு'' என்று பலராமனிடம் சொன்னார் பரமாத்மா.
''அப்படியே... சத்யபாமாவை சீதாவாக அழைத்து வாரும். ஸ்ரீராம பட்டாபிஷேக கோலத்தைக் காட்டினால், அனுமனின் கோபம் பறந்தோடி விடும்!'' என்று நாரதரிடம் சொன்னார் பகவான். அதன்படி பரமாத்மா, ஸ்ரீராமராக அமர்ந்திருக்க, பட்டாடை சலசலக்க ஆபரணங்கள் அணிந்தபடி சபைக்கு வந்தாள் சத்யபாமா.
தன் தர்மபத்தினியைக் கண்ட பரந்தாமன், ''எந்த ஊர் நாட்டியக்காரி இவள்? இங்கே அரங்கேற்றம் செய்ய வந்திருக்கிறாளோ?' என்று கேட்க, துக்கத்திலும் வெட்கத்திலும் உடைந்து போனாள் சத்யபாமா; உள்ளே ஓடிச் சென்று அழுதாள்.
நாரதரிடம் பரமாத்மா மெள்ள கண்ணசைக்க... புரிந்து கொண்ட நாரதரும் உள்ளே சென்று, ''சீதையாக வரச் சொன்னால் இப்படியா வருவது? திருமண தருணத்தில் இருந்த சீதையைப் பிடிக்காதாம் அனுமனுக்கு!
அசோகவனத்தில் சோகமாக இருந்த சீதையைத்தான் பிடிக்குமாம். ஆகவே, அந்தக் கோலத்தில் வா'' என்றார் நாரதர்.
இதைக் கேட்ட சத்யபாமா, ஆபரணங்களை கழற்றினாள்; தலையை விரித்துப் போட்டாள்; சேலைத் தலைப்பைக் கிழித்து முடிச்சுகளைப் போட்டுக் கொண்டு சபைக்கு வந்தாள். இப்போதும் பரமாத்மாவுக்கு திருப்தி இல்லை. ''சீதை அசோகவனத்திலும் நன்றாகத்தான் இருந்தாள். இப்படி, பத்ரகாளி போல் வருகிறாயே'' என்றார். இதையடுத்து ருக்மிணியே, சீதாதேவியாக வந்தாளாம்!
உடனே கருடனை அழைத்த பரமாத்மா, ''உன் முதுகில் அனுமனை ஏற்றி வா!'' என்றார். அனுமனும் அவனது வாலும் நினைவுக்கு வர... கருடன் மறுத்தான். ''நான் சொன்னதாகச் சொல்லி அழைத்து வா'' என்றார் பரமாத்மா. அதன்படி, அனுமனை சந்தித்து விவரம் சொன்னான் கருடன்.
அத்துடன் பகவான், பட்டாபிஷேகக் கோலத்தில் உள்ள விவரத்தையும் தெரிவித்தான். இதையடுத்து கருடனின் மேல் ஏறி வந்தான் மாருதி!
ராமாவதாரத்தில் கிடைத்த பரிசு - முத்துமாலை! இப்போது, தனது வாகனத்தையே கொடுத்து... பெரிய திருவடி மீது சிறிய திருவடி பவனி வரும் அழகை துவாரகையில் இருந்தபடி ரசித்தார் பரமாத்மா! ஆனாலும் திருப்தியில்லை அவருக்கு! அனுமன் செய்த உபகாரத்துக்கு எல்லையே இல்லையே! பிறகு... ஸ்ரீராமனாக, அடுத்து கிருஷ்ணனாக, இதையடுத்து சேஷ சயனத்தில் லட்சுமியுடன் நாராயணனாக... மாறி மாறி காட்சி கொடுத்தார் பரமாத்மா!
இதில் ஒரு விஷயம்... கிருஷ்ணனாகவும் நாராயணனாகவும் அவர் காட்சி தந்த போது, சட்டென்று கண்ணை மூடிக் கொண்ட மாருதி, ஸ்ரீராமராகக் காட்சி தரும் போது மட்டும் கண்களை அகல விரித்து ஆனந்தமாக ஸேவித்தான்!
அதாவது ராமரைத் தவிர அனுமனின் மனம் வேறு எங்கும், வேறு எவரிடமும் செல்லாது! அதனால்தான் பெறற்கரிய பரிசு பெற்றான்!
நன்றி வாட்ஸுப் !