காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற பிப்ரவரி மாதம் 1–ந்தேதி நடைபெறும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.கோவில் கும்பாபிஷேகம்
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியதாவது:–உலக பிரசித்தி பெற்றதும், 51 சக்தி பீடங்களில் ஒன்றானதுமான காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து காமாட்சியம்மனை பயபக்தியுடன் தரிசித்து செல்கின்றனர். இந்த கோவில் கும்பாபிஷேகம் 1841–ம் ஆண்டு நடந்தது. அதன் பின்னர் 100 ஆண்டுகளுக்கு பிறகு 1941–ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதன் பின்னர் 1976, 1995–ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து வருகிற பிப்ரவரி மாதம் 1–ந் தேதி காலை 9½ மணி முதல் 10½ மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.திருப்பணி மதிப்பீடு ரூ.25 கோடிகருவறையின் மேல் உள்ள தங்க விமானத்திற்கு ரூ.20 கோடி செலவில் 60 கிலோ தங்கத்திலான 5 அடுக்கு தங்கம் ஒட்டப்பட்டு மிளிரும் வகையில் திருப்பணிகள் நடந்து வருகிறது. மேலும் கோவிலின் 4 ராஜகோபுரங்கள், உள்பிரகாரங்கள், வெள்ளித்தேர் மற்றும் வாகனங்கள் பழுதுபார்த்தல் போன்ற வேலைகள் நடந்தது வருகிறது. இந்த கோவிலின் மொத்த திருப்பணி மதிப்பீடு ரூ.25 கோடி ஆகும். இந்த கோவிலில் பக்தர்கள் வசதிக்காக பூங்கா மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.அப்போது கோவில் ஸ்ரீகார்யம் செல்லா விஸ்வநாத சாஸ்திரி, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான விஜயன், கோவில் மணியக்காரர் மணி மற்றும் கோவில் அர்ச்சகர்கள் உடன் இருந்தனர்.