அண்மையில் ஒரு நகைச்சுவை துணுக்கு படித்தேன். ஒருவர் செய்தி வாசிக்கிறார்… “சேலத்தில் முக்கிய நபர் கைது!” – பக்கத்தில் இருந்தவர் அவரை நிறுத்தி கேட்கிறார் “அப்போ கோவையில் முக்கினால் கைது செய்ய மாட்டார்களா?” – கவுண்டமணி மாதிரி கேட்கிறார். முக்கியம் என்று இங்கே சொல்வது “முதன்மையான” – “பிரதானமான” என்ற பொருளில்.
Information
இந்த முக்கியம் என்கிற வார்த்தையே “முக்யம்” என்கிற சமஸ்க்ருத சொல்லில் இருந்து வந்தது தான். முக்யம் என்பதும் முகம் என்கிற சொல்லில் இருந்து வந்தது. முகம் என்பது வாசல் – முன்னால் உள்ளது என்று புரிந்து கொள்ளலாம். துறைமுகம் என்று சொல்கிறோம் அல்லவா… சமஸ்க்ருதத்தில் முகம் என்பது முகத்தையும் குறிக்கும் – வாயையும் குறிக்கும்.
Notice
சமண அரசன் அமரசிம்மன் இயற்றிய அமர கோசம் என்கிற வடமொழி அகராதியில் முகம் என்ற சொல்லுக்கு ஒத்த பொருளில் (synonym) உள்ள சொற்களாக “வக்த்ராஸ்யம், வத3னம், துண்டம், ஆநநம், லபனம், முகம்” என்று கொடுக்கப் பட்டுள்ளது.
“வத3” என்றால் பேசு என்று அர்த்தம். வதனம் என்பது பேச உபயோகப் படும் கருவியான வாயைத் தான் குறிக்கும். அதே போல “லப்” என்றாலும் பேசுவது என்று பொருள். லபனம் என்பதும் வாயைத்தான் குறிக்கும். ஆலாபனம், சல்லாபம் போன்ற வார்த்தைகள் லப் என்ற வேர்சொல்லில் இருந்து வந்ததுதான். ஆக வாயின் பெயர்களே முகத்துக்கும் பயன்படுகின்றன. வடமொழியில் வாய் முகம் இரண்டுக்கும் ஒரே மாதிரியான வார்த்தைகள் தான் உள்ளது.
நன்றி "தெய்வத்தின் குரல்"