" கை குலுக்குவது " / " Hand shake " செய்வது "வானர ஆசாரம் "---ஶ்ரீ காஞ்சி மஹாப் பெரியவர் வாக்கு : ஆதாரம் : தெய்வத்தின் குரல், பாகம்---7, பக்கம்---779. வதூ வரர்கள் பாணிக்ரஹணம் செய்து கொள்வதாக நம்முடைய கலாசாரத்தில் உண்டே தவிர, இதர பந்துக்களோ ஸ்நேஹிதர்களோ கையோடு கை பிடிக்கிற வழக்கம் கிடையாது. ரொம்ப அன்பு மேலிட்டுப் போனால் நெருங்கின பந்து மித்ராள் ஆலிங்கனம் செய்து கொள்வதுண்டு ; வயதில் பெரியவர்கள் சின்னவர்களை உச்சி மோந்து பார்ப்பார்கள். ஆனால் நம்முடைய நர வர்க்கத்தின் நாகரீகத்தில் கையோடு கை பிடிப்பதில்லை. வானர ஆசாரம்தான் அப்படி. அதனால் சுக்ரீவன் கல்யாணத்தில் பாணிக்ரஹணம் செய்கிறது போலவே தன்னுடைய கையை ஶ்ரீராமர் பிடிக்க வேண்டும். அப்படிப் பண்ணி விட்டாலே ஃபார்மலான ஒப்பந்தமாகி விடும் என்றுதான் நினைக்கிறான். ராமரிடம் கையை நீட்டுகிறான். அதைத்தான் இன்றைக்கு நமக்கே நாகரீகம் சொல்லிக் கொடுக்கிற தேசத்துக்காரர்கள் " ஷேக் ஹான்ட் " என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்கிற " எவல்யூஷன் தியரி " ( பரிணாமக் கொள்கை) க்கு இப்படி அவர்களே நிரூபணம் ஆகியிருக்கிறார்கள்--- நான் சொல்லவில்லை. கதை, புராணம் சொல்லும் உபன்யாஸகர்கள் சொல்வதுண்டு.